இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0852



பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை

(அதிகாரம்:இகல் குறள் எண்:852)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது.

மணக்குடவர் உரை: தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று.
இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.

பரிமேலழகர் உரை: பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.
(செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: பிரிவுண்டாகக் கருதி வெறுப்பனவற்றை ஒருவன் செய்தான் ஆயினும், மாறுபாடு விளையாமைப் பொருட்டு, அவனுக்குத் துன்பந் தருவனவற்றைச் செய்யாமல் இருப்பதே சிறந்த முறையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.

பதவுரை: பகல்-கூடாமை, வேறுபட்டிருத்தல், ஒன்று கூடாதிருத்தல்; கருதி-எண்ணி; பற்றா-வெறுப்பன; செயினும்-செய்தானாயினும் இகல்-மாறுபாடு; கருதி-குறித்து; இன்னா-தீங்குகள், துன்பம் தருவன; செய்யாமை-செய்யாதிருத்தல்; தலை-சிறப்பு, உயர்ந்தது.


பகல்கருதிப் பற்றா செயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும்;
பரிப்பெருமாள்: தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி தீயவற்றைச் செய்தாராயினும்;
பரிதி: இன்னானை வென்றோம் என்ற கீர்த்தியை எய்த வேண்டி மாற்றார் தம்முடனே மாறுகொண்டாலும்;
காலிங்கர்: தம்மொடு சிறிதும் பற்று இல்லாதார் வந்து கருதிக்கொண்டு மாறுபடுதலைச் செய்யினும்;
பரிமேலழகர்: தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.

'தம்மொடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் /கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைமை கருதித் தகாதன செய்தாலும்', 'தன்னோடு வேறுபடுதல் கருதி ஒருவன் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும்', 'பகைவனைத் தண்டிக்க வேண்டி அவனுக்குத் தீங்கு செய்துவிட்டாலும்', 'தம்மோடு பொருந்தாமையைக் கருதி வெறுப்பன செய்தான் ஆயினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்மோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

இகல்கருதி இன்னாசெய் யாமை தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.
பரிப்பெருமாள்: அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள் வழியும் தவிர்தல் வேண்டும் என்றது.
பரிதி: மாறுபாடெண்ணியவனுக்குப் பொல்லாங்கு செய்யாமை நன்று என்றவாறு.
காலிங்கர்: தாம் அவரோடும் இகல் கருதிக்கொண்டு மற்று அவர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமையே தமக்குத் தலைமைப்பாடாவது என்றவாறு.
பரிமேலழகர்: அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். [ஒழியின் - துன்பந் தருவனவற்றைச் செய்யாவிட்டால்]

'அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாடு கருதிக் கொடுமை செய்யற்க', 'தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் மேலானது', 'மனத்தாபத்துக்காக ஒருவனுக்குத் துன்பம் செய்யாதிருக்கும் குணம் மிகவும் உயர்ந்தது', 'மாறுபடுதலைக் குறித்துத் துன்பம் தருவன செய்யாமல் இருத்தல் உயர்ந்ததாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாறுபாடு விளையாமை கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்னோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும் மாறுபாடு விளையாமை கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது என்பது பாடலின் பொருள்.
'பற்றா செயினும்' என்பதன் பொருள் என்ன?

அவன் என்ன செய்தாலும் செய்யட்டும், நாம் இகல் கருத வேண்டாம்.

ஒருவன் நம்மோடு கூடாமையைக் கருதி வெறுக்கக் கூடியன செய்வானாயினும் நாம் அவனோடு மாறுபடுதல் உண்டாகாமை குறித்து அவனுக்குத் துன்பம் செய்யாது இருத்தலே உயர்ந்ததாகும்.
பிரிவை விரும்பிப் பிறர் விரும்பத்தகாதவற்றை நமக்குச் செய்தால் நாம் அதற்கு என்ன எதிர்ச்செயல் ஆற்ற வேண்டும் என்பது இங்கு சொல்லப்படுகிறது. நம்மிடம் பொருந்தக்கூடாது என்று விடாப்பிடியாக, பிரிந்து வேறுபட்டு நிற்கும் நோக்கத்துடன், ஒருவன் நட்பல்லாதவற்றைச் செய்கிறான். அவன் வெறுப்பனவே செய்தாலும் பதிலுக்கு அவனோடு மாறுபட்டு அவனுக்குத் தீயன செய்யாது, அவனைவிடவும் உயர்ந்து நில். அதுவே தலைசிறந்த பண்பாடாம் என்கிறார் வள்ளுவர்.
ஒருவர் நமக்குத் தீயன செய்தால் உடன் அதற்குப் பழிவாங்கும் நோக்கில் ஏதாவது துன்பம் செய்யவேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அவ்விதம் நாம் தீயன செய்தால் மாறுபாடு இரண்டு பக்கமும் வளர்ந்து முற்றிப் பகை உண்டாகி பெருந்தீமைகள் விளையும். ஒருவர் அல்லது ஒரு சாரார் கூடாமையை விரும்பும் மற்றவர் செயல்களைக் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் காலப்போக்கில் மாறுபாடுகள் மறைந்து நட்பு வளரும். எனவே நாமும் அவர்போல் பகைமைகொண்டு துன்பம் செய்யாமையே மேலானது எனச் சொல்லப்பட்டது.

'பற்றா செயினும்' என்பதன் பொருள் என்ன?

'பற்றா செயினும்' என்றதற்குப் பற்றில்லாதார் (இன்னாதவற்றைச்) செய்தாராயினும், பற்றில்லாதார் (தீயவற்றைச்) செய்தாராயினும், பற்று இல்லாதார் (மாறுபடுதலைச்) செய்யினும், வெறுப்பன செய்தானாயினும், பொல்லாங்கு செய்தாலும், அன்பில்லாதவற்றைச் செய்தாலும், பொருந்தாத தீயவற்றைச் செய்தானாயினும், வெறுப்பனவே செய்தான் எனினும், தகாதன செய்தாலும், வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும், பற்றற்ற (தீங்கான) காரியங்களைச் செய்தாலும், விரும்பாத செயலைச் செய்தாலும், வெறுப்பனவற்றை செய்தான் ஆயினும், தன்னை வந்து சார முடியாத செயலைச் செய்தாலும், பொருந்தாததைச் செய்தாலும், வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பற்றாதன என்னும் சொல்லே பற்றா என நின்றது. இது வெறுக்கத்தக்கன எனப் பொருள்படும்.
மணக்குடவரும் காளிங்கரும் 'பற்றார் செயினும்' எனப் பாடங்கொண்டனராதலால் அவர்கள் உரை பற்றில்லாதார் (இன்னாதவற்றைச்) செய்தாராயினும், பற்று இல்லாதார் (மாறுபடுதலைச்) செய்யினும் என முறையே அமைந்தன. பற்றா செயினும் என்றதற்குத் தன்னைவந்து பற்ற முடியாத செயலை-சார முடியாத செயலைச் செய்தாலும், எனவும் பொருள் கூறினர்.

'பற்றா செயினும்' என்ற தொடர் வெறுப்பன செய்தாலும் என்ற பொருள் தரும்.

தன்னோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும் மாறுபாடு விளையாமை கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வெறுப்புக்கு வெறுப்பு என்னும் இகல் வேண்டாம்.

பொழிப்பு

தன்னோடு வேறுபடுதல் கருதி ஒருவன் மாறுபடுதலைச் செய்தாலும், தான் மாறுபாடு கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது.