இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0891



ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

(அதிகாரம்:பெரியாரைப் பிழையாமை குறள் எண்:891)

பொழிப்பு (மு வரதராசன்): மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

மணக்குடவர் உரை: தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம்.
இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது.
(ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: எதுவும் செய்யவல்லவரின் ஆற்றலைப் பழிக்காதே; அதுவே தன்னைக் காக்கும் தலையாய நெறி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.

பதவுரை: ஆற்றுவார்-செய்யவல்லவரது; ஆற்றல்-பெருமை, திறமை; இகழாமை-பழியாதிருத்தல், புறக்கணியாமை, அலட்சியப்படுத்தாதிருத்தல்; போற்றுவார்-தீங்கு வராமற் காப்பவர்கள்; போற்றலுள்-காவல்கள் எல்லாவற்றிலும்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறப்பு.


ஆற்றுவார் ஆற்றல் இகழாமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல்;
பரிப்பெருமாள்: தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிக;
பரிதி: பெரியவர் எந்தக் கிரமத்திலே நடந்தார் அந்தக் கிரமத்தை இகழாமல் நடப்பானாகில்; [கிரமத்திலே-முறைமையிலே]
காலிங்கர்: உலகத்துத் தவநெறியாளராகிய பெரியோரது தவநெறி ஒழுக்கத்தைத் தாம் இகழாமையாகிய தலைமை யாது;
பரிமேலழகர்: எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை;

'தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'பெரியவர் நடந்த கிரமத்தை இகழாமல் நடப்பானாகில்' என்று பரிதியும் 'தவநெறியாளராகிய பெரியோரது தவநெறி ஒழுக்கத்தைத் தாம் இகழாமை' என்று காலிங்கரும் உரைத்தனர். பரிமேலழகர் 'எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எடுத்துக் கொண்ட செயல்கள் எல்லாவற்றையும் முடிக்க வல்லவருடைய ஆற்றலை இகழாதிருத்தல்', 'தம்மினும் வல்லமையுள்ளவர்களுடைய திறமையை (பயன்படுத்திக் கொள்ளத்) தவறிவிடாமை', 'எடுத்த காரியத்தை முடிக்க வல்லவருடைய திறமையை அவமதியாமை', 'எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை இகழாமல் இருத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மேற்கொண்ட செயல்களை முடிக்கும் திறமையை இகழாதிருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: அது தம்மைக் காப்பார்க்குப் போற்றிக் கொண்டிருக்கப்பட்டவை எல்லாவற்றுள்ளும் தலையாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இகல் முதலாகப் பெரியாரைப் பிழையாமை ஈறாகப் பிறரால் வரும் துன்பப் பகுதி ஆயினவாறு கண்டு கொள்க.
பரிதி: போற்றுதற்கரிய காரியமான தன்மத்திலும் பெரிய காரியம் என்றவாறு.
காலிங்கர்: அது குறிக்கொள்வார் தம் குறிக்கோளுள் எல்லாம் சாலத் தலைமை என்றவாறு. [சாலத் தலைமை - மிகத் தலைமை]
பரிமேலழகர்: தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது.
பரிமேலழகர் குறிப்புரை: ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது. [களைய வல்லார் - அழிக்க வல்லவர்; அவ்விருதிறத்தார் - ஆற்றலாற் பெரியாராய வேந்தர், தவத்தாற் பெரியாராய முனிவர்; பிழையாமையது- தவறு செய்யாமையின்]

'தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் தலையானது/மிக்கது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தமக்குத் தீமை வராமல் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் மேலானது', '(தம்முடைய நலங்களை) பத்திரப்படுத்த விரும்புகிறவர்கள் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய (பொருட்கள்) எல்லாவற்றிலும் தலைசிறந்த பொருள் (எதுவென்றால்)', 'தம்மைக் காத்துக் கொள்பவர்கள் செய்யுங் காவல்கள் எல்லாவற்றினும் முதன்மையானது', 'தம்மிடம் தீங்கு வராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தமக்குத் தீங்கு வராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் முதன்மையானது என்பது இப்பகுதியின் பொருள்.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

நிறையுரை:
மேற்கொண்ட செயல்களை முடிக்கும் திறமையை இகழாதிருத்தல் தமக்குத் தீங்கு வராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் முதன்மையானது என்பது பாடலின் பொருள்.
'ஆற்றுவார் ஆற்றல்' என்றால் என்ன?

நல்லவற்றைச் செய்யும் வல்லவரைப் பகைத்து ஏன் துன்புறவேண்டும்?

செயல்வீரரது திறமையை இகழாதிருத்தல், தமக்குத் தீங்கு நேராமல் காத்துக் கொள்பவர்கள் செய்யும் காவல்களுள் எல்லாம் முதன்மையானது.
இப்பாடலிலுள்ள ஆற்றுவார் என்ற சொல்லுக்கு செயல் ஆற்றுவார் என்றும் ஆற்றல் என்ற சொல்லுக்குத் திறமை என்றும் பொருள் கொள்வர். அரசு அங்கங்களில் அரியனவற்றைச் செய்ய வல்லவராயிருக்கும் திறன் கொண்டோர் ஆற்றும் பணி மிக இன்றியமையாதது. அவர்கள் தாம் மேற்கொள்ளும் செயல்களையெல்லாம் இனிதே முடிப்பர். அவர்களை அவமதித்தல் கூடாது; அவர்களை இகழ்ந்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். அரசின் கட்டுப்பாடுகள் குலையும்; நாடு காவலின்றிப் போய் அரசுக்குத் தாங்க முடியாத தீங்கு நேரும். எனவே ஓர் அரசு தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் இத்தகைய பெரியாரது வெறுப்பைப் பெறுமாறு நடந்து கொள்ளக்கூடாது.

