இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0874



பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு

(அதிகாரம்:பகைத்திறம் தெரிதல் குறள் எண்:874)

பொழிப்பு (மு வரதராசன்): பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.



மணக்குடவர் உரை: பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும்.
இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு.
(வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: பகைவனையும் நண்பனாகக் கருதும் உயர்ந்தவனது பெருந்தன்மையால் உலகம் வாழ்கின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு.

பதவுரை: பகை-பகை; நட்பாய்-தோழமையாய்; கொண்டு-கொண்டு; ஒழுகும்-நடந்துகொள்ளும்; பண்புடையாளன்-குணம் கொண்டவன்; தகைமைக்கண்-பெருமையுள்; தங்கிற்று-நிலை நின்றது, அடங்கிற்று; உலகு-உலகம்.


பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே;
பரிப்பெருமாள்: பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே;
பரிதி: பகைவரைத் தன் உறவாகக் கொண்டு நடப்பானாகில் அவன் குடைக்கீழ்;
காலிங்கர்: பகை தானே வந்து மென்மை செய்யுங்காலத்து இரங்கிப் பின் தான் ஒருவன் பகைமை செய்யாது நட்பாகக் கொண்டு ஒழுகும் மரபுடையாளன் யாவன்; மற்று அவனது நெறிமைக்கண்ணே; [நெறிமைக்கண்-நேர்மைக்கண்]
பரிமேலழகர்: வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே;
பரிமேலழகர் குறிப்புரை: வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். [ஆக்கம் - இங்கு நட்பாகக் கருதுதல்]

'பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகையை நட்பாகக் கருதி நடக்கும் பண்புடையாளன் பெருமையிடத்து', 'பகைவரையும் நண்பராக்கிக் கொண்டு நடந்து கொள்ளும் குணம் உடையவனுடைய பெருந்தன்மையில் தான்', 'வேண்டுமிடத்துப் பகைவரையும் நண்பராகச் செய்து கொள்ளவல்ல நல்லியல்புடையானின் பெருமையுள்', 'பகைவரையும் நண்பராக ஆக்கிக்கொண்டு வாழ்கின்ற நற்குணமுடையான் பெருமைக்கண்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவரையும் நண்பராகச் செய்து ஒழுகவல்ல பண்புடையவன் பெருமைக் கண் என்பது இப்பகுதியின் பொருள்.

தங்கிற்று உலகு :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('தங்குமுலகு' பாடம்): உலகம் தங்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: உலகம் தங்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.
பரிதி: உலகம் அடங்கும் என்றவாறு.
காலிங்கர்: நிலை நின்றது ஒழுக்கம் என்றவாறு.
பரிமேலழகர்: அடங்கிற்று இவ்வுலகு.
பரிமேலழகர் குறிப்புரை: அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார். [அதன் வழித்து ஆதற்கு -பொருள், படை என்று இருவகையதாகிய ஆற்றலின் வழியதாக உள்ள உலகத்திற்கு]

'உலகம் தங்கிற்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகம் நிலை நிற்கும்', 'உலக நலம் அடங்கியிருக்கிறது', 'உலகம் அடங்கியது ஆகும்', 'உலகு நிலைத்து உள்ளது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உலகு தங்கி இயங்குகிறது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடையவன் பெருமைக் கண் உலகு தங்கி இயங்குகிறது என்பது பாடலின் பொருள்.
'பகைநட்பாக் கொண்டொழுகும்' என்ற தொடர் குறிப்பதென்ன?

பகைவரையும் நண்பராக எண்ணிப் பழகுவர் பண்பாளர்.

பகைவரையும் நண்பராகச் செய்து கொள்ளவல்ல நல்ல தன்மையுள்ளோரது பெருமையில் உலகம் நிலைத்து நிற்கிறது.
பகையையும் நட்பாகக் கொண்டொழுகுக அதாவது பகைவனை நண்பர் போலக் கருதி நடந்து கொள்க என்கிறது இப்பாடல். இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு (இடுக்கணழியாமை 630 பொருள்: துன்பத்தையே இன்பம் என்று ஏற்றுக் கொண்டான் எனின், தன் போட்டியாளரும் விரும்பத்தக்க சிறப்பு ஆகும்) எனச் செயலில் முயலுபவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின் இடையூறான நிலையும் இன்பமாகவேபடும் என முன்பு கூறப்பட்டது. அதுபோல இங்கு பகையை நட்பாகக் கொண்டு பழகச் சொல்கிறார் வள்ளுவர்.
பகைவரை வெறுத்து, மோதல் கொண்டு, பகையை அழித்துக்கொள்வது ஒருவகையான வெற்றி. அவ்வாறில்லாமல் பகையுணர்வை மாற்றிக் கொள்ளுமாறு நடந்து அவரைத் தம் நட்பாக மாற்றிக் கொள்ளுதலும் அவரை வெல்வதேயாம்.
நட்புறவு நிலைத்தால் ஒற்றுமை ஓங்கும். ஆக்கம் பெருகும். பகை நீடித்தால் மாறுபாடும் அழிவுமே உண்டாகும். பகையை விலக்கி நட்புச் செலுத்துவது இன்ப வாழ்விற்கும் இகல் தோன்றாதிருப்பதற்கும் நல்வழியாம்.

