இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0793



குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு

(அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:793)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.

மணக்குடவர் உரை: ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க.
இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.

பரிமேலழகர் உரை: குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க.
(குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.)

தமிழண்ணல் உரை: ஒருவனது குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையில்லாத நல்லவர்களான அவனது நண்பர்களையும் ஆராய்ந்தறிந்து அவனுடன் நட்புச்செய்க. திருடும் பழக்கமுடையவனோடு அல்லது அத்தகையாரை நண்பர்களாகப் பழகுபவனோடு நட்புக் கொண்டால் என்ன ஆகும்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து நட்பு யாக்க.

பதவுரை: குணனும்-நற்பண்புகளும்; குடிமையும்-குடிப்பிறப்பும்; குற்றமும்-குற்றமும்; குன்றா-குறையாத, (குறையில்லாத); இனனும்-சுற்றமும்; அறிந்து-தெரிந்து; யாக்க-செய்க, கட்டுக, சேர்த்துக் கொள்ளுக; நட்பு-தோழமை.


குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து;
பரிப்பெருமாள்: ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறையில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து;
பரிதி: குணமும் குற்றமும் குடிப்பிறப்பும் விசாரித்து;
காலிங்கர்: குடிப்பண்பும், ஒழுக்கக் குறைபாடு இல்லாச் சுற்றமும், குணமும், குற்றமும் இவை நான்கினும் ஒருவரைச் சீர்தூக்கி அறிந்து;
பரிமேலழகர்: ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து;

'குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாள்: 'குறையில்லாத சுற்றமும்' என்றார். பரிதி குன்றா இனனும் என்றதற்குப் பொருள் கூறவில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'குணம் குடிப்பிறப்பு குற்றம் கூட்டாளி எல்லாம் அறிந்து', 'ஒருவனது குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறைவில்லாத சுற்றம் ஆகியவற்றை ஆராய்ந்தறிந்து', '(ஒருவருடன் நட்பு கொள்ளு முன் அவருடைய) நற்குணத்தையும், அவருடைய குடும்பத்தின் தன்மையையும், அவருக்குள்ள குற்றங்களையும், அவர் விடாமற் பழகிவரும் சகவாசங்களையும் ஆராய்ந்து கொண்ட பின்', 'ஒருவனுடைய குணத்தையும், நற்குடிப் பிறப்பையும், குற்றத்தையும், குறைவில்லாத கூட்டுறவையும் ஆய்ந்தறிந்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.

யாக்க நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்பு அவனை நட்பாகக் கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.
பரிப்பெருமாள்: பின்பு அவனை நட்பாகப் பிணிக்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நாள் செல்லும். இஃது ஆராயவேண்டுவன கூறிற்று.
பரிதி: நட்புக் கொள்ளுக என்றவாறு.
காலிங்கர்: மற்று அவரோடு செறிக நட்பினை என்றவாறு. [செறிக - நெருங்கிப் பழகுக]
பரிமேலழகர்: அவனோடு நட்புச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார். [விடற்பாற்றன்று - விடுதற் பான்மையது அன்று; சுற்றப் பிணிப்புடையார் - சுற்றத்தாருடன் கருத்து ஒருமித்தவர்; பிணிப்புண்டு - கட்டுண்டு]

'நட்பாகக் கொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்புக் கொள்க', 'அவனோடு நட்புக் கொள்க', 'நட்பு கொள்ள வேண்டும்', 'அவனோடு நட்புச் செய்ய வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நட்புச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குணம், குடிப்பிறப்பு, குற்றம், குன்றா இனனும் அறிந்து நட்புச் செய்க என்பது பாடலின் பொருள்.
'குன்றா இனனும்' என்பதன் பொருள் என்ன?

நட்பாவாரது நண்பர்கள் யார்யார் எனவும் அறிந்து கொள்க.

குணம், நற்குடிப்பிறப்பு, குற்றங்குறைகள், குறையிலா நண்பர்கள் குழாம் இவற்றை அறிந்து, நட்புச் செய்ய வேண்டும்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (தெரிந்து தெளிதல் 504 பொருள்: ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் தேடி அறிந்து அவற்றுள் மிகுதியை ஆராய்ந்து தெளிய வேண்டும்) எனச் செயலுக்குரியவனைத் தேர்ந்தெடுப்பது பற்றிய குறளில் சொல்லப்பட்டது. இங்கு எத்தகையவர் நட்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறவரும்போது வள்ளுவர், குணம், குற்றத்துடன், குடிப்பிறப்பு, குறைபாடில்லாத சுற்றம் இவற்றையும் ஆராயவேண்டும் என்கிறார். அங்கு குணம், குற்றம் என்னும் பண்புகளையுடைய செயல்திறன்களை ஆயவேண்டும் எனச் சொல்லப்பட்டது; இங்கு அவற்றுடன், ஆராயப்படுபவன் நல்லவனா அல்லது கெட்ட குணம் கொண்டவனா என்பதையும் ஆராயவேண்டும் எனக் கூறப்படுகிறது.
குணம்: நட்பாராய்தலில் முதலில் ஆராயப்படவேண்டியது நண்பராக்கிக் கொள்ள நாம் விரும்புகிறவன் நல்ல குணநலன்கள் கொண்டவனா அல்லனா என்பது. குணக்கேடாவன் நட்புக்கு ஏற்றவனல்லன்.
குடிமை: அடுத்து நோக்கப்பட வேண்டியது நற்குடியில் அதாவது நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனா என்பது. நல்ல குடும்பச் சூழலில் வளர்பவன் நல்லியல்புகள் வாய்க்கப் பெற்றிருப்பான் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தியல். நற்குடியில் பிறந்தோர் இயல்பாக நற்குணங்களைக் கொண்டவராக இருப்பார் என்றே வள்ளுவர் கருதினார். ஆயினும் குடிக்கேற்ற பண்பு இருக்கிறதா என்பதையும் எவ்விடத்தும் நோக்க வேண்டும். குடிக்கேற்ற ஒழுக்கமோ பண்போ இல்லாதவர் குடிப்பிறந்தாராகக் கருதப்படமாட்டார். நற்குடியில் பிறவாமல் இருந்தாலும் ஒழுக்கம், கல்வி ஆகியவற்றாலும் உயர்வு பெறமுடியும் என்பதையும் எண்ணிக் கொள்ளவேண்டும். ஒழுக்கமுடைமை குடிமை.. (133) என்பதில் கூறப்பட்டது போல, இங்கு ‘குடிமை’ நற்பண்பினைச் சுட்டும்.
குற்றம்: குறையில்லாத மனிதர் இல்லை. எனவே புதியவனது குறைகளையும் ஆராயவேண்டும். சிற்சில சிறு குறைகள் ஒத்துக்கொள்ளத்தக்கனவாக இருக்கலாம். அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பொறுத்துக்கொள்ளலாம். குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை (கொன்றை வேந்தன் 18 பொருள்: குற்றமில்லாதவரை மட்டுமே தேடினால் சுற்றத்தார் கிடைக்கமாட்டார்) என்பது ஔவையார் அருளிய வாக்கு.

