இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0832



பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:832)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துதலாகும்.

மணக்குடவர் உரை: அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல்.
இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.

பரிமேலழகர் உரை: பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல்.
(இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அறியாமையுள் எல்லாம் பெரிய அறியாமை வேண்டாத பொருள்மேல் விருப்பம் கொள்வது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேதைமையுள் எல்லாம் பேதைமை கையல்ல தன்கண் காதன்மை செயல்.

பதவுரை: பேதைமையுள்-அறியாமைகளுள்; எல்லாம்-அனைத்தும்; பேதைமை-அறியாமை; காதன்மை-காதலின் தன்மை, விருப்பம், அன்பு; கையல்லதன்-கைவராதனது; கண்-இடத்தில்; செயல்-செய்தல், செலுத்துதல்.


பேதைமையுள் எல்லாம் பேதைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது;
பரிப்பெருமாள்: அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாம்;.
பரிதி: பேதைமையிற் பெரிய பேதைமையாவது;
காலிங்கர்: அறியாமைகள் எல்லாவற்றினும் மிக்க அறியாமையாவது யாதோ எனின்;
பரிமேலழகர்: ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது;

'அறியாமைகள் எல்லாவற்றினும் மிக்க அறியாமையாவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறியாமை எல்லாவற்றுள்ளும் மிக்க அறியாமையாவது', 'முட்டாள்தனத்திலெல்லாம் அதிகப்பட்ட முட்டாள்தனம் எதுவென்றால்', 'அறியாமையுள் எல்லாம் அறியாமை', 'ஒருவர்க்கு அறியாமை எல்லாவற்றுள்ளும் மிக்க அறியாமையாவது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமை என்பது இப்பகுதியின் பொருள்.

காதன்மை கையல்ல தன்கண் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல். [கைவராத - பொருந்தாத]
மணக்குடவர் குறிப்புரை: இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.
பரிப்பெருமாள்: தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.
பரிதி: யாரிடத்திலும் விரோதம் இடுகை என்றவாறு. [விரோதம் இடுகை-பகைத்தல்]
காலிங்கர்: செய்யும் முறையல்லவற்றின்கண் காதன்மை செய்தலே; கீழ்ச்சொன்ன நரகாதிகட்குக் காரணமாகிய பாவங்கள் எல்லாம் விளைக்கும், இவன் காதன்மை என்பது பொருளாயிற்று. [நரகாதிகட்கு -நரகம் முதலியவைகளுக்கு]
பரிமேலழகர்: தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். [காதன்மை செய்தல்-விருப்பங் கொள்ளுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது. [இருமைக்கும் - இம்மைக்கும் மறுமைக்கும்; கடிந்த - விலக்கிய]

'தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல்/யாரிடத்திலும் விரோதம் இடுகை/முறையல்லவற்றின்கண் காதன்மை செய்தல்/தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்யத் தகாதவற்றில் மிகுந்த விருப்பமுடைமையாம்', 'கெட்ட காரியத்திலேயே அதிக ஆசை கொண்டு நடப்பது', 'தனக்கு ஒழுங்கல்லாதனவற்றில் ஆசை வைத்தல்', 'தனக்குப் பொருந்தாத ஒழுக்கத்தின்கண் பற்றுக் கொள்ளுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தனக்குக் கைவராத பொருளின்கண் விருப்பங் கொள்ளல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமை கையல்லதன்கண் விருப்பங் கொள்ளல் என்பது பாடலின் பொருள்.
'கையல்லதன்கண்' குறிப்பதென்ன?

தனக்கு ஆகாத பொருள்மேல் பேதை ஆர்வம் காட்டுவான்.

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, தனக்குக் கைவராத செயலின் மேல் ஆசை வைத்தல்.
காதன்மை என்ற சொல் காதல்+மை=காதன்மை என விரியும். இது காதலின் தன்மையைக் குறிக்கும். அன்பு செய்தல் அல்லது விருப்பங்கொள்தல் எனப்பொருள்படும். காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் (தெரிந்து தெளிதல் 507 பொருள்: அன்பு காரணமாக அறிய வேண்டுவன அறியாதாரைத் தேறுதல்...) என்ற பாடலிலும் காதன்மை என்ற சொல் விருப்பம் என்ற பொருளிலேயே ஆளப்பட்டது.
தன் ஒழுக்கத்திற்குத் தகாத ஒன்றில் விருப்பம் செய்வது பேதைமையில் பெரிய பேதைமையாகும் எனவும் இக்குறளை விளக்குவர். அடிப்படைக் கல்வி கூட பெறாதவன் ஒரு பெரிய பொறியியல் திட்டத்தைத் தானே தனியாக வரைவு செய்ய ஆசை கொள்வது கைவராத பொருளின் மேல் விருப்பங்கொள்வதற்கான ஓர் எடுத்துக்காட்டு. இதை தம்முடைய ஒழுக்கத்துக்கு ஏற்பிலாததற்கு ஆசைப்பட்டு ஈடுபாட்டோடு செய்தல் என்கிறது பாடல். தனக்குப் பொருந்தாத ஒழுக்கம் எனத் தெரிந்தும் அவன் அச்செயலை ஆற்ற மனம்கொள்வதால் அது பெருங்குற்றமாயிற்று.