பண்புடையாளன் தகைமைக்கண் என்கிறது பாடல். தன்னிடம் வலிமையிருந்தும் பகையையும் நட்பாக மாற்றிக்கொள்ளும் பெருமிதமுடைமையை இது குறிக்கிறது. மேலும் 'அவனது பெருமையில் இவ்வுலகு அடங்கிற்று' எனவும் கூறுகிறது. .........கவிகைக் கீழ்த் தங்குமுலகு (இறைமாட்சி 389) .....அடிதழீஇ நிற்கு முலகு (544) போன்ற சொன்னடையை ஒத்து 'தகைமைக்கண் தங்கிற்றுலகு’ என்னும் இக்குறள்நடை அமைந்துள்ளது. பகையின்றி வாழ்ந்தால்தான் உலகில் அமைதி நிலவும். மக்கள் பயமின்றி வாழ்வர். அதனால் உலகு பகைநட்பாக் கொண்டொழுகும் பண்பாளன் வழி இயங்கும் என்கிறது.

'பகைநட்பாக் கொண்டொழுகும்' என்ற தொடர் குறிப்பதென்ன?

'பகைநட்பாக் கொண்டொழுகும்' என்ற தொடர்க்கு பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல, பகைவரைத் தன் உறவாகக் கொண்டு நடப்பது, பகை தானே வந்து மென்மை செய்யுங்காலத்து, வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகுதல், பகை வரை எந்த விதத்தினாலேயும் தனக்குறவாகப் பண்ணிக் கொள்ளவல்ல, பகையை வேறுபடுத்து நட்பாகச் செய்து நடந்து கொள்தல், பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும், பகைவனையும் நண்பனாகக் கருதும், பகைவரையும் நண்பராக்கிக் கொண்டு நடந்து கொள்ளும், பகைவரையும் நண்பராக ஆக்கிக்கொண்டு வாழ்கின்ற, இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு அமைதியுடன் ஒழுகும், பகைவர்களையும் நட்பினராகக் கருதி வாழும் என்றவாறு உரையாளர்கள் விளக்கம் கூறினர்.

பகைவரே இல்லாமலிருப்பது நல்லது. அது முடியாமற்போய் பிறர் நம்மிடம் பகைமை பாராட்ட நேர்ந்தாலும் அவரது பகையுணர்வை மாற்றிக் கொள்ளுமாறு நடந்து தம் நட்பாக மாற்றச் செய்யலாம் என்பதைச் சொல்வது இக்குறள். தீங்கு செய்தவர்க்குத் தீங்கு செய்வதன் மூலம் ஒரு நாளும் தீமையை அகற்றமுடியாது. பகைமையினைப் பகைமையினால் நீக்கலாகாது. அன்பினால்தான் பகையினைத் தணித்தல் இயலும். சிலருக்கு இயல்பாகவே பகையை நட்பாக்கிக் கொண்டொழுகும் பண்பு அமைந்திருக்கும். மற்றவர்கள் அவ்வாற்றலை முயற்சி செய்து பெறவேண்டும். முதலில் 'நான்' என்னும் முனைப்பை விட்டு நீங்க வேண்டும். பிறரது எள்ளற் பேச்சைப் புறந்தள்ளும் துணிவு வேண்டும். இயன்ற வழியில் சொல், செயல் மூலம் முயன்று நட்பால் பகை நிலையை வெல்ல வேண்டும்.
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் (கூடாநட்பு 830 பொருள்: பகைவர் தமக்கு நட்பாய் ஆகும் காலம் வரும்பொழுது முகத்தால் ஏற்று மனத்தால் நட்பை நீங்கவிடுக) என்ற குறள் பகைவர் தாமாக நட்பு நாடி வருவதானால் அதுபொழுது முகநக நட்பாய் இருக்கலாம் எனக் கூறியது. இதுவும் பகை நட்பாக்கிக் கொள்ளுதல்தான்.

ஒரு நாட்டின் ஆற்றலும் புகழும் போர்களின் வெற்றியால் தீர்மானிக்கப்படுகிறது என்ற போக்கிலிருந்து மாறுபட்டு அதிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டுக்கொண்டிருக்கிறோம். உலகில் அமைதியும் வாழ்வும் தொடர பகைநட்பாகக் கொண்டொழுகும் தன்மையும் ஒரு காரணமே. பகை நீங்கினால்தான் மக்கள் தம்முள் அச்சமும் இகலும் நீங்கி கலந்து வாழ்வர். பகைவரிடமும் பண்புடன் நடந்து அவர்களை நண்பர்களாக ஆக்குவதே பெருமை தரும் செயல்.

'தான் வேண்டும்போது பகைவனை நட்பாக்கிக் கொள்ளுதல்' என்று கூறுகிறது ஒரு உரை. 'பண்புடையாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு' என்று மிகவும் மேல்நிலையில் வைத்து பகைநட்பாக் கொள்ளல் போற்றப்படுவதால் சூழ்ச்சித்திறனுடன் கூடிய இவ்வுரை உரை சிறக்கவில்லை.

பகைவரையும் நண்பராகச் செய்து ஒழுகவல்ல பண்புடையவன் பெருமைக் கண் உலகு தங்கி இயங்குகிறது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பகைத்திறம் தெரிதல் கூறாக பகை விலக்கலை உணர்த்தும் பாடல் இது.

பொழிப்பு

பகையை நட்பாகச் செய்து ஒழுகவல்ல பண்புடையவன் பெருமைக் கண் உலகு தங்கி இயங்குகிறது.