இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0816



பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:816)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

மணக்குடவர் உரை: அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும்.
இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது,

பரிமேலழகர் உரை: பேதை பெருங்கெழீஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
('கெழீஇய' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு'என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: பேதையின் பெருநட்பைவிட அறிஞரின் பகை கோடிமடங்கு நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.

பதவுரை: பேதை-அறிவில்லாதவன், அறிவு திரிந்தவன்; பெரும்-மிக்க; கெழீஇ-செறிந்த; நட்பின்-நட்பைக்காட்டிலும்; அறிவுடையார்-அறிவுடையார்; ஏதின்மை-அயன்மை, நட்பற்ற தன்மை, நொதுமல், பகைமை; கோடி-கோடிமடங்கு; உறும்-(நன்மையை) உண்டாக்கும், நன்று.


பேதை பெருங்கெழீஇ நட்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும்;
பரிப்பெருமாள்: அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும்;
பரிதி: பேதையார் நட்பினும்;
காலிங்கர்: அறிவிலாதான் ஒருவன் வந்து பெருங்கெழுமுதல் செய்து நட்பைச் செலுத்துவதினும்; [பெருங் கெழுமுதல்- மிகத் தழுவிக் கோடல்]
பரிமேலழகர்: அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'கெழீஇய' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது.

'அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவில்லாத ஒருவனது மிக நெருக்கமான நட்பைவிட', 'மூடனுடன் நெருங்கி உறவுள்ளவனாக இருப்பதைவிட', 'அறிவில்லாதவனது மிக நெருங்கிய நேயத்தைப் பார்க்கிலும்', 'அறிவிலாதானின் மிக நெருங்கிய நட்பைக் காட்டிலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறிவில்லாதவனுடனான மிக நெருக்கமான நட்பைவிட என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது,
பரிப்பெருமாள்: அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மை உண்டாக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பேதையார் நட்புத் தீமை பயக்கு மென்றது.
பரிதி: அறிவுடையார் பகை இனிது என்றவாறு.
காலிங்கர்: அறிவுடையார் பகைமை கோடி உறும் என்றவாறு. [கோடி உறும் - நூறுலட்சம் கொண்ட பேரெண், மிகப் பலவாய எண்ணிற்கு கூறுவதாம்]
பரிமேலழகர்: அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

'அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடையாரது பகைமை கோடி மடங்கு நல்லது', 'அறிவாளியுடன் மனத்தாபமுள்ளவனாக இருப்பது கோடி மடங்கு நல்லது', 'அறிவுடையாரது பகைமை கோடி மடங்கு நல்லது', 'அறிவுடையார் நட்பில்லாத் தன்மை கோடி மடங்கு நன்மை தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறிவுடையாரது நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறிவில்லாதவனுடனான மிக நெருக்கமான நட்பைவிட, அறிவுடையாரது ஏதின்மை கோடி மடங்கு நல்லது என்பது பாடலின் பொருள்.
'ஏதின்மை' என்றது குறிப்பதென்ன?

பேதையின் நட்பு பெருங்கேடு விளைக்கவல்லது.

அறிவு திரிந்தவனுடைய மிக நெருக்கமான நட்பைவிட அறிவுள்ளவரது நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நல்லது.
ஒருவர்க்கு அறிவில்லாத மூடன் ஒருவனுடன் நெருங்கிய நட்பு உண்டாகிவிடுகிறது. அறிவுடைய பெரியார் யாரும் அவரிடம் நட்பாந்தன்மையில் இல்லை. இந்த நிலையில் இப்பாடல் தரும் அறிவுரை: அந்த ஒருவர் தனக்குத் தானே நல்லது செய்ய விரும்பினால், அறிவுடையவர் எவருடையராவது நட்பைப் பெற வேண்டியதில்லை; அந்த மூடரின் நட்பை விலக்கிக் கொண்டாலே போதும். ஒரு மடநண்பன் பலவகையான தவறுகளைச் செய்து நட்டார்க்குக் களங்கமும் இழப்பும் நிறைய உண்டாக்கி விடுவான். அறிவிலியை நட்பிலிருந்து தள்ளி வைத்துக் கொள்வதாலேயே நட்டார்க்குப் பெரிய ஆதாயம் கிடைக்கும் என்கிறது பாடல்.
பேதை நட்பினர் உண்டாக்கும் பெருந்தீமையை எண்ணும்போது வேறுபாடாக இருக்கின்ற அறிவுடையார் நட்பில்லாந்தன்மை கூட கோடி நன்மைகளை உருவாக்கும் எனக் கூறுகிறது இக்குறள்.

