இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0795



அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்

(அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:795)

பொழிப்பு (மு வரதராசன்): நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும் படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.

மணக்குடவர் உரை: குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க.
இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க.
('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.)

இரா இளங்குமரனார் உரை: செருக்கும்போது அழுமாறு சொல்லியும் தவறும்போது இடித்துக் கூறியும், உலக வழக்கியல் அறிய வல்லவர் நட்பை ஆராய்ந்து தேடிக் கொள்ளுதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

பதவுரை: அழச்சொல்லி-அழுமாறு உரைத்து; அல்லது-நல்லது அல்லாததை; இடித்து-கடிந்து சொல்லி, நெருக்கி; வழக்கு-உலகவழக்கு, உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல்; அறிய-தெரிய; வல்லார்-திறமையுடையவர்; நட்பு-தோழமை; ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து; கொளல்-பெறுதல்.


அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது; [நெறியில்லாதன - நீதிநெறியல்லாதன; கழறி - இடித்துரைத்து]
பரிப்பெருமாள்: குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது;
பரிதி: அழச்சொல்லிக் காரியம் உறுதியிட்டு நெறியில்லாத காரியம் தள்ளி உலக வழக்கறிய வல்லார்;
காலிங்கர்: நட்பானவன் இங்ஙனம் காரியமானது நிகழுமாறு சொல்லியும், நெறியல்லது செய்யுமிடத்து நெருக்கியும் செய்யத் தகும் முறைமை இது என்றறிதலும், இம்மூன்று நெறியும் வல்லவர் யாவர் சிலர் நல்லறிவாளர்; [நெருக்கி- கண்டித்து அறிவுரை கூறி]
பரிமேலழகர்: தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும் செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும் அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; [சோகம் - துன்பம்; நெருக்கியும் - கண்டித்து அறிவுரை கூறியும்]
பரிமேலழகர் குறிப்புரை: 'அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. [பரிகார வினைகள்- நீக்கும் வழிகள்]

'குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அழும்படி சொல்லி இடித்துரைக்கும் ஆற்றல் உடையவர்', 'குற்றங்கண்டால் வருந்தி அழுமாறு கூறி நெறியல்லாத செயல் புரிந்தால் இடித்துக்கூறி உலக வழக்கு அறியவல்லாரது', 'குற்றத்தை எடுத்துக் காட்டி இடித்துரைத்து (நம் குற்றத்தை நாமே உணர்ந்து) வருந்தும்படி (நல்ல முறையில்) பேசி நியாயவாதம் செய்து (அறிவுறுத்த) வல்லவர்களுடைய', 'வருந்தும் வகை அறிவுரை கூறி, தீயதைக் கடிந்து கூறி, உலக வழக்கினை அறியவல்ல பெரியவரின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வருந்தி அழுமாறு சொல்லி தீயதை இடித்துரைத்து உலக வழக்கு அறியவல்லாரது என்பது இப்பகுதியின் பொருள்.

நட்பு ஆய்ந்து கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்பை ஆராய்ந்து கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று. [நட்பாகற் பாலரை - நட்பாக ஏற்றுக் கொள்ளத்தக்காரை]
பரிப்பெருமாள்: நட்பை ஆராய்ந்து கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மந்திரிகளின் நட்பு ஆவாரைக் கூறிற்று. அரசர் அல்லாதார்க்குத் தம்மில் உயர்ந்தாரை நட்பாக வேண்டும் என்று கொள்ளப்படும்.
பரிதி: நட்பு ஆய்ந்து கொள்க.
காலிங்கர்: அவரது நட்பினை ஆராய்ந்து கொள்க நட்குமிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: ஆராய்ந்து நட்புக் கொள்க.

'நட்பை ஆராய்ந்து கொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்பை உணர்ந்து கொள்க', 'நட்பினை ஒருவன் ஆராய்ந்து கொள்க', 'நட்பை நிச்சயமாக்கிக் கொள்ள வேண்டும்', 'நட்பினை ஆராய்ந்து தேடிக்கொள்க' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நட்புத்தொடர்பை ஆராய்ந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வருந்தி அழுமாறு சொல்லி தீயதை இடித்துரைத்து உலக வழக்கு அறியவல்லாரது நட்புத்தொடர்பை ஆராய்ந்து கொள்க என்பது பாடலின் பொருள்.
'வழக்கறிய வல்லார்' யார்?

அழுகின்ற அளவுக்கு அறிவுரை சொல்லித் திருத்தும் உரிமையுடையோரே நல்ல நட்பினராம்.

