இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0789



நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்று நிலை

(அதிகாரம்:நட்பு குறள் எண்:789)

பொழிப்பு (மு வரதராசன்): நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

மணக்குடவர் உரை: நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின் மனத்தின்கண் ஐயுற வின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை.
வீற்றிருத்தல்-தலைப்பட இருத்தல்.

பரிமேலழகர் உரை: நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் - நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை.
(ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்கு மேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.)

தமிழண்ணல் உரை: நட்புக்கு மிக மேம்பட்ட உச்சநிலை யாதெனில் நண்பர்களுக்குத் தளர்ச்சி வந்தபோது, மனம் செய்வோமா வேண்டாமா என்று சுழன்று, திரிவு படாமல், இயலும் வழியாலெல்லாம் அத் தளர்ச்சியை நீக்கித் தாங்கும் நிலையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்று நிலை.

பதவுரை: நட்பிற்கு-தோழமைக்கு; வீற்று-பெருமை கொண்டு; இருக்கை- இருக்கும் இடம், முடிந்த எல்லை; யாது-எது; எனில்-என்றால்; கொட்பின்றி-திரிபு இன்றி; ஒல்லும்-இயலும்; வாய்-இடம்; ஊன்று-தாங்கும்; நிலை-திண்மை.


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின்;
மணக்குடவர் குறிப்புரை: வீற்றிருத்தல்-தலைப்பட இருத்தல்.
பரிப்பெருமாள்: நட்புக்குச் சுழல்வு இன்றி இனிது இருக்கலாவது யாது என்னில்; [சுழல்வு - சுழற்சி]
பரிதி: நட்பாவது எது என்னில்;
காலிங்கர்: தாம் இவ்வாறு நட்டநட்பிற்குப் பின் ஒரு குறை இன்றி இனிது வீற்றிருக்கை யாதோ எனின்;
பரிமேலழகர்: நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்;

நட்புக்கு மேம்பட இருக்கும் இடம்/ஒரு குறை இன்றி இனிது வீற்றிருக்கை/அரசிருக்கை யாதெனின் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்பின் உயர்நிலையாது?', 'நட்பிற்கு உயர்ந்தநிலை எது என்றால்', 'சினேகம் என்பதற்கு உச்சமான இடம் எதுவென்றால்', 'நட்பு தங்கியிருக்குமிடம் யாது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நட்பு மிக உயர்வுடன் தங்கியிருக்குமிடம் எதுவென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்று நிலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தின்கண் ஐயுற வின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை.
பரிப்பெருமாள்: அதுவும் இடத்து ஊன்றியாகி நிற்றல் என்றவாறு. [இடத்து ஊன்றியாகி நிற்றல் - இடத்து ஊன்றக்கூடிய கொம்பாய் இருத்தல். அதாவது நட்புக்குச் சுழற்சி ஏற்பட்டபோது ஊன்றுகோலாய் இருந்து உதவுதல்]
பரிப்பெருமாள் குறிப்புரை: கொட்பின்றி வீற்றிருத்தல் எனக் கூட்டுக. இதனால் சொல்லியது நட்புத் திரிவின்றி இருத்தலாவது நட்டார்க்குத் தளர்ச்சி வந்தால் தாங்குதல் என்றவாறு ஆயிற்று. மேல் கூறின எல்லாம் ஒத்தார் மாட்டும் மிக்கார் மாட்டும் செய்யும் திறன் கூறிற்று; இது செல்வக் குறைபாட்டினால் தம்மில் தாழ்ந்தார் மாட்டும் செய்யும் திறன் கூறிற்று.
பரிதி: இடையூறு படாமல் அக்காலம் பெற நட்பதே நட்பு என்றவாறு.
காலிங்கர்: அவர்க்கு உதவ வேண்டும் இடத்து எங்கும் புரிவு இன்றித் தமக்கு இயலும் வழியெல்லாம் உதவி உரைத்து நிற்கும் நிலைமை என்றவாறு.[புரிவு - சுழற்சி]
பரிமேலழகர்: அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை.
பரிமேலழகர் குறிப்புரை: ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்கு மேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.

'திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேறு படாமல் முடிந்தவரை நண்பனைத் தாங்கி நிற்றல்', 'எப்போதும் வேறுபாடு இல்லாமல் முடியும்போதெல்லாம் நண்பர்க்கு உதவி செய்து அவரைத் தாங்கும் நிலையேயாம்', 'மனங்கோணாமல் முடிந்தமட்டிலும் நண்பனுக்கு உதவி அவனைத் தாங்குகின்ற தன்மைதான்', 'எப்பொழுதும் மாறுபாடு இல்லாமல் இயன்றவிடங்களில் எல்லாம் உதவி செய்யும் நிலைமையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மனம் சுழற்சி இன்றி, இயலும் வழியாலெல்லாம் நண்பர் தளர்ச்சியுற்றபோது தாங்கி நிற்கும் நிலை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நட்பு மிக உயர்வுடன் தங்கியிருக்குமிடம் எதுவென்றால், மனம் சுழற்சி இன்றி, இயலும் வழியாலெல்லாம் நண்பர் தளர்ச்சியுற்றபோது தாங்கி நிற்கும் நிலையே என்பது பாடலின் பொருள்.
'கொட்பின்றி' என்றதன் பொருள் என்ன?

