இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0870



கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:)

பொழிப்பு (மு வரதராசன்): கல்வி கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

மணக்குடவர் உரை: கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.

பரிமேலழகர் உரை: கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது.
(சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கல்லாதவனை, சினப்பவனை, சிறிய முயற்சியால் பெரும்பொருளீட்டாதவனை அதிகாரம் அடையா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி.

பதவுரை: கல்லான்-கற்காதவன்; வெகுளும்-பகைத்தலால் வரும், சினப்பவன்; சிறுபொருள்-எளிய பொருள், முயற்சியின்றியே கிடைக்கும் பொருள், இழிவான பொருள்; எஞ்ஞான்றும்-எப்போதும், எக்காலத்தும்; ஒல்லானை-மேவாதானை, இயலாதானை; ஒல்லாது-மேவாது, அடையாது; ஒளி-புகழ்.


கல்லான் வெகுளும் சிறுபொருள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை;
பரிப்பெருமாள்: கல்லாதானுமாய், வெகுட்சியும் உடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை;
பரிதி: கல்வியில்லாதவன், வெகுளி உள்ளவன், அற்ப குணன் இவர்களை;
காலிங்கர்: சிறந்த நூல்களைக் கல்லாதானுமாய்க் கண்டாரோடு எல்லாம் வெகுளுவானுமாய் எஞ்ஞான்றும் இழிபொருள் விரும்பி இருப்)பானை;
காலிங்கர் குறிப்புரை: சிறுபொருள் என்பது இழிவுபொருள்.
பரிமேலழகர்: நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை;
பரிமேலழகர் குறிப்புரை: சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். [முயற்சி சிறிதாய பொருள் - சிறுமுயற்சியால் வந்த பெரும்பொருள்]

'கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர்.காலிங்கர் 'சிறந்த நூல்களைக் கல்லாதானுமாய்க் கண்டாரோடு எல்லாம் வெகுளுவானுமாய் எஞ்ஞான்றும் இழிபொருள் விரும்பு(தல் செய்து இருப்பானை' என்றார். பரிமேலழகர் 'நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை' எனப் பொருள் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கல்லாதவனை, சீற்றங் கொள்பவனை, சிறு பொருளும் பிறருக்குக் கொடுக்க இசையாதவனை', '(தன் மேல் பகைவர் வராதிருக்க வேண்டிய) அறிவுகளைக் கற்றுக் கொள்ளாமலும், எந்நேரமும் கோபம் உள்ளவனாகவும், யாருக்கும் ஒரு பொருளைக் கொடுத்துவிட மனம் வராதவனாகவும் உள்ள ஒருவனுக்கு', 'அரசியல் அறியாதவனோடு பகைத்து அவனிடம் இருந்து எளிதாய் வரும் பொருளைக் கைக்கொள்ள மாட்டாதவனை', 'அறிய வேண்டுவனவற்றைக் கல்லாதவனோடு பகைத்தலான் வரும் எளிய பொருளைப் பொருந்தாதவனை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அரசியல் கல்லாதவனைப் பகைத்துச் சிறிய பொருளும் ஈட்டமுடியாதவனை என்பது இப்பகுதியின் பொருள்.

எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
பரிப்பெருமாள்: எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் தம்மைப் பாதுகாவாத எளியாரைப் பகை கொள்ளலாம் என்றார்; அவர் எத்தன்மையர் என்றார்க்கு அவரது இலக்கணம் கூறுவார் முற்பட இவை மூன்றும் உடையார்க்கு விளக்கம் உண்டாகாது ஆகலின் அவரொடு பகை கொள்ளலாம் என்றார்.
பரிதி: கீர்த்தி வேண்டியிராது என்றவாறு.
காலிங்கர்: மேவமாட்டாது புகழ் என்றவாறு. [மேவமாட்டாது- பொருந்தாது]
காலிங்கர் குறிப்புரை: ஒளி என்பது புகழ்.
பரிமேலழகர்: எஞ்ஞான்றும் புகழ் மேவாது.
பரிமேலழகர் குறிப்புரை: நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது. [மாறு ஆதல் மேலும்- மாறுபடுதல் மேலும்; அதனினாய பயன் - பகைமாட்சியாலாய பயன்]

