இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0794



குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு

(அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:794)

பொழிப்பு (மு வரதராசன்): உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்,.

மணக்குடவர் உரை: மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.

பரிமேலழகர் உரை: குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.
(குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நல்ல குடியிற் பிறந்து தன்னிடம் வரும் பழிக்கு அஞ்சி நாணுபவனைப் பொருள் கொடுத்தாயினும் நட்புக் கொள்ளுதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் நட்புக் கொளல்வேண்டும்.

பதவுரை: குடி-நற்குடி; பிறந்து-தோன்றி; தன்கண்-தன் இடத்தில்; பழி-பழிக்கப்படுதல்; நாணுவானை-வெட்கப்படுபவனை, அஞ்சுபவனை; கொடுத்தும்-தந்தும்; கொளல்வேண்டும்-பெறுதல் வேண்டும்; நட்பு-தோழமை.


குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை; [மேற்கூறியவற்றுள் - முன் குணனும் குடிமையும் என்று கூறியவற்றுள்]
பரிப்பெருமாள்: மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை;
பரிதி: நற்குலத்திலே பிறந்தவனாகவும் பழிக்கு அஞ்சுவானாகவும் அவன் இருப்பது கண்டால்;
காலிங்கர்: ஒழுக்கம் குன்றாக் குலத்துப் பிறந்து தன்மாட்டு ஒரு பழி நாணுவானை;
பரிமேலழகர்: உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை;
பரிமேலழகர் குறிப்புரை: குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், [பிழை - குற்றச் செயல்கள்; பிழைத்தன - பிறர் செய்த குற்றங்களை]

'உயர்குடிப்பிறந்து/நற்குலத்திலே பிறந்தவனாகவும்/ஒழுக்கம் குன்றாக் குலத்துப் பிறந்து தன்மாட்டு ஒரு பழி நாணுவானை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்குடியிற் பிறந்து பழிக்கு அஞ்சுபவனை', 'நல்ல குடும்பத்திற் பிறந்தவனாகவும் தன் மட்டில் பழி பாவங்களுக்கு அஞ்சுகிறவனாகவும் இருப்பவனை', 'நல்ல குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை', 'நல்ல குடியின்கண் பிறந்து தன்னிடத்துண்டான பழிக்கு வெட்கப்படுகின்றவனை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை என்பது இப்பகுதியின் பொருள்.

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.
பரிப்பெருமாள்: அவன் வேண்டிய தொன்று கொடுத்து நட்பாகக் கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: கொடுத்தும் கொளல்வேண்டும் என்றமையால் அரசன் நட்பு ஆவாரைக் கூறிற்று.
பரிதி: அவனுக்கு வேண்டுவன கொடுத்தும் நட்புக் கொள்ளுக என்றவாறு.
காலிங்கர்: சிறந்தன கொடுத்தும் நட்புக் கொள வேண்டும் என்றவாறு.
பரிமேலழகர்: சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.

'வேண்டிய தொன்று/சிறந்தன/சில கொடுத்தாயினும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எது கொடுத்தும் நட்புக் கொள்வாயாக', 'விலை கொடுத்தாயினும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும்', 'அவன் விரும்பியதொன்றைக் கொடுத்தாயினும் நட்புக் கொள்ளல் வேண்டும்', 'சில பல கொடுத்தாவது நட்புக் கொளல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எது கொடுத்தும் நட்புக் கொள்ளலாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்குடியில் பிறந்து, தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க என்பது பாடலின் பொருள்.
'கொடுத்தும் கொளல்' குறிப்பது என்ன?

நற்குடிப் பிறந்து பழியஞ்சுபவன் என்றால் அவனைத் தேடிச் சென்று நட்புச்செய்யலாம்.

