இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0802



நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்

(அதிகாரம்:பழைமை குறள் எண்:802)

பொழிப்பு (மு வரதராசன்): நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

மணக்குடவர் உரை: நட்பிற்கு அங்கமாவது உரிமை: அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு.
இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை யுண்டாகாதுபோல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை.
(வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.)

இரா இளங்குமரனார் உரை: நட்பு என்னும் ஓர் உருவுக்கு உறுப்புகளாவன, நண்புடையார் செய்யும் உரிமைச் செயல்கள்; அந்த உரிமைச் செயல்களுக்குச் சுவை சேர்ப்பவராக அமைதல் உயர்ந்தோர் கடமையாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.

பதவுரை: நட்பிற்கு-தோழமைக்கு; உறுப்பு-அங்கம்; கெழுதகைமை-உரிமை; மற்று-(அசைநிலை); அதற்கு-அதனுக்கு; உப்பு-சுவை, இனிமை; ஆதல்-ஆகுதல்; சான்றோர்-பெரியோர், மேலானவர், உயர்ந்தோர், நற்குண நற்செய்கைகள் நிறைந்தவர்; கடன்-கடமை, முறைமை.


நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்பிற்கு அங்கமாவது உரிமை:
பரிப்பெருமாள்: நட்பிற்கு அங்கமாவது உரிமை:
பரிதி: நட்புக்கு அலங்காரம் கூட்டுறவு உண்டாயிருப்பது;
காலிங்கர்: ஒருவரோடு ஒருவர் நட்டால் அந்நட்பிற்குச் சிறந்தது யாது எனின்;
பரிமேலழகர்: நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன;
பரிமேலழகர் குறிப்புரை: வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். [இலக்கணையாவது ஒரு பொருளின் இலக்கணத்தை மற்றொரு பொருளுக்குத் தந்துரைப்பது]

'நட்பிற்கு அங்கமாவது உரிமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்பிற்கு இலக்கணம் உரிமையோடு செய்தல்', 'நட்புக்கு உறுப்பாவது உரிமை', 'சினேகர் என்பதற்கு அடையாளம் ஒருவரிடம் ஒருவர் கொண்டாடும் உரிமை', 'நட்பினுக்குப் பகுதியாக உள்ளது உரிமையே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நட்புக்குப் பகுதியாக உள்ளது உரிமையோடு செய்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை யுண்டாகாதுபோல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது. [பேய்ச்சுரைக்காய் - கசக்கிற சுரைக்காய்; பல காயம் - பலவகையான இடுபொருள்கள், அவை மிளகு, சீரகம், இலவங்கப் பட்டை முதலியன]
பரிப்பெருமாள்: அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: பல காயமும் அமைந்தாலும் உப்பின்றாயின் இனிமை உண்டாகாததுபோல, உடன்படாராயின் இனிமை இன்றாம் ஆதலான் உடம்பட வேண்டும் என்றது.
பரிதி: இது சான்றோர் ஒழுக்கம் என்றவாறு.
காலிங்கர்: என்றும் ஒருபடிப் படக்கெழுமிய கெழுதகைமையாகிய பழமைக்கு என்றும் இனியர் ஆதல் சான்றோர் கடன் என்றவாறு.
பரிமேலழகர்: அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை.
பரிமேலழகர் குறிப்புரை: அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.

அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல்/இனியர் ஆதல் சான்றோர்க்கு இயல்பு/ஒழுக்கம்/கடன்/முறைமை என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அச்செயலுக்கு மகிழ்தல் உயர்ந்தோர் கடமை', 'அவ்வுரிமையால் செய்வதற்கு இனியராய் இசைதல் சான்றோர் கடமையாகும்', 'அந்த உரிமையைக் கெடுத்துவிடாமல் இனிமையாக நடந்து கொள்ள வேண்டியது நல்லவர்களுடைய கடமை', 'அவ்வுரிமைக்கு இனியராதல் பெரியோர் கடமையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவ்வுரிமைக்கு இனியராதல் சான்றோர் கடமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நட்புக்குப் பகுதியாக உள்ளது உரிமையோடு பழகுதல்; அவ்வுரிமைக்கு உப்பாதல் சான்றோர் கடமையாகும் என்பது பாடலின் பொருள்.
'உப்பாதல்' என்றதன் பொருள் என்ன?

பெரியோருடன் பழகும் பழையரது நட்புரிமையும் போற்றப்படவேண்டும்.

நட்பு என்பதற்கு உறுப்பாவது உரிமை பாராட்டுவதே ஆகும். அந்த உரிமைக்கு இயைபோடு இருத்தல் சான்றோரின் கடமையாகும்.
நட்பின் ஒரு கூறாக உள்ளது உரிமை பாராட்டல். உரிமை பாராட்டல் என்பது கெழுதகைமை என்று இங்கு குறிக்கப்பெறுகிறது. சென்ற குறளில் 'கிழமை' என்று சொல்லப்பட்டதும் இதுவே. 'நட்புக்கு இன்றியமையாத ஒரு பகுதி' என்ற பொருளில் 'நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை' எனச் சொல்லப்பட்டது. உரிமையுணர்வு இல்லையென்றால் அங்கு நட்பு இல்லை. நட்புரிமைக்கு இயைந்தவராய் சுவை சேர்ப்பதாய் இருப்பது சான்றோர் கடமையாகும் என்றும் இப்பாடல் கூறுகிறது. இயையாவிட்டால் இனிமை உண்டாகாதாகலான் உடன்படல் வேண்டும் என்று சொல்லப்பட்டது.
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு (அன்புடைமை 79 பொருள்: உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் என்ன செய்யும்?) என்ற குறளில் உயிருக்கு உள்ளுறுப்பாக, அன்பு என்னும் பண்பு உருவகப்படுத்தப்பட்டது. இங்கு நட்பிற்குள்ள உறுப்புகளில் முதன்மையானது 'உரிமை பாராட்டுதல்' என்று குறிப்பிடப்படுகிறது. நல்ல நண்பர்களது வெற்றிக்குக் காரணமாக அமைவது, அவர்களிடையே காணப்பெறும் 'உரிமை பாராட்டுதல்' என்னும் தன்மை என்பதால் கெழுதகைமை நட்பிற்கு உறுப்பாகிறது.

