இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0812



உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:812)

பொழிப்பு (மு வரதராசன்): தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?



மணக்குடவர் உரை: செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?
மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் என்றார். இது காலபுருடர் நட்புத் தீதென்றது.

பரிமேலழகர் உரை: உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது?
(தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: தனக்குப் பயனுள்ளபோது நட்புச் செய்தும் தனக்குப் பயனில்வழி நட்பிலிருந்து விலகியும் செல்வோர் நட்பு இருந்து என்ன பயன்? இழக்கும்போது என்ன கேடு வந்துவிடப் போகிறது?


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறின் நட்டு, அறின் ஒரூஉம், ஒப்பு இலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?

பதவுரை: உறின்-(பயன்)உண்டானால்; நட்டு-நட்பு கொண்டு; அறின்-அற்றுப்போனால், இல்லாமல் போனால்; ஒரூஉம்-ஒழியும், விட்டு நீங்கிவிடும்; ஒப்பிலார்-பொருந்துதல் இல்லாதவர், ஒத்தநெறி இல்லாதார்; கேண்மை-நட்பு; பெறினும்அடைந்தாலும்; இழப்பினும்-தொலைந்தாலும்; என்-யாது?


உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பை;
மணக்குடவர் குறிப்புரை: மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் என்றார்.
பரிப்பெருமாள்: செல்வம் மிக்க காலத்து நட்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பை;
பரிப்பெருமாள் குறிப்புரை: மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் *என்றவாறு. *அன்றியும் தன்னோடு பொருத்தமில்லாதார் என்றுமாம்.
பரிதி: பயன் கண்டால் உறவு செய்து பயனில வந்தபோது உறவு விடுவார் நட்பு;
காலிங்கர்: இங்ஙனம் நமக்கு உறுவது பெறும் காலத்து மிகவும் நட்டும் தமக்கு உறுதி அறுமிடத்து நீங்கும் இயல்பினராகிய இந்த ஒத்த நெறி இல்லாதார் கேண்மை;
பரிமேலழகர்: தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை;
பரிமேலழகர் குறிப்புரை: தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.

'பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கிடைக்குமானால் பழகி இல்லையானால் கைவிடும் தீயவர் நட்பு', 'தமக்குப் பயன் கிட்டுமாயின் நட்புக்கொண்டு பயனில்லாதபோது கைவிட்டு நீங்கும் பொருத்தமில்லாதவரின் நட்பை', 'ஒரு நன்மை வேண்டும்போது நட்பு கொண்டாடி, அது இல்லாதபோது விட்டுப் போய்விடுகிற தகுதியற்றவர்களுடைய நட்பு', 'தன் நன்மை கருதி நட்புற்று, நன்மை இல்வழி நீங்கும் நட்பினரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஏதேனும் கிடைக்குமானால் பழகி, இல்லையானால் விலகிவிடும் ஒத்தநெறி இல்லாதார் நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

பெறினும் இழப்பினும் என்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?
மணக்குடவர் குறிப்புரை: இது காலபுருடர் நட்புத் தீதென்றது.
பரிப்பெருமாள்: பெற்ற அதனால் வரும் நன்மை யாது? இழந்த அதனால் வரும் தீமை யாது?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலபுருடர் நட்புத் தீதென்றது.
பரிதி: பெற்றால் என்ன பெறாவிடில் என்ன என்றவாறு.
காலிங்கர்: பெறின் அதனால் வரும் இன்பம் யாது? இழப்பின் அதனால் வரும் சேதம் யாது? மற்று ஒன்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது?

'பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இருந்தாலென்? போனால் என்?', 'பெற்றாலும் நன்மை இல்லை; இழந்தாலும் தீமையில்லை', 'இருந்தாலென்ன போனாலென்ன?', 'பெறுதலினாலும் இழத்தலினாலும் பயன் ஒன்றுமில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெற்றாலென்ன இழந்தாலென்ன? என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
ஏதேனும் கிடைக்குமானால் பழகி, இல்லையானால் விலகிவிடும் ஒப்பிலார் நட்பு பெற்றாலென்ன இழந்தாலென்ன? என்பது பாடலின் பொருள்.
'ஒப்பிலார்' யார்?