நல்ல குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு அஞ்சும் குணமுடையவனும் ஆகிய ஒருவனை, ஏதாயினும் கொடுக்க வேண்டியிருந்தாலும் கொடுத்து நட்பாக்கிக் கொள்ளலாம்.
முந்தைய குணனும் குடிமையும்.....(793) என்ற குறள் தன்னிடம் வந்தவனை நட்புச் செய்வதைக் கூறியது என்றால் இப்பாடல் தானே சென்றும் பெற வேண்டிய நட்பாவாரின் இயல்பு தெரிவிப்பது ஆகும். நற்குடியில் பிறந்து பழி தீச்செயல்களுக்கு அஞ்சி ஒழுகுபவனாயிருப்பவனை நாமே தேடிச் சென்று நட்பாக்கிக் கொள்ளலாம் என்கிறது பாடல்.
குடிப்பிறந்து என்றது நல்ல குடும்பத்தில் பிறந்து எனப் பொருள்படும். நல்ல குடும்பச் சூழலில் வளர்பவன் நற்குணங்கள் கொண்டவனாயிருப்பான் என்பதை நம்புபவர் வள்ளுவர்.
தன்கண் பழிநாணுவான் என்றது தன்மேல் சிறியதோர் பழி உண்டாகினும் நாணம் கொள்பவனைக் குறிக்கும் தொடர். அறியாமல் செய்த பிழைக்கும் இப்பழி செய்தோமே-செய்ய நேர்ந்ததே என வருந்தி வெட்கித் தலை குனிபவன்; அப்பிழையை மறுபடியும் அவன் செய்யமாட்டான்; அவனால் செய்யமுடியாது.
இவ்விரண்டையும் கொண்டவனது தொடர்பு கிடைத்தற்கரியது ஆதலால், அத்தகையவனை அணுகி அவன் நட்பை எப்படியாகிலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
நற்குடிப்பிறப்பையும் பழிநாணுதலையும் இணத்துப் பேசப்பட்ட மற்றொரு குறள் குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு (தெரிந்து தெளிதல் 502 பொருள்: நற்குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாதவனாக பழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனிடத்தே, நம்பிக்கை வைக்கற்பாலது) என்பது.

'கொடுத்தும் கொளல்' குறிப்பது என்ன?

'கொடுத்தும் கொளல்' என்றது கொடுத்தும் நட்புக் கொளல் என்பதைக் குறிப்பது. என்ன கொடுத்து நட்புக் கொள்ளவேண்டும் என்பதற்கு அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் கொள்ளல், அவன் வேண்டிய தொன்று கொடுத்துக் கொள்க, அவனுக்கு வேண்டுவன கொடுத்தும் கொள்ளுக, சிறந்தன கொடுத்தும் கொள்ளல், சில கொடுத்தாயினும் கோடல், சிலபொருள் கொடுத்தாயினும் கொள்ளல், சில பொருள் கொடுத்தாகிலும் கொள்ளல், அவன் விரும்பியதொன்றைக் கொடுத்தாவது கொள்ளுதல், சில பொருள் கொடுத்தேனும் கொள்ளுதல், எது கொடுத்தும் கொள்வாயாக, பொருள் கொடுத்தாயினும் கொள்ளுதல், விலை கொடுத்தாயினும் கொள்ளல், அவன் விரும்புகின்றவற்றைக் கொடுத்தும் கொள்ளுதல், அவன் விரும்பியதொன்றைக் கொடுத்தாயினும் கொள்ளல், சில பல கொடுத்தாவது கொளல், அவன் விரும்பத்தக்க பொருள்களைக் கொடுத்தேனும் கொள்ளுதல், என்ன கொடுத்தேனும் நண்பனாக்கிக் கொள்ளலாம், சிறந்த பொருள் கொடுத்தாகிலும் பெற்றுக் கொள்ளல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நற்குடிச் சூழலில் வளர்ந்து தன்மீது எந்தப் பழியும் சேர்ந்துவிடக்கூடாது என்று அஞ்சுபவனைப் பெறுதல் மிக அரிது. எனவே அவன் நட்பை 'விலைகொடுத்தும்' கொள்க என்ற பொருள்படும்படி இக்குறள் கூறுகிறது. நட்புக்கு விலை உண்டு எனச் சொல்லுவாரா வள்ளுவர்? இல்லவே இல்லை. பழிக்கு நாணுபவன் என்று சொல்லப்பட்டதால் அவன் பொருட்கண் பற்றுவையான் என்பதும் நட்புக்காக பொருள் ஏற்றால் அது பழியாகிவிடும் என்பதை உணர்ந்திருப்பவன் என்பதும் தெளிவு. ஆகையால், 'எது கொடுத்தாயினும் நட்பைக் கொள்க' என்று சொன்னது நாமே வலியச் சென்று அவனுடன் நட்புறவை உண்டாக்கிக் கொள்ளலாம் என்பதை அறிவுறுத்தவே.

இக்குறள் நடையில் அமைந்த பிற குறட்பாக்கள்: குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் (குறிப்பறிதல் 703 பொருள்: பிறர் முகக் குறிப்பினாலே மற்றவர் உள்ளக்கருத்தை அறிய வல்லவரை எதைக் கொடுத்தும் தம் அவையில் இருத்திக் கொள்க), கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை (பகை மாட்சி 867 பொருள்: தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்) என்பன.

நற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நற்குடிப்பிறந்து பழியஞ்சுவானாக இருந்தால் வேறுவகை நட்பாராய்தல் எதுவும் செய்யவேண்டுவதில்லை.

பொழிப்பு

நல்ல குடியிற் பிறந்து பழிக்கு அஞ்சுபவனை எது கொடுத்தாயினும் நட்புச் செய்க.