இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0900



இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்
சிறந்துஅமைந்த சீரார் செறின்

(அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை குறள் எண்:900)

பொழிப்பு (மு வரதராசன்): மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.

மணக்குடவர் உரை: மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்: மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின்.
இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: சிறந்து அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார்.
(சார்பு - அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உய்யார் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: சிறப்பு மிக்க பெரியவர் சினந்தால் ஆற்றல் மிக்கவர் துணையிருப்பினும் மீளமுடியாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறந்துஅமைந்த சீரார் செறின் இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்.

பதவுரை: இறந்து-அளவு கடந்த, அளவு மிகுந்து; அமைந்த-பொருந்திய; சார்பு-துணை; உடையர்-பெற்றுள்ளவர்; ஆயினும்-ஆனாலும்; உய்யார்-தப்ப மாட்டார்; சிறந்து-(பலவகையானும்) சிறந்து; அமைந்த- ஆணவமின்றி அடங்கிய; சீரார்-சீர்மையுடையார்; செறின்-வெகுண்டால்.


இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்:
மணக்குடவர் குறிப்புரை: இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.
பரிப்பெருமாள்: மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.
பரிதி: எல்லையற்ற சார்வாகிய உறவு, தன்மம், கல்வி, தானம் உண்டாகிலும் இது தங்காது என்றவாறு.
காலிங்கர்: சீர்மைப்பாட்டினை உடையார் யாவர்; மற்று அவர் குணம், கல்வி, கேள்வி, அறிவுடைமை முதலியவற்றான் மிக்கு அமைந்த சார்பினையுடையார் ஆயினும் உய்ந்து கரை ஏறார்;
பரிமேலழகர்: அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். [கழியப் பெரிய - மிகப் பெரிய]
பரிமேலழகர் குறிப்புரை: சார்பு - அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உய்யார் என்பது கூறப்பட்டது. [திரிபுரம் - சிவபெருமானால் அழிக்கப்பட்ட பொன், வெள்ளி, இரும்பால் ஆகிய கோட்டைகள்]

'மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். சார்பு என்றதற்கு 'உறவு, தன்மம், கல்வி, தானம்' எனப் பரிதியும் 'குணம், கல்வி, கேள்வி, அறிவுடைமை' எனக் காலிங்கரும் 'அரண், படை, பொருள், நட்பு என இவை' எனப் பரிமேலழகரும் விரித்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அளவுகடந்த துணை நலங்கள் வாய்ந்தவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது', '(துன்பம் செய்தவர்கள்) எவ்வளவு துணைபலம் உள்ளவர்களானாலும் தப்ப முடியாது (அழிவார்கள்)', 'அளவில்லாத நல்துணை யுடையாரும் பிழைத்துக் கொள்ள மாட்டார்கள்', 'மிகுதியாகப் பொருந்திய துணைகளை உடையார் ஆயினும் பிழைக்கமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அளவுகடந்த துணைகளை உடையார் ஆயினும் தப்பிப் பிழைக்க முடியாது என்பது இப்பகுதியின் பொருள்.

சிறந்துஅமைந்த சீரார் செறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின்.
பரிப்பெருமாள்: மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின்.
பரிதி: பெரியவர் முனிந்தால் என்றவாறு.
காலிங்கர்: தவமும் ஞானமும் முதலியவற்றான் மிக்கு அமைந்த சீர்மைப்பாட்டினை உடையார் தம்மைச் செறின்.
எனவே இ(ங்ஙனம்) பெரியோரை என்றும் பிழையற்க என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; [கழிய மிக்க -மிகவும் அதிகமான]
பரிமேலழகர் குறிப்புரை: சீருடையது சீர் எனப்பட்டது.

