இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0877



நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

(அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:877)

பொழிப்பு (மு வரதராசன்): துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது; பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக்கூடாது.

மணக்குடவர் உரை: தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக.
இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.

பரிமேலழகர் உரை: நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.
('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: துன்பத்தை உணரா நண்பர்க்குச் சொல்லாதே; தன்குறைபாட்டைப் பகைவர் முன் காட்டாதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நொந்தது அறியார்க்கு நோவற்க; மென்மை பகைவர் அகத்து மேவற்க.

பதவுரை: நோவற்க-துன்பம் சொல்லா தொழிக, வருத்தம் கொள்ளற்க; நொந்தது-வருந்தியது; அறியார்க்கு-தெரியாதவர்க்கு, மதியாதார்க்கு; மேவற்க-பொருந்தா தொழிக; மென்மை-வலியின்மை; பகைவர்-எதிரிகள்; அகத்து-இடையில், உள்ளம்உணரும்படியாக.


நோவற்க நொந்தது அறியார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக;
பரிப்பெருமாள்: தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக;
பரிதி: தன் நோவு அறியாத பேருக்குத் தன் நோக்காடு சொல்லவேண்டாம்;
காலிங்கர்: உறுதுயர் கண்டு தாம் பெரிதும் நொந்தால் மற்று அந்நொந்ததனை இவர் எம்பொருட்டு இது செய்தார் என்பதனை மதியாதார்க்கு நோவற்க;
பரிமேலழகர்: நொந்ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க:
பரிமேலழகர் குறிப்புரை: 'நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று.

'தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பத்தை உணரா நண்பர்க்குச் சொல்லாதே', 'ஒருவன் தனது துன்பத்தைத் தாமே யறியாத நண்பர்க்குச் சொல்லக்கூடாது', 'நீ ஏழையாகிவிட்டதைப் பற்றித் தெரியாதவனுக்குத் தெரியப்படுத்தக் கூடாது', 'தாம் வருந்தியதை உடன் உணர மாட்டாதார்க்குத் தமது நோயைக் கூறக்கூடாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியாதவருக்கு வருத்தம் கொள்ளவேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

மேவற்க மென்மை பகைவர் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.
பரிப்பெருமாள்: அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.
பரிதி: தன் சத்துருக்களிடத்தும் தான் சொல்ல வேண்டாம் என்றவாறு.
காலிங்கர்: அன்றியும் பகைவரிடத்து என்றும் தாம் வன்மையோடு இயைய நிற்கும் அத்துணை அல்லது அவரொடு தாம் மென்மையோடு இயைய நினையற்க என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தம் துயர்க்கு ஒருவர் நொந்தது மதியாதாரும் பகைவரின் ஒரு கூற்றரே, வேறு அல்லர், என்பதனால் இதனை எடுத்து ஓதினார் என அறிக; என்னை, காஞ்சிரம்பிஞ்சும் காஞ்சிரமரமும் இத்துணை அல்லது பிறிதொன்று ஆகாதாற் போல.
பரிமேலழகர்: வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.
பரிமேலழகர் குறிப்புரை: பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.

'பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்குறைபாட்டைப் பகைவர் முன் காட்டாதே', 'பகைவரிடத்துத் தன் குறைபாடுகளை வெளிப்படுத்தக் கூடாது', 'அதைப் போல நீ பலவீனமாகப் போய்விட்டாயென்பதைப் பகைவர்களிடம் காட்டிக் கொள்ளக் கூடாது', 'பகைவரிடத்துத் தமது வலிமைக் குறைவைக் காட்டக்கூடாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவரிடத்துத் தமது வலிமைக் குறைவைக் காட்டிக் கொள்ளற்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியார்க்கு வருத்தம் கொள்ளவேண்டாம்; பகைவரிடத்துத் தமது வலிமைக் குறைவைக் காட்டிக் கொள்ளற்க என்பது பாடலின் பொருள்.
'அறியார்' குறிப்பது யாரை?

