இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0854



இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

(அதிகாரம்:இகல் குறள் எண்:854)

பொழிப்பு (மு வரதராசன்): இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்.
எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.

பரிமேலழகர் உரை: இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
(துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: துன்பங்களுள் எல்லாவற்றிலும் மிகத் துன்பமாய மாறுபாடே ஒழிந்து போமாயின், அஃது இன்பங்களெவற்றினும் மிக்க இன்பத்தைக் கொடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் இன்பத்துள் இன்பம் பயக்கும்.

பதவுரை: இன்பத்துள்-மகிழ்ச்சியுள்; இன்பம்-மகிழ்ச்சி; பயக்கும்-உண்டாக்கும், பயன்தரும்; இகல்-மாறுபாடு; என்னும்-என்கின்ற; துன்பத்துள்-துயரத்துள்; துன்பம்-துயரம்; கெடின்-இல்லையாயின்.


இன்பத்துள் இன்பம் பயக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்:
பரிப்பெருமாள்: இன்பத்தின் மிக்க இன்பத்தை எய்தும்:
பரிதி: இன்பம் வந்தகாலம் இன்பம் வந்தது என்று மகிழாதவன்;
காலிங்கர்: இன்பத்துள் மிக்க இன்பத்தைத் தரும்;
பரிமேலழகர்: அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.

'இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியின் உரை 629ஆம் குறளுக்கானது.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்த இன்பம் விழையும்', 'அந்த இல்லாமை அவனுக்கு இன்பங்கள் அனைத்திலும் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்', 'இன்பங்களிலெல்லாம் சிறந்த இன்பம் உண்டாக்கும்', 'இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பம் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.
பரிப்பெருமாள்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் போமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லா இன்பத்தினும்மிக்க வீடுபேற்றின்பமும் எய்தும் என்றது.
பரிதி: துன்பம் வந்தகாலத்தும் துன்பப்படான் என்றவாறு.
காலிங்கர்: இகல் என்னும் துன்பத்துள் மிக்க துன்பம் கெடின் என்றவாறு.
பரிமேலழகர்: மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார்.

'மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியின் உரை 629ஆம் குறளுக்கானது.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாடு என்னும் பெருந்துன்பம் ஒழிந்தால்', 'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்திலும் சிறந்த துன்பம் ஒருவர்க்கு இல்லையாயின்', 'துன்பங்களிலெல்லாம் கொடிய துன்பமாகிய மனத்தாபம் என்னும் துன்பம் இல்லையானால்', 'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பம் கெட்டால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் அது இன்பத்துள் இன்பத்தைத் தரும் என்பது பாடலின் பொருள்.
'இன்பத்துள் இன்பம்' குறிப்பது என்ன?

மாறுபாடு நீங்கப்பெற்றால் அளவிறந்த இன்பம் பெறலாம்.

துன்பங்களுள் பெரிதான துன்பமான இகல் இல்லையானால் அதுவே ஒருவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் மிகுந்த இன்பத்தினைத் தரும்.
மாறுபாடு என்பது துன்பங்கள் தருவனவற்றுள் எல்லாம் பெரிதானது. இவருடன் உறவு வேண்டாம் அவருடன் கூடவேண்டாம் என்றவாறு பிரிந்து நிற்பது மன உளைச்சல்களையே தரும். அது எந்தவித நன்மையையும் தராது. இகலென்னும் கொடிய நோய் பற்றிக்கொண்டால் அமைதி இழந்து வாழ்வே பாழாகிவிடும். ஒருவர் இன்னொருவர்க்குத் தீங்கு செய்ய பதிலுக்கு அவர் இன்னும் பெரிய தீமை செய்ய இப்படியாக இகல் விரிவடைந்து இருவருமே நன்மையடையமுடியாமல் காலம் கடந்துவிடும். இகல் உள்ளத்தையும் உடம்பையும் உலுக்கி ஒருவனைத் துன்பநிலையிலேயே வைத்திருக்கும். மாறுபாடே பகை உண்டாக வழிவகுப்பது. பகையுணர்வால் பலருடன் சண்டையிட்டு வலிமை குன்றி எளியனாய்த் தோன்றுவான். அதன் தொடர்ச்சியாய் உரிய நேரத்தில் தனக்குத் துணையாக காக்க யாருமின்றி துன்பத்தின்மேல் துன்பம் உண்டாகும். மேலும் மாறுபாட்டினால் உண்டாகும் துன்பம் மனதில் எப்பொழுதும் உறைந்திருந்து கொண்டு வருத்திக் கொண்டேயிருக்கும். இதனால் துன்பத்துள் துன்பம் எனச் சொல்லப்பட்டது.
இகலென்னும் இத்துன்பத்துள் துன்பத்தை ஒழித்துவிட்டால் எல்லாப் பயனும் கிடைத்து அது இன்பத்துள் இன்பம் பயக்கும்.

'இன்பத்துள் இன்பம்' குறிப்பது என்ன?

பகைமை என்கிற துன்பத்துள் துன்பம் இல்லையானால் அது ஒருவனுக்கு மிக்க இன்பங்கொடுக்கும். பகையே இல்லையென்றால் தன் உடலுக்கும் உள்ளத்திற்கும் எவரும் ஊறு விளைப்பர் என்பது பற்றி பயப்படாமல் இருப்பதால் அமைதியான வாழ்வு கிட்டும். அவனுக்குத் தேவையான துணையும் வலிமையும் தானாக வந்து சேரும். துன்பம் தரும் இகலிலிருந்து விடுதலை காண்பவன் குடும்பம், சமூகம், அரசு அனைத்து அமைப்புகளிலும் நட்பு பெருகுவதை உணர்வான். அதனால் நீடித்த, நிலையான மகிழ்ச்சி ஏற்படும். அதுவே இன்பத்துள் இன்பம்.

சிலர் இன்பத்துள் இன்பம் என்பதற்கு 'எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம்' எனப் பொருள் உரைத்தனர். அது இங்கு பொருந்தாது.

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் அது இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இகல் நீங்கிய வாழ்வு பேரின்பம் பயக்கும்.

பொழிப்பு

மாறுபாடு என்னும் துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பம் ஒழிந்தால் அது இன்பங்கள் அனைத்திலும் மிக்க இன்பத்தைக் கொடுக்கும்.