இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0848



ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:848)

பொழிப்பு (மு வரதராசன்): தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

மணக்குடவர் உரை: அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தெளியான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன்.
இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல்லறி வென்றது.

பரிமேலழகர் உரை: ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்.
(உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருடல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதனின் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.)

இரா இளங்குமரனார் உரை: ஏவியவாறு செய்யவும் மாட்டான்; தானாகவும் தெளிந்து செய்யவும் மாட்டான்; அத்தகையன், உயிர் நீங்கிப் போகுமளவும் (தொடர்புடையார்க் கெல்லாம்) ஒரு நோயே ஆவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய்.

பதவுரை: ஏவவும்-சொல்லவும்; செய்கலான்-செய்யான்; தான்-தான்; தேறான்-அறியமாட்டான்; அவ்வுயிர்-அந்த உயிர்; போஒம்-நீங்கும்; அளவும்-வரையும்; ஓர்-ஒரு; நோய்-பிணி(போன்றது), துன்பம்.


ஏவவும் செய்கலான் தான்தேறான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தெளியான்;
பரிப்பெருமாள்: அறிவுடையார் சொல்லவும் தான் செய்யான்; (தானும் தெளியான்;)
பரிப்பெருமாள் குறிப்புரை: ஏவுதல்-தான்தெரிய என்று ஏவுதல். தெளிதல்-பொருள் யாது என்று தெளிதல்.
பரிதி: கற்பித்த புத்தியுங் கேளான்; தானும் அறியானாகில்;
காலிங்கர்: தானும் அறியான் பிறர் சொல்லவும் செய்யான் ஆகிய புல்லறிவாளன் யாவன்;
பரிமேலழகர்: புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்;

'சொல்லவும் செய்யான்; தானும் தெளியான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொன்னாலும் செய்யான் தன்னாலும் தெளியான்', 'புல்லறிவாளன் தனக்கு உறுதி பயப்பனவற்றை அறிவுடையார் ஏவினாலும் செய்ய மாட்டான்; தானாகவும் அறிந்து தெளிய மாட்டான்', 'தெரிந்தவர்கள் சொன்னாலும் கேட்கமாட்டான், தானாகவும் தெரிந்து கொள்ளமாட்டான்', 'அறிவுடையார் நல்லவற்றைக் கூறினாலும் செய்யான்; தானும் நல்லன யாவை என்று தெளியான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறிந்து தெளிய மாட்டான் என்பது இப்பகுதியின் பொருள்.

அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன்.
மணக்குடவர்: இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல்லறி வென்றது.
பரிப்பெருமாள்: அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல்லறிவு என்றது. வேறு செய்யும் வினைக்கும் ஒக்கும்.
பரிதி: சாமளவும் அறிவின்மை ஒரு வியாதி என்றவாறு.
காலிங்கர்: அவன் உயிர் நீங்குமளவும் விடாது அனுபவிப்பதோர் நோயாம் இத்துணை என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்.
பரிமேலழகர் குறிப்புரை: உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருடல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதனின் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார். [மருடல் தன்மைத்து-மயங்குதல் இயல்பினது. மருள்+தல்=மருடல்; குலமலை - பெருமலை]

'அவன் உயிர் நீங்குமளவும் விடாது அனுபவிப்பதோர் நோயாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர் 'உலகத்தார்க்கு ஒரு நோய்' என்றும் பரிமேலழகர் 'நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்' என்றும் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவன் சாகும்வரை பிறர்க்கு நோயாவான்', 'அவ்வுயிர் சாமளவும் தனக்கும் பிறர்க்கும் துன்பம் தரும்', 'அப்படிப்பட்ட (புல்லறிவாளன்) உயிர் போகிற வரை (தனக்கும் பிறருக்கும்) துன்பம் உண்டாக்கிக் கொண்டே இருப்பான்', 'அவ்வுயிர் உடலிலிருந்து நீங்குமளவும் நிலத்திற்கு ஒரு பெரு நோயாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவ்வுயிர் சாகும்வரை உலகத்தார்க்குத் துன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறிந்து தெளிய மாட்டான்; அவ்வுயிர் சாகும்வரை உலகத்தார்க்கு நோய் என்பது பாடலின் பொருள்.
'நோய்' என்ற சொல் குறிப்பது என்ன?

சொன்னாலும் அறியான் தன்னாலும் தெரியான் புல்லறிவாளன்.

