இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0777



சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:777)

பொழிப்பு (மு வரதராசன்): பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் உரை: பரவும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து.
இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் - துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக்காரிகை நீர்த்து - கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து.
(வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புகழை விரும்பி, உயிர் வாழ்தலை வேண்டாத வீரர் காலில் வீரத்திற்கு அடையாளமான கழலை அணிதல் அழகைத் தருவதாகும். (கழல் உண்மை வீரர்க்கே அழகு தரும்).


பொருள்கோள் வரிஅமைப்பு:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

பதவுரை: சுழலும்-சூழ்ந்து நிற்கும்; இசை-புகழ்; வேண்டி-விரும்பி; வேண்டா-விரும்பாத; உயிரார்-உயிரையுடையவர்; கழல்-வீரர் காலணி, வீர கண்டை; யாப்பு-கட்டுதல்; காரிகை-அலங்காரம்; நீர்த்து-தன்மையுடையது.


சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பரவும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார்;
பரிப்பெருமாள்: பரக்கும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார்;
பரிதி: பூமியிலே சுற்றித் திரிகின்ற கீர்த்தியை வேண்டியும் உயிர் வேண்டாத வீரன்;
காலிங்கர்: இன்னார் இன்ன போர்க்களத்து இன்னவிறல் தொழில் செய்தார் என்று மற்று எண்திசையும் பரந்து திரியும் புகழினையே விரும்பி மற்று இது காரணத்தால் சிறிதும் விரும்பா உயிரினை உடையராயவர்; [விறல் தொழில் - வலிமையான தொழில்]
பரிமேலழகர்: துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்;
பரிமேலழகர் குறிப்புரை: வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல்.

'பரவும்/பரக்கும்/பூமியிலே சுற்றித் திரிகின்ற/எண்திசையும் பரந்து திரியும்/வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புகழை மதித்து உயிரை மதியாத வீரர்', 'உலகைச் சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி உயிர் வாழ்தலை விரும்பாத வீரர்', '(தம்மைப் பற்றிய சரித்திரத்தில்) புகழ் சூழ்ந்திருக்க வேண்டும் என்பதை விரும்பி, உயிரின் மேலுள்ள ஆசையை விட்டுவிடக் கூடியவர்களுக்கு', 'உலகத்தே பரவும் புகழை விரும்பி உயிரை வேண்டாத வீரர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகை வலம்வரும் புகழை விரும்பி, உயிரைப் பொருட்டாக எண்ணாத வீரர் என்பது இப்பகுதியின் பொருள்.

கழல்யாப்புக் காரிகை நீர்த்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கழல் கட்டுதல் அழகுடைத்து. [கழல் - வீரர்கள் அணியும் காலணி]
மணக்குடவர் குறிப்புரை: இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: கழல் கட்டுதல் அழகுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, புகழ்வரின் படவேண்டும் என்றது.
பரிதி: கட்டின வீரகடகம் அழகுபெறும் என்றவாறு. [வீர கடகம் -வீரர்கள் முழங்கைக்கு மேல் அணியும் ஒருவகை அணி]
காலிங்கர்: தம் காலில் யாத்த வீரக் கழல் யாப்பானது பெரிதும் ஆண்மைக் கட்டளைப்பாடு உடைத்து; மற்றையார் காலில் கட்டிய கழல் யாதுக்கோ என்று அறியேம் யாம் என்றவாறு. [கட்டளைப்பாடு - வரம்பு]
பரிமேலழகர்: கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. [நீர்மையை -தன்மையை]
பரிமேலழகர் குறிப்புரை: துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.)

'கழல் கட்டுதல் அழகுடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கட்டிய வீரக்கழலே கண்ணுக்கு அழகியது', 'காலில் வீரக்கழல் கட்டுதல் அழகாம் தன்மையது', 'வீர கண்டை பூட்டுவது பெருமை தரத்தக்கது', 'கழல் அணிதல் அழகென்னுந் தன்மையுடையது. (அவர்களைத் தவிர ஏனையோர் கழல் அணிதல் அழகுடையது அன்றென்றவாறு.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கழல் கட்டுதல் பேரழகு செய்யும் தன்மையதாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சுழலும் இசை விரும்பி, உயிரைப் பொருட்டாக எண்ணாத வீரர் கழல் கட்டுதல் பேரழகு செய்யும் தன்மையதாம் என்பது பாடலின் பொருள்.
'சுழலும் இசை' குறிப்பது என்ன?

போர்க்களத்தில் தான் செய்த துணிவான செயல்கள் உலகில் என்றும் நிலைநிற்க வேண்டும் என்பதற்காக வீரர் தம் உயிரைத் துச்சமாக மதிப்பர்.

உலகை உலாவரும் புகழ்ச்செய்தியை விரும்பும் போர்வீரர் தம் உயிரைப் பெரிதாக எண்ணமாட்டார்; அவர் காலில்உள்ள கழல் அழகூட்டும்.
நாட்டிலுள்ளோர் பாராட்டுவதற்குரிய வீரதீரச் செயல்களைச் செய்து புகழ்பெற விரும்பும் வீரர் அதற்காகத் தம் உயிரைச் சிறிதும் பொருட்படுத்தாத துணிவு கொண்டவர். இவரே உண்மையான வீரர். அவர் கழல் கட்டுவதுதான் அழகு; மற்றவர்கள் அணிவது அல்ல.

