இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0835



ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:835)

பொழிப்பு (மு வரதராசன்): எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதை தன் ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

மணக்குடவர் உரை: பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை.
புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

பரிமேலழகர் உரை: பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம்.
(எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: எழுபிறப்பிலும் தான் தங்கும் நரகத்தினை ஒரு பிறப்பிலேயே பேதை தேடிக் கொள்வான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு.

பதவுரை: ஒருமை-ஒருபிறப்பு; செயல்-செய்தல்; ஆற்றும்-செய்து கொள்ளும்; பேதை-பேதை; எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்; தான்-தான்; புக்கு-புகுந்து; அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய; அளறு-நரகம், நிரயம்.


ஒருமைச் செயல்ஆற்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன்;
பரிப்பெருமாள்: ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவனாம்;
பரிதி: ஒரு சன்மத்திலே பேதைக்குணம் பெற்றால்;
காலிங்கர்: தான்பெற்று நின்ற ஒரு பிறவிக்கண்ணே செய்து கோடலை வல்லன் பேதையானவன்; யாதினையோ எனின்;
பரிமேலழகர்: இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம்.

'இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எடுத்த இப்பிறப்பொன்றிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்', 'அவனுக்கு இனிமேல் வரக்கூடிய ஏழு பிறவிகளிலும் தான் கிடந்து துன்பப்பட வேண்டிய நரகத்தை', 'ஒரு பிறவியிற் செய்கின்ற செயலாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான்', 'இவ் ஒரு பிறப்பிலுள்ளே செய்துகொள்ள வல்லவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இப்பிறப்பொன்றிலே செய்கின்ற செயல்களாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதை எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை.
மணக்குடவர் குறிப்புரை: புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.
பரிப்பெருமாள்: பேதை எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே அதற்குக் காரணமாயின செய்யும் என்றவாறாயிற்று. எழுபிறப்பினும் என்றது ஒருகால் அதன் அகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதன் உள்ளே பிறந்து அகலாதுறப் பேதை அறம் செய்யுமாறு கூறிற்று. [அகலாதுற - நீங்காதிருக்க]
பரிதி: ஏழு சென்மமும் நரகம் புகுவான் என்றவாறு.
காலிங்கர்: இனிவரும் பிறப்பின்கண் எஞ்ஞான்றும் ஒரு கரையேற்றம் இல்லாத வண்ணம் தான் புக்கு அழுந்தும் கும்பி நரகத்தை என்றவாறு. [கும்பி நரகம்- ஒருவகை நரகம்]
பரிமேலழகர்: பேதையாயினான் வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; [நிரயம் -நரகம்]
பரிமேலழகர் குறிப்புரை: எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது. [அழுந்துதற்கு- மூழ்குதற்கு; கொடுவினை வயத்தால்- தீவினையால்; உழந்து - வருந்தி]

'பேதையாயினான் வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதை ஏழு பிறப்புக்களிலும் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை', 'முட்டாளானவன் இந்த ஒரு பிறவியிலேயே உண்டாக்கிக் கொள்வான்', 'அறிவிலான் எழுபிறவியிலுந் தான் உழன்று துய்க்கும் துன்பத்தை', 'பேதை எழு பிறப்பிலும் தான் புகுந்து வருந்தக்கூடிய நரகத்தை (வேறு பொருள்: மிகுதியும் தான் புகுந்து வருந்தக்கூடிய துன்பத்தை ஒரு செயலால் செய்வான் அறியாதான்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேதை எழுபிறவியிலுந் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேதை எழுபிறவியிலுந் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை இப்பிறப்பொன்றிலே ஆற்றுகின்ற செயல்களாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான் என்பது பாடலின் பொருள்.
'தான்புக்கு அழுந்தும் அளறு' குறிப்பதென்ன?

அளவற்ற தீச்செயல்களைப் பேதை செய்துவிடுவான்.