எந்நிலையிலும் பகைவரிடம் தான் வலிமை மிக்கவனெனவே காட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

தாம் அவருக்காக வருந்தியதை மதியார்க்கு வருத்தம் கொள்ளவேண்டாம்; பகைவர்கள் உணர்ந்துகொள்ளும்படி தமது வலிமைக் குறைவை வெளிப்படுத்தலாகாது.
பாடலின் முதற்பகுதி தாம் ஒருவருக்காகத் துன்புற்றதையும் அவ்வொருவர் அதை உணரமாட்டாதவராக இருக்கிறார் என்கிறது. அவர்துன்பத்துள் தாம் துப்பாக நின்றதை மதியாதார் பகைவர் இனத்தவர் ஆகிறாராதலால் அவர்க்காக வருத்தம் கொள்ள வேண்டாம் எனவும் சொல்கிறது.
குறளின் பிற்பகுதி தம் வலியின்மையையே ஆய்ந்து கொண்டிருக்கும் பகைவர் முன்னே தன் வலிக்குறைவை வெளிப்படுத்தினால் அதுதான் சமயம் என்று தாக்குவார் என்பதால் பகைவரிடம் வலியின்மையைக் காட்டக் கூடாது என்று கூறுகிறது. தமது வலிமையைப் பகைவர் அறியச் செய்யலாமே அன்றித் தமது மெலிவை பகைவர் அறியாதவாறு காக்கவேண்டும்.

'நொந்ததறியார்க்கு நோவற்க' என்பதற்குக் காலிங்கர் தவிர்த்த அனைத்துப் பழம் ஆசிரியர்களும் 'தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக' என்ற பொருளில் உரைகூறினர். பரிமேலழகர் அறியார் என்பதற்கு நட்டார் எனப் பொருள் கொண்டு 'பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார் என்று 'மேவற்க மென்மை பகைவர் அகத்து' என்ற குறளின் பிற்பகுதியைத் தொடர்புபடுத்துவார். 'தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க' என்பது பாடலின் முதற்குதிக்கு இவரது உரை. விளக்கவுரையில் 'நோவு' என்னும் தொழிற் பெயர் ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று' என்று கூறுகிறார். 'சொல்லற்க' என்பதில் என்ன செய்தி உள்ளது? ஏன் சொல்லக்கூடாது என்பதைப் பரிமேலழகர் விளக்கவில்லை. நோவற்க என்பதற்கு நோவு சொல்லற்க எனப் பொருள்கொள்ள முடியுமா?
காலிங்கர் அறியார் என்பதற்கு மதியாதார் எனப் பொருள் கண்டு தாம் அவர்க்காக வருந்தியதை உணராதார் பகைவருள் ஒருசாரார் ஆவர்தான் எனச் சொல்லி அதனால் தாம் அவர்க்காக வருத்தம் கொள்ளக்கூடாது என உரைக்கிறார். காலிங்கர் உரை குறளின் இரண்டு பகுதிகளுக்கும் தொடர்பு காட்டுகிறது. காலிங்கர் கூறும் 'தமக்காக நொந்ததறியாரையும் பகைவரின் ஒரு கூறாகக் கொள்ள வேண்டும்' என்ற விளக்கம் ஏற்கத்தக்கதாக உள்ளது.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு (செய்ந்நன்றியறிதல் 106 பொருள்: குற்றமற்றாரது கேண்மையை மறவாதீர்; துன்பம் வந்தகாலத்து வலியாய் நின்றவர் நட்பைக் கைவிடாதீர்) என்ற குறள்நடையில் அமைந்த பாடலிது.

நொ என்பதே நோ என நீண்டு விகாரப்பட்டது. ஆதலால் 'நொ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் நீண்டு நோவற்க என ஆயிற்று.

'அறியார்' குறிப்பது யாரை?

