இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0844



வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:844)

பொழிப்பு (மு வரதராசன்): புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், `யாம் அறிவுடையேம்` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.

மணக்குடவர் உரை: புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு.

பரிமேலழகர் உரை: வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம்.
(வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.)

இரா சாரங்கபாணி உரை: புல்லறிவுடைமை எனப்படுவது யாது என்றால், அது தம்மைத் தாமே 'யாம் நல்லறிவு உடையோம்' என நன்கு மதித்துக் கொள்ளும் செருக்காகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வெண்மை எனப்படுவது யாதெனின் யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு.

பதவுரை: வெண்மை-புல்லறிவுடைமை, அறிவுக் குறைவு; எனப்படுவது-என்று சொல்லப்படுவது; யாதெனின்-எது என்றால்; ஒண்மை-ஒள்ளறிவு, நல்லறிவு; உடையம்-பெற்றுள்ளம்; யாம்-நாங்கள்; என்னும்-என்கின்ற; செருக்கு-மயக்கம், களிப்பு.


வெண்மை எனப்படுவது யாதெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின்; .
பரிப்பெருமாள்: புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: வெண்மை-காழ்ப்பு இன்மை; முற்றுதல் இன்மையின் வெண்மை எனப்பட்டது.
பரிதி: அறிவின்மையாவது யாது எனில்;
காலிங்கர்: பலராலும் இது வெள்ளறிவு என்று பழித்து உரைக்கப்படுவது யாதோ எனின்;
காலிங்கர் குறிப்புரை: வெள்ளறிவாவது புல்லறிவு.
பரிமேலழகர்: புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்;
பரிமேலழகர் குறிப்புரை: வெண்மையாவது அறிவு முதிராமை.

'புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவின்மை என்பது யாது?', 'அறியாமை எனப்படுவது எதுவென்றால்', 'புல்லறிவுடைமை யாதென்றால்', 'அறியாமை என்று சொல்லப்படுவது யாது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது எனின் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு.
பரிப்பெருமாள்: யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: புல்லறிவாவது இத்தன்மைத்து என்று கூறுவார் முற்பட அறிவில்லாதவன் அறியேன் என்னாது அறிவுடையோனாகத் தன்னை மதித்தல் புல்லறிவு என்றது.
பரிதி: நான் சமர்த்தன் என்று சொல்லிக்கொள்வது என்றவாறு. [சமர்த்தன் - திறமையுள்ளவன்]
காலிங்கர்: எல்லாரினும் யாம் சால நுண்ணறிவு உடையோம் என்று இருக்கும் பெருமிதம் என்றவாறு.
பரிமேலழகர்: அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.

'யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு/பெருமிதம்/மயக்கம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எனக்கு எல்லாம் தெரியும் என்னும் இறுமாப்பு', 'நாம் எல்லாம் தெரிந்தவர் என்று எண்ணிக் கொள்ளுகிற அகங்காரம்', 'தம்மைத் தாம் நல்லறிவுடையார் என்று எண்ணிக் கொள்ளும் அகந்தையே', 'அது தம்மைத் தாமே 'நாம் கூர்த்த மதியுடையேம்' என்று மதிக்கும் மயக்கம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்மைத் தாம் நல்லறிவுடையார் என்று எண்ணிக் கொள்ளும் இறுமாப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது எனின் தம்மைத் தாம் ஒண்மை உடையம் என்று எண்ணிக் கொள்ளும் இறுமாப்பு என்பது பாடலின் பொருள்.
'ஒண்மை உடையம்' என்றால் என்ன?

தான் அறிவுக்குறை உடையவன் என்பதை புல்லறிவாளன் உணர்வதில்லை.

