இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0872



வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

(அதிகாரம்:பகைத்திறம் தெரிதல் குறள் எண்:872)

பொழிப்பு (மு வரதராசன்): வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது.

மணக்குடவர் உரை: வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும் சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக.
இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக.
('சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.)

சி இலக்குவனார் உரை: வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும் சொல்லை ஏராகவுடைய உழவரோடு (புலவரோடு) பகை கொள்ளாது ஒழிக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வில்லேர் உழவர் பகைகொளினும் சொல்லேர் உழவர் பகை கொள்ளற்க.

பதவுரை: வில்-வில்; ஏர்-கலப்பை; உழவர்-உழுபவர்; பகை-பகை; கொளினும்-கொண்டாலும்; கொள்ளற்க-கொள்ளாதொழிக; சொல்ஏர்உழவர்-எழுத்து,பேச்சு இவற்றில் வல்ல புலவர், அமைச்சர் முதலிய அறிஞர்; பகை-பகை.


வில்லேர் உழவர் பகைகொளினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும்; [ஏர்- கலப்பை]
பரிப்பெருமாள்: வில்லை ஏராக உடைய உழவரோடு பகைகொளினும்;
பரிதி: வில்லாட்களுடனே பகை கொள்ளினும்;
காலிங்கர்: நட்புக் கொள்ளாது வில் வேந்தருடன் ஒருவர் பகை கொளினும்;
காலிங்கர் குறிப்புரை: வில்லேருழவர் என்பது வில்வேந்தர் என்றது;
பரிமேலழகர்: ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்;

'வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வில்லுடைய வீரரைப் பகைத்துக் கொண்டாலும்', 'வில்லை ஏராகக் கொண்டு உழும் வீரனோடு ஒருவன் பகை கொண்டானாயினும்', 'வில்நோக்கிப் போர் புரியும் படை வீரருடன் பகைத்துக் கொண்டாலும்', 'வில்லைக் கலப்பையாகவுடைய போர்க்காலப் பயிற்சியுடையாரோடு பகை கொண்டாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

போர்ப்படையுடைய ஆட்சியாளருடன் பகை கொண்டாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது.
பரிப்பெருமாள்: சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிய.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அரசனோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது.
பரிதி: சொல்லவல்லவனுடனே பகைகொள்ளக் கடவான் அல்லன் என்றவாறு.
காலிங்கர்: கொள்ளற்க யாது எனின், கற்று உணர்ந்த சான்றோரோடு பகை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: சொல்லேருழவர் என்பது கற்றுணர்ந்த சான்றோர் என்றது.
பரிமேலழகர்: சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.

'சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொல்லுடைய புலவரைப் பகைக்காதே', 'சொல்லை ஏராகக் கொண்டு உழும் புலவர் பகை கொள்ளாதொழிக', 'செல்வாக்குடைய அறிஞர்களுடன் பகைத்துக் கொள்ளக் கூடாது', 'சொற் பயிற்சியுடைய புலவரோடு பகை கொள்ளுதல் கூடாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சொல்லாற்றல் கொண்ட அமைச்சர் பகை கொள்ளாதொழிக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
போர்ப்படையுடைய ஆட்சியாளருடன் பகை கொண்டாலும் சொல்லேர் உழவர் பகை கொள்ளாதொழிக என்பது பாடலின் பொருள்.
'சொல்லேர் உழவர்' யார்?

எது வெல்வதற்குக் கடினம் - வீரமா அல்லது சொல்லறிவா?

