இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0785



புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்

(அதிகாரம்:நட்பு குறள் எண்:785)

பொழிப்பு (மு வரதராசன்): நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா: ஒருநாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர்வுடைமைதானே நட்பாகும் உரிமையைத் தரும்.
இவ்வுணர்வுடைமைதானே நட்பாகு மென்றவாறு.

பரிமேலழகர் உரை: புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்.
(புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். 'இன்றே போல்க நும் புணர்ச்சி'(புறம்.58) என்றதும் அதனை. பழகுதல் - பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம்.(புற.நா.217) நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும், பின்னது சிறப்புடைத்து என்பது இதனான் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: ஒருவருடன் ஒருவர் நட்புக்கொள்வதற்கு ஓரிடத்துக் கூடி ஒன்றாக இருத்தலோ, அடிக்கடி கண்டு பழகுதலோ வேண்டுவதில்லை. இருவருக்கும் ஒத்த உணர்ச்சியிருக்குமானால், அதுவே நட்பாகிய உரிமையை விளைவிக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.

பதவுரை: புணர்ச்சி-கலப்பு, தொடர்பு, நட்பு; பழகுதல்-பயிலல், நெருங்கிப் உறவு வைத்துக் கொள்ளுதல்; வேண்டா-வேண்டுவதில்லை; உணர்ச்சிதான்-உணர்வுதான்; நட்பாம்-தோழமையாகும்; கிழமை-உரிமை; தரும்-உண்டாக்கும்.


புணர்ச்சி பழகுதல் வேண்டா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா:
பரிப்பெருமாள்: நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா:
பரிதி: நட்புக்குப் பழமை என்று வேண்டாம்;
காலிங்கர்: ஒருவரோடு ஒருவர் கலப்பு நெடுங்காலம் பழகுதல் வேண்டா;
பரிமேலழகர்: ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை;
பரிமேலழகர் குறிப்புரை: புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். 'இன்றே போல்க நும் புணர்ச்சி'(புறம்.58) என்றதும் அதனை. பழகுதல் - பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம்.(புற.நா.217)

'நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவர். பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'கலப்பு நெடுங்காலம் பழகுதல் வேண்டா' என்று காலிங்கரும் 'நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை' என்று பரிமேலழகரும் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்புக்குப் பலநாட் பழக்கம் வேண்டாம்', 'நட்புக்குப் பலநாள் பழகுதல் வேண்டா', 'நட்பு பொருந்துவது அடிக்கடி சந்தித்துப் பழகுவதைப் பொறுத்ததல்ல', 'நட்புச் செய்தற்குக் கூடுதலும் பழகுதலும் வேண்டா' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நட்பாதற்குப் கூடுதலும் பழகுதலும் வேண்டா என்பது இப்பகுதியின் பொருள்.

உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருநாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர்வுடைமைதானே நட்பாகும் உரிமையைத் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இவ்வுணர்வுடைமைதானே நட்பாகு மென்றவாறு.
பரிப்பெருமாள்: ஒருநாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர்வுடைமைதானே நட்பாகும் உரிமையைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல்குணவானொடு கொண்ட நட்பு அறிவு உண்டாக்கும் என்றார்; இஃது ஒத்த அறிவு உடையார்க்கும் அவ்வறிவுடைமைதானே நட்பு ஆக்கும் என்று கூறப்பட்டது.
பரிதி: கூடின நல்ல நட்பாகில் அந்தக் காலம் பழகின பழமையாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று என்னை எனின் அவர் நல்லர் என்று தாம் ஒருக்குற்று உணர்ந்த உணர்ச்சிதானே நட்பாகிய வேற்றுமையற்ற உரிமையைத் தரும் என்றவாறு. [ஒருக்குற்று- ஆய்ந்து]
காலிங்கர் குறிப்புரை: ஈண்டுக் கிழமை என்பது உரிமை.
பரிமேலழகர்: இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும், பின்னது சிறப்புடைத்து என்பது இதனான் கூறப்பட்டது.

'ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒத்த மனப்பான்மையே உறவு தரும்', 'ஒருவர்க்கு ஒருநாள் பழகினும் ஒத்த உணர்ச்சிதான் நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்', 'ஒத்த உணர்ச்சியிருந்தால் அதுவே நட்பின் உரிமையை உண்டாக்கும்', 'இருவர்க்கும் ஒத்த உணர்ச்சியே நட்பு ஆகும் உரிமையைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒத்த மனப்பான்மையே நட்பு ஆகும் உரிமையைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புணர்ச்சி பழகுதல் வேண்டா, ஒத்த மனப்பான்மையே நட்பு ஆகும் உரிமையைக் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'புணர்ச்சி பழகுதல் வேண்டா' என்ற பகுதி குறிப்பது என்ன?

நட்பாதற்கு ஒத்த மனப்பாங்கு இருந்தாலே போதும்.

ஒருவரோடு ஒருவர் கலந்து உரையாடிக் கொள்வதும், இடைவிடாது பழகுதலும் வேண்டியதில்லை; இருவரது ஒத்த மனப்பான்மையே, நட்புச்செய்யும் உரிமையைத் தந்துவிடும்.
இருவர் நட்புக்கு அடிக்கடி சேர்ந்திருத்தல் ஒட்டி உறவாடுதல் என்பன வேண்டுவதில்லை. அவர்களிடையே உள்ள ஒத்த உணர்ச்சியே நட்பு என்ற உரிமையைக் கொடுக்கும் என உள்ளப் பொருத்தமே போதும் நட்பு உண்டாவதற்கு என்கிறது இப்பாடல். ஒரே இடத்தில் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லாமலும், தங்களிடையே பழக்கம் இல்லாமலும் நட்பு அமையும்; உணர்ச்சி ஒத்திருந்தால் அவர்கள் எங்கிருப்பினும் உள்ளம் ஒன்றுபட்டு நட்பு உறுதிப்படும்.

நட்பு உண்டாதல் பலவகை. இக்குறள் அவற்றுள் மூன்றினைச் சொல்கிறது.
அடிக்கடிக் கூடி அளவளாவுதல் வழியும் நட்பு உண்டாகும். இது புணர்ச்சி நட்பு எனப்படுவது. ஒரே இடத்தில் பணி புரிபவர், தொழில் தொடர்புடையவர், பொழுதுபோக்கு விடுதிகளில் சந்திப்பவர் போன்றோர் அடிக்கடி சேர்ந்திருந்து நட்பை வளர்க்கும் வாய்ப்புக் கொண்டவர்கள்.
பழகுதல் மூலமும் நட்பு பலப்படும். பழகுதல் என்பது நெருங்கிய உறவு வைத்துக்கொள்வதைச் சொல்வது; இன்ப துன்பங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் அளவு நெருக்கமாக உறவாடுவதைக் குறிக்கும்.
இறுதியாக, அடிக்கடி சந்திக்கொள்ள வேண்டாததும், பழகுதல் தேவை இல்லாதததுமான நட்புறவு உருவாவது ஒன்று உளது. அது உள்ளத்தால் பொருந்தியிருக்கக்கூடிய, ஒத்த மனப்பான்மை கொண்டவர்களிடையேயான நட்பு; கருத்தில் ஒத்திருந்து சிந்தனையில் வேற்றுமை இல்லாதவர்களது நட்பு இது. நட்பிற்கடிப்படை அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ அன்று; உணர்வில் ஒன்றியிருப்பதுதான்; இந்த உணர்வுடைமையே நட்பாகிவிடும் என்ற கருத்துக்கொண்டது இது. இன்று, இணையம், சமூக ஊடகம் மூலம் நட்புச்செய்பவர்கள் இவ்வகைத் தொடர்பை எளிதில் புரிந்துகொள்வர். இதற்கு வரலாற்று எடுத்துக்காட்டாக, ஒருவரையொருவர் பார்த்திராத, பழகாத, இருவேறு இடங்களில் வசித்த, கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னனும் பிசிராந்தையார் என்னும் புலவரும் கொண்டிருந்த நட்பைச் சொல்வர்.
இம்மூன்றில் அதாவது புணர்ச்சி-பழகுதல்-உணர்ச்சியொத்தல் ஆகிய நட்பாதல்முறைகளில் உணர்ச்சியொன்றே அமையும் எனச் சொல்கிறார் வள்ளுவர் இங்கு. பார்த்துப் பழகுதல் இல்லை என்றாலும் ஒத்தஉணர்ச்சியுள்ளமை மட்டுமே உரிமையுள்ள நட்பை உருவாக்கும் என்கிறார் அவர்.

