இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0810



விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்

(அதிகாரம்:பழைமை குறள் எண்:810)

பொழிப்பு (மு வரதராசன்): (தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்.

மணக்குடவர் உரை: பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார்,விரும்பாதாராலும் விரும்பப்படுவர்.
இது பகைவரும் விரும்புவாரென்றது.

பரிமேலழகர் உரை: பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர்.
(தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பழகியர்பால் பண்பு மாறாதவரைப் பகைவரும் விரும்புவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் விழையார் விழையப்படுப.

பதவுரை: விழையார்-பகைவர்; விழையப்படுப-விரும்பப்படுவர்; பழையார்கண்-பழைய நண்பர்களிடத்தில்; பண்பின்-இயல்பினின்றும்; தலைப்பிரியாதார்-நீங்காதவர்.


விழையார் விழையப் படுப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('படுவர்' பாடம்): விரும்பாதாராலும் விரும்பப்படுவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவரும் விரும்புவாரென்றது.
பரிப்பெருமாள்: விரும்பாதாராலும் விரும்பப்படுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைவரும் விரும்புவாரென்றது.
பரிதி: தாம் ஒன்றை விரும்பார் தம்மை எல்லாரும் விரும்பப்படுவார்;
காலிங்கர்: விரும்பா மனத்தாராலும் விரும்பப்படுவர்;
பரிமேலழகர்: பகைவரானும் விரும்பப்படுவர்.

'விரும்பாதாராலும்/தாம் ஒன்றை விரும்பார்/விரும்பா மனத்தாராலும்/பகைவரானும் விரும்பப்படுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவராலும் விரும்பப்படும் சிறப்பினைப் பெறுவர்', 'பகைவர்களும் பாராட்டுவார்கள்', 'பகைவராலும் விரும்பப்படுவர்', 'பகைவராலும் விரும்பப்படுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விரும்பாதராலும் விரும்பப்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார்,
பரிப்பெருமாள்: பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார்,
பரிதி: பழையாரை நட்புவிடாதார் குணம் என்றவாறு. [பழையாரை - பழகிய நட்பினரை]
காலிங்கர்: யார் எனின் நட்பில் தமக்குப் பழையராய் உள்ளவர்மாட்டு மரபில் தலைப்பிரியா மாட்சிமையோர் என்றவாறு. [தலைப்பிரியா - பிரியாது]
பரிமேலழகர்: பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்.
பரிமேலழகர் குறிப்புரை: தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது. [அத்திரிபின்மை- (பிழை செய்த போதும்) குணம் வேறுபடாமை]

'நட்டோர்மாட்டுக் குணத்தினின்று/நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழைய நண்பர் பிழை செய்தாராயினும், அவரிடத்துத் தம் உரிமைப் பண்பிலிருந்து நீங்காதவர்', 'பழைய நண்பர்கள் குற்றம் செய்துவிட்டாலும் அவர்களிடத்தில் எப்போதும் போல அன்பாகவே நடந்து கொள்ளுகின்றவர்களை', 'பழைய நண்பரிடத்து வைத்த அன்பினைக் கை விடாதார்', 'பழைய நண்பர் பிழை செய்தாராயினும் அவரிடம் தன் பண்பினின்றும் நீங்காதார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பழைய நண்பரிடத்துக் கொண்ட பண்பிலிருந்து மாறாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பழைய நண்பரிடத்துக் கொண்ட பண்பிலிருந்து மாறாதவர் விழையார் விரும்பப்படுவர் என்பது பாடலின் பொருள்.
'விழையார்' யார்?

என்ன நேர்ந்தாலும் பழமையான நண்பரிடம் கொண்ட குணம் மாறாதவர் விருப்பத்திற்குரியவர்.

பழைய நண்பரிடத்துச் சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்பினரை தம்மை விரும்பாதவரும் நட்பாக்கிக் கொள்ள விரும்புவர்.
தொன்றுதொட்டுத் தன் நண்பரிடம் ஒரேவகையான முறையில், பண்பறாது, பழகும் உள்ளன்பரைத் தம்மை விரும்பா மனத்தாரும் விரும்புவர். பழைமையான நட்பிலிருந்து மாறாதிருப்பதைச் சிறந்த பண்பாடாகக் கூறும் இப்பாடல் பழைமையறிவார் எல்லோராலும் விரும்பத்தக்கவராக விளங்குவர் எனவும் சொல்கிறது.

விழையார் விழையப்படுப என்பதை விழையாரால் விழையப்படுப என்று வாசிக்கவேண்டும். விரும்பாதவராலும் விரும்பப்படுவர் என்பது இதன் பொருள்.
தலைப்பிரியாதார் என்ற சொல் பழைய பண்பிலிருந்து மாறாதவர் என்ற பொருள் தருவது. பழைமையான நண்பர் பிரிவு உண்டாக்கக்கூடிய வகையில் நடந்துகொண்டாலும் அவருடன் கொண்ட அன்பு மாறாமல், நட்புரிமையைத் தொடர்ந்து நீடிக்க விரும்பும் தன்மை உள்ளவரை எல்லோருக்கும் பிடிக்கும்.

'விழையார்' யார்?

'விழையார்' என்ற சொல்லுக்கு விரும்பாதார், தாம் ஒன்றை விரும்பார், விரும்பா மனத்தார், பகைவர், தம்மை விரும்பாதவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பெரும்பாலான உரையாளர்கள் விழையார் என்பதற்குப் பகைவர் என்றே பொருள் கூறியுள்ளனர். பழையார் என்ன பிழை செய்தாலும் தம் பண்பு மாறுபடாதவராதலால், நம் பகையையும் பாராட்டமாட்டார் என்று தம்மை விரும்பாதவரும் நட்பாவார் என்பது கருத்து.
இதே சாயலில் அமைந்த மற்றொரு குறள் பகுதி.....ஒன்னார் விழையும் சிறப்பு (இடுக்கணழியாமை 630 பொருள்: ...........பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு ஆகும்) என்பது.

'விழையார்' என்ற சொல்லுக்குத் தம்மை விரும்பா மனத்தார் என்பது பொருள்.

பழைய நண்பரிடத்துக் கொண்ட பண்பிலிருந்து மாறாதவர் தம்மை விரும்பாதாராலும் விரும்பப்படுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பழைமை பேணுபவர் பகைவரையும் நட்பாக்க வல்லவராம்.

பொழிப்பு

பழைய நண்பரிடம் கொண்ட பண்பிலிருந்து மாறாதவர் தம்மை விரும்பாதாராலும் விரும்பப்படுவர்.