இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0792



ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்

(அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:792)

பொழிப்பு (மு வரதராசன்): ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.

மணக்குடவர் உரை: குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும்.
இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும்.
('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: ஆராய்ந்தறிந்து நண்பரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாதான் (ஆராயாமல் செய்து கொள்ளும் தீய) நட்பு அவன் சாகும் கடைசிக் காலம் வரை துன்பம் தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.

பதவுரை: ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து; ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து, தேர்ந்தெடுத்து; கொள்ளாதான்-அடையாதவன்; கேண்மை-நட்பு; கடைமுறை-முடிவின்கண்; தான்-தான்; சாம்-இறத்தற்கேதுவாய; துயரம்-துன்பம்; தரும்-உண்டாக்கும்.


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு;
பரிப்பெருமாள்: குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து குற்றம் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு;
பரிதி: நாள்தோறும் புத்தியுண்டாகிய நட்பு ஆராய்ந்து கொள்ளாமல் களிப்பிலே ஒருவன் நட்புக்கொண்டால்;
காலிங்கர்: ஒருவரோடு முதல்முறை நட்புச் செய்யுமிடத்து அவர் குணம் குற்றங்களைப் பலபடியும் தெரிந்து ஆய்ந்து கொள்ளாதான் செய்யும் நட்பானது;
பரிமேலழகர்: குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்;

'குணம் குற்றங்களைப் பலபடியும் தெரிந்து ஆய்ந்து கொள்ளாதான் செய்யும் நட்பானது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'குணமும் செய்கையும்' ஆராய்வது பற்றிச் சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலமுறை ஆராய்ந்து கொள்ளாத நட்பு', 'ஒருவரது குணநலன்களைப் பலமுறை பலவழிகளில் ஆராய்ந்து கொள்ளாதவனது நட்பு', 'பலவகையிலுங் குணஞ் செயல்களை ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுக்கு', 'பல முறையும் ஆராய்ந்துகொள்ளபடாதவனின் நட்பு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பல முறை ஆராய்ந்துகொள்ளப்படாதவனின் நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

கடைமுறை தான்சாம் துயரம் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.
பரிப்பெருமாள்: பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.
பரிதி: பின்பு தனக்கு மானம் வந்தாற்போல் துயரம் வரும் என்றவாறு.
காலிங்கர்: பின் முறையே தனதுயிர்க்கு இறுதியாவதோர் உறுதுயரத்தைச் செய்யும் என்றவாறு. [உறுதுயரம்-மிக்க துயரம்]
பரிமேலழகர்: முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும்/தனக்கு மானம் வந்தாற்போல் துயரம் வரும்/தனதுயிர்க்கு இறுதியாவதோர் உறுதுயரத்தைச் செய்யும்/தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும் என்றவாறு பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இறுதியில் சாகும் துயரத்தைத் தரும்', 'முடிவில் தான் சாவதற்கு ஏதுவாகிய துன்பத்தினைக் கொடுக்கும்', 'அந்நட்பு முடிவிலே அவன் இறப்பதற்கு ஏதுவான துன்பத்தினைக் கொடுக்கும்', 'இறுதியில் தான் சாவதற்குரிய துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முடிவில் தான் சாகும்வரை துன்பத்தையும் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பல முறை ஆராய்ந்துகொள்ளப்படாதவனின் நட்பு முடிவில் தான்சாம் துயரம் தரும் என்பது பாடலின் பொருள்.
'தான்சாம் துயரம்' என்பதன் பொருள் என்ன?

நாடா நட்பானது சாந்துணையும் துன்பம் தரும்.

பலப்பல வகையாலும் ஆராய்ந்து தெளியாது ஒருவருடன் கொள்ளும் நட்பானது, இறுதியில் தான் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும்.
இதற்கு முந்தைய குறளில் ஆராயாமல் செய்த நட்பினும் கேடு வேறு ஒன்றும் இல்லை எனச் சொல்லப்பட்டது. இக்குறளில் ஆராயாமல் கொள்ளும் நட்பானது சாகும் வரை கெடுதலாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. 'ஆய்ந்தாய்ந்து’ எனவரும் அடுக்கு இடைவிடாது பலமுறை ஆராய்தலைக் குறிக்கும். 'ஆய்ந்து ஆய்ந்து' என்ற தொடர்க்குக் குற்றத்தையும் ஆய்ந்து, குணத்தையும் ஆய்ந்து எனவும் ஆராய்ச்சி செய்து-தேர்ந்தெடுத்து எனவும் விளக்கம் தருவர். ஒருமுறை ஆய்ந்தவற்றையே பின்னும் பலவகைகளான் ஆய்ந்து நட்புகொள்க என அறிவுறுத்துகிறது இப்பாடல். அவ்விதம் ஆராய்ந்து கொள்ளாத நட்பு இறுதியில் சாகும்வரை துன்பம் தருவதாகவும் இருக்கும் எனவும் கூறுகிறது இது.