கழல் என்பது ஆண்களின் ஒரு காலில் மட்டுமே அணியப்படுவது. தோற்ற பகைமன்னனின் முடிப்பொன்னால் செய்யப்படுவது. காலிங்கர் உரையில் கண்டபடி 'இன்னார் இன்ன போர்க்களத்து இன்ன வலிய செயல் செய்தார் என்று மற்று எண்திசையும் பரந்து திரியும் புகழினையே விரும்பி மற்று இது காரணத்தால் சிறிதும் விரும்பா உயிரினை உடையராயவர் தம் காலில் கட்டிக்கொள்வது வீரக் கழல்'. போர்வீரர்களே இதை அணிவர். 'மற்றையார் காலில் கட்டிய கழல் யாதுக்கோ என்ற அறியேம் யாம்' என எள்ளல் குறிப்போடு காலிங்கர் எழுதுவார். மறக்கழலை வெண்டையம் என்பது உலக வழக்கு என்பார் தேவநேயப்பாவாணர்.
'கழல் யாப்பு காரிகை நீர்த்து' என்கிறது குறளின் இறுதிப்பகுதி. யார் இந்தக் காரிகை? ‘காரிகை’ என்பதற்கு அலங்காரம், ஆண்மைக் கட்டளைப்பாடு, பெண், அழகு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் அலங்காரம், அழகு, அணி என்பன பொருந்தும். 'கழல் யாப்பு காரிகை நீர்த்து' என்றதற்குப் 'புகழ்வேண்டி வாழாதவர் கழலணிதல் பெண் தன்மைத்து எனலுமாம். பெண் காலணி அணிவது போலாம் இவர் கழலணிவது என இழித்துக் கூறியவாறு' என்று முதலில் கூறிப் பின்னர் 'கழல் ஆடவர்க்கன்றி பெண்ணிற்குரித்தல்ல. இசைவேண்டி உயிர் வாழாத மறவன் கழலணியின், பெண்ணொருத்தி கழல் அணிந்தால் காண்பார்க்கு நகை பயத்தல் போலாகும் என நயந்தோன்றக் கூறப்பட்டது' என்ற பொருள்படும்படி தண்டபாணி தேசிகர் விளக்கம் தந்தார். தேவநேயப்பாவாணர் 'பிற அணிகள் பெண்டிர்க்குப்போல் ஆடவர்க்கு அழகு செய்யாமையின், ஆடவர்க்குச் சிறப்பாக வுரிய மறக் கழலணியைக் 'காரிகை நீர்த்து' என்றார்' என உரைத்தார்.

'சுழலும் இசை' குறிப்பது என்ன?

'சுழலும் இசை' என்றதற்குப் பரவும் புகழ், பரக்கும் புகழ், பூமியிலே சுற்றித் திரிகின்ற கீர்த்தி, எண்திசையும் பரந்து திரியும் புகழ், துறக்கத்துத் தம்மோடு செல்லாதுவையத்தைச் சூழ்ந்திருக்கும் புகழ், பரந்து நிற்கும் புகழ், உலகமெங்கும் விரைந்து பரவும் புகழ், இந்த மண்ணில் ஒருவரிடத்தில் நில்லாது சுழன்று கொண்டிருக்கும் தன்மையுள்ள புகழ், உலகைச் சூழ்ந்து நிற்கும் புகழ், தம்முடைய பெயரையும் சரித்திரத்தையும் சுற்றிக் கொண்டிருக்கும்படியான புகழ், உலகளாவிய புகழ், உலகத்தே பரவும் புகழ், உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புகழ், என்றென்றும் உலகில் சுழன்றுவரும் புகழ் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘சுழலும் இசை’ என்பதற்கு வீரர் இயல்புக்கேற்பக் காலிங்கர் 'வெற்றியால் வரும் எண்திசையும் பரந்து திரியும் புகழ்' என உரைதந்தார். தண்டபாணி தேசிகர் ஒன்றாவுலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்றில் (புகழ் 233) என்று ஈகையான் வரும் புகழை நிலைத்தது என்ற ஆசிரியர், வீரத்தான் வரும் புகழைச் சுழலும் இசை வேண்டி' என்றதன் பொருள் நயம் ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. காலந்தோறும் படைச் செருக்குடையார் பலராதல் கூடும். ஒருவன் புகழ் நிலைத்துச் சுழல்கின்ற போது, அடுத்தவனும் உயிர்க்கொடை கொடுப்பானாயின் அவன்புகழ் சுழன்று மறைய மற்றவன் புகழ் மேலோங்கிவிடும்' எனக் கருத்துரைத்து 'புறப்பாட்டில் வீரன் புகழைக் காட்டிலும் வள்ளல் புகழ் நிலைத்திருப்பதைக் காண்க' எனவும் கூறினார்.

'சுழலும் இசை' என்றது உலகைச் சுற்றிச்சுற்றிவரும் புகழ் எனப்பொருள்படும்.

உலகை வலம்வரும் புகழை விரும்பி, உயிரைப் பொருட்டாக எண்ணாத வீரர் கழல் கட்டுதல் பேரழகு செய்யும் தன்மையதாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

படைச்செருக்கு கொண்டவர்க்கு மட்டுமே வீரக்கழல் உரித்து.

பொழிப்பு

பரவும் புகழை விரும்பி உயிரைப் பொருட்படுத்தாத வீரர் கட்டிய கழலே அழகிய தன்மையது.