இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0863



அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:863)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

மணக்குடவர் உரை: அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன்.
இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.

பரிமேலழகர் உரை: அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன்.
('தஞ்சம்', 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அஞ்சவேண்டாதவற்றிற்குப் பயப்படுபவனாய், அறிய வேண்டியதை அறியாதவனாய், பிறரோடு இயைந்து நடவாதவனாய், கொடுக்குங்குணம் இல்லாதவனாய் இருப்பவன் பகைவரால் வெல்லப்படுவதற்கு மிக எளியவன் ஆவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் பகைக்கு தஞ்சம் எளியன்.

பதவுரை: அஞ்சும்-நடுங்குபவன், அஞ்சுவான்; அறியான்-அறியமாட்டான்; அமைவு இலன்-பழகத்தெரியாதவன், பொருத்தம் இல்லாதான்; ஈகலான்-கொடுக்கமாட்டான்; தஞ்சம்-எளிமை; எளியன்-இளப்பமுடையவன்; பகைக்கு-பகைவர்களுக்கு.


அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்:
பரிப்பெருமாள்: அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுமவன், பகைவன் வலிமை அறியான், அமைதியிலன், ஈயமாட்டான்:
பரிதி: அஞ்சுதல் அறியான், அடக்கமும் அறியான் ஆகில்;
காலிங்கர்: ஒருவன் தனக்கு எதிர்காணின் அஞ்சுவது செய்யும்; பின் உற்ற வினைக்கண் கட்டும் கழறியும் அறிவது செய்யான்; அன்றியும் தன்னைச் சமைத்துக்கொள்வது ஓர் நிறைவும் இலன்; இதன்மேலும் கொடைக்கடன் அறிந்து தணிப்பதும் செய்யான் யாவன்; [கட்டும் கழறியும்- அகற்றியும் இடித்துரைத்தும்; சமைத்து- ஆக்கிக்கொள்ளல்; தணிப்பதும்- அடக்குவதும்]
பரிமேலழகர்: ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும், அறியவேண்டுமவற்றை அறியான், பிறரோடு பொருத்தம் இலன், இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; [இவறன் மாலையன் - பேராசையால் உலோபப்படும் தன்மையன்]

அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான்/அறியவேண்டுமவற்றை அறியான், மதியிலன்/பிறரோடு பொருத்தம் இலன், ஈயமாட்டான் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துணிவும் அறிவும் ஒழுங்கும் கொடையும் இல்லாதவன்', 'அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சுவான். அறிய வேண்டுவனவற்றை அறியான், பிறரோடு பொருந்த நடவான். ஈகையும் செய்யான்', 'அஞ்சுகின்ற இயல்புள்ளவனாகவும், சமயோசித அறிவில்லாதவனாகவும், நிதானமில்லாதவனாகவும், கொடை மனமில்லாத லோபியாகவும் உள்ளவன்', 'அஞ்ச வேண்டாதனவற்றிற்கு அஞ்சுவான்; அறிய வேண்டியனவற்றை அறியான்; பிறரோடு பொருத்தம் இலன்; ஈகையில்லாதவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லாவற்றிற்கும் அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியான், பிறரோடு பொருந்த நடவான், கொடுக்க மனமில்லாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

தஞ்சம் எளியன் பகைக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.
பரிப்பெருமாள்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.
பரிதி: மாற்றார்க்கு இவனை வெல்லல் எளிது என்றவாறு.
காலிங்கர்: அவன் பிறர்க்கு மிகவும் எளியன் பகைமைக்கு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தஞ்சம் எளியன் என்பது மிகவும் எளியன் என்றது.
பரிமேலழகர்: இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தஞ்சம்', 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.

'இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்க்கு எளியவன்', 'இவ்வியல்புகளைக் கொண்டவன் பகைவன் வெல்லுதற்கு மிக எளியவனாவான்', 'பகைவர்களிடம் அடிபணிந்து விட வேண்டிய மிக்க பலவீனன்', 'இத்தகையோன் பகைவர்க்கு மிக எளியன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவன் வெல்லுதற்கு மிக எளியனாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எல்லாவற்றிற்கும் அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியான், பிறரோடு பொருந்த நடவான், கொடுக்க மனமில்லாதவன்; இவ்வியல்புகளைக் கொண்டவன் பகைவன் வெல்லுதற்கு தஞ்சம் எளியன் என்பது பாடலின் பொருள்.
'தஞ்சம் எளியன்' குறிப்பது என்ன?

அஞ்சி நடுங்கி மெலியனாகக் காட்சியளிப்பவனை எளிதில் வெல்லாம்.

எடுத்ததற்கெல்லாம் அஞ்சுபவன்; அறிய வேண்டியவற்றை அறியாதவன்; பிறரோடு இணங்கி நடக்கமாட்டாதவன்; எவருக்கும் கொடுத்து உதவாதவன்; இத்தகைய இயல்புகளுடைய ஒருவன் பகைவரால் வெல்வதற்கு மிக எளியன்.
அஞ்சும்: பயந்த இயல்பினன். எல்லாவற்றிற்கும் அஞ்சுவான் இவன். துணிவில்லாமல் அச்சம் மிகுந்தவனாயிருக்கிறான். எவருக்கும் அடிமையாக இருக்கக் காத்திருப்பவன்போல் தோன்றுகிறான்.
அறியான்: இவனுக்குத் தன்னிடம் பகை கொண்டவனது வலிமை என்னவென்று தெரியாது. பிறர் இடித்துரைத்தும் கேளான் போர் செய்வது அறியான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியான். நாட்டின் நிலை என்ன, அண்டை இடங்களில் உள்ளவர்கள் பற்றி எந்த ஒரு செய்தியும் தெரியாதவன் இவன். எனவே பகையை வெல்லும் வழியுமறியாதவன்.
அமைவிலன்: யாருடனும் பழகத் தெரியாதவன் அமைவிலனாம். பழகும் சிலருடனும் இணங்கிச் செல்லும் தன்மையில்லாதவன். பொருந்திப் போகமாட்டாமால் தேவையின்றி சொற்போர் புரிந்து உள்ள தொடர்பையும் அறுத்தெரிவான்.
ஈகலான்: நெஞ்சில் ஈரமில்லாதவன்; உதவி கேட்டு வருபவர்களுக்கு இரக்கப்பட்டு ஒன்றும் தரமாட்டான்.
இவ்விதம் கண்டதற்கெல்லாம் அஞ்சி, அறியாமையுடையவனாய், பழகத் தெரியாதவனாய், கொடுக்கும் பண்பில்லாதவனை எளிதில் வெல்லலாம்; அவ்வாறு எளிதில் வெல்லக் கூடியவன் மேல் செல்லலாம் என்கிறது இப்பாடல்.

'தஞ்சம் எளியன்' குறிப்பது என்ன?

'தஞ்சம் எளியன்' என்றதற்கு மிகவும் எளியன், அடிபணிந்து விட வேண்டிய மிக்க பலவீனன், வெல்லப்படுவதற்கு மிக எளியவன் ஆவான், தோற்கடிக்க எளியனாய்த் தஞ்சம் புகுவான், வெல்லுதற்கு மிக எளியவனாவான் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்குப் பரிமேலழகர் 'தஞ்சம்', 'எளியன்' ஒருபொருட்பன்மொழி எனக் குறிப்பு தந்தார். ஒருபொருட் பன்மொழி என்பது ஒரு பொருளைத் தரும் பல சொற்கள். சரிநிகர் சமானம் என்பது போன்றது. இங்குத் தஞ்சம், எளியன் ஒருபொருட் குறித்தன. உரையாசிரியர்கள் 'தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே' என்பது தொல்காப்பியமாதலின் (சொல்லதிகாரம், இடையியல் சிறப்பிலக்கணம், 266) தஞ்சம் எளியன் ஒரு பொருட்பன்மொழியாய் சிறப்பினின் வழாது மிக எளியன் என்னும் பொருட்டாயிற்று என்று மேலும் விரித்துரைத்தனர்.
தஞ்சம் எளியன் என்றது மிகவும் எளியன் எனும் பொருள்பட்டு எளிதாய் வெல்லப்படுவான் என்பதைக் குறிக்கும்.

'தஞ்சம் எளியன்' என்ற தொடர்க்கு மிகவும் எளியன் என்பது பொருள்.

எல்லாவற்றிற்கும் அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியான், பிறரோடு பொருந்த நடவான், கொடுக்க மனமில்லாதவன்; இவ்வியல்புகளைக் கொண்டவன் பகைவன் வெல்லுதற்கு மிக எளியனாவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒதுங்கி வாழும் இயல்புடையவன் மேற்செல்லுதல் பகைமாட்சியாம்.

பொழிப்பு

எதற்கும் அஞ்சுகின்ற இயல்புடையான், அறிய வேண்டுவனவற்றை அறியான், பிறரோடு பழகத் தெரியாதவன், கொடுக்கும் உள்ளம் இல்லாதவன் பகைவர்க்கு மிக எளியவன்.