பெரியார் என்பவர் தன்னலம் அற்றவர்களக இருப்பர்; அதனால், பொதுவாழ்வில் நாட்டுக்கு ஏதேனும் குறை ஏற்படுமானால் அதைக் களைந்து மக்களுக்குத் தொண்டு செய்ய முற்படுவார்கள்; அத்தகைய நல்லோரை ஆட்சியிலுள்ளோர் அவர்களை இகழத் தொடங்கி, அது காரணமாக அவர்களுக்கு இடையூறும் செய்யத் தொடங்கினால், அப்போது அந்தப் பெரியார் பொறுமை இழந்து விடுவார்கள். அது சமயம் நல்ல செயல்களுக்கு அழிவு நேரும். பொதுத்தொண்டு செய்ய முற்பட்ட அவர்களுக்கு ஆற்றல் மிகுதி; மக்களின் நல்லெண்ணமும் அவர்களின் சார்பிலேயே திரளும். ஆகையால் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்று வள்ளுவர் அறிவுரை கூறுகின்றார்.
'ஆற்றுவார் ஆற்றல்' என்றது பெரியாரின் செயல் திறனைக் குறிக்கிறது. அதைப் போற்றிக் காக்க வேண்டும். இல்லையானால் அரசுக்கும் நாட்டுக்கும் பெருந்தீங்கு உண்டாகும். காட்டாக ஆட்சியின் அங்கமாக உள்ள பொருளாதார வல்லுநரின் அறிவுரைகளைக்கு செவி கொடாமல் அவர் கீழ் இயங்கும் நிதி நிர்வாகத்தை இகழ்ந்து செயல்பட்டால், அந்நாடு பொருளாதாரப் பேரழிவையே நோக்கிச் செல்லும். ஆற்றலுள்ளவரின் கருத்துக்களை இகழாமல் இருந்தால் அவர் எவ்வகை இடர்களையும் எதிர்கொண்டு நீக்குவார். அவரை இகழ்ந்தால் நாட்டுக்குள்ள காவல் எல்லாம் ஒழிந்து கேடுதான் உண்டாகும். இதனையே எடுக்கும் செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது; அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது ஆகும் எனச் சொல்லப்பட்டது.

'ஆற்றுவார் ஆற்றல்' என்றால் என்ன?

'ஆற்றுதல் என்ற சொல் செய்தல் என்ற பொருள் தருவதால் ஆற்றுபவர் செய்து முடிக்க வல்லார் எனப்பட்டார். குறள் நூலுள் 'ஆற்றுவார்' என்னும் சொல் பயிலப்பட்ட ஐந்திடங்களிலும் செய்பவர்-செய்து முடிக்க வல்லவர் என்ற பொருளிலேயே வந்துள்ளன. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள் (அரண் 741 போர்மேற் செல்வார்க்கும் அரண் மதிப்புமிக்க பொருளாகும்; அஞ்சித் தன்போற்றுபவர்க்கும் அதாவது தீங்கு வராமற் காப்பவர்க்கும் அது இன்றியமையாதது) என்ற பாடலில் ஆற்றுபவர் என்ற சொல் ஆற்றல் உடையவர் என்று பொருள்பட்டு அதிகாரம் நோக்கி போர்மேற் செல்லுவாரைக் குறித்தது. இதுவும் 'ஆற்றலாற் பெரியார்' என்ற பொருளே தருவது. இங்கு சொல்லப்பட்ட ஆற்றுவார்க்கு செயல்வீரர் எனப் பொருள் கொள்ளலாம். அதிகாரம் பெரியாரைப் பிழையாமை ஆதலால் இந்த ஆற்றுவார் பெரியார் எனக் குறிப்பதாகிறது.
ஆற்றுவார் ஆற்றல் என்ற தொடர் ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் (ஈகை 225 பொருள்: ஆற்றுவார் வலிமையில் பெரிது பசி பொறுத்தல்; அவர் ஆற்றலும் பிறர் பசியைப் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான்) என்ற பாடலில் (தவத்தினர்) முயற்சியுடையார் என்ற பொருளிலும் ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை (சான்றாண்மை 985 பொருள்: ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.) என்ற பாடலில் ஆற்றலுடையவர் என்ற பொருளிலும் ஆளப்பட்டுள்ளது.
இவ்வாற்றலை இகழாதிருத்தல் தலைசிறந்த காப்பு என்பது இக்குறளின் கருத்து.

'ஆற்றுவார் ஆற்றல்' என்ற தொடர் செயலில் வல்லவரது திறன் என்ற பொருள் தரும்.

மேற்கொண்ட செயல்களை முடிக்கும் திறமையை இகழாதிருத்தல் தமக்குத் தீங்கு வராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் முதன்மையானது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெரியாரைப் பிழையாமை தன்னைக் காத்துக்கொள்வதற்கு ஒரு வழியாம்.

பொழிப்பு

மேற்கொண்ட செயல்களை முடிக்க வல்லவருடைய திறமையை இகழாதிருத்தல், தம்மைக் காக்கும் காவல்களில் தலையாயது.