இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0866



காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும்

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:866)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

மணக்குடவர் உரை: மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகியவன் பகை விரும்பப்படும்.
இஃது இவையுடையார் நட்டோரிலராதலால் இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது.

பரிமேலழகர் உரை: காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.
(காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.)

இரா சாரங்கபாணி உரை: பிறவற்றை ஆராய்ந்து பாராத கண்மூடித்தனமான சீற்றமுடையவன், அளவு கடந்த காமமுடையவன் என்னும் இவர்களது பகைமை மாற்றாரால் விரும்பிக் கொள்ளப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான் பேணாமை பேணப்படும்.

பதவுரை: காணா-காணமாட்டாத; சினத்தான்-வெகுளியுடையவன்; கழி-மிகுதியான; பெரும்-பெரியதாகிய; காமத்தான்-காமம் உடையவன்; பேணாமை-பகைமை; பேணப்படும்-விரும்பிக் கொள்ளப்படும்.


காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகியவன்;
பரிப்பெருமாள்: மீண்டும் பாராச் சினத்தனுமாய் மிகப்பெரிய காமத்தனுமாகியவன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: காணாச்சினம் என்றது மேல் கூறிய வெகுட்சியின் மிகுதியை.
பரிதி: அளவுபடாத கோபத்தை உள்ளவன் மோகாக்கினி உள்ளவன், ஆரிடத்திலும் உதாசீனம் உள்ளவன்; [மோகாக்கினி- காம மயக்கமாகிய தீ; உதாசீனம் - அலட்சியப்படுத்தல்]
காலிங்கர்: ஈண்டு இதுக்குத் தகாது என்று நோக்காது செய்யும் சினத்தை உடையோனுமாய் மிகப்பெரும் காமத்தை உடையோனுமாய்;
பரிமேலழகர்: தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன் மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்;
பரிமேலழகர் குறிப்புரை: காணாத சினம் என்பது விகாரமாயிற்று.

மீண்டும் பாராத சினத்தனுமாய்/அளவுபடாத கோபத்தை உள்ளவன்/தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான், மிகப்பெரும் காமத்தை உடையோன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புரியாத சினமும் அளவிலாத காமமும் உடையவனது', 'கண்மூடித்தனமாகக் கோபங் கொள்கிறவனும் மிதமிஞ்சிய காம இச்சையுள்ளவனும்', 'உலக இயல்பு அறியாத சினத்தன். அளவுக்கு மிஞ்சிய காமமுடையவன் என்னும் இவர்களது', 'தன்னையும் பிறரையும் அறிய முடியாத கோபத்தினை உடையவன்; மேல் மேல் வளருகின்ற காமத்தினை உடையவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கண்ணைமறைக்கும் சினத்தை உடையவன், அளவுக்குமீறிய காமமுடையவன் என்பது இப்பகுதியின் பொருள்.

பேணாமை பேணப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகை விரும்பப்படும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவையுடையார் நட்டோரிலராதலால் இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது.
பரிப்பெருமாள்: பகையை விரும்பப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை உடையார் நட்டோர் இலர் ஆவார் ஆதலால் பகை கோடல் ஆம் என்றது.
பரிதி: சடுதியிலே கெடுதல் தப்பாது என்றவாறு.
காலிங்கர்: நெறிப்பட்டு வருவன ஒழியப் பேணாமை ஆகிய நெறிகெட வரூஉம் தனம் முதலியவற்றைக் காமித்துச் சொல்வோனுமாய் இதனால் பகையை விரும்பிக் கைக்கொள்ளப்படும் என்றவாறு. [காமித்து - விரும்பி]
பரிமேலழகர்: அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார். [முன்னோன் - காணாச் சினத்தான்; ஏனோன் - மற்றையவன் (கழிபெருங் காமத்தான்)]

'பகைமை விரும்பிக் கொள்ளப்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலையைப் பயன்படுத்திக் கொள்க', ''பகைமை' என்னும் தீமையினால் கொண்டாடப்படுகின்றவர்கள்', 'பகைமை விரும்பிக் கொள்ளப்படும்', 'அவனது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைமை பகைவரால் விரும்பிக்கொள்ளப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்ணைமறைக்கும் சினத்தை உடையவனாய், அளவுக்குமீறிய காமமுடையவனாய் இருப்பவனது பேணாமை பேணப்படும் என்பது பாடலின் பொருள்.
'பேணாமை பேணப்படும்' என்ற தொடரின் பொருள் என்ன?