'அறியார்' என்ற சொல்லுக்கு வருத்த முற்றதனை அறியாதார், நோவு அறியாத பேர், இவர் எம்பொருட்டு இது செய்தார் என்பதனை மதியாதார், தாமாக அறியாத நட்டார், தாமே அறியாத சிநேகிதர், தாமாக அறியாத நட்பாளர், தாமாகவே அறியாத நண்பர், நொந்து கொண்டிருப்பதை அறியாதவர், தமது நொந்த நிலையை அறியாதார், துன்பத்தை உணரா நண்பர், தாமே யறியாத நண்பர், நீ ஏழையாகிவிட்டதைப் பற்றித் தெரியாதவன், வருந்தியதை அறியாதவர், தாம் வருந்தியதை உடன் உணர மாட்டாதார், வருந்தியதைத் தாமாக அறியாத ஒருவர், நொந்ததனைத் தாமாக அறியாத நண்பர், உன் துன்பத்தை, உணரத்தெரியாத நண்பர், தான் துன்புற்றதை அறியாத நண்பர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அறியாதார்க்கு என வாளா கூறுகிறது குறள். யார் அந்த அறியார்?
தாம் வருத்த முற்றதனை அறியாதார் என மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் கூறினர். பரிமேலழகர் நண்பர் எனக் குறிப்பிட்டார். அதன்பின் பெரும்பான்மையர் அறியார் என்பதற்கு நண்பர் எனவே கூற முற்பட்டனர்.
காலிங்கர் 'உறுதுயர் கண்டு தாம் பெரிதும் நொந்தால் மற்று அந்நொந்ததனை இவர் எம்பொருட்டு இது செய்தார் என்பதனை மதியாதார்க்கு நோவற்க' என மொழிந்தார். 'தம் துயர்க்கு ஒருவர் நொந்தது மதியாதாரும் பகைவரின் ஒரு கூற்றரே, வேறு அல்லர், என்பதனால் இதனை எடுத்து ஓதினார் என அறிக' என்ற சிறந்த உரை நல்கினார்.
'பிறருக்காகத் தான்பட்ட நோவை மதியாதார்' என்று அறியார் என்பதற்குப் பொருள் கூறி '’பகைத் திறந்தெரிதல்’ என்னும் அதிகாரத்துக்கேற்ப, நொந்ததறியாரையும் பகைவரின் ஒரு கூறாகக் கொள்ள வேண்டும்' என்று மேலும் சிறப்புரையில் விளக்கம் தந்தார். தாம் அவர்க்காக வருந்தியதை அறியாத ஒருவர் பகைவருள் ஒருசாரார் ஆவர் என்பது காலிங்கர் கருத்து. காலிங்கர் 'நொந்தது அறியார்க்கு நோவற்க' எனக் கூட்டி 'நொந்தவை எம்பொருட்டு என்பதனை மதியாதார்க்கு 'நோவற்க' என்றனர். 'அறியார்க்கு' என்பதற்கியைய 'எம்பொருட்டு' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'நொந்தது மதியாதாரும் பகைவன் இனத்தவரே' என்று கூறி தாம் ஒருவருக்காக நொந்ததை அறிந்தும் அசையாமலிருக்கும் அவரிடம் தம் நோக்காடுகளைக் கூறவேண்டியதில்லை என்று கூறும் காலிங்கரது பொருள் சிறந்தது.

தாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியார்க்கு தன் நோவு சொல்லற்க; பகைவரிடத்து வலியின்மை இருப்பது போல் காட்டிக் கொள்ளற்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நமது வலிக்குறைவைப் பகைவர்களிடமும் வெளிப்படுத்தாதிருத்தலும் பகைத்திறம்தெரிதல் ஆம்.

பொழிப்பு

தாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியார்க்கு வருத்தம் கொள்ளவேண்டாம்; பகைவரிடத்துத் தனக்குக் குறைபாடு இருப்பது போல் காட்டிக் கொள்ளற்க.