இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0864



நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:864)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

மணக்குடவர் உரை: வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது.
இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.

பரிமேலழகர் உரை: வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது.
(நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.)

தமிழண்ணல் உரை: கடுங்கோபத்தைக் கைவிடாதவன்; தன்னைப்பற்றிய மறைவான செய்திகளைத் தன் மனத்தில் நிறுத்தி, மறைத்துவைக்க முடியாதவன்; இத்தகையவனை வெல்லுதல் எப்பொழுதும் எவ்விடத்திலும் யாருக்கும் எளிது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது.

பதவுரை: நீங்கான்-ஒழியான்; வெகுளி-சினம்; நிறை-மறை பிறர் அறியாமை; இலன்-இல்லாதவன்; எஞ்ஞான்றும்-எப்போதும்; யாங்கணும்-எங்கும்; யார்க்கும்-எவர்க்கும்; எளிது-வருந்தாமல் கிட்டக்கூடியது.


நீங்கான் வெகுளி நிறையிலன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின்;
பரிப்பெருமாள்: வெகுளியினின்றும் நீங்கானாய் நிறையுடைமையும் இலனாயின்;
பரிதி: கோபம்விடான் பொறுமை இல்லானாகில்;
காலிங்கர்: பெரிதும் சினம் தணியானுமாய்த் தன்னை நிரப்பத்தே வைக்கும் நிறைவு இலனும் ஆயின்; [நிரப்பத்தே- நிறைவு இல்லாமை நிரப்பும்]
பரிமேலழகர்: ஒருவன் வெகுளியின் நீங்கான், அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்;
பரிமேலழகர் குறிப்புரை: நிறை-மறை பிறரறியாமை.

'வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறுமையும் உறுதியும் சிறிதும் இல்லாதவன்', 'சினம் தவிரானாய், மன உறுதிப்பாடில்லாதவனை', 'எப்போதும் கோபமுள்ளவனாகவும் (சொல்லிலும் செயலிலும்)', 'சினத்திலிருந்து நீங்காதவன்; மன நிறைவு இல்லாதவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சினத்திலிருந்து நீங்காதவன்; மன உறுதிப்பாடு இல்லாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.
பரிப்பெருமாள்: அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவையிரண்டு முடையவன் எல்லார்க்கும் தோற்கும்.
பரிதி: அவனை வெல்லல் யார்க்கும் எளிது என்றவாறு.
காலிங்கர்: மற்று அவனோடு பகைமை எல்லாக் காலமும் எவ்விடத்தானும் யாவர்க்காயினும் எளிது என்றவாறு.
பரிமேலழகர்: அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது.
பரிமேலழகர் குறிப்புரை: வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.

'அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் யார்க்கும் எளியவன்', 'எக்காலத்தும் எவ்விடத்தும் எவர்க்கும் வெல்லுதல் எளிது', 'எந்த இடத்திலும் யாருக்கும் தோற்றுப் போகக் கூடிய பலவீனமுள்ளவன்', 'எப்பொழுதும் எவ்விடத்தும் யார்க்கும் எளியவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எப்பொழுதும் எவ்விடத்தும் எவர்க்கும் வெல்லுதல் எளிது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சினத்திலிருந்து நீங்காதவன்; மன உறுதிப்பாடு இல்லாதவனை எப்பொழுதும் எவ்விடத்தும் எவர்க்கும் வெல்லுதல் எளிது என்பது பாடலின் பொருள்.
'நிறையிலன்' என்பதன் பொருள் என்ன?

பொறுமையிழந்து பதற்ற நிலையிலேயே இருப்பவனை எளிதில் வெல்லலாம்.