பலபிறவிகள் எடுத்து நரகம் சென்று துய்க்கும் துன்பத்துக்கான குற்றங்களைப் பேதை ஒரு பிறவியிலேயே செய்து கொள்வான்.
‘ஒருமை’ என்பதற்கு ஒரு பிறப்பு, ஓரிடம், ஒருசெயல், என்று பொருள் கூறினர். ‘எழுமை’ என்பதற்கு ஏழுபிறப்பு, ஏழுதலைமுறை, பலவிடம், மிகுதி, எக்காலமும் என்று உரை கண்டனர். அளறு என்ற சொல் நரகத்தைக் குறிக்கும்; நிரயம் என்றும் பொருள்படும்.
அளறு, ஒருமை, எழுமை என்ற சொற்கள் வந்துள்ளமையால் செயல்கள் என்பது தீச்செயல்களைக் குறிப்பதாயிற்று. பேதையானவன் தீச்செயல்கள் பல புரிவான். எந்த அளவுக்குப் பாவச் செயல்கள் ஆற்றுகிறான் என்றால் ஒரு பிறவியில் ஈட்டிக்கொள்ளும் பாவங்கள் பல பிறவிகளுக்கான தீச்செயல் பெருக்கத்துக்குரிய தண்டனைக்குச் சமமாகின்றன என்று எள்ளல் குறிப்போடு நகைச்சுவையாகக் கூறுகிறார் வள்ளுவர் இப்பாடலில். ஏழு பிறவிகளில் நரகத்தில் வீழ்ந்து துய்க்கும் துன்பங்களை ஒருபிறவியிலேயே தேடிக்கொள்கிறான் பேதை. பேதையானவன் மிகவும் இழிவான செயல்கள் புரிய வல்லவன் என்று இங்கு சொல்லப்படுகிறான்.

'தான்புக்கு அழுந்தும் அளறு' குறிப்பதென்ன?

அளறு என்ற சொல் தொன்மங்களில் கூறப்படும் நரகம் என்று பொருள்படும். இது தேவருலகம், புத்தேளுலகு போன்று கற்பனையில் உருவான இடங்கள். நரகத்தை 'ஆரிருள்' 'இருள் சேர்ந்த இன்னா உலகம்' 'அளறு' என்ற சொற்களால் குறள் குறிப்பிடும். அளறு என்ற சொல்லுக்குப் பெருந்துன்பம், நரகம், என்றும் பொருள் கூறுவர். இச்சொல்லுக்குச் சேறு என்றும் ஒரு பொருள் உள்ளதாகையால் துன்பமென்னும் புதைசேறு என்றும் உரைப்பர். அளறு என்பது துன்பம் மட்டுமே நிறைந்த ஓர் இடம். ஒருவன் தம் வாழ்நாளில் செய்யும் தீச்செயல்களுக்குத் தண்டனையாக இறந்தபின் நரகம் என்ற சேற்றில் வீழ்ந்து அழுந்துவான் என்பது நம்பிக்கை. இதை 'தான்புக்கு அழுந்தும் அளறு' என்று இக்குறள் சொல்கிறது. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான் அளறு புக்கு அழுந்தும் என்று இக்குறளுக்குக் கொண்டு கூட்டிப் பொருள் காணலாம்.

இரா இளங்குமரனார் 'நிரயம் என்பது இறப்பின் பின் எய்துவதன்று. அஃதொரு தனியிடமுமன்று. தாமே நிரயத்தில் அழுந்தவும் தம் வாழ்வே இடமாக அமைகின்றது' என விளக்குவார். மேலும் 'சேற்றிலே குற்றவாளிகளை அமிழ்த்தலும், இருட்டறையுள் போட்டுத் துன்புறுத்தலும் உலகியல். ஆதலான், நிரயம் 'அளறு' என்றும் 'ஆரிருள்' என்றும் கூறப்படுகின்றன' எனவும் அவர் கூறுவார்.

'தான்புக்கு அழுந்தும் அளறு' என்றதற்கு தான் நரகம் என்ற துன்பச்சேற்றில் புகுந்து அழுந்திக் கிடக்கும் என்பது பொருள்.

பேதை எழுபிறவியிலுந் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை இப்பிறப்பொன்றிலே ஆற்றுகின்ற செயல்களாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பேதைமை நிரயத்திலும் சென்று சேர்த்துவிடும்.

பொழிப்பு

ஏழு பிறப்புக்களில் தான் அழுந்திக் கிடக்கும் நிரயத் துன்பத்தினை ஒரு பிறப்பிலேயே பேதை செய்து கொள்ள வல்லவனாவான்.