இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0908



நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:908)

பொழிப்பு (மு வரதராசன்): மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார்.

மணக்குடவர் உரை: நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார் குறை தீர்க்கவும் மாட்டார்; அவர்க்கு நல்லது செய்யவும் மாட்டார் என்றவாறு.
குறைதீர்த்தல்-உற்ற துயரம் தீர்த்தல்.

பரிமேலழகர் உரை: நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார்.
('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: அழகிய நெற்றியையுடைய பெண் விரும்பியவாறு நடக்கின்றவர் நண்பர்கள் குறைகளைப் போக்கமாட்டார்; நல்ல அறச் செயல்களையும் செய்யமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்.

பதவுரை: நட்டார்-நண்பர்கள்; குறை-உற்ற குறை; முடியார்-நிறைவேற்ற மாட்டார்; நன்று -நன்மை; ஆற்றார்-செய்யமாட்டார்; நன்-நல்ல; நுதலாள்-நெற்றியையுடையாள்; பெட்டாங்கு-விரும்பியபடி, விரும்பியவண்ணம்; ஒழுகுபவர்-நடந்து கொள்பவர்.


நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மோடு நட்டார் குறை தீர்க்கவும் மாட்டார்; அவர்க்கு நல்லது செய்யவும் மாட்டார் என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: குறைதீர்த்தல்-உற்ற துயரம் தீர்த்தல்.
பரிப்பெருமாள்: தம்மோடு நட்டார் குறை தீர்க்க மாட்டார்; அவர்க்கு நல்லது செய்யவும் மாட்டார் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: குறைதீர்த்தலாவது உற்ற துன்பம் தீர்த்தல். நன்று ஆற்றல்-சிறந்தன செய்தல். இவையும் அவள் சொல்ல வேண்டுதலின் செய்ய மாட்டார் என்றது.
பரிதி: சிநேகித்தார்க்கு உண்டாகிய குறை முடியார், நல்வழி நினையார்;
காலிங்கர்: தனக்குச் சிறந்த நட்டார்க்கு ஒரு குறை வந்த இடத்து அதனைத் தீர்க்கமாட்டார்; இனி அதுவேயும் அன்றிக் கல்வியும் கேள்வியும் முதலிய நன்கு செய்தலும் மாட்டார்;
பரிமேலழகர்: தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார்.

'தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; அதுவேயன்றி அறஞ்செய்யவும் மாட்டார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நண்பர்க்கு உதவான்; நல்லதும் செய்யான்', 'நண்பர்களுக்கு உதவி செய்து அவர்தம் குறையை முடிக்க மாட்டார். பிறர்க்கு நன்மை தரும் அறச் செயலையும் செய்ய மாட்டார்', 'நண்பர்களுக்கு நேரிடும் துன்பங்களைக்கூட நீக்க முடியாது; வேறு எந்த நல்ல காரியமும் செய்ய முடியாது', 'தங்கள் நண்பருக்கு நேரிட்ட குறைகளை நீக்க இயலாதவராய் நல்ல அறஞ்செய்ய மாட்டாதவராய் இருப்பர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்முடன் நட்புறவில் இருப்பவர்களின் துன்பம் தீர்க்கமாட்டார்; நல்லது செய்யவும் மாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார்,
பரிப்பெருமாள்: நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார்,
பரிதி: பெண் சொல் கேட்பவர் என்றவாறு.
காலிங்கர்: என் எனின் தன் மனையாளை விரும்பியது ஆண்மைக்குத் தகுதி அன்று என நாணாது மற்று ஆங்கே உள்ளழுந்தி ஒழுகும் அவர் என்றவாறு.
பரிமேலழகர்: தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.

'நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு/தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல நெற்றியுடையவள் சொற்படி நடப்பவன்', 'அழகிய நெற்றியை உடைய தம் மனைவி விரும்பியவாறு இழிசெயல் புரிவார்', 'மனைவியின் இச்சைப்படியே எதையும் செய்கிறவர்கள்', 'நல்ல நுதலழகுடைய பெண் விரும்பிய வண்ணமே நடப்பவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்ல நெற்றியை உடைய மனைவி விரும்பியபடி நடப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல நெற்றியை உடைய மனைவி விரும்பியபடி நடப்பவர் தம்முடன் நட்புறவில் இருப்பவர்களின் துன்பம் தீர்க்கமாட்டார்; நல்லது செய்யவும் மாட்டார் என்பது பாடலின் பொருள்.
'நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர்' குறிப்பது என்ன?

பெண்வழிச்செல்பவர் பழகியவர்க்கு உதவமுடியாத நிலையிலிருப்பார்.

