இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0765



கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை

(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:765)

பொழிப்பு (மு வரதராசன்): எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

மணக்குடவர் உரை: கூற்றமானது வெகுண்டு மேல்வரினும், சிதறுதல் இன்றியே எதிர் நிற்கவல்ல வலியுடையதே படையாவது.
இது மாற்றான் மேல்வந்தால் பொறுக்கவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: கூற்று உடன்று மேல் வரினும் - கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும ஆற்றலதுவே படை- நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது.
('மருந்தில் கூற்று' ஆகலின், (புற.நா.3) உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: எமனே சினங் கொண்டு தம்மீது படையெடுத்து வந்தாலும்கூட அணிவகுப்புக் கலையாமல் சேர்ந்து எதிர்த்து நிற்பதான காரியத்தை ஆற்றக்கூடியதே சேனை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை.

பதவுரை: கூற்று-எமன், காலன், இறப்புக் கடவுள்; உடன்று-சினந்து, வெகுண்டு, கோபம்கொண்டு; மேல்வரினும்-மேல்வந்தாலும், எதிர்த்தாலும்; கூடி-ஒன்றுதிரண்டு; எதிர்-எதிர்த்து; நிற்கும்-தாங்கும்; ஆற்றலதுவே-ஆற்றலையுடையதுவே; படை-படை.


கூற்றுடன்று மேல்வரினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூற்றமானது வெகுண்டு தன்மேல்வரினும்; [மேல்வரினும்- எதிர்த்து வரினும்]
பரிப்பெருமாள்: கூற்றமானது வெகுண்டு மேல்வரினும்;
பரிதி: தன்னுயிரை ஒருவர்க்கும் கொடாத கூற்றுவன் வந்தாலும்;
காலிங்கர்: எல்லைக்காலத்துக் கூற்றம் கனன்று எதிர்வந்து பொரினும்; [எல்லைக் காலத்தும் -இறுதிக் காலத்தும்; கனன்று - சினந்து; பொரினும் - போரிட்டாலும்]
பரிமேலழகர்: கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்;

'கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எமனே சினந்து வந்தாலும்', 'எமன் சீற்றம் கொண்டு தன் உயிரைக் கவர நேரே வந்தாலும்', 'இயமன் சினந்து தன்மேல் வந்தாலும்', 'கூற்றுவனே (எமனே) சீற்றங்கொண்டு எதிர்த்து வந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கூற்றுவனே சினந்து எதிர்த்து வரினும் என்பது இப்பகுதியின் பொருள்.

கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிதறுதல் இன்றியே எதிர் நிற்கவல்ல வலியுடையதே படையாவது. [சிதறுதல் இன்றியே-இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிதறிப் போகாமல்]
மணக்குடவர் குறிப்புரை: இது மாற்றான் மேல்வந்தால் பொறுக்கவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: சிதறுதல் இன்றி எதிர் நிற்கவல்ல வலிமையையுடையதே படையாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாற்றார் மேல்வந்தால் நின்று பொறுக்க வேண்டு மென்றது.
பரிதி: எதிர்நின்று தாக்குவது படை என்றவாறு.
காலிங்கர்: அதற்கு இயைந்)து தானும் எதிர்த்து அடர்த்து நிற்கும் திறமைப்பாட்டது யாது; மற்று அதுவே படையெனப்படுவது என்றவாறு.
பரிமேலழகர்: நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது.
பரிமேலழகர் குறிப்புரை: 'மருந்தில் கூற்று' ஆகலின், (புற.நா.3) உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி. [மருந்தில் கூற்று -எவ்வகையாலும் தடுக்கமுடியாத யமன். மருந்து-தடை]