நாடுகளுக்கிடையேயான உறவுகளில் அவ்வவ்வரசுகள் தம்முள் ஒத்த கொள்கை கொண்டிருந்தால் நட்பு எளிதில் உருவாகிப் பலப்படும். காட்டாக நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றும் நாடுகள் எளிதாக நட்பு நாடுகள் ஆகிவிடுகின்றன. இந்நட்பு நெடுங்காலம் நீடிக்கவும் செய்யும். இதுவும் உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

'புணர்ச்சி பழகுதல் வேண்டா' என்ற பகுதி குறிப்பது என்ன?

புணர்தல் என்ற சொல் கலத்தல், சேர்தல், இணைதல், கூடுதல் ஆகிய பல பொருள் தரும். புணர்ச்சி என்றது உடல் உறவைக் குறிப்பதே பெரும்பான்மை. செப்பின் புணர்ச்சி போல் கூடினும்.....'(உட்பகை 887 பொருள்: செப்பின் இணைப்பைப்போல் பொருந்தி இருந்தாலும்.....) என்பதில் புணர்ச்சி என்பது இரண்டு பொருள் சேர்தலைக் குறிப்பது. இப்பாடலில் (784) நண்பர்கள் ஒன்று சேர்வதைக் குறிக்கிறது. பழகுதல் என்பது அடிக்கடி பார்த்தும் உரையாடியும் மகிழ்தலைக் குறிக்கும். 'புணர்ச்சி பழகுதல் வேண்டா' என்றது கலந்து பேசுதலும் நெருங்கி உறவாடுவதும் தேவையில்லை என்ற பொருள் தருவது.
'புணர்ச்சி பழகுதல் வேண்டா' என்றதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் 'புணர்ச்சிக்கு (நட்பாதற்கு) பழகுதல் வேண்டா; உணர்வொத்தலே போதும்' என உரைத்தனர். காலிங்கர் 'புணர்ச்சி பழகுதல்' என்பதனை உம்மைத் தொகையாகக் கொண்டு 'கலப்பு நெடுங்காலம் பழகுதல் வேண்டா' எனப் பொருள் கூறினார். இதைத் தழுவிப் பரிமேலழகர் 'நட்பாதற்கு' என ஒரு சொல் வருவித்து 'நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை' எனக் கூறினார்.
இவ்வாறாக 'நட்புக்கு பலநாட் பழக்கம் வேண்டாம்' எனவும் 'நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை' எனவும் உரைகள் காணப்படுகின்றன. இவற்றுள் 'கலந்திருத்தலும், இடைவிடாது பழகுதலும் வேண்டா; உணர்ச்சியே நட்பை விளைப்பது' என்ற பொருள் தரும் பின்னதே சிறந்து தோன்றுகிறது.

வெவ்வேறிடங்களில் வாழ்வாரது நட்பு நிலைக்குமா? சந்திப்பற்ற நட்பு உள்ளத்திலிருந்தும் மறைந்துவிடாதா? இத்தகைய வினாக்கள் எழுவதால் ஜி வரதராஜன், 'புணர்ச்சியாலும் பழகுதலாலும் மட்டும் நட்பு விளையாது; உணர்ச்சியும் ஒத்தல் வேண்டும்' என உரைப்பார். மற்றவர்கள் 'புணர்ச்சியும் பழகுதலும் வேண்டா. உணர்ச்சியொன்றே போதும்' என்று கூற இவர் 'அவை மட்டும் போதா உணர்ச்சியும் வேண்டும்' என்று சொல்வது இம்முன்றும் தேவை என்பதாகின்றது. உணர்ச்சி ஒத்தல் இல்லையாயின் மற்ற இரண்டும் இருந்தும் பயனில்லை என்ற கருத்தையும் தெரிவிக்கின்றது.

நட்பாதற்குப் கூடுதலும் பழகுதலும் வேண்டா; ஒத்த மனப்பான்மையே நட்பு ஆகும் உரிமையைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நட்பு உரிமை பெறுதற்கு மனப்பொருத்தம் தேவை.

பொழிப்பு

கலந்திருத்தலும், இடைவிடாது பழகுதலும் வேண்டா; ஒத்த உணர்ச்சியே நட்பு ஆகும் உரிமையைத் தரும்.