இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0769



சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை

(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:769)

பொழிப்பு (மு வரதராசன்): தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும்.

மணக்குடவர் உரை: தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின், படை பகையை வெல்லும்.

பரிமேலழகர் உரை: சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் - தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்: படைவெல்லும் - படை பகையை வெல்லும்.
(விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வெளவல் , இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உற்றுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.)

இரா சாரங்கபாணி உரை: உரிய சிறப்புப்பெறாமை, நீங்காத மனக்கசப்பு, வறுமை ஆகிய இவை இல்லையாயின் படை பகையை வெல்லும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் படை வெல்லும்.

பதவுரை: சிறுமையும்- உரிய சிறப்புப்பெறாமையும், இழிகுணங்களும், சிறிதாகலும்; செல்லா-நீங்காத, போகாத; துனியும்-வெறுப்பும்; வறுமையும்-ஏழ்மையும்; இல்லாயின்-இல்லாவிடில்; வெல்லும்-வெல்லும்; படை-படை.


சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின்;
பரிப்பெருமாள்: சிறுமை உறுதலும் போகாத் துன்பம் உறுதலும் வறுமையும் இல்லையாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: சிறுமை உறுதலாவது, இழிந்தார் பெற்ற சிறப்பு உயர்ந்தார் பெறாமை. போகாத் துன்பமாவது, பெண்டிரைக் கைக்கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் போல்வன. வறுமையாவது கொடாமை.
பரிதி: மிடியும் சேவகத்தன்மையும் சிறுமையும் இல்லையாயின்; [மிடி - வறுமை]
காலிங்கர்: படைச்சிறுமையும் நீங்காத கோபமும் படையினது வறுமையும் என்னும் இக்குற்றம் மூன்றும் இலதாயின்;
பரிமேலழகர்: தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வெளவல், இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. [விட்டுப்போதல் - ஊதியம் போதாமையால் நீங்கிப் போதல்; நின்றது - விட்டுப் போகாமல் எஞ்சி நின்ற சேனை]

சிறுமையும் என்றதற்குத் 'தேய்ந்து சிறிதாகலும்/ சிறுமை உறுதலும்/ சிறுமையும் /படைச்சிறுமையும் என்றும் செல்லாத்துனியும் என்றதற்கு மனத்தினின்று நீங்காத வெறுப்பும்/ போகாத் துன்பம் உறுதலும்/ சேவகத்தன்மையும்/ நீங்காத கோபமும் என்றும் வறுமையும் என்றதற்கு நல்குரவும்/ வறுமையும்/ மிடியும் என்றும் கூறி 'மூன்றும் இலதாயின்' எனப் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இழிவும் நீங்காத மனக்கசப்பும் வறுமையும் இல்லை யென்றால்', '(படைவீரர்களுக்கு இருக்கத் தகாத) அற்பத் தனங்களும் (ஏதாவது காரணத்தால் தம்மரசனிடமும் வருத்தமுற்று) மனதில் இருந்து கொண்டிருக்கும் மனத்தாபமும் (ஊதியம், உணவு, உடை, ஆயுதங்கள் முதலியவை குறைவான) தரித்திரமும் இல்லாவிட்டால்தான்', 'இழிவான பழக்கமும், நீங்காத வெறுப்பும், வறுமையும், இல்லையானால்', 'படைக்குப் பொருந்தாத இழிகுணங்களும், நீங்காத வெறுப்பும், நல்குரவும் (தரித்திரமும்) இல்லையானால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இழிவுநேர்தலும், நீங்காத மனக்குறையும், வறுமையும் இல்லையானால் என்பது இப்பகுதியின் பொருள்.

வெல்லும் படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: படை பகையை வெல்லும்.
பரிப்பெருமாள்: படைவெல்லும் என்றவாறு. .
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, படைக்கு அரசன் செய்யும் திறன் கூறிற்று.
பரிதி: படைவெல்லும் என்றவாறு.
காலிங்கர்: எதிர்ப்படையை எவ்வாற்றானும் வெல்லும் படை என்றவாறு.
பரிமேலழகர்: படை பகையை வெல்லும்.
பரிமேலழகர் குறிப்புரை: இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உற்றுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.

'படை பகையை வெல்லும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'படைவெல்லும்', 'சேனை வேற்றி பெறும்', 'படையானது வெல்லுந் திறமை உடையதாகும்', 'படை வெல்லும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

படை வெல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இழிவுநேர்தலும், நீங்காத மனக்குறையும் வறுமையும் இல்லையானால் படை வெல்லும் என்பது பாடலின் பொருள்.
'சிறுமை' என்ற சொல் குறிப்பது என்ன?

