இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0905



இல்லாளை யஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:905)

பொழிப்பு (மு வரதராசன்): மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

மணக்குடவர் உரை: மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும்.
இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.

பரிமேலழகர் உரை: இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும்.
(நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.)

சி இலக்குவனார் உரை: இல்லாளை அஞ்சி நடக்கிறவன், நல்லார்க்கு நல்லன செய்வதற்கு எப்பொழுதும் அஞ்சுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்லாளை அஞ்சுவான் மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் அஞ்சும்.

பதவுரை: இல்லாளை-மனைவியை; அஞ்சுவான்-அஞ்சுபவன்; அஞ்சும்-அஞ்சும்; மற்று- (அசைநிலை); எஞ்ஞான்றும்-எப்போதும்; நல்லார்க்கு-பெரியார்க்கு; நல்ல-நன்மையானவை; செயல்-செய்தல்.


இல்லாளை யஞ்சுவான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையாளை அஞ்சுவான்;
பரிப்பெருமாள்: மனையாளை அஞ்சுவான்;
பரிதி: மனையாள் கோபத்திற்குப் பயப்படுவானாகில்;
காலிங்கர்: தன் மனையாளை அஞ்சுவான் யாவன்;
பரிமேலழகர்: தன் மனையாளை அஞ்சுவான்;

'தன் மனையாளை அஞ்சுவான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்கு அஞ்சுபவன்', 'மனைவியை அஞ்சுபவன்', 'எல்லாக் காரியத்திலும் மனைவிக்குப் பயந்து நடக்கின்றவன்', 'மனையாளுக்குப் பயப்படுகிறவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனைவிக்கு அஞ்சுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

அஞ்சும் மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.
பரிப்பெருமாள்: எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.
பரிதி: நல்லோர்க்கு நல்லது செய்யப் பயப்படுவான் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவன் பெரிதும் அஞ்சும்; யாதினை எனின், எஞ்ஞான்றும் உலகத்து நல்லோராகிய சான்றோர்க்குக்கூட நல்லனவற்றைச் செய்தலை என்றவாறு.
பரிமேலழகர்: தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும். [நல்விருந்தினர்- வாராவிருந்தினர்]

'எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லவர்க்கு நல்லது செய்ய என்றும் அஞ்சுவான்', 'பெற்றோர், அறிஞர், சுற்றத்தார் முதலிய நன்மக்களுக்கு உதவக்கூடிய நல்ல செயல்களைச் செய்ய எப்போதும் அஞ்சுவான்', 'தக்கவர்களுக்கு நன்மை செய்யவும் பயப்படுவான்', 'எப்போதும் நல்லவர்களுக்கு நல்ல காரியத்தைச் செய்யப் பயப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்லவர்களுக்கு நல்லன செய்தலை எப்போதும் அஞ்சும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனைவிக்கு அஞ்சுபவன் நல்லார்க்கு நல்லன செய்தலை எப்போதும் அஞ்சும் என்பது பாடலின் பொருள்.
இங்குள்ள 'நல்லார்' யார்?

அஞ்சி நடப்பதே இல்வாழ்க்கை என ஆகிவிட்டபின் எல்லாவற்றிற்கும் அஞ்ச வேண்டியதுதான்.

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் நல்லவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்யவும் எந்நாளும் அச்சம் கொள்வான்.
இங்கு சொல்லப்படும் கணவன் தானே பொருள் தேடும் தகுதியுடையவன்தான். ஆனாலும் தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவனாக இருக்கின்றான். அவளிடம் பெறும் காம இன்பம் மறுக்கப்பட்டுவிடுமோ என்பதற்காகவோ அல்லது வேறு ஏதாகிலும் குற்ற உணர்வோடு நிற்பவனாயிருப்பதாலோ அவளுக்குப் பணிந்து நடக்கிறான். தன் பெருமையும் சிறப்புமே பொருளாகக் கருதும் இல்லாள் நல்ல பணிகளுக்குச் செலவிட விரும்பவில்லை என்பதற்காகத் தானே தேடிய பொருள்வழியும் அறப் பணிகளைச் செய்யாமல் கைவிடுவான். அதுபோலவே அவள் என்ன நினைப்பாளோ அல்லது என்ன சொல்லுவாளோ என அஞ்சி விருந்தினரையும் உரிய வகையில் பேணுவதற்குத் தயக்கம் காட்டுவான். சுற்றத்துக்கும் உதவப் பயப்படுவான். இவ்வாறாக நல்லார்க்கு நன்மை செய்ய அஞ்சும் இயல்பினனாக இருக்கிறான் அக்கணவன்.

