இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0787



அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

(அதிகாரம்:நட்பு குறள் எண்:787)

பொழிப்பு (மு வரதராசன்): அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

மணக்குடவர் உரை: நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு.

பரிமேலழகர் உரை: அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது. ('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர்' (நாலடி.301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: தீமைகளை நீக்கி நல்வழிப் படுத்தித் துன்பத்தில் தொடர்பு கொள்வதே நட்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.

பதவுரை: அழிவினவை-கேட்டினைத்தரும் அவை; நீக்கி-விலக்கி; ஆறு-நெறி; உய்த்து-செலுத்தி; அழிவின்கண்-கேடு வந்தவிடத்து; அல்லல்-துன்பம்; உழப்பதாம்-வருந்துவதாம்; நட்பு-தோழமை.


அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தி;
பரிப்பெருமாள்: அழிவு வந்தவிடத்துத் துன்பத்தை நீக்கி இன்ப நெறியின்கண் நிறுத்தி;
பரிதி: அழிவு வந்த இடத்து நல்ல வழியிலே செலுத்தி;
காலிங்கர்: தம்மொடு நட்டார்க்கு ஓர் இடுக்கண் வந்தவிடத்துக் குற்றத்தை நீக்கி மற்று இவர்க்கு நல்வழியைச் செலுத்தி;
பரிமேலழகர்: கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர்' (நாலடி.301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.

'நட்டார்க்கு ஓர் இடுக்கண் வந்தவிடத்துக் குற்றத்தை நீக்கி மற்று இவர்க்கு நல்வழியைச் செலுத்தி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நண்பர்க்குத் துன்பம் வந்தவிடத்துத் தீமைதரும் செயல்களை விலக்கி நன்னெறியிற் செலுத்தி', '(நண்பன்) தீமை தரக்கூடிய வழிகளிற் செல்லும் போது அவற்றினின்றும் அவனை விலக்கி, நல்ல மார்க்கத்தில் செல்லச் செய்து', 'நண்பனுக்குக் கெடுதிகள் வருங்கால் அவற்றை விலக்கி அவனை நல்லவழியில் செலுத்தி', 'கெட்ட வழிகளில் செல்லுங்கால் அவைகளினின்றும் விலக்கி நல்ல வழியின்கண் செலுத்தி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேடான வழிகளில் செல்லும்போது அவற்றை விலக்கி நன்னெறியிற் செலுத்தி என்பது இப்பகுதியின் பொருள்.

அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு.
பரிப்பெருமாள்: செயலற்ற அழிவு வந்த இடத்து அவரொடு கூட அல்லற்படுவது நட்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, துன்பம் கெடுக்கமாட்டாக்கால் தானும் துன்பம் உற வேண்டும் என்றது. [கெடுக்கமாட்டாக்கால்-கெடுக்க முடியாத போது]
பரிதி: துயரம் ஏற்பட்டால் கூட அநுபவிப்பது நட்பு என்றவாறு.
காலிங்கர்: பின்னும் வருகிற அழிவின்கண் தாமும் கூட நின்று அவ்வல்லல் அனுபவிப்பதே நட்பாவது என்றவாறு.
பரிமேலழகர்: தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது.

'பின்னும் வருகிற அழிவின்கண் தாமும் கூட நின்று அவ்வல்லல் அனுபவிப்பதே நட்பாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மால் தீர்க்கமுடியாத துன்பத்தின்கண் தாமும் சேர்ந்து துன்பப்படுவதே நட்பாம். (அழிவின் நவை எனப்பிரித்துப் போர் அழிவிலும், செல்வ அழிவிலும் வந்த துன்பங்கள் எனப் பொருள் கொள்வாருமுளர்)', 'அவனுக்கு ஒரு துன்பம் நேரிட்டபோது உடனிருந்து அத்துன்பத்தில் பங்கு கொள்வதுதான் நட்பு', 'கேடு வந்தபோது துன்பத்தை உடன் நுகர்வதே நட்பாகும்', 'தவிர்க்க முடியாத கேடு வந்த பொழுது சேர்ந்து துன்பத்தில் வருந்துவதே உண்மை நட்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பின்னும் கேடுவந்தவிடத்து அத்துன்பத்தின்போது தொடர்பு நீங்காதிருப்பதே நட்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கேடான வழிகளில் செல்லும்போது அவற்றை விலக்கி நன்னெறியிற் செலுத்திப் பின்னும் கேடுவந்தவிடத்து அல்லல் உழப்பதாம் நட்பாகும் என்பது பாடலின் பொருள்.
'அல்லல் உழப்பது' குறிப்பது என்ன?

இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் பங்கு கொள்பவனே நண்பன்.