தனக்கு ஏதாவது செயல் நிறைவேற வேண்டுமானால் மட்டும் வந்து உறவாடுபவர் நட்பு இல்லாமல் போனாலும் ஒன்றும் குறைவில்லை.

தமக்கு ஏதாவது கிடைத்தால் நட்புச் செய்து, பயன் காணாதபோது விலகிப்போகும் ஒத்தநெறி இல்லாதார் நட்பு இருந்தாலென்ன இல்லாமல் போனால் என்ன?
அவர் நட்பு நாடி வந்துள்ளார். பழகும் காலத்தில், ஆதாயம் இருக்குமானால், கூடிக் குலாவுகிறார். இனி நன்மை ஏதும் இல்லையென்று தெரிந்தால் பிரிந்து தள்ளிச் சென்றுவிடுகிறார். சிறிது காலத்திற்குப் பிறகு, பயன் கிடைப்பதாயிருந்தால், மீண்டும் ஒட்டி உறவாட வருகிறார். இவ்வாறு, பயன் கருதி நெருங்கியும் விலகியும் போகும் குணம் கொண்டவர்கள் நமது நட்பில் இருந்தாலும் போனாலும் ஒன்றுதான். இத்தகையோரது நட்பு வேண்டியது இல்லை; அது விலக்கத்தக்கது. ஏனெனில் அது தீநட்பாக மாறும் வாய்ப்புக்கள் மிகையாம் என்று இக்குறள் குறிப்பால் உணர்த்துகிறது.
மணக்குடவர் 'இது காலபுருடர் நட்புத் தீதென்றது' என இக்குறட்கருத்தை விளக்கினார்.

'ஒப்பிலார்' யார்?

'ஒப்பிலார்' என்ற சொல்லுக்கு நிகரில்லாதார், தன்னோடு பொருத்தமில்லாதார், ஒத்த நெறி இல்லாதார், தகுதியில்லாதவர், தமக்குப் பொருத்தமில்லதவர், தீயவர், பொருத்தமில்லாதவர், மக்கட் போலிகள், ஒன்றுக்கும் பற்றாதவர், இழிந்தோர், உள்ளத்தாற் பொருந்தாதவர், இன்பத்துன்பங்களில் உடன் நில்லார், அறிவில்லாதார், அறிவு கல்வி செல்வத்தால் தாழ்ந்தார் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் என்றார்' எனவும் பரிமேலழகர் 'தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார்' எனவும் விளக்கினர். காலிங்கர் கூறிய ஒத்த நெறி இல்லாதார் என்னும் பொருளும் சிறப்பானது. தண்டபாணி தேசிகர் 'செல்வக்காலத்தையும் வறுமைக்காலத்தையும் சமபுத்தி பண்ணாதவர்கள்' எனப் பொருள் கூறினார். இவர் சொல்லும் பொருள் செல்வத்தையும் வறுமையையும் ஒப்பாக-சமமாக எண்ணாதவர் என்பது.
தந்நலம் மட்டுமே கருதுபவர் உள்ளத்தாற் பொருந்தாராதலின் ஒப்பிலார் என்று கூறப்பட்டது.

ஒப்பிலார் என்பதற்கு உள்ளத்தாற் பொருந்தார் என்னும் பொருள் பொருத்தம்.

ஏதேனும் கிடைக்குமானால் பழகி, இல்லையானால் விலகிவிடும் பொருந்தாதோர் நட்பு பெற்றாலென்ன இழந்தாலென்ன? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தம் வசதிக்கேற்றவாறு நட்பாடுவர் தொடர்பு தீ நட்பா கலாம்.

பொழிப்பு

பயன் கிடைத்தால் நட்புச் செய்து நன்மை இல்லையாயின் விலகிப்போகும் ஒத்தநெறி இல்லாதவருடன் உறவு பெறுவதால் என்ன ஆகப் போகிறது? அத்தொடர்பு இன்மையாலும் என்ன இழப்பு உண்டாகப் போகிறது?