நட்டாருக்கு உரியவற்றை உரிமையாற் செய்தவற்றிற்கு உடன்படுவது சான்றோர் உறுதியாக ஆற்றவேண்டிய பொறுப்புணர்ச்சியோடு கூடிய செயல் அதாவது அது அவரது கடமை எனச் சொல்கிறது பாடல். இங்கு குறிப்பிடப்படும் 'சான்றோர்' யார்? சான்றோர் என்பவர் நற்குண நற்செய்கைகள் நிறைந்தவர், மேலானவர், உயர்ந்தோர் போன்ற பொருளில் ஆளப்படும் சொல். இக்குறள் மாந்தர் அனைவருக்கும் பொருந்துவதாகத்தான் அமைந்துள்ளது. பின் ஏன் 'சான்றோர்க்கு உப்பாதல்' எனச் சான்றோர் விதந்து கூறப்படுகிறார்? இக்குறளில் சான்றோருடனான நட்பு பேசப்படுகிறது எனத் தெரிகிறது. சான்றோரால் நட்புச்செய்யப்பட்டவர் அவரினும் நிலையில் தாழ்ந்தவராக இருக்கலாம். ஆனால் இருவரும் நெடுங்காலம் பழகியவர்கள். உயர்ந்த நிலையில் உள்ள தம்மைவிடக் கீழ் நிலையில் இருப்பவர், செய்த செயல் பிழையானதாக இருந்தாலும், நட்புரிமைபற்றிய செயல்கண்டு வெறுக்காமல், அவர் செயலை பழைமை நோக்கி உடன்படவேண்டும் சான்றோர் என்கிறார் வள்ளுவர்.
இதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கமாவது 'நண்பர் உரிமையாற் செய்வன நட்பிற்கு உறுப்பாதல் அறிந்தே சான்றோர் அவ்வுரிமைக்கு இனியர் ஆவர் என்பது தோன்றச் சான்றோர் மேல் வைத்தார்' என்பது.
'உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (புலவி 1302 பொருள்: ஊடல் உணவுக்கு உப்பு அளவு போன்றது; அதனைக் கொஞ்சம் கூடுதலாக நீளவிடுதல் உப்பு மிகுதியானாற்போல) என்ற குறட்பாவில் உப்பின் அளவுபோல் ஊடல் அமையவேண்டும் என்று சொல்லப்பட்டது. அதுபோலத் தனக்கு விளையுந் தீங்களவில் பழமை பாராட்டலாம். நாட்டின் நலனுக்கும் நீதிக்கும் தீமைபயக்கும் ஆயின் அங்குப் பழைமை எண்ணாது நீக்க வேண்டும். பழைமை பாராட்டி வாளா இருத்தலாகாது எனப் பழைமையின் அளவு உரைத்ததாகவும் கொள்ளலாம்' எனத் தண்டபாணி தேசிகர் சான்றோருடனான நட்புரிமையின் அளவு உரைக்கப்பட்டது என விளக்கினார்.

'உப்பாதல்' என்றதன் பொருள் என்ன?

'உப்பாதல்' என்ற தொடர்க்கு உடன்படுதல், இனியராதல், உரியராதல், உடன்பட்டவராதல், மகிழ்தல், இனியராய் இசைதல், இனிமையாக நடந்து கொள்ளல், சுவை சேர்ப்பவராக அமைதல், இயைந்து இனிதிருத்தல், அன்போடு இடங்கொடுத்தல், உப்புப்போல் ஒன்றி உடன்படுதல், சுவையூட்டுவதுபோல் துணையாதல், நட்பின் சிறப்பு அறிந்து அமைத்துக்கொள்வது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நாம் துய்க்கும் உணவுப் பொருள்களைச் சுவையுடையதாக்குவது உப்பு. தேவையான அளவு உப்பைப் பயன்படுத்தினால் உணவு இனிமையுடையதாகிறது. உப்பு மிகினும் குறையினும் உணவு பாழாகிவிடும். இனிமைக்கும் இனிமை தருவது உப்பாதலால் உப்பு இனியது ஆயிற்று. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு (ஊடலுவகை 1328 பொருள்: நெற்றி வேர்க்கச் செய்த புணர்ச்சியில் உண்டான இனிமையை இன்னும் ஊடிப் பெறுவோமோ?) என்ற குறளில் உப்பு என்பது இனிமை என்ற பொருளிலே ஆளப்பட்டது. பழையர் தமக்காக, உரிமை எடுத்துச் செய்யும் செயல்களை தன் செயலாகவே கருதி உடன்பட்டால், சான்றோரது நட்பிற்கும் இனிமை உண்டாகும் என்கிறது பாடல்.

'உப்பாதல்' என்றதற்கு இங்கு உடன்படுதல் என்ற பொருள் பொருத்தம்.

நட்புக்குப் பகுதியாக உள்ளது உரிமையோடு பழகுதல்; அவ்வுரிமைக்கு இனியராதல் சான்றோர் கடமையாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சான்றோருடனான பழைமை உப்பளவு போன்றது.

பொழிப்பு

நட்பிற்கு உறுப்பாவது உரிமையோடு பழகுதல்; அச்செயலுக்கு இனியராதல் சான்றோர் கடமையாகும்.