நாம் நெறிதவறிச் செல்லும்போது கடுமையாகப் பேசியும், மேலும் அத்தவறைச் செய்யாதபடி தடுத்தும், நம்மை நல்ல வழிக்குத் திருப்ப வல்ல அறிவாளரின் நட்பைத் தேர்ந்து பெற்றுக் கொள்க.
நற்குணம் கொண்டவரின் நட்பை வலியச் சென்று கொள்க என்று முன்குறளில் கூறப்பட்டது. இங்கு இன்னொரு உயரிய நட்பை - நம்மை அறநெறியில் நிறுத்துதற்குரிய ஆற்றல் கொண்ட உலகியல் வல்லார் நட்பை ஆராய்ந்து பற்றுக எனச் சொல்லப்படுகிறது;
அழச்சொல்லி: சிரிக்க வைத்து மகிழ்ந்து பழகுபவன்தான் நண்பனாக இருக்க வேண்டியவன் என்பதில்லை; நண்பன் என்பான் அழவைத்து நன்மை செய்யவும் கூடியவனுமாவான். நண்பன் தவறு செய்யும்பொழுது அவன் உள்ளம் வருந்தும்படிக்கு அழஅழச் சொல்லித் திருத்துவதை 'அழச்சொல்லி' என்ற தொடரால் வள்ளுவர் குறிக்கிறார். அவன் நெறிதவறிச் செல்லுவதைக் கண்டபோது, அவன் அவ்வாறு செய்ததற்காக அவனே எண்ணி வருந்தி அழக்கூடிய வகையில், கடுஞ்சொற்களால் எடுத்துச் சொல்வது இது. உலகம் ஏற்றுக்கொள்ளாத செயல்களைச் செய்கின்ற நண்பர்களை ஏன் இப்படி நடந்துகொண்டோம் என்று பிழை வருந்தி அழும்படி சொல்லித் திருத்த வேண்டியது நண்பனின் கடமை. வேறுவழியில் சொல்லித் திருத்த முடியாது என்பது பெறப்பட்டது.
அல்லது இடித்து: அல்லது என்ற சொல் நல்லது அல்லாதது என்ற பொருள் தருவது. இடித்து என்ற சொல் கடிந்து கூறுவதைக் குறிக்கும். தவறு செய்யும் நண்பன் அழுது வருந்தும்படி அறிவுரை கூறியபின், மேலும் அவன் முன்செய்த தீயனவற்றைச் செய்யாதபடி இடித்து அதாவது நன்கு உறைக்கும் படியாக அதட்டிச் சொல்லவேண்டும் என்று வழிகாட்டுகிறார் வள்ளுவர்.

அழச்சொல்லி இடித்துக்கூறத்தக்க வழக்கறிய வல்லார் நட்பினை ஆராய்ந்து பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

'வழக்கறிய வல்லார்' யார்?

'வழக்கறிய வல்லார்' என்ற தொடர்க்கு உலகவழக்கறிய வல்லார், செய்யத் தகும் முறைமை இது என்றறிதல் வல்லவர் யாவர் சிலர் நல்லறிவாளர், உலகவழக்குச் செய்யாவழிச் செய்விக்க வல்லார், உலக நடையை அறிய வல்லவர், தனது நட்பை அறிய வல்லவராய் வழிநடத்திச்செல்லக் கூடியவர், வழக்கமும் வல்லாண்மையும் உடையார், ஆற்றல் உடையவர், உலக வழக்கு அறியவல்லார், நியாயத்தை அறிவிக்க வல்லவர், உலக வழக்கியல் அறிய வல்லவர், உயர்ந்தோர் வழக்கு இன்னதென்று அறிந்து அதனை அறிவிக்க வல்லவர், உலக வழக்கினை அறியவல்ல பெரியவர், உலக வாழ்க்கையும் அறிந்து உணர்த்த வல்லவர், உலகியல்புகளை அறிந்து நல்வழிப்படுத்தவல்ல நல்லார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வழக்கறிய வல்லார்: நட்பில் முழு உரிமை பெற்றவரே அழச்சொல்லியும் இடித்துக் கூறவும் முடியும். வேறு என்ன தகுதிவேண்டும் அறிவுரை கூற? உலக வழக்கு நடைமுறைகளை அறிந்தவர்களுக்கே இது இயலும் என்கிறார் வள்ளுவர். உலகம் எதை ஒத்துக்கொள்ளும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறான கருத்துக்களைச் சொல்லி நண்பனைத் திருத்தி அவனை நெறியல்லாதவனவற்றைச் செய்யாமல் தடுத்து நிறுத்த உலக வழக்கங்களில் அறிவு கொண்டு அவற்றை ஆளும் திறம் கொண்டவர்களுக்கே முடியும் என்கிறார் அவர். உலக வழக்கு இன்னதென்று அறிந்து அதனை உணர்த்த வல்லவர் நண்பரை நல்வழிப்படுத்தக் கூடியவராம்.

'வழக்கறிய வல்லார்' என்ற தொடர் உலக வழக்கு இன்னதென்று அறிந்து அதனை அறிவிக்க வல்லவரைக் குறிக்கும்.

வருந்தி அழுமாறு சொல்லி தீயதை இடித்துரைத்து உலக வழக்கு அறியவல்லாரது நட்புத்தொடர்பை ஆராய்ந்து கொள்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கண்ணீர்வரும்படிக் கழறிக்கூறும் உலகறிவு கொண்டோரை நட்பாராய்தலில் இணைத்துக் கொள்க.

பொழிப்பு

அழுமாறு கூறி இடித்துரைக்கும் உலக வழக்கு அறிந்தவரது நட்பை உணர்ந்து கொள்க.