இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0916



தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்

(அதிகாரம்:வரைவில்மகளிர் குறள் எண்:916)

பொழிப்பு (மு வரதராசன்): அழகு முதலியவற்றால் செருக்குக் கொண்டு தம் புன்மையான நிலையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.

மணக்குடவர் உரை: தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார்: வனப்பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை.

பரிமேலழகர் உரை: தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார்.
(ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தம்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: ஆடல் பாடல் கலைகளால் தம்மைப் பெருமைப்படுத்திக் காட்டி, தமது புல்லிய இழிந்த அழகைப் பலவகையாலும் பொருள் கொடுப்பார் அனைவரிடத்தும் பரப்பி விற்கும் பொதுமகளிரது தோள்களை, தம் நலத்தை வளர்த்துக்கொண்டு உயர்வடைய விரும்புபவர்கள் தீண்டமாட்டார்கள். தந்நலம்-உடல்நலம் தொட்டுத் தமது நலம் அனைத்தையும் இது கெடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் தந்நலம் பாரிப்பார் தோயார்.

பதவுரை: தம்-தமது; நலம் பாரிப்பார்-காத்துக் கொள்வார், பெருக்க நினைப்பார்; தோயார்-தீண்டார்; தகை-(பொதுமகளிர்க்குரிய ஆடல், பாடல்) அழகு; செருக்கி-இறுமாந்து, களித்து; புன்னலம்-(புல்லிய+நலம்) இழிந்த இன்பம்; பாரிப்பார்-பரப்புகின்றவர்; தோள்-தோள்.


தந்நலம் பாரிப்பார் தோயார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார்:
பரிப்பெருமாள்: தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார்:
பரிப்பெருமாள் குறிப்புரை: 'தம்நலம் பாரிப்பார்' என்றமையால் இன்பம் நுகரவல்லார் சாரார் என்றார்;
பரிதி: தம்முடைய கீர்த்தி பிரகாசிப்பார் விரும்பார்;
காலிங்கர் ('தன்னலம்' பாடம்): தமது நன்மையை மேன்மேலும் விரித்துக் கொண்டு ஒழுகும் தன்மையர் யாவர்; அவர் என்றும் தோயார்;
பரிமேலழகர்: அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார்;
பரிமேலழகர் குறிப்புரை: தம்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர்.

'தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார்' என பழம் ஆசிரியர்களுள் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தம்முடைய கீர்த்தி பிரகாசிப்பார் விரும்பார்' என்றார். காலிங்கர் 'தமது நன்மையை மேன்மேலும் விரித்துக் கொண்டு ஒழுகும் தன்மையர் தோயார்' என்றும் பரிமேலழகர் 'அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார்' என்றும் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை நாடுபவர் தொடார்', 'அறிவொழுக்கங்களால் வரும் புகழை நாட்டில் பரப்பும் உயர்ந்தோர் தீண்டார்', 'தம்முடைய ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுகிறவர்கள் தழுவமாட்டார்கள்', 'தமது உயர்நலத்தைப் பெருக்க நினைப்பார், அல்லது தமது புகழை உலகிற் பரப்ப விரும்புவார் படியமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனக்குண்டான நல்லதோற்றத்தைக் காத்து ஒழுகுவோர் அணையார் என்பது இப்பகுதியின் பொருள்.

தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வனப்பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை.
பரிப்பெருமாள்: வனப்பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை. [வனப்பு - அழகு; களிப்புற்று- இன்புற்று]
பரிப்பெருமாள் குறிப்புரை: பின்னர் இன்பம் அது ஆகாமையின். புல்லிய நலன் என்றார் வனப்பு உடையராயினும் இழிந்தார்மாட்டும் பரப்புதலின். இவை மூன்றும் அறம் பொருள் இன்பம் வேண்டுவார் சாரார் என்று கூறப்பட்டது.
பரிதி: இளமை நலம் செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் என்றவாறு.
காலிங்கர் ('தன்னலம்' பாடம்): யாதினை எனின் எப்பொழுதும் பொருள் வரும் தகைமையைத் தருக்கி மற்று இது காரணமாக வஞ்சனையாகிய புல்லிய ஆசையைப் பாரித்து நடிக்கும் பொதுமகளிர் தம் தோளினை என்றவாறு. [தகைமை-தகுதி; தருக்கி- செருக்குற்று]
பரிமேலழகர்: ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; [புல்லிய நலம் - இழிந்த இன்பம்]
பரிமேலழகர் குறிப்புரை: ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.

வனப்பினால் களிப்புற்று/இளமை நலம் செருக்கி/பொருள் வரும் தகைமையைத் தருக்கி/ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்து தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அழகுத் திமிரால் சிறுநலம் பரப்புவாரது தோள்களை', 'அழகு, அணிகலன் முதலியவற்றால் தம்மைப் பெரிதாக மதித்துப் பொருள் கொடுப்பார்க்கெல்லாம் தம் இழிந்த இன்பத்தைப் பரப்புகின்ற விலைமகளிரின் தோள்களை', 'அழகைக் கொண்டு மயக்கி அற்ப சுகத்தை விலைக்காகப் பரப்புகின்ற விலைமாதருடைய தோள்களை', 'ஆடல் பாடல் அழகுகளினாலே தருக்குடையராய்ச் சிற்றின்பத்தை விலை கொடுப்பார் யார்க்கும் பரப்பும் மகளிரது தோளில்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அழகுநலத்தால் தம்மைப் பெரிதாக மதித்து இழிந்த இன்பத்தைப் பரப்புகின்ற மகளிரின் தோள்களை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அழகுநலத்தால் தம்மைப் பெரிதாக மதித்து இழிந்த இன்பத்தைப் பரப்புகின்ற மகளிரின் தோள்களைத் தந்நலம் பாரிப்பார் அணையார் என்பது பாடலின் பொருள்.
'தந்நலம் பாரிப்பார்' யார்?