மிகவும் அமைந்த சீர்மையுடையார்/பெரியவர்/தவமும் ஞானமும் முதலியவற்றான் மிக்கு அமைந்த சீர்மைப்பாட்டினை உடையார்/கழிய மிக்க தவத்தினை உடையார் செறுவாராயின் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகச் சிறப்பால் அமைந்த பெருமையுடையவர் சீறினால்', 'உயர்ந்த புலன் அடக்கிய ஒழுக்கமுடையவர்கள் (துன்பப்படுத்தப்பட்டு) வருத்தமடைவார்களானால்', 'மிக மேலாகிய நிலைத்த தவத்தினர் சினப்பார் ஆயின்', 'சிறப்புற்றுப் பொருந்திய பெருமையை யுடையவர் வெகுண்டால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறிவு மிக்கு அமைந்த சீர்மைப்பாட்டினை உடையார் சீறினால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சிறந்துஅமைந்த சீரார் சீறினால் அளவுகடந்த துணைகளை உடையார் ஆயினும் தப்பிப் பிழைக்க முடியாது என்பது பாடலின் பொருள்.
'சிறந்துஅமைந்த சீரார்' யார்?

அறிவுடையார்தம் சீற்றம் எந்தவிதமான பாதுகாப்பையும் தகர்த்தெறியும்.

அறிவு மிக்கு அமைந்த சீர்மைப்பாட்டினை உடையார் வெகுள்வாராயின் அளவுகடந்த நல்ல துணையுடையாரும் தப்பிப் பிழைக்கமாட்டார்.
'இறந்தமைந்த சார்பு' என்பதற்கு அளவு கடந்த துணைகள் என்பது பொருள். அத்துணைகள் யாவை? உறவு, தன்மம், கல்வி, தவம், தானம் ஆகியவற்றல் அமைந்த சார்வு எனவும் குணம், கல்வி, கேள்வி, அறிவுடைமை இவற்றால் அமைந்த சார்பு எனவும் கழியப் பெரிய அதாவது அரண், படை, பொருள், நட்பு போன்ற மிகப் பெரிய சார்பு எனவும் விளக்கம் தருவர். அளவு கடந்த சார்புடையவர் எனச் சொல்லப்பட்டதால் அது ஆட்சி செலுத்துபவனையே குறிக்கும்.
எல்லாச்சிறப்பும் மிகுந்தமைந்த சீர்மையினையுடைய பெரியார் வெகுள்வாராயின் மிகப் பெரிய துணைகள் கொண்டவராக இருந்தாலும் தப்பிப் பிழைக்க முடியாது. இங்கு பெரியார் என்றது சமுதாய ஆற்றலை உருவாக்குபவர் ஆகும். மக்கள் கருத்துக்களை ஒன்று திரட்டி ஆட்சியாளருக்கு உணர்த்துபவர் இவர். இவர் பலவகையிலும் சிறப்பும் சீர்மையும் உடையவர். இவர் பெரும்படை வலிமையை உடைய அரசைக்கூட எதிர்த்து நிற்க வல்லவர். இவர் ஏன் சீற வேண்டும்? ஆட்சித்தலைவன் அறத்துக்குப் புறம்பாகவும் நாட்டுநலனுக்கு எதிராகவும் தகாதன செய்தால் இப்பெரியார் சினம் கொள்வார். இவரைப் பகைத்தால் ஆட்சித்தலைவன் தப்பமுடியாது அழிவான்.

இக்குறட்கருத்தை ஒட்டிய பாடலொன்று நாலடியாரில் உள்ளது. அது:
விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
(நாலடியார் 164 பொருள்: படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடிய ஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்கு அஞ்சும், அதுபோல அருமைப்பாடுடைய பாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும், மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், அதற்குத் தப்பமாட்டார்.) பெருமையுடையாரது சினம் அரிதான அரண் முதலியவற்றையுங் கெடுக்கும் என்பது கருத்து.

'சிறந்துஅமைந்த சீரார்' யார்?