நட்பிற்கு உயர்வு நட்டவரை எஞ்ஞான்றும் தாங்கி நிற்றலே.

நட்பினுக்குச் சிறந்த நிலை எது என்றால் எக்காலத்தும் மாறுபாடு இல்லாமல் இயலும் வழிகளிலெல்லாம் தாங்குவதே ஆம்.
மிகச் சிறந்த நட்பு எது என்ற கேள்விக்குச் சலிக்காமல் முடிந்தவரை எல்லா வழிகளிலும் நண்பனது தளர்ச்சி நீங்க ஊன்றுகோலாய் இருந்து உதவுவதே எனப் பதிலளிக்கிறது இப்பாடல். துன்பங்களை எதிர்கொள்ளும் நேரத்திலும் சிக்கல்கள் எழும் நேரத்திலும் வாழ்வில் குழப்பமான சூழல் உருவாகும். அப்பொழுது மனம் தடுமாற்றம் அடையும். என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் மயக்கம் உண்டாகும். அப்பொழுது ஒரு நல்ல நண்பனே சாய்ந்துகொள்ளத் தோள் கொடுப்பான். தாங்கும் தோழனை எத்துணை முறை அணுகுவது? எப்பொழுதெல்லாம் உதவி தேவையோ அப்பொழுதெல்லாம் அவன் தயக்கம் காட்டாமல், நட்பு நிலையில் எவ்விதமான வேறுபாடுமின்றி, உதவுதலுக்கு இதுதான் எல்லையென்று வரையறைத்துக் கொள்ளாமல், துணைக்கரம் நீட்டிக்கொண்டே இருப்பான்.
இத்தன்மைய நட்பு மிக உயர்ந்த நிலையில்-அரியணையில்- அரசிருக்கையில் - வைக்கப்படும் என்கிறது இக்குறள்.

பரிப்பெருமாள் என்னும் உரையாசிரியர் இக்குறளுக்குச் சற்று வேறான விளக்கம் தருகிறார். அவர் 'மேல் கூறின எல்லாம் ஒத்தார் மாட்டும் மிக்கார் மாட்டும் செய்யும் திறன் கூறிற்று; இது செல்வக் குறைபாட்டினால் தம்மில் தாழ்ந்தார் மாட்டும் செய்யும் திறன் கூறிற்று' என இப்பாட்டிலிலுள்ள வேறுபாட்டினைப் புலப்படுத்துவார். இவர் பொருள் உதவியை மட்டும் குறிப்பிட இதைத் தழுவிப் பரிமேலழகர் அற உதவி என்பதையும் சேர்த்து உரை தருகிறார்.

'கொட்பின்றி' என்றதன் பொருள் என்ன?

'கொட்பின்றி' என்றதற்கு மனத்தின்கண் ஐயுறவின்றி, திரிவின்றி இருத்தல், இடையூறு படாமல், புரிவு இன்றி, திரிபின்றி, மனம் செய்வோமா வேண்டாமா என்று சுழன்று திரிவு படாமல், வேறுபடாமல், வேறுபாடு இல்லாமல், மனங்கோணாமல், மனச்சுழற்சி இல்லாமல், எக்காலத்தும் மாறுபாடில்லாமல், எப்பொழுதும் மாறுபாடு இல்லாமல், ஒருபோதும் வேறுபடாது, துன்பக்காலத்தில் சிறிதும் தடுமாற்றம் இன்றி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தன் நண்பன் திரும்பத் திரும்ப துன்பத்தில் தவித்து, துயருறுகிறான் என்று கேள்விப்பட்டாலோ அல்லது அவனே வந்து உதவி வேண்டி நின்றாலோ அவனுடன் முன்னம் எந்த மனநிலையில் நட்புடன் இருந்தானோ அந்த நிலையில் சிறுதும் மாறுபடாமல் உதவி செய்ய முன்வருவான்; ஐயுறமாட்டான்; செய்வோமோ வேண்டாமோ என்ற மனச்சுழற்சி இல்லாது தன்னால் முடிந்த அளவு உதவுவான் உண்மை நண்பன் எனச் சொல்லப்பட்டது.
கொட்பின்றி என்பதற்கு நட்புறவில் தளர்ச்சியின்றி எனவும் பொருள் கூறுவர்.

'கொட்பின்றி' என்ற சொல் (மன) மாறுபாடு இல்லாமல் என்ற பொருள் தரும்.

நட்பு மிக உயர்வுடன் தங்கியிருக்குமிடம் எதுவென்றால், மனம் சுழற்சி இன்றி, இயலும் வழியாலெல்லாம் நண்பர் தளர்ச்சியுற்றபோது தாங்கி நிற்கும் நிலையே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நட்டார்க்கு அயர்வின்றி உதவுவது நட்புக்கு பெருமை.

பொழிப்பு

நட்பு மிக உயர்வுடன் தங்கியிருக்குமிடம் எதுவென்றால் மனம் சுழற்சி இன்றி, இயலும் வழியாலெல்லாம் தாங்கி நிற்கும் நிலையேயாம்.