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாதவனை எளிதாக வெல்லலாம்.

கண்மூடித்தனமாக சினம் கொள்பவனும் அளவுக்கு விஞ்சிய காமத்தை உடையவனும் ஆகியவனது பகைமை பிறரால் விரும்பிக்கொள்ளப்படும்.
காணாச் சினத்தான்: கண்மண் தெரியாத சினம். கண்ணைமறைக்கும் வெகுளி அதாவது ஏன் சினக்கிறோம் என்றும் யார் மீது சினம் கொள்ளுகிறோம் என்றும் எண்ணிப்பாராமல் சீற்றம் கொள்வதைக் குறிப்பது. இவன் உண்மை காணமாட்டான். சினம் வந்தால் செய்வன - செய்யக்கூடாதன, நன்மை - தீமை, தன்நிலை - பிறர்நிலை அறியமாட்டாது துன்பத்திற்குள்ளாவான்.
கழிபெரும் காமத்தான்: இச்சொல் காமக் குற்றமுடையவனைக் குறிக்கின்றது. அளவுக்குமீறிய காமத்தை உடையவன் கழிபெரும் காமத்தான். எந்த நேரமும் காமத்தில் ஆழ்ந்திருப்பவன். காமம் பெண் மூலமாக எளிதிற் சொல்லப்படுவது. இவனை எளிதில் வீழ்த்திவிடலாம்.

இவ்விரண்டு குணன்களையுடையவனுக்கு நண்பர்களில்லை; சுற்றத்தாரையும் பகைத்திருப்பர். இவன் பகைமையைப் பகைவர் விரும்பிக்கொள்ளுவர் வெற்றி தப்பாது என்பதால்.

'பேணாமை பேணப்படும்' என்ற தொடரின் பொருள் என்ன?

'பேணாமை பேணப்படும்' என்றதற்குப் பகை விரும்பப்படும், பகையை விரும்பப்படும், பகையை விரும்பிக் கைக்கொள்ளப்படும், பகைமை விரும்பிக் கொள்ளப்படும், பகையை விரும்பித் தேடிக் கொள்ளவேணும், பகையை மிகவும் பகையாகக் கொள்ளவேண்டும், பகை விரும்பி மேற்கொள்ளப்படும், பகை பகைவர்களால் விரும்பிக் கைக்கொள்ளப்படும், உறவு பேணாத நிலை மேற்கொள்ளப்பெறும், நிலையைப் பயன்படுத்திக் கொள்க, பகைமை மாற்றாரால் விரும்பிக் கொள்ளப்படும், 'பகைமை' என்னும் தீமையினால் கொண்டாடப்படுகின்றவர்கள், பகைமை பகைவரால் விரும்பிக் கொள்ளப்படும், பகைமை பகைவரால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும், பகையை உவந்து மாற்றார் ஏற்றுக் கொள்வர், பகைவனாக விரும்பிப் பெறவேண்டும் என்றவாறு உரைகாரர்கள் பொருள் கூறினர்.

பேணாமை என்ற சொல்லுக்கு இங்கு பகைமை எனப் பொருள் கொள்வர். பேணுதல் என்ற சொல் விரும்புதல் எனப் பொருள்படும்; பேணப்படும் என்பது விரும்பப்படும் என்ற பொருள் தரும். பெரும் வெகுளியையுடையானையும், மிகப்பெருகிய காம உணர்ச்சியை உடையவனையும் எதிர்த்துப் போரிட்டு எளிதாக வெல்லலாம் என்ற பொருளில் அத்தகையவனைப் பகை கொள்ளலாம் என 'பேணாமை பேணப்படும்' என்று சொல்லப்பட்டது.

'பேணாமை பேணப்படும்' என்றது பகைமை விரும்பப்படும் என்ற பொருளது.

கண்ணைமறைக்கும் சினத்தை உடையவனாய், அளவுக்குமீறிய காமமுடையவனாய் இருப்பவனது பகைமை பகைவரால் விரும்பிக்கொள்ளப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சினமும் காமமும் உடையவனை எதிர் கொள்ளல் பகைமாட்சி

பொழிப்பு

கண்மூடித்தனமான சினமும் அளவிலாத காமமும் உடையவனது பகைமை மாற்றாரால் விரும்பிக் கொள்ளப்படும்.