'சிறந்துஅமைந்த சீரார்' என்றதற்கு மிகவும் அமைந்த சீர்மையுடையார், பெரியவர், தவமும் ஞானமும் முதலியவற்றான் மிக்கு அமைந்த சீர்மைப்பாட்டினை உடையார், கழிய மிக்க தவத்தினை உடையார், நல்ல தவசையும் பெருமையயும் உடைய அருந்தவர், மிகவும் அமைந்த தவத்தினை உடையார், மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர், எல்லாச்சிறப்பும் மிகுந்தமைந்த சீர்மையினையுடையார், சிறந்த வலிமையுடையோர், சிறப்பு மிக்க பெரியவர், மிகச் சிறப்பால் அமைந்த பெருமையுடையவர், உயர்ந்த புலன் அடக்கிய ஒழுக்கமுடையவர்கள், சிறந்தமைந்த பெரியார், மிக மேலாகிய நிலைத்த தவத்தினர், சிறப்புற்றுப் பொருந்திய பெருமையை யுடையவர், எல்லாச் சிறப்பும் படைத்த பெரியார், மாபெருந் தவமுனிவர், மேம்பட்ட தவ ஒழுக்கங்களால் அமைந்த பெரியோர் என்றவாறு பொருள் உரைத்தனர்.

முன்னர் அறங்கூறு அவையம் என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டது. இதைச் சங்கப்பாடல் தொகுப்பான பத்துப்பாட்டிலுள்ள மதுரைக் காஞ்சி, சிறந்த கொள்கை அறங்கூறு அவையம் (492) எனக் குறிப்பிடுகின்றது. சான்றோர் அவை, எண்பேராயம், நாற்பெருங்குழு, காவிதி மாக்கள் போன்ற குழுக்களும் அறங்களைக் கற்பித்தன எனப் பழம் இலக்கியங்கள் புலப்படுத்தும். இக்குழுவினர் மிக்குக் கல்வி பெற்றவராய் நாட்டின் பண்பாடு, அரசியல் தளங்களில் தாக்கத்தை உண்டாக்கும் ஆற்றல்களாக, கற்றறிந்தோர் வகுப்பாக (intelligentsia) இயங்கியவர்களெனத் தெரியவருகிறது. மேலும் சமணர் பள்ளி, பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி ஆகிய பள்ளிகளும் இருந்தன, இவை போன்ற அமைப்புகளில் தலைமைப்பண்பு கொண்டவரே 'சிறந்துஅமைந்த சீரார்' எனலாம்.

'சிறந்துஅமைந்த சீரார்' என்பதிலுள்ள சிறந்து என்ற சொல் பல்லாற்றானும் சிறந்து எனப் பொருள்படும். அமைந்த என்பது (செருக்கின்றி) அடங்கிய என்ற பொருள் தருவது. சீரார் என்ற சொல்லுக்கு சீர்மைப்பாடுடையவர் என்பது பொருள். 'சிறந்துஅமைந்த சீரார்' என்றது பலவகையிலும் சிறந்த சீர்மைப்பாடுடையவரைக் குறிப்பது. இவர் நுண்ணறிவாளராக இருப்பவர். நாட்டின் நலம் கருதுபவர். அறவொழுக்கங்களில் மேன்மையானவர். தனிமனிதர் அறிவாற்றல் கொண்டு விளங்கும்போது அவரைச் சமுதாயம் பயன்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றது; இத்தகையோர் கருத்தை மக்கள் உடன் ஏற்பர். அறம் பிறழ்ந்த வேளையில் நாட்டைக் காக்க இப்பெரியார் எழுச்சி கொள்வார் என்கிறது இப்பாடல்.

'சிறந்துஅமைந்த சீரார்' என்ற தொடர் பலவகையிலும் சிறந்த சீர்மைமிகுந்த பெரியார் என்ற பொருள் தரும்.

சிறப்புற்றுப் பொருந்திய பெருமையை யுடையவர் சீறினால் அளவுகடந்த துணைகளை உடையார் ஆயினும் தப்பிப் பிழைக்க முடியாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நுண்ணறிவுள்ளோர் சீறுமளவு நடவாமை பெரியாரைப்பிழையாமையாம்.

பொழிப்பு

சிறப்பு மிக்க பெரியவர் சீறினால் அளவுகடந்த துணைகளை உடையார் ஆயினும் மீளமுடியாது.