சினம் நீங்காதவனாய் மனவலிமை இல்லாதவனாய் இருப்பவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் எவர்க்கும் எளிது.
நீங்கான் வெகுளி: மிக்க சினத்தையுடையவனைக் குறிக்கும். இவன் எப்பொழுதும் சினம் குறையாமல் சிடுசிடு என்றிருப்பான். அவனுக்குத் தன் சினத்தைக் கட்டுப்படுத்தவும் தெரியாது.
நிறையிலன்: உள்ளத்தை நிறுத்தி ஆளும் தன்மை இல்லாதவன் நிறையிலன் எனப்படுவான். மன வலிமை குறைந்திருப்பவனைக் குறிப்பது. இவன் தன் மன மறைகளையும் வெளிப்படையாகக் கூறி விடுபவனாக இருப்பான். நிறையின்மையைச் சொல்லினும் செயலினும் அளவில்லாத பதற்ற குணம் எனவும் சொல்வர்.
அடிக்கடி சினங் கொள்ளும் மனவலிமை அற்றவனை எந்நேரத்திலும், எங்கும், யாராலும் தோற்கடிப்பது எளிதாகவே இருக்கும், அவன் மேல் எழுந்து செல்லும் முன்னர் வலியறிதல், காலமறிதல், இடனறிதல் இவற்றை நோக்க வேண்டியதில்லை என்பதால்.

'நிறையிலன்' என்பதன் பொருள் என்ன?

'நிறையிலன்' என்றதற்கு நிறையுடைமை இலன், பொறுமை இல்லான், தன்னை நிரப்பத்தே வைக்கும் நிறைவு இலன், மறை பிறரறியாதிருக்கச் செய்யமுடியாதவன், நல்ல புத்தியுமில்லாதவன், நிறையுடையனல்லன், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவன், தன்னைப்பற்றிய மறைவான செய்திகளைத் தன் மனத்தில் நிறுத்தி மறைத்துவைக்க முடியாதவன், நிறையில்லாதவன், உறுதி இல்லாதவன், மன உறுதிப்பாடில்லாதவன், சொல்லிலும் செயலிலும் அளவு கடந்துவிடாதபடி காத்துக் கொள்ளும் குணம்அற்றவன், நெஞ்சை நிறுத்தும் உறுதி இல்லாதவன், மறையைப் போற்றும் அடக்கம் இல்லாதவன், மன நிறைவு இல்லாதவன், தன் மனத்தை அடக்கி ஆளும் தன்மையில்லாதவன், சிறிதும் பொறுமை இல்லான், பிறரறியாமல் மனத்தில் மறைக்க வேண்டிய தொன்றை மறைத்து வையாதவன், அடக்கமில்லாதவனாக இருப்பவன், குறிக்கோளில்லாதவன் எனப் பலவாறாக உரைகாரர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்குப் பரிமேலழகர் மறை பிறரறியாமைக் காத்தல் இல்லாதவன் எனப் பொருள் கூறினார். அவனைச் சிறிது சீண்டினாலும் சினத்தில் மறையை வெளிப்படுத்திவிடுவான். பொதுவகையில் மன உறுதி இல்லாதவன் என்று சொல்லப்பட்ட பொருளும் பொருந்துவதே. மன உறுதி இல்லாதவனுக்குத் தான் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்ற உணர்வு இருக்காது. ஒருவித பதற்ற நிலையிலேயே காணப்படுவான். அவனை வெல்லுதல் யாருக்கும் எளிதுதான்.

'நிறையிலன்' என்ற தொடர் நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் தன்மை இல்லாதவன் என்ற பொருள் தரும்.

சினத்திலிருந்து நீங்காதவன்; மன உறுதிப்பாடு இல்லாதவனை எப்பொழுதும் எவ்விடத்தும் எவர்க்கும் வெல்லுதல் எளிது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மனக்கட்டுப்பாடு இல்லாதவனை வீழ்த்துதல் பகைமாட்சியாம்.

பொழிப்பு

சினத்தை விடாதவனாய், மன உறுதிப்பாடில்லாதவனை எக்காலத்தும் எவ்விடத்தும் எவர்க்கும் வெல்லுதல் எளிது