ஒருவன் வீரமுடையவனிடம் பகை கொண்டான் ஆயினும் சொல்லாற்றல் பெற்றவருடன் பகை கொள்ள வேண்டாம்.
ஏர் என்பது கலப்பை என்றும் அறியப்படும். இது பயிர் செய்வதற்காக மண்ணைத்தோண்டிப் பண்படுத்தப் பயன்படும் உழவர் கருவி. உழவுத் தொழில் செய்வார் ஏர் உழவர் ஆவர். ஏரையும் உழவையும் சேர்த்துச் சொல்லுதல் மரபு. அவ்வுழவரைக் கொண்ட ஆட்சிப் படைப்பு வில்லேர் உழவர், சொல்லேர் உழவர் ஆகியன. வில்லேர் உழவர் என்பது வீரத்தில் தேர்ந்தவரையும் சொல்லேர் உழவர் என்பது எழுத்து-பேச்சு இவற்றில் மேலான பயிற்சி பெற்ற அமைச்சர் அல்லது அறிஞரையும் குறிக்க வந்தன.
வில்லேருழவர் என்ற தொடர் போரையும் போர்ப்பயிற்சியையும் முழுநேரத் தொழிலாகக் கொண்ட வீரரைச் சொல்வதாம். அதிகாரம் நோக்கி இங்கு பகை ஆட்சித்தலைவரைக் குறிக்கும். சொல்லேருழவர் என்றது அமைச்சரைக் குறிப்பது. உழவர் ஏரைத் தங்கள் தொழிலுக்குரிய கருவியாகக் கொண்டமையைப் போல இவர்களும் தங்கள் தொழிலுக்குரிய கருவியாகக் கொண்டமையினாலேயே வில்லேருழவர்/சொல்லேருழவர் எனப்பட்டனர்.
ஆட்சியாளர் பகையாட்சித்தலைவரைப் பகைத்துக்கொண்டாலும் சொல்லாற்றல் மிக்க அறிஞர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தும் பாடலிது.

போர்மறவரது வலிமையாற் பெறப்படும் கேடு ஒரு சிலவே. ஆனால், அரசியலறிஞரான அமைச்சரின் பகை காரணமாகச் சூழ்ச்சிவலி இல்லாமல் அடையும் இழப்பு மிகப் பெரிது. 'வீரர்பகை எதிர்த்துப் போராடும் ஆதலின் அதனின்று தப்பியுய்யலாம். புலவர்பகை இருந்த இடம் பெயராதே எல்லாரையும் இயக்குவிப்பது ஆதலின் தப்பவே முடியாது ஆதலின் கொள்ளற்க என்றார்' என்பது தண்டபாணி தேசிகர் கருத்துரை. இருசாராரையும் பகைத்துக்கொள்ளற்க என்பது கருத்து.

வில்லேருழவர்- சொல்லேருழவர் இரண்டும் சிறப்பு உருவகம் என்று கூறப்படும். சிறப்பு உருவகமானது ஒரு பொருளின் அடையை உருவகம் செய்து, அதனால் அப்பொருளையும் உருவகம் செய்வதைக் குறிப்பது. இங்கு வீரர்க்கு அடையாயுள்ள வில்லையும் அமைச்சர்க்கு அடையாயுள்ள சொல்லையும் ஏராக உருவகம் செய்து அது காரணமாக அவர்களை உழவராக உருவகம் செய்யப்பட்டது.

'சொல்லேர் உழவர்' யார்?