'எல்லாநாளும் ஒளி பொருந்தாது/கீர்த்தி வேண்டியிராது/புகழ் மேவமாட்டாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எப்பொழுதும் புகழ் மேவாது', '(பகைவரை சமாளிக்கக்கூடிய) பெருமை ஒரு நாளும் வராது', 'புகழ் எப்போதும் அடைய மாட்டாது', 'எஞ்ஞான்றும் புகழ் பொருந்தாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எக்காலத்தும் புகழ் பொருந்தாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அரசியல் கல்லாதவனைப் பகைத்துச் சிறிய பொருளும் ஈட்டமுடியாதவனை எக்காலத்தும் ஒல்லாது ஒளி என்பது பாடலின் பொருள்.
'ஒல்லாது ஒளி' குறிப்பது என்ன?

ஆளுதல் என்பதை அறியாதவனிடமிருந்து சிறுபொருளும் பெறமுடியாதவனிடம் என்றைக்கும் அதிகாரம் நிற்காது.

அரசியல் கல்லாதவனோடு பகைத்துப் பெறத்தக்க சிறிய பொருளையும் கைக்கொள்ள இயலாதவனை வெற்றிப் புகழ் எந்தக் காலத்திலும் வந்து பொருந்தாது.
இவ்வதிகாரத்து முந்தைய பாடல்கள் பல பகைவரது குறைபாடுகளைக் கூறின. இக்குறள் பகைப்பானது பலவீனத்தைச் சொல்கிறது. இக்குறளின் முதற்பகுதிக்குக் 'கல்லான், வெகுள்வான், சிறுபொருளாளன் ஆகிய பகைவன்' என்று ஒரு சாராரும் 'கல்லானை வெகுளும் (பகைத்துப் பெறும்) சிறு பொருள்' என மற்றொரு சாராரும் உரை கூறினர். அறிவிலான், வெகுளியான் என்பன இவ்வதிகாரத்து முற்குறள்களில் கூறப்பட்டுள்ளமையால் கல்லான் வெகுளும் சிறுபொருள் எனக் கொள்வது இங்கு பொருத்தமாகத் தோன்றுகிறது.

கல்லான்: இவ்வதிகாரத்து முந்தைய பாடல்களில் அறியான், அறிவிலா என அறிய வேண்டுவனவற்றை அறியான், போர் செய்யும் அறிவில்லாத எனப் பகைவர் குறிக்கப்பெற்றார். இங்கு அரசியல் அறிவு பெறாத பகைவனைக் கல்லான் என்ற சொல் குறிக்கிறது.
வெகுளும்: நீங்கான் வெகுளி, காணாச் சினத்தான் என சினத்திலிருந்து நீங்காதவன், கண்ணைமறைக்கும் சினத்தை உடையவன் என வெகுளும் பகைவன் இவ்வதிகாரத்து மற்ற குறள்களில் குறிப்பிடப்பட்டான். இங்கு வெகுளும் என்ற சொல் பகைக்கும் என்ற பொருளில் ஆளப்பட்டது. அரசியல் கல்லாதவனைப் பகைக்கும் எனக் கொள்ளப்பட்டது.
சிறுபொருள்: இத்தொடர்க்குச் சிறு பொருளன், அற்ப குணன், பகைத்தலான் வரும் எளிய பொருள், பகைபண்ணிக் கொள்ளுகிறதினாலே வரப்பட்ட கொஞ்சமான பொருள், பகைத்துக் கொள்ளும் எளிய செயல், சிறிதளவாகிய பொருளினையும், சிறு பொருள்களை விரும்புபவன், சிறிய முயற்சியால் பெரும்பொருளீட்டாதவன், சிறு பொருளும் பிறருக்குக் கொடுக்க இசையாதவன், யாருக்கும் ஒரு பொருளைக் கொடுத்துவிட மனம் வராதவன், பகைத்துக் கொள்ளும் சிறு செயலைக் கூடச் செய்யாதவன், பகைத்து அவனிடம் இருந்து எளிதாய் வரும் பொருளைக் கைக்கொள்ள மாட்டாதவன், பகைத்தலான் வரும் எளிய பொருளைப் பொருந்தாதவன், சிறிதளவு பொருளைக்கூட என்றும் ஈட்டாதவன், பகைக்க நேர்ந்த போது அவனிடமிருந்து பெறத்தக்க சிறிய பொருளையும் கைக்கொள்ளமாட்டாதவன், பகைத்தால் வரும் எளியவழிப் பொருளோடு பொருந்தாதவன், போர் செய்து வென்று பெறக்கூடிய சிறுபொருளை அடைந்து வளர்ச்சி பெறாதவன் எனப் பல வேறுபட்ட பொருள் கூறப்பட்டன.
அரசியல் கல்லாதவனைப் பகைத்துச் சிறுபொருளும் எய்தமாட்டாதவன் என்ற பொருள் தரும்படியாக 'சிறுபொருள்' வந்தது. கல்லாதானொடு பகை கொண்டு சிறுபொருளையும் எய்தானைப் புகழ்மேவாது என்கிறது பாடல். அரசியல் திறனற்ற ஒருவனையே பகைத்து வெல்ல இயலாதவனுக்கு எப்படிப்புகழ் வரும் எனக் கேட்கிறது இது.
கல்லாதவனைப் பகைத்துக்கொள்ளும் சிறிய செயலைக் கூடச் செய்ய இயலாதவனைப் புகழொளி அடையமாட்டா எனவும் கொள்ளலாம்.