தன் தோற்றத்தைப் பெரிதும் மதிப்பார் ஆடிப்பாடி மயக்கும் பெண்டிரைத் தழுவமாட்டார்.

அழகு முதலிய தகுதிகளால் செருக்குற்று இழிவான இன்பத்தை யாவருக்கும் விற்றுப் பரப்பும் பொதுமகளிரின் தோளினைத் தம் புகழ் காக்க நினைப்பவர் தழுவக் கருதார்.
ஆடல் பாடல் வல்ல பொருட்பெண்டிரிடம் செல்பவன் ஆறுதல் பெறலாம்; மன அழுத்தத்திலிருந்து தளர்வுபெறலாம். ஆனாலும் அவள் உடலைத் தழுவிப் பெறும் இன்பம் யாவர் மாட்டும் பரப்பப்படுவதால் இழிவானதே. தனக்கென்று தனித்தோற்றம் கொண்டுள்ள ஒழுக்க மேன்மையுடையவர் எல்லார்க்கும் பொதுவான அம்முயக்கத்தை விரும்பமாட்டார். பொதுமகளிர் தன் ஆடல் பாடல் முதலியவற்றால் களிப்பித்து இழிந்த இன்பத்தைப் பொருளுக்காகப் பகிர்ந்து விற்றல் இழிவினும் இழிவு என்று அவர் எண்ணுவதால்.

'தந்நலம் பாரிப்பார்' யார்?

'தந்நலம் பாரிப்பார்' என்ற தொடர்க்குத் தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார், தம்முடைய கீர்த்தி பிரகாசிப்பார், தமது நன்மையை மேன்மேலும் விரித்துக் கொண்டு ஒழுகும் தன்மையர், அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர், அறிவொழுக்கங்களாலான தம் புகழை உலகத்திலே பரப்பவேண்டினவர், அறிவு கல்வி நல்லொழுக்கமாகிய புகழ் நலத்தினைப் பாராட்டும் பெரியவர், தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர், தம் நலத்தை வளர்த்துக்கொண்டு உயர்வடைய விரும்புபவர்கள், தனது நலத்தினை எண்ணிப் பாதுகாக்கும் எவரும், நன்மை நாடுபவர், அறிவொழுக்கங்களால் வரும் புகழை நாட்டில் பரப்பும் உயர்ந்தோர், தம்முடைய ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுகிறவர்கள், தம் பண்பு நலம் பரப்பும் சான்றோர், தமது உயர்நலத்தைப் பெருக்க நினைப்பார், தம் நன்மையைக் காக்கின்றவர்கள், நல்லொழுக்கத்தைப் போற்றும் அறிஞர்கள், தம் மனமும் உடலும் நலமாகக் காப்போர், கல்வியறிவாலும் நற்குணநற் செய்கையாலும் தம் புகழை உலகத்திற் பரவச் செய்யும் உயர்ந்தோர், அருள் உள்ளத்தால் தம் நலத்தையே பலருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பெரியோர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தம்நலம் என்பதில் நலம் என்னும் பண்புப்பெயர் நலத்தினாலாகிய புகழை உணர்த்துதலால் பண்பாகு பெயர். பாரித்தல் என்பதற்குக் காத்தல் என்ற பொருளும் உண்டு.
ஒவ்வொருத்தர் பற்றியும் ஒருசில கருத்துரு தோன்றிவிடும்- 'இவன் செயல்வீரன்', 'அவன் நேர்மையானவன்', 'இவன் பொறாமைக்காரன்' என்பன போன்று. ஒழுக்கத்தால் உயர்ந்தவர்கள் இவர் 'ஒழுக்கமானவர்' என்ற கருத்துருவைப் பெற்று வைத்திருப்பவர். அவர் அந்த நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக இருப்பார். ஆதலால், இழிந்த இன்பம் பெறுவதற்காகப் பொதுமகளிரிடம் சென்று தாம் பெற்ற புகழை இழக்க விரும்பமாட்டார். இங்ஙனம் அவர் தந்நலம் பாரிப்பார்.

'தந்நலம் பாரிப்பார்' என்ற தொடர் தம் புகழைக் காக்க விரும்புவோர் என்ற பொருள் தரும்.

அழகுநலத்தால் தம்மைப் பெரிதாக மதித்து இழிந்த இன்பத்தைப் பரப்புகின்ற மகளிரின் தோள்களை தனக்குண்டான நல்லதோற்றத்தைக் காத்து ஒழுகுவோர் அணையார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒழுக்கமானவர் வரைவில்மகளிர் பகிரும் இன்பம் நாடமாட்டார்.

பொழிப்பு

தம்அழகுத் தகுதியால் இறுமாந்து இழிந்த இன்பத்தைப் பரப்புகின்ற மகளிரின் உடலை, தாம்சேர்த்த நற்பெயரைக் காத்துக்கொண்டு ஒழுகுவோர், தழுவார்.