இம்மூன்றுடன் குன்றா இனனா என்பதையும் ஆராய வேண்டும். இந்நான்கும் ஒத்தனவாயின் 'உறவு நீளச் செல்லு மென்றவாறாம்' எனப் பாடலுக்கு விளக்கம் தந்தார் மணக்குடவர்.

'யாக்க நட்பு' என்பதிலுள்ள யாக்க என்ற சொல்லுக்கு கட்டு என்பது பொருள். நட்பு என்பது மண உறவு போன்றதொரு பிணைப்பு ஆதலின் 'யாக்க' என்ற சொல் ஆளப்பட்டது. யாக்க நட்பு என்பது நட்பு என்னும் பிணைப்பைக் கட்டி அமைக்க என்ற பொருள் தரும்.

'குன்றா இனனும்' என்பதன் பொருள் என்ன?

'குன்றா இனனும்' என்றதற்குக் குறைவில்லாத சுற்றமும், குறையில்லாத சுற்றமும், ஒழுக்கக் குறைபாடு இல்லாச் சுற்றமும், குறைவற்ற சுற்றத்தினையும், குறையாத இனத்தாரின் இயல்பையும், சிநேகிதரையும், குறையில்லாத நல்லவர்களான அவனது நண்பர்களையும், குறைவற விளங்கும் சுற்றத்தினையும், கூட்டாளி, குறைவில்லாத சுற்றம், விடாமற் பழகிவரும் சகவாசங்களையும், குறைவில்லாத தொடர்பினரையும், குறைவில்லாத கூட்டுறவையும், குறையாத சுற்றத்தினையும், கூட்டாளிகளை, பிரிக்க முடியாத அவனது தொடர்புகளையும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவற்றுள் குன்றா இனம்: என்பதற்குக் குறையில்லாத அல்லது குறைபாடில்லாத சுற்றம் என்பது சிறந்த பொருள். சுற்றம் என்பது ஒருவனைச் சுற்றியுள்ளவர்களையே குறிக்கும். ஒருவனைச் சுற்றி அவனது நண்பர்களே பெரும்பாலும் இருப்பர். எனவே குன்றா இனம் என்பது காலிங்கர் உரையில் கண்டபடி ஒழுக்கக் குறைபாடில்லாத நண்பர்கள் கூட்டம் என்பதைக் குறிக்கும் எனலாம்.
ஒருவனது சேர்க்கை சிறுமைக் குணம் கொண்டவர்கள் கூட்டமாக இருந்தால் அவனது சிந்தனை, சொல், உணர்வுகள் எல்லாம் கீழ்மை நிலையில்தான் இருக்கும். கொலைகாரர், கொள்ளைக்காரர், காமுகர், சூதாடி, கட்குடியர், பொய்சொல்வோர் முதலியோரும் வன்முறையாளர், வஞ்சனைநிறைந்தோர், புறம்பேசுவோர், வீணேபொழுதுகழிப்போர் போன்றோரது தொடர்புடையவன் நற்பண்பு கொண்டவனாக இருக்க முடியாது. இத்தகையோர் நட்புறவு ஏற்கத்தக்கதல்ல. நல்லோருடன் கூட்டுறவு கொண்டுள்ளவனே விரும்பத்தக்க நண்பனாக இருப்பான்,
“Show me who your friends are, and I’ll tell you who you are”? என்ற ஆங்கில வழக்கையும் எண்ணலாம்.

குன்றா இனம் என்பதற்குக் குறைவில்லாத சுற்றம் எனவும் பொருள் கூறினர். இது சுற்றத்தின் பன்மை குறித்த பொருளாகின்றது. இங்கு குறைவு என்பதை நிறைவின் எதிர் சொல்லன்று. குடிக்குற்றம் முதலான குறைகளை ஆம். குற்றமற்ற சுற்றத்தைக் குறிக்க வந்தது குன்றா இனம் என்ற தொடர்.

'குன்றா இனனும்' என்ற தொடர் குறையில்லாத சுற்றமும் என்ற பொருள் தருவது.

குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து நட்புச் செய்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நட்பாராய்தல் நலந்தீங்குகளை நாடுவதாம்.

பொழிப்பு

குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாக் கூட்டாளி இவற்றை அறிந்து நட்புச் செய்க.