உறவுகளை(சுற்றங்களை)த் 'தேர்ந்தெடுக்கும்' உரிமை யாருக்கும் கிடையாது. உறவுகள் ஒருவர் பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுபவை. ஆனால் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்க்கு உண்டு. அந்த உரிமையைத் திறமையாய்ப் பயன்படுத்தி நட்புறவை ஆக்கிக் கொள்ளவேண்டும். நல்ல பண்புகளையும், செயல்திறன் கொண்ட துடிப்பானவர்களையும் நண்பர்களாக்க முயலவேண்டும். இப்படிப்பட்டவர்களை நட்பாக்கிக் கொள்வதன்மூலம் நாமும் நல்ல முறையில் முன்னேற முடியும்; நல்வழிப்படுத்தும் நல்ல நண்பனாகவும் மாறமுடியும். நண்பர்கள் சிந்தனைகள், நம்பிக்கைகள் போன்றவற்றில் ஒத்திருப்பர். தான் தவறுசெய்தால் துணிந்து எதிர்த்து நல்வழிப்படுத்துவார், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார். இனம், மதம், மொழி என்ற பாகுபாடெல்லாம் நட்பிற்குக் கிடையாது.
மணவுறவுக்கு அடுத்துப் பலவாறாக ஆராய்ந்து தேடிக் கொள்ளும் தொடர்பு நட்புச்செய்வதில் அமையும்.
ஆராய்ந்து கொள்ளாமல் உண்டாகும் நட்பினால் வரும் துன்பம் நம் சாவுவரை தொடரும் ஆதலால், பன்முறை ஆராய்ந்த பிறகே நட்பு கொள்ள வேண்டும் என்பதை, நட்புறவிற்கான அடிப்படைத் தேவையாக வள்ளுவர் தெரிவிக்கிறார். நட்டற்குரியவனைத் தெரிவு செய்யும்போது, மேலே சொல்லப்பட்ட கூறுகளை உடையவனா என ஆராய்ந்து, அவனது குணம், பழக்கவழக்கம், செயல்பாடுகள் ஆகியவற்றை உற்றுநோக்கி, பழகி, நட்புக்குரியவன் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே நண்பனாகக் கொள்ளல் வேண்டும். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் நட்பு வைத்துக்கொண்டால், அது துன்பம் தருவதாக அமைந்து, அவன் சாவுவரைத் தொடரும் என்று வள்ளுவர் எச்சரிக்கை செய்கின்றார்.

'தான்சாம் துயரம்' என்பதன் பொருள் என்ன?

'தான்சாம் துயரம்' என்றதற்குத் தான் சாதற்கு ஏதுவான துன்பம், தனக்கு மானம் வந்தாற்போல் துயரம், தனதுயிர்க்கு இறுதியாவதோர் உறுதுயரம், தான் சாதற்கு ஏதுவாகிய துன்பம், தான் சாகத்தக்க துக்கம், தான் சாவதற்குக் காரணமான துயரம், சாதலுக்கு நிகராகத் துன்பம், சாகும் துயரம், சாகும் வரை துன்பம், தானே நொந்து சாவது போலும் துயரம், அவன் இறப்பதற்கு ஏதுவான துன்பம், தான் சாவதற்குரிய துன்பம், தான் இறத்தற்குக் காரணமாகிய துயரம், நொந்து நொந்து சாகும் துயரம், உயிருக்கே அழிவு தரக்கூடிய துன்பம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தான் சாகும் கடைசி காலம் வரையிலும் துயரம் என்றும் தான் சாவதற்கு காரணமான பெரிய துன்பம் என்றும் இவ்வுரைகளைப் பகுக்கலாம். முந்தைய குறளில் 'வீடில்லை நட்பாள்பவர்க்கு' அதாவது நட்பிலிருந்து விடுபடுதல் இல்லை எனச் சொல்லப்பட்டதால் இறுதியில் இறக்கும்வரையில் துன்பந்தந்து கொண்டேயிருக்கும் என்றது இயல்பாகவும் பொருத்தமாகவும் உள்ளது. ஆயினும் 'இவ்வுரையில் கொண்டு கூட்டு இயல்பில்லை' என்பார் இரா சாரங்கபாணி.

'தான்சாம் துயரம்' என்றது தான் சாகும்வரை உள்ள துன்பம் என்ற பொருள் தரும்.

பல முறை ஆராய்ந்துகொள்ளப்படாதவனின் நட்பு முடிவில் தான் சாகும்வரை துன்பத்தையும் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நட்பாராய்தல் செய்யாவிடில் தீயவர்நட்பால் துயர் உண்டாகும்.

பொழிப்பு

பலமுறை ஆராய்ந்து கொள்ளாத நட்பு தான் சாகும் கடைசி வரை துன்பம் தரும்.