வெண்மை என்று சொல்லப்படுவது என்னவென்றால் 'யாம் ஒள்ளிய அறிவுடையோம்' என்று ஒருவன் தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும் களிப்பேயாம்.
ஒருவனுக்கு அறிவுக்குறையே வறுமையிலும் பெரிய வறுமையாகும். ஆயினும் அவன் இந்தக் குறையை உணராமல் 'நமக்குப் பொலிவான அறிவு உள்ளது' என்று தன்னைத் தானே எண்ணிகொண்டு அகந்தையுடன் திரிகிறான். அவன் புல்லறிவாளன்.
எத்துணைத்தான் பெரும் அறிவுடையானாக இருந்தாலும் செருக்கின்றி இருந்தால்தான் சிறக்க முடியும். 'வியவற்க எஞ்ஞான்றும் தன்னை' என்று பிறிதோரிடத்தில் குறள் கூறும். செருக்குக் கொண்டவர்கள் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள்; எதனையும் எண்ணிப் பார்க்க மாட்டார்கள். போலிப் பெருமிதம் இவர்களைச் சீர்குலைத்துவிடும்.

புல்லறிவாண்மையை வெண்மை என்று வள்ளுவர் இங்கு குறிக்கிறார். வெண்மை என்பதை வெள்ளறிவு எனவும் கூறுவர். வெள்ளறிவு என்பது பழித்து உரைக்கப்படும் சொல்லாகும். ஏதொன்றையும் தெளிய அறியாமல், தான் மட்டுமே அனைத்தையும் அறிந்துள்ளோம் என்று தன்னைத்தானே மெச்சிக் கொள்வது வெண்மை. செருக்கு அறிவிற்கு வளர்ச்சியும் உள்ளீடும் உண்டாகா வண்ணம் தடுத்து நிற்றலின், அது வெண்மை எனப்பட்டது. இவ்வெள்ளைத்தனத்தை முதிரா அறிவு எனவும் சொல்வர்; அறிவு முதிர்ச்சியின்மை என்ற பொருள்படுவது. ....................இன்மை அரிதே வெளிறு (தெரிந்து தெளிதல் 503 பொருள்: அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை) என்று வெளிறு என்ற சொல்லாலும் வெண்மை குறிக்கப்பட்டது. பரிப்பெருமாள் வெண்மை என்பதற்குக் காழ்ப்பு இன்மை எனப் பதவுரை கூறி 'முற்றுதல் இன்மையின் வெண்மை எனப்பட்டது' என விளக்கமும் கூறினார்.

'ஒண்மை உடையம்' என்றால் என்ன?

'ஒண்மை உடையம்' என்ற தொடர்க்கு அறிவுடையோம், சமர்த்தன், சால நுண்ணறிவு உடையோம், நல்லறிவுடையம், நல்லறிவுடையன், அறிவுடையேம், ஒள்ளிய அறிவுடையேம், எல்லாம் தெரியும், நல்லறிவு உடையோம், எல்லாம் தெரிந்தவர், ஒளிமிக்க அறிவுடையோம், நல்லறிவுடையார், கூர்த்த மதியுடையேம், விளங்கிய அறிவுடையேம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வெண்மை என்றதற்கு எதிர்ச்சொல்லாக ஒண்மை என்ற சொல் ஆளப்பட்டது. இது விளங்கிய அல்லது தெளிந்த அறிவுடைமையைக் குறிப்பது. ஒள்ளிய நுட்பமான அறிவுடைமைஎனவும் பொருள்படும். ஒண்மை என்றதற்குத் தானும் தெளிந்து பிறரையும் தெளிவிக்கின்ற விளக்கம் எனப் பொருள் கூறுவார் ஜி வரதராஜன். புல்லறிவாளன் யாம் ஒண்மை உடையம் என்று சொல்லிக்கொள்வான். 'உடையம்' என்று பன்மை வடிவம் பயன்படுத்தியதால் அவனுடைய போலித் தன்மை சுட்டிக்காட்டப்பட்டது.

'வெண்மை' என்ற சொல் இங்கு புல்லறிவுடைமை என்ற பொருள் தரும்.

புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது எனின் தம்மைத் தாம் நல்லறிவுடையார் என்று எண்ணிக் கொள்ளும் இறுமாப்பு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தம்மைத் தாமே நல்லறிவுடையேம் என்று பெருமிதம் கொள்ளுதல் புல்லறிவாண்மையாம்.

பொழிப்பு

புல்லறிவுடைமை எனப்படுவது யாது என்றால், அது தம்மைத் தாமே 'யாம் நல்லறிவு உடையோம்' என மதித்துக் கொள்ளும் மயக்கம்.