அறிவுடையார் ஏதின்மை ஏன் நல்லது என்று சொல்லப்பட்டது என்பதற்கு உரையாளர்கள் தரும் விளக்கங்கள்:
'அறிவுடையோரைப் பகைப்பது தீங்கு உண்டாக்கலாம்; ஆனால் பேதைகளோடு நட்புக்கொள்வது, அதை விடக் கோடி மடங்கு தீமை தரும்'.
'அறிவில்லாதவனுடன் மிக நெருங்கிப் பழகும் நட்பைவிட அறிவுடையவரின் பகையே கோடி மடங்கு மேலானது. ஏன் என்றால் அறிவுடையவர் பகையாக இருந்தாலும் தீங்கு நேராது; ஆனால் அறிவில்லாதவனுடைய நட்பு எல்லாத் தீங்கும் உண்டாக்க வல்லது' .
'அறிவாளியுடன் பகைமை என்பது, அறிவாளியைக் கருதி அவனை வெல்ல அவனைக் காட்டிலும் அறிவுள்ளவனாக முயலச் செய்வது; அதனால் மூடனுடைய நட்பைவிட அறிவாளியின் பகைமை நல்லது'.
'பேதை நட்பு பல்வகைத் தீங்கை விளைத்தலானும், அறிவுடையான் பகை ஒரு தீங்கும் விளைவிக்காமையானும், 'கோடியுறும்' என்றார்'.
'அறிவில்லாதவன் அறியாமையால் பல கொடுமைகளைச் செய்துவிடுவான். கொடுமைகளின் பயனால் உண்டாகும் பழி எல்லாம் நட்புப் பாராட்டியவனை வந்து சார்ந்து துன்பத்தைக் கொடுக்கும். ஆனால், அறிவுடையோர் பகைவரானாலும் தீமை செய்யமாட்டார்'.

'இனி அறிவுடையார் என்பதனைப் பன்மையாகவே கொண்டு அறிவில்லா நொருவனது நட்பினும் அறிவுடையார் பலரது பகைமை பலமடங்கு நல்லதென்று பொருள் கொள்ளலுமாம்' என வை மு கோபாலகிருட்டிணமாச்சாரியார் உரைத்தார். இது பேதை நட்பின் தீமை மிகுதியை நன்கு சுட்டுகிறது.

'ஏதின்மை' என்றது குறிப்பதென்ன?

'ஏதின்மை' என்றதற்கு பகைமை, பகை, நட்பில்லாத தன்மை, அயன்மை, பழகாது விலகியிருக்கும் பகை, மனத்தாபமுள்ளவனாக இருப்பது, நட்பில்லாத் தன்மை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘ஏதிலார்’ என்ற சொல் ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்... (குறிப்பறிதல் 1099) என்ற இடத்தில் அயலார் போன்ற பொதுமை நோக்கு என்ற பொருளிலேயே ஆளப்பட்டது. அதுபோல் இங்கும் ஏதிலார்த் தன்மையைச் சுட்டும் ஏதின்மை என்ற சொல் தொடர்பில்லாமை எனும் பொருள்படும்படியே ஆளப்படுகிறது. ஏதிலார் என்பது பகையும், நண்புமாகிய ஏதுமிலாதவர் என்ற காரணம் பற்றிவந்த பெயர். நொதுமல் என்பதும் இதுவே. ஏதும் இன்மை ஏதின்மையாகிறது. ஏதின்மையாவது பகை, நட்பு, சுற்றம் ஏதும் இல்லாமையைக் குறிக்கும் சொல். ஏதின்மை என்ற சொல்லுக்குப் பகைமை எனப் பொருள் கொள்ளமுடியும் என்றாலும், இங்கு அது நட்பாகவும் இல்லாமல் பகையாக மாறவும் இல்லாமல் இருக்கும் நிலையைச் சொல்லி அத்தன்மை கொண்ட அறிவுடையாரின் தொடர்பு இல்லாமை கூட நல்லதுதான் என்ற பொருள் தருவதாகிறது.
மூடரின் உறவை விட அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பதுகூட ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும் என்பதைச் சொல்ல ஏதின்மை என்ற சொல் பயன்பட்டது..

'ஏதின்மை' என்ற சொல்லுக்கு நட்பில்லாத தன்மை என்பது பொருள்.

அறிவில்லாதவனுடனான மிக நெருக்கமான நட்பைவிட, அறிவுடையாரது நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பேதையினுடனான கெழுமிய நட்பு தீ நட்பு.

பொழிப்பு

அறிவில்லாதானது மிக நெருக்கமான நட்பைவிட, அறிவுடையாரது அயன்மை கோடி மடங்கு நல்லது