இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0894



கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

(அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை குறள் எண்:894)

பொழிப்பு (மு வரதராசன்): ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தால், தானே வந்து அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

பரிமேலழகர் உரை: ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால் ஒக்கும்.
(கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: வல்லமை உடையவர்கட்கு, வல்லமை இல்லாதார் துன்பம் செய்தல் சாவுக் கடவுளை வாவென்று தாமே கையால் காட்டி அழைத்ததை ஒக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்.

பதவுரை: கூற்றத்தை-கூற்றுவனை; கையால்-கையைக் காட்டி; விளித்து-அழைத்தது; அற்றால்-அத்தன்மைத்து; ஆற்றுவார்க்கு-வலியுடையார்க்கு, செய்ய வல்லவர்க்கு; ஆற்றாதார்-வலிமையில்லாதார், செய்யமாட்டாதார்; இன்னா-தீங்குகள்; செயல்-செய்தல்.


கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்;
பரிப்பெருமாள்: தம்மைக் கொல்லும் கூற்றைக் கைகாட்டி அழைத்தாற் போலும்;
பரிதி: தன் சீவனை ஒருவருக்கும் கொடாதவன் காலனைப் 'போர் செய்ய வா' என்று அழைத்ததற்கு ஒக்கும்;
காலிங்கர்: தமக்கு மிகவே வேதனை வருதலை யாரும் வேண்டார் அன்றே; மற்று அதற்கு உரிய கூற்றத்தை 'இங்கே வா' என்று தாமே தம் கைகாட்டி அழைத்த அத்தன்மைத்து;
பரிமேலழகர்: தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால் ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. [உண்மையும் அண்மையும் -தவறாமையும் நெருக்கமும்]

'தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யமனைக் கையால் அழைப்பதுபோலாகும்', 'தானே வந்து உயிரைப் பிடிக்கும் எமனை முன் கூட்டியே கைகாட்டி அழைத்தல் போலும்', 'எமனைக் கையைப் பிடித்துத் தன்னிடம் இழுப்பதற்குச் சமானம்', 'யமனைக் கையாற் கூப்பிட்டது போல் ஆகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பது போலாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல். [இன்னாதவற்றை -துன்பம் தரும் செயல்களை]
பரிப்பெருமாள்: வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாத செய்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய மூவரினும் அரசரைப் பிழைத்தலால் வரும் குற்றம் கூறுவார் முற்பட உயிர்க்குக் கேடு வரும் என்றார்.
பரிதி: பெரியோருடன் பகை கொள்ளுதல் என்றவாறு.
காலிங்கர்: யாது எனின் தவ நெறியாளராகிய பெரியோர்க்கு மற்று அஃது இல்லாராகிய சிறியோர் இன்னாதனவற்றைச் செய்தல் என்றவாறு.
பரிமேலழகர்: மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; [மூவகை ஆற்றல் - பெருமை, அறிவு, முயற்சி]
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது. [பிழைத்தலின் - தவறுதலின்]

'வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல்' என்று மணக்குடவரு பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பெரியோருடன் பகை கொள்ளுதல்' என்றார். 'தவ நெறியாளராகிய பெரியோர்க்கு சிறியோர் இன்னாதனவற்றைச் செய்தல்' எனப் பொருளுரைத்தார். பரிமேலழகர் 'மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்' என்று உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வலியாரை மெலியார் வம்புக்கு இழுத்தல்', 'ஆற்றல் மிக்கவருக்கு வலிமை இல்லாத எளியவர் தீமை செய்தல்', 'வல்லமையாற் பெரியாருக்கு வல்லமை இல்லாதவன் துன்பம் செய்வது', 'திறமையுடையவர்களுக்குத் திறமையில்லாதவர்கள் தீமை செய்தல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வலியில்லாதார் வலியுடையாரைச் சீண்டிப் பார்த்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வலியில்லாதார் வலியுடையாரைச் சீண்டிப் பார்த்தல் கூற்றுவனைக் கையால் விளித்தற்று என்பது பாடலின் பொருள்.
'கையால் விளித்தற்று' குறிப்பது என்ன?

வலிய அரசாட்சிக்கு ஊறு உண்டாக்கிச் சாவைத் தேடிக்கொள்ள வேண்டாம்.