கேட்டினைத் தரும் தீய நெறிகளில் நண்பன் செல்லும்போது அவற்றிலிருந்து அவனை விலக்கி நன்னெறியிற் செலுத்தி, அதன்பின்னும் அவன் கேடுற்றால் அவனைக் கைவிடாது துன்பத்திலும் அவனுடனிருப்பதே நட்பு.
நண்பர்கள் கூடிப் பழகி மகிழ்ந்திருந்தனர்; ஒருவன் மிகையாயின செய்கின்றான்; நகுதற்பொருட்டன்று நட்டல் என்றுணர்ந்த மற்றவன் அவனை மேற்சென்று இடித்துரைத்து நல்வழிப்படுத்துகிறான்; பின்னும் உதவி செய்யப்பட்டவன் துன்பத்தில் தவிக்க நேர்கின்றது. இப்பொழுது உதவிய நண்பன் என்ன செய்யவேண்டும்? அவனைக் கைவிடாது அவன் கரைசேரும்வரை உதவிக்கொண்டிரு என்கிறார் வள்ளுவர். நட்டான் ஒருவன் தீநெறிகளில் செல்கிறான் என்று தெரிந்தால் அழிசெயல்களினின்று அவனை விலக்கி, நன்னெறி காட்டி, அதன்கண் நடக்கச் செய்யவேண்டும்; அவற்றையும் மீறி அவன் கேடுற்றால் துன்பம் நீங்கும்வரை அவன் கூடவே இருந்து துணை செய்யவேண்டும் என்கிறது பாடல்.
நட்பு என்பது ஆக்கத்திலும் அழிவிலும் உடனிற்பதாம்; கேடு வந்தபோது விலகித் தள்ளிப் போகாது கூடவே தொடர்பிலே இருப்பது.

'அழிவினவை நீக்கி' என்ற தொடர்க்கு 'அழிவின் அவை நீக்கி' எனப் பிரித்துப் 'அழிவின் அவை' என்றதற்கு 'அழிவினைத் தருமவை' எனப் பரிமேலழகர் பொருள் கொள்கிறார். அவரே 'இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும் உரை கூறினர்' எனத் தெரிவித்துள்ளார். மணக்குடவர் 'அவர் துன்பத்தை நீக்கி' என்றதும் காலிங்கர் 'குற்றத்தை நீக்கி' என்று சொன்னதும் அழிவின் + நவை எனப் பிரித்துப் பொருள் காண்பதால்தான் என்பார் தண்டபாணி தேசிகர். இவர்கள் நவை என்ற சொல்லுக்குத் துன்பங்கள் அல்லது குற்றங்கள் எனப் பொருள்கொண்டதாகின்றது. ‘அழிவினவை என ஒரு சொல்லாகக் கொள்ளினும், அழிவில், இவை எனப் பிரிப்பினும் பொருளில் பெரிதும் வேறுபாடில்லை (இரா சாரங்கபாணி).

'அல்லல் உழப்பது' குறிப்பது என்ன?

'அல்லல் உழப்பது' என்றதற்கு அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது, அவரொடு கூட அல்லற்படுவது, கூட அநுபவிப்பது, தாமும் கூட நின்று அவ்வல்லல் அனுபவிப்பது, துன்பத்தை உடன் அனுபவிப்பது, உடனிருந்து துன்பப்படுவது, தாமும் சேர்ந்து அத்துன்பத்தை அனுபவிப்பது, உடனிருந்து அனுபவித்தல், துன்பத்தில் தொடர்பு கொள்வது, தாமும் சேர்ந்து துன்பப்படுவது, உடனிருந்து அத்துன்பத்தில் பங்கு கொள்வது, அவனொடும் துன்புறுதல், துன்பத்தை உடன் நுகர்வது, சேர்ந்து துன்பத்தில் வருந்துவது, அவன் துன்பப்படும்போது தானும் துன்பப்படுவது, அவருக்கு வரும் துன்பத்தைத் தானும் பகிர்ந்துகொள்வது, துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்துவது, துன்பங்களிலும் கூட இருந்து பங்குகொள்வது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அல்லல் என்ற சொல் துன்பம் என்றும் உழப்பது என்பது வருந்துவது என்றும் பொருள்படும். 'அல்லல் உழப்பது' என்றது துன்பத்தில் வருந்துவது எனப்பொருள் தரும். நண்பன் துயருற்றவேளை தானும் அதில் பங்கேற்பது என்பது இக்குறள் சொல்லவரும் கருத்து. இது நண்பனது துன்பவேளையில் அவனைக் கைவிட்டுவிடாது அல்லல் தீர்வதற்குத் துணை நிற்கவேண்டும் என்று கூறுகிறது.

கேடான வழிகளில் செல்லும்போது அவற்றை விலக்கி நன்னெறியிற் செலுத்திப் பின்னும் கேடுவந்தவிடத்து அத்துன்பத்தின்போது தொடர்பு நீங்காதிருப்பதே நட்பாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நட்பினரைத் துன்பத்தில் நீங்கிவிடாதே.

பொழிப்பு

கேடுற்ற இடத்து தீமைகளை விலக்கி நல்வழிப் படுத்தித் துன்பத்திலும் தொடர்பு கொண்டிருப்பதே நட்பு.