இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0860



இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

(அதிகாரம்:இகல் குறள் எண்:860)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

மணக்குடவர் உரை: மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.

பரிமேலழகர் உரை: இகலான் இன்னாத எல்லாம் ஆம் - ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.
(இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.)

தமிழண்ணல் உரை: ஒருவனுக்கு இவ்விகலாலே துன்பங்கள் எல்லாம் உண்டாகும். மகிழ்வுடன் சிரித்துப் பழகுவதால், நல்லியல்புடைமை என்னும் பெருமித நிலை ஏற்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகலான் இன்னாத எல்லாம் ஆம் நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்.

பதவுரை: இகலா(ல்)ன்-மாறுபாட்டினால்; ஆம்-ஆகும்; இன்னாத-தீயவை; எல்லாம்-அனைத்தும்; நகலா(ல்)ன்-நட்பால்; ஆம்-ஆகும்; நன்நயம்-நல்ல நன்மை; என்னும்-என்கின்ற; செருக்கு-தருக்கு, பெருமிதம், உள்ளக் களிப்பு.


இகலானாம் இன்னாத எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்:
பரிப்பெருமாள்: மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்:
பரிதி: மாறுபாடு கொண்டால் பொல்லாதவையெல்லாம் வரும்;
காலிங்கர்: யாவரோடாயினும் தான்கொள்ளும் மாறுபாட்டானே உளவாம்; யாவை என்னின் பெரிதும் இன்னாதன அனைத்தும்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்;
பரிமேலழகர் குறிப்புரை: இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின.

'மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாத் துன்பமும் வேற்றுமையால் வரும்', 'மாறுபாடு என்னும் ஒன்றினாலே தீமை பயப்பன எல்லாம் உண்டாகும்', 'எல்லாத் துன்பங்களும் உண்டாவது குரோதத்தால்', 'மாறுபாட்டினாலே தீயன எல்லாம் உண்டாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.
பரிப்பெருமாள்: உடன்பட்டு நகுதலாலே நன்னயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கூறிய குற்றம் எல்லாம் பயத்தலின், அதனைத் தவிரத் தனக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சி உண்டாம் என்றது.
பரிதி: மாறுபாடு கண்டு சிரித்துப் பொறுப்பானாகில் ஆக்கமும் கெடாது வெற்றியும் உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்றும் இனி யாவரோடாயினும் முகமலர்ந்து இனிது ஒழுகுவரேல் அதனாலாம், நல்ல ஆசாரம் என்று சொல்லப்படுகின்ற யாவரும் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்றவாறு.
பரிமேலழகர்: நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.
பரிமேலழகர் குறிப்புரை: நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.

'நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்/ நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நலமான உணர்ச்சி நல்லுறவால் உண்டாம்', 'நட்பினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் உண்டாகும்', 'எல்லா நல்ல பலன்களின் பெருமை வருவது, மகிழ்ச்சியுண்டாக்கும் அன்பு குணத்தால்தான்', 'நட்புக் கொள்ளுதலினாலே நல்லமுறை என்னும் பெருஞ்செல்வம் உண்டாகும். (அல்லது நல்ல முறை உடையார் என்னும் மதிப்பு ஏற்படும்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முகமலர்ந்து நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் உண்டாகும்; முகமலர்ந்து நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் செருக்கு உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'செருக்கு' என்பதன் பொருள் என்ன?

சிரித்து உறவாடி துன்பம் நீக்குக.

மாறுபாட்டினாலே ஒருவனுக்கு துன்பமான எல்லாம் உண்டாகும்; மாறுபடாது நட்புக் கொள்வதாலே பெருமித நிலை ஏற்படும்.
இகலானாம் என்றது இகலால்+ஆம் என விரியும். வெறுப்புடன் எவருடனும் பகைத்துக் கொள்ளுவதால் எல்லாத் துன்பமும் ஏற்படும். எல்லாத் துன்பம் என்பது வறுமை, இழிவு, நட்பும் உறவுமற்றுத் தனித்து விடப்படும் நிலை, சட்டத் தண்டனை போன்றவற்றைக் குறிக்கும்.
‘நயம்’ என்ற சொல்லுக்கு நீதி, ஒழுகலாறு, நன்மை என்று பொருள் கண்டுள்ளனர். 'நீதி' என்பது இராச நீதியைக் குறிப்பதாக உரைகாரர்கள் கூறுவர். 'நயம்' என்பதற்கு நன்மை என்ற பொருள் இங்கு சிறக்கும். நன்னயம் என்பது பெருநன்மையைக் குறிப்பது.
இகலுக்கு மாறாக முகமலர்ந்து, நல்லெண்ணங்கொண்டு நட்போடு பழகின் வாழ்விற்கு நன்மையான அமைதி, மகிழ்ச்சி, இணக்கமான உறவுகள் என்னும் பெருமையான நிலை உண்டாகும். செல்வமும் உண்டாகும். நகலானாம் என்றது நகலால்+ ஆம் என விரியும். நகுதலால் அதாவது மகிழ்வைக்காட்டி உறவு பாராட்டுவது நன்மை தரும்.

'செருக்கு' என்பதன் பொருள் என்ன?

'செருக்கு' என்ற சொல்லுக்கு உள்ளக்களிப்பு. ஆக்கமும் வெற்றியும், மகிழ்ச்சி, பெருஞ்செல்வம், பெருமித நிலை, பெருமை, மதிப்பு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

குறளில் ‘செருக்கு’ என்பது சிறப்பு, தருக்கு (இழிவு) என்னும் இரு பொருளிலும் ஆட்சிபெறுகிறது. இக்குறளில் அது பெருமிதம் என்னும் சிறப்புப் பொருளில் ஆளப்பட்டது. நன்னயம் என்னும் செருக்கு என்பதன்கண் செருக்கு என்பது கொள்ளத் தகுவதாகிய செருக்கினை. அது செருக்கு விளைதற்குக் காரணமாகிய செல்வத்தை உணர்த்திற்று என்பர்.

மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் உண்டாகும்; முகமலர்ந்து நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எல்லாரோடும் இகல் நீக்கிக் களிப்பதால் செல்வம் பெருகும்.

பொழிப்பு

மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் வரும். நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் கிடைக்கும்.