இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0899



ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

(அதிகாரம்:பெரியாரைப் பிழையாமை குறள் எண்:899)

பொழிப்பு (மு வரதராசன்): உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும் இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான்.



மணக்குடவர் உரை: உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும்.
இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும்.
(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மேலான கொள்கையர் சீறினால் இடைநடுவே வேந்தனும் அரசு இழப்பான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஏந்திய கொள்கையார் சீறின், வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும்.

பதவுரை: ஏந்திய=உயர்ந்த; கொள்கையார்-கொள்கைகளையுடைவர்; சீறின்-சினந்தால்; இடை-நடுவில்; முரிந்து-அறுந்து, இழந்து; வேந்தனும்-மன்னனும்; வேந்து-அரச பதவி; கெடும்-அழியும்..


ஏந்திய கொள்கையார் சீறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின்; [உயர்ந்த கோட்பாடு - உயர்ந்த கொள்கை]
பரிப்பெருமாள்: உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின்;
பரிதி: நல்லொழுக்கமான தவநெறியிலே நின்றார் முனிந்தால்;
காலிங்கர்: சொன்ன தவமும் ஞானமும் முதலியவற்றால் மிக்க கோட்பாட்டை உடைய பெரியோர் சீறுவர் ஆயின்;
பரிமேலழகர்: காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; [விரதங்களாவன: இன்ன அறம் செய்வேன் எனவும் இன்ன பாவம் ஒழிவேன் எனவும் தன் ஆற்றலுக்கேற்ப வரைந்து கொள்வன]

உயர்ந்த கோட்பாட்டை யுடையார்/தவநெறியிலே நின்றார்/தவமும் ஞானமும் முதலியவற்றால் மிக்க கோட்பாட்டை உடைய பெரியோர்/உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயர்ந்த கொள்கைகளையுடைய பெரியோர் (தவமுனிவர்) வெகுண்டால்', 'உயர்ந்த ஆன்ம ஒழுக்கமுடைய மகான்கள் கோபித்துக் கொள்ள நேர்ந்துவிட்டால்', 'உயர்ந்த தவமுடையவர்கள் சினந்தால்', 'உயர்ந்த கொள்கைகளை உடையவர் வெகுள்வாரானால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உயர்ந்த கொள்கைகளை உடையவர் சினந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். [இற்று- அறுந்து]
மணக்குடவர் குறிப்புரை: இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" என்றார் பிறரும். இது பொருட்கேடு வரும் என்றது.
பரிதி: வேந்தனாகிலும் சடுதியிலே கெடுவன் என்றவாறு.
காலிங்கர்: அரசனும் தனது வாழ்க்கை இடையே முரிந்து கெட்டுவிடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வேந்தனும் என்ற உம்மைச் சிறப்பும்மை ஆகலான் (மேற்சொன்ன) நாடும் பொருளும் பெரும் படையும் உடையவர் (எனினும்) கெட்டுவிடும் என்றவாறு. ஏந்துதல்- மிகுதல்.
பரிமேலழகர்: அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும். [தன்பதம்- தன்பதவி]
பரிமேலழகர் குறிப்புரை: ''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.

'இந்திரனும்/அரசனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசனும் இடையிலே முரிந்து தன் பதவி இழந்து கெடுவான்', '(கோபிக்கப்பட்டவன்) அரசனானாலும்கூட அப்போதே பலமிழந்தவனாகி அரசாட்சியையும் இழந்துவிடுவான்', 'இந்திரனும் இடைநடுவே தன் நிலையை இழந்து வருந்தி அழிவான். வேந்து-அரசநிலை', 'அரசனும் தம் ஆட்சியின் நடுவே கெட்டு அரசாட்சியை இழப்பான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆட்சித்தலைவனும் தம் ஆட்சியின் நடுவே அரசாட்சியை இழந்து அழிவான் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
ஏந்திய கொள்கையார் சினந்தால் ஆட்சித்தலைவனும் தம் ஆட்சியின் நடுவே அரசாட்சியை இழந்து அழிவான் என்பது பாடலின் பொருள்.
'ஏந்திய கொள்கையார்' யார்?

கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் அரசையே ஆட்டம் காணவைப்பார்கள்.

உயர்ந்த கொள்கையை உடைய பெரியார் வெகுள்வாராயின் ஆட்சித்தலைவனும் தன் அரசாட்சியை இழந்து அழிவான்.
பெரியார் என்றது இங்கு மேலான கோட்பாடுகளோடு அறவொழுக்கங்களால் சிறந்து பொதுநலனில் அக்கறை கொண்டவர்களைக் குறித்தது. உயர்ந்த கொள்கையையுடையார் சீறின் அரசனும் அரசுரிமையை இழப்பன் என்கிறது பாடல். இத்தகைய பெரியவர்கள் சீறும் அளவு நிலை எப்பொழுது ஏற்படுகின்றது?
நாட்டில் அரசியல் பிழைகள் நிறைய நேரலாம்; பொறுக்க முடியாத அளவு பொருளாதாரக் குற்றங்கள் அரசுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நடக்கலாம்; அவற்றைக் கண்டும் காணாமல் அரசு இருக்கலாம். அத்தகைய நேரங்களில் தன்னலம் கருதாது பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் சீரிய கொள்கைகளையுடைய பெரியோர்க்கு மறைக்க இயலாமல் சினம் தோன்றி அரசுக்கு எதிராகப் போரிட்டே ஆக வேண்டிய தேவை உருவாகிவிடும். அதற்கு அங்குள்ள அரசமைப்பு, நிர்வாகம் போன்றவையே காரணங்களாக இருக்கும். அதன் விளைவாக இடைமுரிந்து அரசனும் அரசும் அழிந்து போய்விடும்.
புத்தர், இயேசு உள்ளிட்ட பெரியார்களுக்குச் சினம் ஏற்பட்டு உலக வரலாற்றுப் போக்கு மாறியிருக்கிறது. பிரஞ்சுப்புரட்சி, ரஷ்யப் புரட்சி இவற்றையும் நினைக்கலாம். அடிமைத்தனம் பொறுக்கமாட்டாத காந்தியடிகள் சினம் கொண்டதால் பிரிட்டிஷ் ஆட்சி நம்நாட்டில் முறிந்து போனது.

ஆட்சித் தலைவன் மக்கட் பெரியார்களை என்றும் தழுவிக் கொள்ள வேண்டும்; அன்னோர் செவி கைப்பக் கழறினும் பொறுத்துக் கேட்டொழுகும் அடக்கம் வேண்டும்; அறிவிலும் ஆற்றலிலும் அனுபவத்திலும் ஆன்ம பலத்திலும் அவனினும் பெரியார் குடிமக்களுள் உளர் என்று நினைத்து அவர்களை அரவணத்துச் செல்லவேண்டும். அப்படியில்லாமல் அவன் தன்னை நாட்டுத் தனிப்பெருந்தலைவனாக எண்ணி மயக்கம் அடைந்து, நாட்டின்நலம் குன்றிட, தன் விருப்பம் போல் நடந்தானானால் அது அப்பெரியாரை சீறும்நிலைக்குத் தள்ளும், அவர் தலைமையில் புரட்சி வெடிக்கும். அப்பொழுது ஆட்சித்தலைவனும் அழிவான்; அரசும் அவனது கையைவிட்டுப்போய் விடும்.

இக்குறளிலுள்ள வேந்தன் என்ற சொல்லுக்கு அரசன் என்று பலர் பொருள் கூறினர். சிலர் இந்திரன் எனக் கொண்டனர். குறளில் வேந்தன் என்னும் சொல் வரும் இடங்களில் எல்லாம் அரசன் என்றே பொருள்படுகிறது; இக்குறளிலும் அரசன் எனப் பொருள்படுதலால் ஆட்சித் தலைவன் எனக் கொள்வதே பொருத்தம்.
'வேந்து' என்ற சொல் முழுமையான ஆட்சியுரிமையைக் குறிக்க வந்தது. உயர்ந்த கொள்கைகளையுடைய சான்றோர்கள் சீறும்படி நடந்துகொண்டால், ஆட்சித்தலைவனும், தனது அவ்வுயர்ந்த நிலைமைகெட்டுத் தன் ஆட்சியுரிமையை இழப்பான். இறை-இறையாண்மை. வேந்து-ஆட்சியுரிமை. இவ்வாறு இறை, வேந்து என்பனவற்றை அரசர்களின் பெயர்களாக மட்டும் குறிக்காமல் அரசுத்தன்மையைக் குறிக்கும் தொழிற்பண்புச் சொற்களாக வள்ளுவர் ஆள்கிறார். வேந்தனையும் வேந்தினையும் வேறு பிரித்த நுண்மையும் நோக்கத்தக்கது.