தலையான பொருள்களைச் சுட்டுமிடங்களில் குறள் அரியவற்றுள் எல்லாம் அரிதே.... (பெரியாரைத் துணைக்கோடல் 443), நன்று என்றவற்றுள்ளும் நன்றே... (குறள் 715) எனக் கூறும். அதுபோல் இங்கு பெருங்குற்றத்தைக் குறிக்கப் பேதைமையுள் எல்லாம் பேதைமை எனச் சொல்லப்பட்டது.

'கையல்லதன்கண்' குறிப்பதென்ன?

'கையல்லதன்கண்' என்ற தொடர்க்குக் கைவராத பொருளின்கண், செய்யும் முறைமையல்லாதனவற்றின்கண், தனக்கு ஆகாத ஒழுக்கத்தின்கண், தனக்கு ஆகாத ஆசார ஒழுக்கத்தின்மேலே, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில், பழக்கமில்லாத ஒரு காரியத்தின்கண், வேண்டாத பொருள்மேல், செய்யத் தகாதவற்றில், தீமையான காரியத்தில், ஒழுக்கமற்ற தன்மைகளின் மேல், தனக்கு ஒழுங்கல்லாதனவற்றில், தனக்குப் பொருந்தாத ஒழுக்கத்தின்கண், தனக்குத் தகாத ஒழுக்கத்தின்கண், தன் கைக்கு எட்ட இயலாத பொருள்களின் மீது, தன் தகுதிக்கும் உலக ஒழுக்கத்துக்கும் பொருந்தாத தீச்செயல்களைச் செய்வது, தன்னால் முடியாததைச் செய்தல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கை என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்றும் பொருள் கொள்வர். காலிங்கர் ‘கையல்லது’ என்பதற்குச் 'செய்யும் முறைமையல்லாதன’ எனக்கூறி நரகம் முதலியவைகளுக்குக் காரணமாகிய பாவங்கள் எல்லாம் விளைக்கும் எனக் கூறுவதால் இவர் தீய ஒழுக்கநெறியையே சொல்கிறார். மு கோவிந்தசாமி கையல்லது என்பதற்கு ஒழுக்கமில்லாதது, ஆகாதது எனப் பொருள் கூறி அது உலகத்தோடொட்டவொழுகல் என்பதற்கெதிரானது எனவும் உரைத்தார். 'கையல்லதன்கண் காதன்மை செயல் பேதைமையுள் எல்லாம் பேதைமை' எனக் கூட்டி ஒழுக்கமற்ற காரியங்களிற் காதல் செய்தல் பெரும் பேதைமை என்ற கருத்தமைந்த உரைகளே சிறந்தன என்பார் தண்டபாணி தேசிகர். 'இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப் பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செய்தொழுகுதல்' என்பது தேவநேயப் பாவாணர் கருத்து.
ஒழுக்கமில்லாதது என்பதற்கு தீச்செயல் அல்லது தீயநெறி என்று பொருள் கொள்வதினும் தனக்கு ஆகாதது, தனக்கு வேண்டாதது அல்லது தனக்குப் பொருந்தாத செய்நெறி ஒழுக்கம் அதாவது கைவராத பொருள் எனக் கொள்வது இங்கு பொருத்தம்.

'கையல்லதன்கண்' என்ற தொடர்க்குக் கைவராத பொருளின்கண் என்பது பொருள்.

பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமை தனக்குக் கைவராத பொருளின்கண் விருப்பங் கொள்ளல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன்னால் இயலாது என்று அறிந்தும் அச்செயலில் ஈடுபாடு காட்டுவது பெரிய பேதைமை

பொழிப்பு

பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமை வேண்டாத பொருள்மேல் விருப்பம் கொள்வது.