படைவீரர்களை மனநிறைவு குன்றாத நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இழிவுநேரலும், நிலைகொண்டிருக்கும் வெறுப்புணர்ச்சியும், பொருளற்ற வறுமையும் இல்லாதிருக்கும் படையே வெற்று பெறும்.
படை வீரர்கள் போரில் வெல்ல முடியாது போதற்கு மூன்று காரணங்களைக் கண்டறிந்து இக்குறள் கூறுகிறது. அவை: சிறுமைப்படல், அரசிடம் மாறாப் பிணக்குக் கொண்டிருத்தல்(செல்லாத் துனி), ஏழ்மை (வறுமை) நிலை ஆகியன.
செல்லாத் துனி:
இத்தொடர்க்குப் போகாத அல்லது நீங்காத வெறுப்பு என்பது பொருள். ஏதாவது மனக்குறையை வளர்த்துக் கொண்டிருத்தலைக் குறிப்பது. தன்னைப் பணியமர்த்தியுள்ள அரசிடம் நீங்காத மனக்கசப்பு கொண்டு செயல்படுதல் பற்றியது. வெறுப்பு உண்டாவதற்குப் படை வீரர்கள் நல்லமுறையில் நடத்தப் பெறாதது ஒரு காரணமாகலாம். எஞ்ஞான்றும் அடிமைத்தன்மையிலே படைஞரைப் பணிகொள்ளின் அவர்க்குப் பணியிலும் பணிப்பயிற்சியிலும் வெறுப்புத்தோன்றும். உரியவரிடம் சொல்லியும் குறை நீக்கப்படாவிடின் வருத்தம் இன்னும் மிகும். படைத்தலைவனுக்கு அடங்காது அவன்மேல் சினம்கொண்டு போட்டி சேர்க்கும் கலக மனப்பான்மை (mutiny)யில் முடியலாம். இனி, வீரன் மனைவியை பணிமேற்பார்வை செய்வார் கைக்கொள்ளுதல், தன் நற்பெயருக்குக் களங்கம் கற்பித்தல் போன்றவற்றாலும் புண்பட்டு மனத்தை விட்டகலாத வருத்தம் உண்டாகலாம்.
நாட்டுக்காக உயிரைக் கொடுக்க முன்வந்துள்ள வீரர்களை நல்லமுறையில் போற்றிச் சிறப்பிக்க வேண்டும். இன்றேல், வெறுப்பு மேலிட்டால் போர் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார். அரசின் போக்கில் வெறுப்பைக் காட்டுவதால் நாட்டுப்பற்று இல்லாமல் போகலாம். அப்படிப்பட்ட மனப்பான்மை வீரர்களிடம் முளைவிடாது தடுக்க வேண்டும். படையானது கட்டுப்பாடான, தலைவர்க்குப் பணியும் நிலையில் இருந்தால்தான் போரில் வெல்ல முடியும்.
வறுமை:
படைவீரர்களின் உடல்நலம் நன்கு பாதுகாக்கப்படவேண்டும். வறுமையுற்ற வீரரிடம் போர்செய்யும் வலிமையை எதிர்பார்க்க முடியாது. வீரர்களின் ஏழ்மையைப் போக்கி அவர்கட்கு உணவு உடை முதலியவற்றால் குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். படைவீரர்களுக்கு வேண்டும் பொருள் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரம் நிறைவுடன் இருக்கச் செய்யவேண்டும்.

'சிறுமை' என்ற சொல் குறிப்பது என்ன?

'சிறுமை' என்றதற்குத் தான் தேய்ந்து சிறிதாகல், சிறுமை உறுதல், சிறுமை, படைச்சிறுமை, தன் அளவு சிறிதாகத் தேய்தல், சிறிது சிறிதாகத் தேயும் இழிவு, சின்ன புத்தி, இழிவு, உரிய சிறப்புப்பெறாமை, அற்பத் தனம், இழிந்த பழக்க வழக்கங்கள், இழிவான பழக்கம், படைக்குப் பொருந்தாத இழிகுணங்கள், படைபலம் வரவரக் குறைந்து காணப்படுதல், எண்ணிக்கையில் சிறுமை, படை சிறுத்தல், அரசர் செய்யும் அவமதிப்பு, அளவில் குறைதல், வரவரச் சிறுத்தல் (படை மறவர் விலகுவதால் நேர்வது), சிறுமதி, தன்னைக் கொஞ்சம் பண்ணிக்கொள்ளுதல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'தான் தேய்ந்து சிறிதாகல்' என்று சிறுமைக்கு விளக்கம் தந்தார் மணக்குடவர். அதை அப்படியே வழிமொழிந்தார் பரிமேலழகர். இதற்கு வீரர்கள் படையை விட்டு நீங்குவதால் அது சிறுத்துப் போவது என்பது பொருள்.
சிலர் சிறுமை என்பது இழிந்த குணங்கள் அல்லது இழிவான பழக்கம் என்றனர். சூதாடல், கள்ளுண்டல், பொய்கூறல், செல்லுமிடங்களில் பெண்களைக் கவர்தல், பொதுமக்களைக் கொடுமைப்படுத்தல் முதலிய இழிவை உண்டாக்கும் செயல்களைச் செய்தல் சிறுமையாகும் என்பது இவர்களது உரை.
பரிப்பெருமாள் சிறுமை என்பதற்கு 'இழிந்தார் பெற்ற சிறப்பு உயர்ந்தார் பெறாமை' என விளக்கம் தந்தார். இப்பொருளே இங்கு பொருந்தும். இது சிறந்த வீரரைச் சிறுமைப்படுத்தும் செயலாகும். ஓரங்காட்டலால் அவர் ஊக்கம் குன்றுவார்; அடுத்த போரில் நாட்டம் இல்லாமம் இருந்து வெற்றிக்குத் துணை செய்யமாட்டார்.

'சிறுமை' என்பதற்குச் சிறுமைப்படல் அதாவது இழிவு நேர்தல் என்பது பொருத்தமான பொருள்.

இழிவும் நீங்காத மனக்குறையும் வறுமையும் இல்லையானால் படை வெல்லும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வீரர்க்கு உளக்குறை ஏற்படா நிலையில்தான் படைமாட்சி பெறும்.

பொழிப்பு

சிறுமைப்படலும் நீங்காத மனக்குறையும் வறுமையும் இல்லையென்றால் படைவெல்லும்.