'ஏந்திய கொள்கையார்' யார்?

'ஏந்திய கொள்கையார்' என்ற தொடர்க்கு உயர்ந்த கோட்பாட்டை யுடையார், நல்லொழுக்கமான தவநெறியிலே நின்றார், தவமும் ஞானமும் முதலியவற்றால் மிக்க கோட்பாட்டை உடைய பெரியோர், காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார், உயர்ந்த கொள்கையுடைய பெரியார், உயர்ந்த கொள்கையுடைய சான்றோர்கள், காத்தற்கரிய கொள்கையும் வலிமையுமுடையவர், மேலான கொள்கையர், உயர்ந்த கொள்கைகளையுடைய பெரியோர் (தவமுனிவர்), உயர்ந்த ஆன்ம ஒழுக்கமுடைய மகான்கள், உயர்ந்த கொள்கைகளையுடைய பெரியார், உயர்ந்த தவமுடையவர்கள், உயர்ந்த கொள்கைகளை உடையவர், தவத்தால் உயர்ந்த கொள்கையை உடையவர், உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த அருந்தவர், மேம்பட்ட குறிக்கோளையுடைய நல்லோர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஏந்திய கொள்கையார் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த பெரியாராவர். அவர்கள் மக்களுள் ஒருவராக இருப்பவர்கள்; மக்கள் நலம் நாடி தன்னலமின்றி வாழ்பவர்கள். அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு தந்து அரசு ஆட்சி செய்ய வேண்டும். அவர்களை இகழ்ந்து பிழை செய்வதால் வரும் இடரும் அழிவும் தாங்க முடியாதனவாக இருக்கும். இப்பெரியவர்களின் வெறுப்பில் இருந்து தப்பமுடியாது. சிறந்த கொள்கை உடைய பெரியார்கள் பொதுவாகச் சினம் கொள்வதில்லை; ஒருகால் பொது நன்மை கருதிச் சினம் கொண்டு எதிர்க்க எழுந்தால், ஆளும் தலைவனும் இடைகாலத்திலேயே சீரழிந்து அரசாட்சியை இழந்து கெடுவான். தன்னலம் இல்லாமல் பொதுத்தொண்டு செய்ய முற்படுபவர்களுக்கு ஆற்றல் மிகுதி; மக்களும் அவர்கள் பின்னாலேயே நிற்பர். எனவே அவர்களைப் புறக்கணிப்பதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என்று அரசுக்கு அறிவுரை தரப்படுகின்றது.
அரசே அழிந்துவிடும் எனச் சொல்லப்பட்டதால், 'ஏந்திய கொள்கையார்' என்ற தொடர் இங்கு சமுதாய மாற்றம் வேண்டுவோர் அல்லது புரட்சி எண்ணம் கொண்டவர்களைக் குறிக்கலாம்.

'ஏந்திய கொள்கையார்' என்றதற்குக் கொள்கைப் பிடிப்பு கொண்ட பெரியார் என்பது பொருள்.

உயர்ந்த கொள்கைகளை உடையவர் சினந்தால் ஆட்சித்தலைவனும் தம் ஆட்சியின் நடுவே அரசாட்சியை இழந்து அழிவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறிவுடையாரது பகைநீக்கல் பெரியாரைப் பிழையாமையாம்.

பொழிப்பு

மேலான கொள்கையர் வெகுண்டெழுந்தால் வேந்தன் இடையிலே இற்றுத் தன் அரசையும் இழப்பான்.