'ஒல்லாது ஒளி' குறிப்பது என்ன?

'ஒல்லாது ஒளி' என்றதற்கு ஒளி பொருந்தாது, கீர்த்தி வேண்டியிராது, மேவமாட்டாது புகழ். புகழ் மேவாது, கீர்த்தியடையாது, புகழ் வந்து பொருந்தாது, வாழுங்காலத்துப் புகழாகிய ஒளி பொருந்தாது, அதிகாரம் அடையா, (பகைவரை சமாளிக்கக்கூடிய) பெருமை ஒரு நாளும் வராது, புகழ் அடையாது, புகழ் எப்போதும் அடைய மாட்டாது, புகழ் பொருந்தாது, பெரிய வெற்றியினால் அடையக் கூடிய பெரும் புகழ் வந்து கிட்டாது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒளி என்றதற்குப் புகழ் என்றே பெரும்பான்மையினர் பொருள் கூறினர். ஒல்லாது ஒளி என்பதற்குப் புகழ் பொருந்தாது என்றனர். வ சுப மாணிக்கம் ஒருவர் மட்டுமே அதிகாரம் அடையா என வேறுபாடான உரை தந்தார். இவர் இக்குறளுக்கான உரையாகக் 'கல்லாதவனை, சினப்பவனை, சிறிய முயற்சியால் பெரும்பொருளீட்டாதவனை அதிகாரம் அடையா' எனக் கூறினார். அதிகாரத்தைச் செலுத்தி நல்லாட்சி புரிந்தால்தான் புகழ் வந்து சேரும். அரசியல் அறிவு இல்லாதவனைப் பகைத்துச் சிறுபொருள் கூட பெறமுடியாதவனால் எவ்விதம் ஆட்சி நடத்தி புகழ் சேர்க்க முடியும்? அவனால் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியாமல் புகழ் குன்றிப்போவான். அதிகாரத்தைச் செலுத்தமுடியாதவனாதலால் அதிகாரம் அடையா எனச் சொல்லப்பட்டது.

'ஒல்லாது ஒளி' என்றது புகழ் பொருந்தாது என்ற பொருள் தரும்.

அரசியல் கல்லாதவனைப் பகைத்துச் சிறிய பொருளும் ஈட்டமுடியாதவனை எக்காலத்தும் புகழ் பொருந்தாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அரசியல் அறிவில்லாதானைப் பகைத்தல் பகைமாட்சியாம்.

பொழிப்பு

கல்லாதவனைப் பகைத்துச் சிறிய பொருளும் ஈட்டமுடியாதவனை எக்காலத்தும் புகழ் பொருந்தாது.