ஆற்றல் உடையவர்கட்கு ஆற்றல் இல்லாதார் தீமையைச் செய்தல் கூற்றுவனைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
இக்குறளிலுள்ள ஆற்றுவார் என்ற சொல்லும் சாவை எதிர்கொள்ள வேண்டிவரும் எனச் சொல்லப்பட்டதும் இங்கு ஆட்சித்தலைவன் பெரியாராக காட்டப்படுகிறான் என்பதைத் தெரிவிக்கின்றன. ஆற்றல் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. அது இங்கு வலியுடைமை என்ற பொருளில் ஆளப்பட்டது. ஆற்றுவார், கூற்றம் ஆகிய சொல்லாட்சிகள் அரசு என்ற வலிய ஆற்றலுடன் மோதுதலைக் குறிப்பதாக உள்ளது. ஆட்சித் தலைவனுக்கோ அரசு அங்கங்களுக்கோ தீமையை உண்டாக்கினால் அரசு தன் வலியால் எதிர்ப்போரை அடக்கிவிடுவர். பின் அது சாவிலும் முடியலாம்.
நல்லாட்சி நடத்தும் ஆள்வோர்க்கு இன்னா செய்வது பெரியாரைப் பிழைக்கும் செயல். அது கூற்றைக் கையசைத்து அழைப்பது போன்றதாம் என்கிறது பாடல். வலியாரைக் கைகாட்டி அழைப்பது இகழ்வாய்க் கருதப்படும் என்பதால் கூற்றுவனுடன் வம்பு செய்தல் இறப்பில்தான் முடியும். வலியார்க்கு ஊறு செய்தல் ஆற்றலில்லார் உயிர்க்குப் பாதுகாப்பாற்ற தன்மையை விளைவிக்கக் கூடியது என்பதை உணர்ந்து அதன்படி நடந்துகொள்க அதாவது ஆற்றலுள்ள அரசைப் பகைப்பதற்குமுன் சிந்தித்துச் செயல்படுக எனச் சொல்லப்பட்டது.
கொடுங்கோன்மையைப் பகைக்க வேண்டாம் என்று வள்ளுவர் கூறமாட்டார். அதற்கான குறிப்பும் இங்கு இல்லை.

'கையால் விளித்தற்று' குறிப்பது என்ன?

'கையால் விளித்தற்று' என்றதற்குக் கைகாட்டி அழைத்தாற் போலும், 'போர் செய்ய வா' என்று அழைத்ததற்கு ஒக்கும், 'இங்கே வா' என்று தாமே தம் கைகாட்டி அழைத்த அத்தன்மைத்து, தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால் ஒக்கும், தானே வருகிற கூற்றுவனைக் கைகாட்டி அழைக்கிறதற்குச் சரி, கைகாட்டி யழைத்தற் கொக்கும், கைகாட்டி அழைத்தாற் போன்றது, கைகாட்டித் தம்மிடம் வருமாறு அழைப்பதற்கு ஒப்பாகும், கையால் அழைப்பதுபோலாகும், கையைப் பிடித்துத் தன்னிடம் இழுப்பதற்குச் சமானம், கைந்நீட்டி அழைப்பது போன்றதாம், கையாற் கூப்பிட்டது போல் ஆகும், கையால் காட்டி அழைத்ததை ஒக்கும், வா என்று கை நீட்டிவிடும் அழைப்பு, வலியக் கைதட்டி அழைத்தாற்போலும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கூற்றம் என்பது கூற்றுவனைக் குறிக்கும். சாவுக்கான தெய்வத்தை உருவகப்படுத்திச் சொல்வது கூற்றுவன் என்பது. இத்தெய்வம் சாவுக்குக் காரணமாக இருப்பதால் இதைக் கண்டாலே அனைத்து உயிர்களும் நடுங்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. தன் வழியே சென்று கொண்டிருக்கும் அவ்வளவு வலிபொருந்திய கூற்றை ஒரு மனிதன் கைதட்டி அழைக்கிறான். அருகில் சென்று அடக்க ஒடுக்கத்தோடு அழைக்க வேண்டிய வலியதான கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தல் இகழ்வான செயல். அது துன்பம் செய்வதை ஒக்கும். அப்படிக் கூப்பிட்டால் கூற்றுவன் என் செய்வான்? கூப்பிட்டவனிடம் நெருங்கி வருகிறான். வந்த கூற்று வெறும் கையோடு போகுமா? போகாது. அழைத்தவரின் உயிரைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விடும்.
மிகுந்த வல்லமை வாய்ந்த ஒருவனிடம் மெலியவன் வம்பு செய்தால், தனக்குத் தானே தீங்கை தேடிக் கொள்வது போலாகும் என்பதை விளக்குவதற்காக கூற்றத்தைக் கையால் விளிந்தற்று என்ற உவமை பயன்பட்டது. அதாவது, தனக்குத் தீமை செய்தவனை, வல்லமை வாய்ந்தவன் அழித்தே தீருவான்.
தன்னுடைய ஆற்றல் எத்தகையது? பிறருடைய ஆற்றல் எப்படிப்பட்டது? என்பதை அறிந்து செயல்பட வேண்டும். ஆற்றல் இல்லாவிட்டாலும் ஆற்றல் மிக உள்ளோரிடம் வம்பு செய்யாமல் இருக்கக் கற்றுக் கொள் எனச் சொல்கிறது பாடல்.

'கையால் விளித்தற்று' என்ற தொடர் கைகாட்டி அழைத்தாற் போன்றது என்ற பொருள் தருவது.

வலியில்லாதார் வலியுடையாரைச் சீண்டிப் பார்த்தல் கூற்றுவனைக் கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பது போலாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வலியாருக்கு இன்னா செய்யாமை பெரியாரைப்பிழையாமையாம்.

பொழிப்பு

வலிமை இல்லாதவர் ஆற்றல் மிக்கவருக்குத் துன்பம் செய்தல் கூற்றுவனைக் கையால் அழைப்பதுபோலும்.