'சொல்லேர் உழவர்' என்ற தொடர்க்குச் சொல்லை ஏராக உடைய உழவர் (அமைச்சர்), சொல்லவல்லவன், கற்று உணர்ந்த சான்றோர், நீதிநூல், சொல்லை ஏராகவுடைய உழவர்களாகிய அறிவுடையார், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞர், சொல்லினைக் கருவியாக உடையவர்கள், சொல்லுடைய புலவர், சொல்லை ஏராகக் கொண்டு உழும் புலவர், செல்வாக்குடைய அறிஞர்கள், சொற் பயிற்சியுடைய புலவர், புலவர், சொல்வல்ல அறிஞர், சொல்லைக் கொண்டு அறிவு விளக்கம் கொடுக்கும் அறிஞர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவரது சிறப்புரை 'இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது' எனச் சொல்வதால் சொல்லேர் உழவர் என்ற தொடர் அமைச்சரைக் குறிப்பதாக இவர் கொள்கிறார். பரிமேலழகரும் நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று (சொல்வன்மை 641 பொருள்: சொல்வன்மை என்கின்றது நல்ல உடைமை; அந்தச் சிறப்பு யாநலத்து இருப்பதும் இல்லை) என்ற குறளிலுள்ள நாநலம் என்னும் நலன் உடைமை என்ற பகுதிக்கான உரையில் அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல் என்று கூறியிருப்பதால் சொல்லேருழவர் என்பது நீதிநூல் கற்ற சூழ்ச்சித் திறனுடைய அமைச்சரைக் குறிப்பதாக இவரும் கொள்கிறார் எனலாம். வில்லேருழவரது படையினும் நாடாள்பவரையும் உலகத்தாரையும் தம் வழியே திருப்பிக் கொள்ளும் சொல்லேருழவரது அறிவே அரசியலுக்கு வேண்டியது என்கிறார் வள்ளுவர்.
அவ்வக்காலங்களில் அரசுக்கு துணை நிற்கச் சூழ்ச்சித் திறனுடையோர் தோன்றிக்கொண்டே இருப்பர். இற்றைக்காலச் சூழலில் சொல்லேர் உழவர் என்றது நாநலம்/எழுத்துநலம் பெற்ற பேச்சாளர்/எழுத்தாளர் போன்றோரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். தம் சொல்லாற்றலால் செல்வாக்குப் பெற்று அதைப் பிறர் நன்மைக்குப் பயன்படுத்தும் புலவர் பெருமக்களும் பிறர் விரும்பிக் கேட்கத் தக்க வகையில் சொற்பொழிவாற்ற வல்லவரும் மக்களிடையில் செல்வாக்குடன் வலம் வருவர். இவர்கள் மக்களிடம் புதிய சிந்தனைகளை வளர்த்துப் பரப்பவல்லவர்கள். அவர்கள் பேசுகின்ற/எழுதுகின்ற எண்ணங்களைத் தடை செய்ய பல ஆற்றல்கள் முயலும். இதனால் இவர்களில் சிலரது வாழ்வு சிறையிலும் கழிக்க வேண்டியிருக்கும். ஆனாலும் அவர்களது கருத்துக்கள் பலவிடங்களிலும் பரவி வளர்ந்து அவர்களுடைய நோக்கங்களை நிறைவேற்றும். அவர்களை அடக்குமுறையால் கையாள முடியாது. சொல்மறவர் நாட்டிலுள்ள தீய கொடுமைகளைப் பறையடித்து வெளிக்கொணர்வதால் ஆட்சியாளர் அவர்களிடம் அச்சங்கொள்வர். 'The pen is mightier than the sword' (வாளின் ஆற்றலைவிட எழுதுகோலின் ஆற்றல் பெரியது) என்னும் ஆங்கிலப் பழமொழி இக்குறட் கருத்ததே என்பர். இத்தகைய பெரும்ஆற்றல் கொண்ட அறிஞரின் பகையை மேற்கொள்ளாமல் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறது பாடல்.

'சொல்லேர் உழவர்' என்ற தொடர் சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவர் என்ற பொருள் தரும்.

போர்ப்படையுடைய ஆட்சியாளருடன் பகை கொண்டாலும் சொல்லாற்றல் கொண்ட அமைச்சர் பகை கொள்ளாதொழிக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சொல்லாற்றல் கொண்டோரின் பகைத்திறம்தெரிதல் அரசியலார்க்கு வேண்டும்.

பொழிப்பு

வில்லை ஏராகக் கொண்டு உழும் வீரனோடு பகைத்துக் கொண்டாலும், சொல்லை ஏராகக் கொண்டு உழும் புலவரைப் பகைக்காதே.