தன் மனைவியின் விருப்பத்துக்கு இணங்க நடப்பவர், தம் நண்பர் எவரது குறைகளையும் தீர்க்கமாட்டாதவராயிருப்பர்; நல்லது செய்ய மாட்டார்.
தன் மனைவி வேண்டியவாறு ஒழுகுவார் தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை தீர்க்கமாட்டார்; அதுமட்டுமல்ல நல்லன எவற்றையுமே செய்யவும் மாட்டார். 'நன்னுதலாள்' என்ற குறிப்பு அவள் அழகானவள் என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது. இங்கு சொல்லப்பட்ட ஆண் தன் மனைவியின் அழகுக்கு அடிமையாகி அவள் விருப்பப்படியே ஒழுகுபவனாக இருக்கிறான். தான் விரும்பும்வகையில் மட்டுமே மனைவி ஒழுகுதல் வேண்டும் என்று வற்புறுத்துவது கணவனுக்கு ஏற்றம் தராது; அதுபோல மனைவியும் தன் விருப்பப்படிதான் கணவன் நடக்க வேண்டும் என்று நினைப்பது அழகன்று. இருவருமே இல்லற அறிவு வழியே ஒழுகுதல் வேண்டும். இருவரது அறிவின் வழியே செல்லாது, அவளது விருப்பின்படி சென்று ஒழுகுதல் இங்குப் பழிக்கப்படுகின்றது. 'பெட்டாங்கொழுகுபவர்' என்ற தொடர் இதனைக் குறித்து நிற்கின்றது.

நன்னுதலாள் ஒருபுறமாகவும் நட்டாரை மற்றொரு புறமாகவும் நிற்கவைத்து நட்டார்க்கு ஒன்றும் செய்ய இயலாத பேதையாகக் கணவன் உள்ளநிலை காட்டப்படுகிறது. கணவனது நண்பர்களுக்கு எந்த உதவியும் செய்யவிடமாட்டாள் என அஞ்சி நிற்பதாக கணவன் இக்காட்சியில் தோன்றுகிறான், நட்டார்க்கு மட்டுமல்ல கணவன் விரும்பும் எந்த ஒரு நல்ல செயலையும் அவள் தடுத்துவிடுவாள் என்பதும் சொல்லப்படுகிறது. மனைவியிடம் பெறும் காமம் இன்பம் கருதி அவ்விழைவிலேயே தம் பொழுதைக் கழிக்கும் கணவனானவன் தன் நண்பனின் துன்பத்தைப் போக்குவதற்கான செயலைச் செய்யமாட்டான்; மனைவியின் விருப்பம்போல் வாழ்கின்றவர்கள் பொது நன்மைக்கு உரிய கடமையையும் செய்ய முடியாது. தன் நண்பர் குறை தீர்த்தலும் நல்லன செய்தலும் மனைவி விரும்பினால்தான் முடியும்; எனவே இரண்டுமே நடைபெறாது.

'நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர்' குறிப்பது என்ன?

நன்னுதல் என்பது நல்+நுதல் என விரியும். நன்னுதலாள் என்றது நல்ல நெற்றியை உடையவள் எனப் பொருள் தரும். நல்ல நெற்றி என்பது அழகிய நெற்றியைக் குறிக்கும். குறளில் நுதல் அழகு என்றால் முகஅழகுடையவளைக் குறிப்பதாகவே வரும். இங்கு மனைவியானவள் திருத்தமான முகஅழகைக் கொண்டவளாக இருக்கிறாள். 'நல்நுதலாள் பெட்டாங்கு' என்ற தொடர் அழகு நெற்றியை உடையவளின் விருப்பப்படி எனப் பொருள்படும். 'நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர்' என்றது அழகியான அவளிடம் பெறும் காம இன்பத்துக்கு மயங்கி அடிமையாகி நடந்துகொள்பவர் என்பதை உணர்த்துகிறது.
எப்பொழுதும் மனைவியையே சுற்றிச்சுற்றிச் செல்லும் பெண்ணடியாராகக் கணவன் இருப்பதால் அவன் அவளது ஆசைகளையே நிறைவேற்றுவதிலேயே குறியாக இருப்பான். எனவே தனக்குத் துணையாக நிற்கும் நட்பினர் பற்றி எண்ணவே மாட்டான். அவர்கள் குறையை அறிந்தாலும் ஓடோடிச் சென்று உதவவேண்டும் என்ற நினைப்பே வராது. அப்படியே நினைத்தாலும் தன் மனைவி அதை விரும்பமாட்டாள் என்பதால் நட்டோரைக் கைவிட்டுவிடுவான். நட்புறவில் இருப்பவர்களுக்கு உதவாதது மட்டுமல்ல, மனைவிக்கு அஞ்சி வேறு எந்த அறச்செயல்களிலும் ஈடுபாடு காட்ட மாட்டான்.

'நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர்' என்றது அழகிய மனைவியின் விருப்பப்படி நடப்பவர் என்ற பொருளது.

நல்ல நெற்றியை உடைய மனைவி விரும்பியபடி நடப்பவர் தம்முடன் நட்புறவில் இருப்பவர்களின் துன்பம் தீர்க்கமாட்டார்; நல்லது செய்யவும் மாட்டார் என்பது இக்குறட்கருத்து



அதிகார இயைபு

பெண்வழிச்சேறல் நண்பரையும் உதறிவிடச் செய்யும்.

பொழிப்பு

நல்ல நெற்றியையுடைய மனைவி விரும்பியவாறு நடப்பவன் நட்புறவில் இருப்பவர்க்கு உதவமாட்டன்; நல்லதும் செய்ய மாட்டாதவானாயிருப்பான்.