இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0893



கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு

(அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை குறள் எண்:893)

பொழிப்பு (மு வரதராசன்): அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலே செய்யலாம்.

மணக்குடவர் உரை: தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க. தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.

பரிமேலழகர் உரை: அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாதுசெய்க - தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க.
(அப்பெரியாரைக் 'காலனும் காலம் பார்க்கும் பாராது -வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்' (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: தொலைக்க நினைப்பின் தொலைக்க வல்லாரிடம் தொலைய வேண்டின் உன்மனம்போல் நடக்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அடல்வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு கெடல்வேண்டின் கேளாது செய்க.

பதவுரை: கெடல்-கெடுதல், அழிதல்; வேண்டின்-விரும்பினால்; கேளாது-கேட்காமல், கலந்தெண்ணாமல், நீதி நூலைக் கடந்து; செய்க-செய்வானாக; அடல்-கொல்லுதல்; வேண்டின்-வேண்டின்; ஆற்றுபவர்கண்-ஆற்றலில் வல்லவரிடத்தில், செய்யவல்லவரிடத்தில் (செயல்வீரரான பெரியார், வலியுடையார்); இழுக்கு-குற்றம்.


கெடல்வேண்டின் கேளாது செய்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க;
பரிப்பெருமாள்: தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க;
பரிப்பெருமாள் குறிப்புரை: கேளாது செய்தல் என்பதனை மந்திரி புரோகிதரைக் கேளாது செய்தல் என்று கொள்ளப்படும். அவ்வாறு செய்தால் அவரை அவமதித்தலாம் ஆதலின் ஈண்டுக் கூறப்பட்டது. அறிவாரைக் கேளாது செய்தலும் வலியார்க்குத் தப்புச் செய்தலும் குற்றம் என்றது.
பரிதி: தான் கெடவேண்டினால் பெரியோர் வார்த்தை கேளாது இருப்பது;
காலிங்கர்: தான் கெடவேண்டினான் ஆயின் நல்ல அறிவுடையாரோடு ஆராயாது ஒரு காரியத்தைச் செய்வானாக;
பரிமேலழகர்: தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: அப்பெரியாரைக் 'காலனும் காலம் பார்க்கும் பாராது -வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்' (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.

'தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் கேளாது செய்க என்பதற்கு 'நீதிநூலைக் கடந்து செய்க' என மாறுபாடான உரை தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தொலைய வேண்டின் உன்மனம்போல் நடக்க', 'ஒருவன்தான் கெடுதலை விரும்பினானாயின் பிறரைக் கேளாமலே தவறு செய்வானாக', 'உன் காரியம் கெட்டுப் போக வேண்டுமானால் (அதைப்பற்றி உன்னிலும் திறமை மிகுந்த பெரியாரிடம்) ஆலோசனைக் கேட்டுக் கொள்ளாமல் செய்க', 'அதனை எவரையும் கேட்காமல் செய்க' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தான் கெட விரும்பினானாயின் பெரியாரைக் கலக்காது செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.
பரிப்பெருமாள்: தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.
பரிதி: வாழவேண்டினால் பெரியோர் வார்த்தை கேட்பது என்றவாறு.
காலிங்கர்: மற்றுத் தன்னைக் கொல்ல வேண்டுவானாயின் வலியுடைய பெரியோர் மாட்டுக் குற்றத்தைச் செய்க என்றவாறு.
பரிமேலழகர்: வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை.

'தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை' என இப்பகுதிக்கும் மாறுபட்ட உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தொலைக்க நினைப்பின் தொலைக்க வல்லாரிடம்', 'பிறரைக் கொல்ல விரும்பினாலும் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்த பெரியோரிடத்து', 'உனக்கே கெடுதி வரவேண்டுமானால் (அப்பெரியாருக்குத்) துன்பம் செய்க', 'தான் கொல்ல விரும்பினால் அப்பொழுதே செய்து முடிக்கக்கூடியவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விரும்பியபொழுது (கொல்ல) வல்லவரிடத்துக் குற்றம் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தான் கெட விரும்பினானாயின் பெரியாரைக் கலக்காது செய்க; விரும்பியபொழுது கொல்லவல்ல அவரிடத்துக் குற்றம் செய்க என்பது பாடலின் பொருள்.
'கேளாது செய்க' என்ற தொடர் குறிப்பதென்ன?

கெட்டுப் போகவேண்டுமா? பெரியாரைக் கலக்காமல் செயலாற்று.