தேவநேயப் பாவாணர் தனது உரையில் மனைவியை அஞ்சுவான் தொடர்பான இரண்டு பழம்பாடல்களைச் சுட்டிச் செல்கிறார். அவை:
மனைவியை அஞ்சும் ஒருவன் விருந்து வந்திருப்பதை மனைவிக்குச் சொல்ல அஞ்சுவதையும், சொல்லியபின்னர் நடப்பதையும் பழம்பாடல் ஒன்று விளக்குகிறது. இப்பாடல் ஔவையார் பெயரில் உலவுகிறது. இது பிற்காலத்து ஔவையாரோ அல்லது அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவோ இருக்கலாம் என்பர்:
இருந்து முகந்திருத்தி ஈரொடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்
என்பது பாடல். இதன் பொருள்: நம் வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார் என்று கூறினால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த கணவன் இச்செய்தியை மனைவிக்குத் தெரிவிப்பதற்கு முன்பு அவளை நயந்து கொள்ள நினைக்கிறான்; அவளை மகிழ்விக்க முயற்சிக்கிறான். மெதுவாக அவளின் முகத்தைத் திருத்தி அவள் தலையைக் கோதி தலையிலுள்ள ஈரையும் பேணையும் எடுத்துக் கொண்டே 'நம் இல்லத்திற்கு விருந்தினர் வந்திருக்கிறார்' என்ற செய்தியைக் கணவன் அவளிடம் கூறினான். அவன் கூறிய அடுத்த நொடியே மனைவி ஆடத் தொடங்கினாள்; பாடுகிறாள்; கையில் கிடைத்த பழமுறத்தால் கணவனை ஓடோடித் தாக்குகிறாள். (வந்த விருந்து நிலைமையைப் புரிந்துகொண்டு வெளியேறுகிறது.)
மற்றொரு பாடல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியில் உள்ளது. இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற் புல்லாளனாக மறந்தோற்பி னெனப்பு கைந்து....(சீவக சிந்தாமணி – மண்மகள் இலம்பகம், செய்யுள் – 217 (2319) பொருள்: வீரத்தை யிழந்தேனெனின் மனைவிக்கு அஞ்சி விருந்தினரின் முகத்தை மகிழச் செய்யாமல் விட்ட நெஞ்சையுடைய இழிஞன் ஆகக் கடவேனென்று கூறிச் சீறி....) எனச் சொல்லும் இச்செய்யுள் இக்குறட்கருத்தை நினைவூட்டும். இப்பாடலைப் பரிமேலழகரும் தனது உரையில் குறித்துள்ளார்.

இங்குள்ள 'நல்லார்' யார்?

'நல்லார்' என்றதற்கு நல்லார், நல்லோர், உலகத்து நல்லோராகிய சான்றோர்க்குக்கூட, நல்லவர்கள், நல்லவர், பெற்றோர் அறிஞர் சுற்றத்தார் முதலிய நன்மக்கள், தக்கவர்கள், நன்மக்கள் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மனைவிக்குப் பயப்படுபவன் எப்பொழுதும் நல்லவர்களுக்கு நல்லனசெய்ய அஞ்சுவான் என்பது இக்குறட்கருத்து. யார் அந்த நல்லவர்கள்? பரிமேலழகர் நல்லார் என்போர் தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும் ஆவர் என்கிறார். தேவநேயப்பாவாணர் 'அரசரொழிந்த ஐங்குரவர்' ஆகியோரையும் ஜி வரதராசன் சுற்றத்தார், நண்பினர், அறிஞர், மூத்தவர், விருந்தினர் ஆகியோரையும் நல்லார் எனக் கூறினர்.
பெற்றோர், உடன்பிறந்தார், சுற்றம், பெரியார் முதலானோருக்குக்கூட உதவ அஞ்சுவான் என்கிறது பாடல்.

'நல்லார்' என்பது தொடர்புடைய நன்மக்கள் என்ற பொருள் தரும்.

மனைவியை அஞ்சுபவன் நல்லவர்களுக்கு நல்லன செய்தலை எப்போதும் அஞ்சும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெண்வழிச்சேறல் ஒருவனது பொதுவாழ்க்கை இல்லாமல் செய்துவிடும்.

பொழிப்பு

மனைவிக்கு அஞ்சுபவன் நல்லவர்களுக்கு நல்லன செய்ய எப்போதும் அஞ்சுவான்.