இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0782



நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு

(அதிகாரம்:நட்பு குறள் எண்:782)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.

மணக்குடவர் உரை: பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு; மதியின் பின்னீர்மை போல ஒருநாளைக்கொருநாள் தேயும், பேதையார் கொண்ட நட்பு என்றவாறு.
இஃது அறிவுடையார் நட்பு வளரும் என்றும் அறிவில்லாதார் நட்புத் தேயும் என்றும் கூறிற்று.

பரிமேலழகர் உரை: நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம்.
'('நீரவர்' என்றார், இனிமை பற்றி. கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி. செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின்' அறிதலும் ஆம்.)

வ சுப மாணிக்கம் உரை: நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது; பேதையர் நட்பு தேய்பிறை போன்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நீரவர் கேண்மை பிறை நிறைநீர; பேதையார் நட்பு மதிப் பின்நீர.

பதவுரை: நிறை-நிரம்பிய; நீர-தன்மையுடையன; நீரவர்-இனிமைப் பண்புகொண்டவர்; நற்பண்புடையவர்; கேண்மை-நட்பு; பிறை-பிறைமதி; மதி பின் நீர- முழுமதியின்பின் தேய்ந்து வரும் தன்மை உடையன; பேதையார்-அறிவுகேடர்; நட்பு-தோழமை, கேண்மை.


நிறைநீர நீரவர் கேண்மை பிறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு;
பரிப்பெருமாள்: பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு;
பரிதி: வளர்பிறை ஒப்பது நல்லோர் நட்பு;
காலிங்கர்: பிறை உருபு நாள்தோறும் நிறைந்து செல்லும் தன்மையது போலும், நீர்மை உடையார் கெழுமுதல் தன்மை; [கெழுமுதல் தன்மை - நட்பு கொள்ளும் தன்மை]
பரிமேலழகர்: அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; [பிறை- பிறைமதி]
பரிமேலழகர் குறிப்புரை: ''நீரவர்' என்றார், இனிமை பற்றி.

பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார்/நல்லோர்/நீர்மை உடையார் கொண்ட நட்பு என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது', 'அறிவுடையார் நட்புக்கள் வளர்பிறை போல நாளும் வளரும் தன்மையன', 'நல்லவர்களுடைய சினேகம் பிறைச் சந்திரனைப் போல் நாளுக்கு நாள் வளரும்', 'நல்ல இயல்புடையாருடைய சிநேகமானது வளர்பிறைத் திங்களின் தன்மையுடையது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்ல இயல்புடையவர்களது நட்பு வளர்பிறை போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

மதிப் பின்நீர பேதையார் நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதியின் பின்னீர்மை போல ஒருநாளைக்கொருநாள் தேயும், பேதையார் கொண்ட நட்பு என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிவுடையார் நட்பு வளரும் என்றும் அறிவில்லாதார் நட்புத் தேயும் என்றும் கூறிற்று.
பரிப்பெருமாள்: மதியின் பின்னீர்மை போல தேயும், பேதையாரொடு கொண்ட நட்பு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறிவுடையார் நட்பு வளரும் என்பதூஉம் அறியாதார் நட்புத் தேயும் என்றும் கூறிற்று. பின் நட்பு ஆராய்தல் கூறுகின்றார் ஆகலின் இது பின் கூறப்பட்டது.
பரிதி: தேய்பிறை ஒப்பது பொல்லா நட்பு என்றவாறு.
காலிங்கர் ('பின்னீர்மை' பாடம்): மற்று இனிப் பிறை நிறை மதியது பின்நாள் தொடங்கித் தேய்ந்து செல்லும் நீர்மையது உடைத்து அறிவுகேடர் செய்யும் நட்பானது என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம். [மதி - முழுமதி]
பரிமேலழகர் குறிப்புரை: கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி. செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின்' அறிதலும் ஆம்.

மதியின் பின்னீர்மை போல ஒருநாளைக்கொருநாள் தேயும், பேதையார்/பொல்லாதவர்/அறிவுகேடர்/பேதைமையுடையார் கொண்ட நட்பு என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதையர் நட்பு தேய்பிறை போன்றது', 'அறிவில்லார் நட்புக்கள் தேய்பிறைபோல நாளும் குறையும் தன்மையன', 'மூடர்களுடைய சினேகம் பூரண சந்திரன் நாளுக்கு நாள் தேய்வதைப் போல் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்துவிடும்', 'அறிவிலாதார் நட்பு தேய்பிறையின் தன்மையுடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேதையர் நட்பு தேய்பிறையின் தன்மையது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல இயல்புடையவர்களது நட்பு வளர்பிறை போன்றது; பேதையர் நட்பு தேய்பிறையின் தன்மையது என்பது பாடலின் பொருள்.
'நீரவர்' யார்?

நல்லியல்பு கொண்டவர்களிடம் உண்டாகிய நட்புறவு சிறிது சிறிதாக வளர்ந்துகொண்டே செல்லும்.

நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்புறவானது, வளர்பிறை போல வளரும்; அறிவுகேடர்களுடனான நட்பு, தேய்பிறைபோல காலஓட்டத்தில் தேய்ந்து போகும்.
'யாரை நட்பினராகக் கொள்ளுதல் வேண்டும்?' என ஆராய்ந்து கூறுகிறார் வள்ளுவர். நல்ல தன்மையுள்ளோரோடுண்டான நட்புதான் வளரும் தன்மையது; அறிவறிந்து செயல்படாதவர்களோடான உறவு தேய்ந்து போகும் என்கிறார். இதை ஓர் உவமை சொல்லி விளக்குகிறார். 'நீரவர் கேண்மை பிறை நிறைநீர; பேதையார் நட்பு மதிபின் நீர' என்பது பொருள்கோள். இவற்றை இயைக்கும்போது, பிறை நிறையும் நீர்மை போல அதாவது பிறையானது ஒரு நாளைக்கொரு நாள் வளர்வது போல நல்லோர்களிடம் ஏற்படும் நட்பு வளரும்; சிறியோருடன் கொண்ட நட்பு மதியின் பின்நீர்மை அதாவது நிறைமதியின் பின்தன்மை போல ஒரு நாளைக்கொருநாள் தேய்ந்து கொண்டே வரும் எனச் சொல்லப்படுகிறது.

வளர்பிறை போல் அதாவது பிறை தோன்றுமுன் இருளும், தொடர்ந்து நாளாக ஆக இருள் விலக்கமும் ஒளி பெருக்கமும், உண்டாதல் போன்று வளரும் நல்லோருடனான நட்பின் இயல்பும் தேய்பிறைபோல் அதாவது முழுமதியிலிருந்து பின்வரும் நாளைப் போல பேதையரின் கூட்டுறவு முன்னே இன்பமாய்ப் பின்னே இனிமை குறைந்துபோய் முடியும் பேதையர் நட்பின் இயல்பும் ஒருங்கு கூறப்பட்டது. நிலவின் தோற்ற அளவுடன் ஒளிக் கற்றை அளவையும் எண்ணிக் கொள்ளலாம். பிறை, மதி என்பவற்றால் வளரும், தேயும் என்னுஞ் சொற்கள் வருவிக்கப்பட்டன. பரிமேலழகர் 'தம்முள் முன் அறியாமையாலும் பின் அறிதல் உண்டானதாலும், முன் சுருங்கிப் பின் பெருகுதற்கும், முன்பெருகிப் பின் சுருங்கற்குங் காரணம்' என நட்பு வளர்தலுக்கும் தேய்தலுக்குமான ஏதுக்களை விளக்குவார்.
இக்குறளிலுள்ள பேதையார் என்ற சொல்லுக்குப் பலர் மூடர்கள், அறிவில்லாதவர்கள் எனப் பொருள் கூறினர். பேதையர் என்ற சொல் குறளில் பெரிதும், எதையும் உய்த்துணர மாட்டாது தாம் எண்ணியதையே மெய்யாகக் கொண்டு மயங்குபவர் என்ற பொருளில் ஆளப்பட்டது என்பார் தண்டபாணி தேசிகர். இங்கும் அவ்வாறே பொருள் கொள்வது சிறக்கும். இந்த மனப்பான்மை கொண்டவரிடம் உண்டான நட்பு நிலை நீடிக்காது.
கேண்மை, நட்பு என்பன ஒருபொருள் தருவன.

'நீரவர்' யார்?

'நீரவர்' என்றதற்கு அறிவுடையார், நல்லோர், நீர்மை உடையார், அறிவுடையவர், இனிய பண்புடையவர், குணமுடையவர், அறிவாளர், நல்ல இயல்புடையார், தூய்மையுடையார், அறிவுடைய மேலோர், தூயோர், நல்லவர், பண்புள்ளவர், குணம் பொருந்தியவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நீர்மை என்ற சொல்லுக்கு நேர்பொருள் தன்மை என்பது. நீரவர் என்றது நீர்மை உடையவர் எனப் பொருள்படும். நீர்மை உடையவர் என்ற தொடர் இனிய இயல்புடையவர் என்ற பொருளில் சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின் (பயனில சொல்லாமை 195 பொருள்: இனிய இயல்புடையவர்கள் பயனில்லாதவற்றைச் சொன்னால் அவர்களது விழுப்பமும் சிறப்பும் நீங்கும்) என்னும் குறளில் ஆளப்பட்டது. பேதையார் என்று அடுத்த வரியில் கூறப்பட்டதால் நீரவர் என்பதற்குப் பலர் அறிவுடையார் எனப் பொருள் கண்டனர். நீரவர் என்பதற்கு அறிவுடையார் எனக் கொள்வதினும் இனிய இயல்புடையவர் என்ற பொருள் மிகப் பொருத்தமாகும். பரிமேலழகர் 'இனிமைப்பண்பு அறிவுடையார்க்கே அமைந்ததாகலின் இவ்வாறு கூறினார்' என விளக்குவார். நட்பு தேடும்பொழுது அறிவுடையவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அத்துணைச் சிறப்பில்லை. எனவே நீரவர் என்ற சொல்லுக்கு இனியர் என்ற பொருள் பொருந்தும்.

'நீரவர்' என்றது இனிய இயல்புடையவர் என்ற பொருள் தருவது.

நல்ல இயல்புடையவர்களது நட்பு வளர்பிறை போன்றது; பேதையர் நட்பு தேய்பிறையின் தன்மையது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பண்பாடுடையவர் நட்பே கொள்ளத்தக்கது.

பொழிப்பு

நல்லியல்புடையவர்களது நட்பு வளர்பிறை போன்றது; பேதையர் நட்பு தேய்பிறையின் தன்மையுடையது