செய்யச் சொல்லியும் செய்யாதவனாய்த் தானும் தெளியாதவனாய் உள்ள புல்லறிவாளன் சாகும்வரை ஒரு நோய் போன்றவன் ஆவான்.
‘இன்னின்னபடி செய்க’ என்று சொல்லியபோதும் அதன்படி செய்யமாட்டாதவன், தானேயும் செய்ய அறியாதவன், உயிர் போகுமளவும் உலகித்திற்குச் சுமையாக இருப்பான். ஏவவும் என்ற சொல் செய்யும்படி கட்டளையிட்டபோதும் என்ற பொருள் தரும். தேறான் என்றது தெளியாதவன் என்ற பொருள் தருவது. சொல்லிக் கொடுத்தாலும் கேட்கமாட்டானாய் தனக்கும் செய்யத் தெரியாதவனாய் இருப்பான் என்னும் அறிவிரண்டும் கெட்ட நிலையில் சிற்றறிவினன் கடைத்தேறுவது கடினம். அவன் தன் நிலையில் மாறமாட்டான் என்பதால் சாகும்வரை அவனுடன் பழகிவருபவர்களுக்குத் துன்பம் உண்டாக்கிக் கொண்டே இருப்பான்.
எவர் சொல்லையும் கேளாமல் நெட்டுயிர்ப்போடு உலவி வருவதால் 'அவன்' என்னாமல் 'அவ்வுயிர்' என்று அஃறிணையாகக் கூறுகின்றார் வள்ளுவர்.

'தனக்காகவும் தெரியாது, சொன்னாலும் கேட்பது கிடையாது' என்று வழக்கிலே பேசப்படுவதையே இக்குறள் கூறுகிறது. புல்லறிவாளர் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள், அவர்களாகவே சிந்தித்துத் தெரிந்து கொள்ளும் அறிவும் கிடையாது. அவர்களைத் திருத்துவது மிகவும் கடினம். தாம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கொள்கையர் ஆதலால் அடங்க மாட்டாத அவர்களுக்கு விளங்க வைப்பது இயலாது. முரண்டு பிடிக்கும் மன நிலையிலிருந்து இறுதி நாள்வரை மாறாது இருப்பர் என்பதால் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நோய் போன்றவர் என்கிறார் வள்ளுவர்.

'நோய்' என்ற சொல் குறிப்பது என்ன?

'நோய்' என்ற சொல்லை உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன், அறிவின்மை ஒரு வியாதி, விடாது அனுபவிப்பதோர் நோயாம், நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம், ஒரு நோயாகும், அவனுக்குப் பொறுத்தற்கரியதொரு நோய் போன்று துன்பம் தரும், சார்ந்தார்க்கு நோய் போல்வான், பிறர்க்கு நோயாவான், தனக்கும் பிறர்க்கும் துன்பம் தரும், (தனக்கும் பிறருக்கும்) துன்பம் உண்டாக்கிக் கொண்டே இருப்பான், (தொடர்புடையார்க் கெல்லாம்) ஒரு நோயே ஆவான், நிலத்திற்கு ஒரு பெரு நோயாம், சமுதாயத்துக்கு நோயே ஆவான், அவனைத்தாங்கும் உறவினர்க்கெல்லாம் ஒப்பற்ற கொடிய நோயாம் என்றவாறு உரையாளர்கள் விளக்கினர்,

மலை முதலியவற்றைப் பொறுக்கின்ற நிலத்திற்கு அப்பாவயாக்கை பெரும் சுமையாகத் துன்பம் தருதலால் அதனை ஒரு நோய் என்று வசைச்சொல் கூறி எதற்கும் பயனில்லாதவன் இறந்துபோவதே நலம் எனப் புல்லறிவாளர் பழிக்கப்படுகின்றார் எனப் பலர் எழுதியுள்ளனர். புல்லறிவாளன் சாகும்வரை அவனது விடாப்பிடியான மனநிலை மாறாது என்பதே இக்குறள் கூற வருவது. அவன் செத்தால் நல்லது என்று சொல்லப்படவில்லை.
நோய் என்ற சொல் நோய் போன்றவன் என்று பொருளில் ஆளப்பட்டது. இச்சொல் துன்பம் என்ற பொருளும் தருவது. நோய் உடற்குச் சுமையாய் இருந்து ஊறும் விளைப்பதுபோல புல்லறிவாளன் உலகத்தார்க்குச் சுமையாகித் தீங்கும் செய்துகொண்டேயிருப்பான். உலகிற்கு நோய் போல் துன்பந்தருதலின் 'நோய்' என்று கூறப்பட்டது.

சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறிந்து தெளிய மாட்டான்; அவ்வுயிர் சாகும்வரை உலகத்தார்க்குத் துன்பம் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சொல்லறிவு பெறாது புல்லறிவாண்மை.

பொழிப்பு

சொன்னாலும் செய்யான், தானாகவும் அறிந்து தெளிய மாட்டான்; புல்லறிவு அவன் சாகும்வரையிலும் அவனுக்குத் துன்பம் தரும்.