இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0857



மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்

(அதிகாரம்:இகல் குறள் எண்:857)

பொழிப்பு (மு வரதராசன்): இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

மணக்குடவர் உரை: மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார்.
இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.

பரிமேலழகர் உரை: இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார்.
(இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மாறுபடுதலை விரும்பும் கொடிய அறிவினர் மேன்மை தரும் உண்மைப் பொருளை அறியார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகல்மேவல் இன்னா அறிவினவர் மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்.

பதவுரை: மிகல்-மிகுதல், வெற்றி; மேவல்-பொருந்துதல், அடைதல்; மெய்ப்பொருள்-உண்மைப்பொருள்; காணார்-அறியமாட்டார்; இகல்-மாறுபாடு; மேவல்-விரும்புதல்; இன்னா-தீயவை; அறிவினவர்-அறிவுடையவர்கள்.


மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('மிகன்மேவு' பாடம்): மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார்;
பரிப்பெருமாள்: மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார்;
பரிதி: மிகவும் பெருமையுள்ளவன் என்கிற குணம் காணார்;
காலிங்கர் ('மிகன்மேவு' பாடம்): தன்னின் பெரியது பிறிது இன்றித் தானே பெருமை மேவுதல் பண்பிற்றாய் என்றும் யாது ஒருபடிப்பட நிற்பதாய இம்மெய்ப்பொருளைக் காணமாட்டார்;
காலிங்கர் குறிப்புரை: மிகன் மேவு என்பது பெருமை.
பரிமேலழகர்: வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார்.
பரிமேலழகர் குறிப்புரை: வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். [வழி நின்றார் -நீதி நூல் கூறிய வழியில் ஒழுகுவார்]

'மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார்/மிகவும் பெருமையுள்ளவன் என்கிற குணம் காணார்/என்றும் யாது ஒருபடிப்பட நிற்பதாய இம்மெய்ப்பொருளைக் காணமாட்டார்/வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நூல்கள் கூறும் வெற்றிக்குக் காரணமான மெய்ப்பொருள்களை அறிய மாட்டார்கள்', 'அந்த மனத்தாபம் மிஞ்சும்போது கோபம் வந்துவிடுவதனால் எந்த விஷயத்திலும் உண்மைகளை அறிய முடியாதவர்களாகி விடுகிறார்கள்', 'மேன்மையான நீதிநூற் பொருளை அறியமாட்டார்கள்', 'வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூற் பொருள்களை அறியமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

இகல்மேவல் இன்னா அறிவி னவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('இகன்மேவும்' பாடம்): மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.
பரிப்பெருமாள்: மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது. மெய்ப்பொருள் காணார் என்றமையால் கல்வியின்கண் தருக்கத்தினால் மாறுபடுவாரை நோக்கிற்று. [தருக்கத்தினால்- வாதத்தினால்]
பரிதி: மாறுபாடு மேற்கொண்ட புல்லறிவாளர் என்றவாறு.
காலிங்கர் ('இகன்மேவும்' பாடம்): யாரோ எனின் சில சமயவேற்றுமை பற்றிநின்று அதன்கண் மேவுதல் பண்பிற்றாகிய இப்பெரியதோர் இன்னாத அறிவினர் என்றவாறு. [இன்னாத - துன்பந்தரும்]
பரிமேலழகர்: இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; [இன்னாத - தீமையைத் தருகின்ற]
பரிமேலழகர் குறிப்புரை: இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.

'மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாட்டை விரும்பும் தீய அறிவுடையவர்கள்', 'மனத்தாபம் அடைந்துவிட்டதனால் அறிவு கெட்டுப் போனவர்கள்', 'மாறுபாட்டினை விரும்பும் தீய அறிவுடையவர்கள்', 'மாறுபாட்டைப் பொருந்துதல் உடைய துன்பம் தரும் அறிவினை உடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்' குறிப்பது என்ன?

பகையை வளர்க்கவே விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலைமை தெரிவதில்லை.

மாறுபாட்டினை விரும்பும் தீய அறிவினை உடையவர்கள் உண்மை எதுவும் காணமாட்டாதவர்களாயிருப்பர்.
இகல் மேவல் என்பது மாறுபாட்டை விரும்புதல் எனப்பொருள்படும். இன்னா அறிவு என்பது தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவாம். இகலை விரும்புகிறவர்கள் தீய அறிவினராவர் என்கிறார் வள்ளுவர். அவர்கள் செருக்குற்று மாறுபட்டவர்க்குத் தீமை செய்வதையே எண்ணுவார்கள். எப்பொழுதுமே உண்மையை அறிய மாட்டார்கள் எனவும் கூறுகிறார்,

'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்' குறிப்பது என்ன?

மிகல் என்ற சொல்லுக்கு வெற்றி என்றும் மிகுதல் என்றும் இருதிறமாகப் பொருள் கொள்வர். இங்கு மிகுதல் என்ற பொருள் பொருத்தமாகப்படுகிறது. மிகல் மேவல் என்றது மாறுபடுபவனை எதிர்த்து அவனினும் மிகுதியாக நிற்றலைக் குறிக்கும். மெய்ப்பொருள் என்பதற்குப் பல உரையாசிரியர்கள் நீதிநூற்பொருள் எனப் பொருள் கூறினர். மணக்குடவர் உண்மைப் பொருள் என்றார். இது சிறப்பாக உள்ளது. எனவே 'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்' என்றது மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் என்ற பொருள் கிடைக்கிறது.
மாறுபாடு ஏற்படுவது பலவகை. சிறிய பெரிய காரணங்களுக்காக இகல் தோன்றும்; ஏதுக்கள் இன்றியும் பகைமை உண்டாகும். மாறுபாடு எளிதாக நீக்கத்தக்கதாக இருந்தாலும் சிலர் வீம்புக்காக பகைமையை மிகுவிக்கவே விரும்புவர். அவர்கள் ஏன் இகல் தோன்றியது என்பதையே அறியார்கள். பகையை விரும்பி வளர்த்துக்கொள்ளவே நினைப்பர். மற்றவர்க்குத் துன்பம் தருவதிலேயே முனைப்புக் காட்டுவர். இதனால்தான் அவர்களை இன்னா அறிவினர் என்கிறார் வள்ளுவர். அவர்கள் உண்மையை நோக்க மறுப்பதால் மெய்ப்பொருள் காணார் எனச்சொல்லப்பட்டது. மிகுதலையே பொருந்துவதால் இகல் ஏன் உண்டானது என்பதையே அறியமாட்டாதவர்களாயிருப்பர். அதைப் போக்குதற்கும் இணங்கமாட்டார். எனவே அவர்கள் 'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்'.
இத்தொடரைப் பரிப்பெருமாள் 'கல்வியின்கண் தருக்கத்தினால் மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாது' என விளக்குவார். காலிங்கர் இதற்குத் 'தனது சமய உயர்வு கருதி இகல் காண்பார் யாது ஒருபடிப்பட நிற்பதாய இம்மெய்ப்பொருளைக் காணார்' என உரை செய்கிறார். தன்னிகரில்லாத மெய்ப்பொருள் எனக் கடவுள் மேல் வைத்து இவர் பொருள் கூறினார். சமயமோ அல்லது இறைப்பொருளோ இங்கு-பொருட்பாலில்- பொருந்தாது.

மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இகல் மேவுவார் அறிவு மங்கியவராயிருப்பர்.

பொழிப்பு

மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் மேன்மை தரும் உண்மைப் பொருளை அறிய மாட்டார்கள்.