தான் கெட விரும்பினால் பெரியாரைக் கேளாமலேயே செயல் ஆற்றுவானாக; விரும்பியபொழுது கொல்ல வல்ல அவரிடத்துக் குற்றம் செய்க.
இக்குறளை இரண்டு வகையாகப் பொருள் கொள்கின்றனர். முதல் வகையினர் 'தான் கெடல்வேண்டின் (ஆற்றுபவரைக்) கேளாது செய்க; தான் அடல்வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு செய்க' என்பர். இன்னொரு வகையினர் 'தான் கெட விரும்பினானாயின் பெரியாரைக் கலக்காது செய்க; விரும்பியபொழுது கொல்ல வல்லவரிடத்துக் குற்றம் செய்க' என்கின்றனர். இரண்டாவதானது ஆட்சித்தலைவன் தன்னிடத்துள்ள பெரியாரிடம் கலந்து எண்ணாமல் செய்வதையும் அப்பெரியார்க்கு இழுக்கு செய்வதையும் கூறுவதாக உள்ளது. இதுவே பொருந்துவதாக உள்ளது.
அடல் என்ற சொல் போர்ச்சூழலைத் தெரிவிப்பதாக உள்ளது. இங்கு சொல்லப்படும் பெரியார் போர்க்கலையில் வல்லவர்; நினைத்தபொழுது பகைவரைக் கொன்று வெற்றி காண வல்லவர்; அப்பெரியாரிடம் குற்றம் செய்து அவரைக் கேளாமலேயே ஆட்சித்தலைவன் போர்மேற்சென்று கெடுவான்.
இக்குறளில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன. 'ஆற்றுபவர் என்பது பெரியாரைக் குறித்தது; அவர்தம் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டு கொல்ல வேண்டுமானால் கொல்லவல்லவர்' என்பது ஒரு செய்தி. 'தான் அழியவேண்டின் தன் வெற்றிக்குத் துணையாகும் போர்க்கலையில் வல்ல அப்பெரியார்க்குப் பிழைசெய்வான் ஆட்சித்தலைவன்' என்பது இன்னொரு செய்தி. ஆற்றுபவர்கண் (பெரியாரிடம்) இழுக்குச் செய்தலும் அவரைக் கேளாது செய்தலும் பெரியாரைப் பிழைத்தல் என்பது கருத்து.

'கேளாது செய்க' என்ற தொடர் குறிப்பதென்ன?

'கேளாது செய்க' என்றதற்குக் கேளாதே ஒருவினையைச் செய்க, வார்த்தை கேளாது, ஆராயாது ஒரு காரியத்தைச் செய்வானாக, நீதிநூலைக் கடந்து செய்க, கேளாமலே செய்யலாம். யாரையும் கேளாமல்-ஆலோசிக்காமல் செய்து தன்மனம்போல் நடப்பானாக, கேட்காமல் செய்க, உன்மனம்போல் நடக்க, பிறரைக் கேளாமலே தவறு செய்வானாக, சொல்வழி நில்லாதவனாய்ச் செயல் புரிவானாக, நீதி நூன்முறைகளைத் தழுவாது, எவரையும் கேட்காமல் செய்க, கேளாமலேயே ஒரு செயலைச் செய்வானாக, அறிவுரையைப் பொருட்படுத்தாது செய்க, கேளாது பிழை செய்வாயாக என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அரசாட்சியில் பலதுறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் இருப்பார்கள். இப்பெரியார்கள் குழுவாகவும் அமைவர். இவர்களைக் கலந்தாலோசித்தே ஆட்சி செலுத்தப்படும். பெரியாரிடம் கலந்தெண்ணுவதைக் கேட்டுச் செய்தல் என்று இங்கு கூறப்படுகின்றது. ஆட்சித்தலைவன் தான் கெட நினைத்தால் பெரியாரைக் 'கேளாது செய்க' என்று எள்ளலாகச் சொல்லப்பட்டது.
பரிப்பெருமாள் 'கேளாது செய்தல் என்பதனை மந்திரி புரோகிதரைக் கேளாது செய்தல் என்று கொள்ளப்படும். அவ்வாறு செய்தால் அவரை அவமதித்தலாம் ஆதலின் ஈண்டுக் கூறப்பட்டது. அறிவாரைக் கேளாது செய்தலும் வலியார்க்குத் தப்புச் செய்தலும் குற்றம் என்றது' என விளக்கம் தந்தார்.

'கேளாது செய்க' என்ற தொடர் கலந்தெண்ணாது செயலாற்றுக என்ற பொருள் தரும்.

தான் கெட விரும்பினானாயின் பெரியாரைக் கலக்காது செய்க; விரும்பியபொழுது கொல்லவல்ல அவரிடத்துக் குற்றம் செய்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆற்றலுடையாரைக் கலந்தெண்ணுதலும் பெரியாரைப்பிழையாமையாம்.

பொழிப்பு

ஒருவன் கெட விரும்பினானாயின் பெரியாரைக் கேளாமலே செயல்புரிவான்; விரும்பின் கொல்ல வலியாரிடத்துக் குற்றம் இழைப்பான்.