'சிதறுதல் இன்றி எதிர் நிற்கவல்ல வலிமையையுடையதே படை' என்றும் 'நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படை' என்ற பொருளிலும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒன்றுகூடி எதிர்க்கும் வீரமுடையதுவே படை', 'அவனைத் தாக்குவதற்கு எதிர்நிற்கும் ஆற்றல் உடையதே படை', 'ஒருங்கு கூடி அஞ்சாது எதிர்நின்று தாங்குந் திறமையுடையதே படையாகும்', 'நெஞ்சு ஒத்து எதிர் நின்று தாக்கும் வலிமையுடையதே படையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சிதறுதல் இன்றி எதிர்த்துத் தாங்கும் வலிமையையுடையதே படை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கூற்றுடன்று எதிர்த்து வரினும் சிதறுதல் இன்றி எதிர்த்துத் தாங்கும் வலிமையையுடையதே படை என்பது பாடலின் பொருள்.
'கூற்றுடன்று' என்றதன் பொருள் என்ன?

மேல்வரும் பகையைத் தடுக்கும் ஆற்றல் (defence) படைக்கு வேண்டும்.

கூற்றமே சினங்கொண்டு தன்மேல் பாய வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்துத் தாங்கும் ஆற்றல் உடையதே படை ஆகும்.
இறப்புக் கடவுளான எமனை யாரும் எதிர்த்து அழிக்க முடியாதவனாகத் தொன்மங்கள் கூறும். அத்தகைய வல்லமை கொண்ட எமன், சினம் கொண்டு, வந்து தாக்கினால்கூட, படையில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாய்க் கூடி, ஒருங்கிணைந்து தாங்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
கூடி எதிர்நிற்கும் என்றதால் தாங்கிக்கொள்ளும் படை மிகுதி என அறியப்படும். எண்ணிக்கையில் மிகுதி என்றாலும் படையிலுள்ளோர் எல்லாரும் சேர்ந்து நின்று ஒன்றாய் நின்று, மாறுபாடில்லாமல் எதிர்க்க வேண்டும். பகைவரின் சூழ்ச்சியாலோ பிற காரணங்களுக்காகவோ போர்க்களத்தில் அவர்கள் கீழறுத்தல் போன்றவற்றைச் செய்வாராயின் பகைவர் முன்னேறிச் செல்வதைத் தடுப்பது கடினம்; ஒருங்கிணைந்து செயல்பட்டால் எத்துணை வல்ல பகையையும் நிறுத்தி விடலாம்.

எவ்வகையாலும் தடுக்கமுடியாதவன் எமன். ஓர் உயிரை நீக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவனை எதிர்த்து யாரும் வெல்ல முடியாது. சினம் கொண்டுவிட்டாலோ எமனுடைய ஆற்றல் இன்னும் அளவிடமுடியாததாகிவிடும். அத்துணை வல்லமை பொருந்திய சினம் கொண்ட எமனுடனேயே போரிட்டுத் தாங்கும் ஆற்றல் கொண்டதாக படை இருக்க வேண்டும் என்கிறது இப்பாடல்.
சாவே வந்தாலும், நாட்டின்மேல் உள்ள அன்பால் பகைவர் உள்ளே வரவிடாமல், தாக்குதலை எதிர்த்துக், காத்து நிற்பது படை என்பது கருத்து.

'கூற்றுடன்று' என்றதன் பொருள் என்ன?

கூற்றுடன்று என்பது கூற்று+உடன்று என விரியும். கூற்று என்பது எமன், காலன், தருமதேவதை, இறப்புத் தெய்வம் எனவும் அறியப்படுவது. உடன்று என்ற சொல்லுக்குச் சினந்து என்பது பொருள். கூற்றுடன்று என்பது 'எமன் வெகுண்டு' எனப்பொருள்படும். உயிர்களது வாழ்வு எப்பொழுது எப்படி இறுதிபெறும் என்பதை முடிவு செய்பவன் எமன். தொன்மங்களின்படி அவன் தெய்வத்திற்குள்ள ஆற்றல் கொண்டவன்.
பரிதி எமன் யாரென்பதை 'தன்னுயிரை ஒருவர்க்கும் கொடாத கூற்றுவன்' என விளக்குகிறார். இதன் பொருள் 'பிறர் உயிரைக் கொள்ளுவதேயன்றித் தன் உயிரைப் பிறர் கொள்ளக் கொடுக்காத கூற்றுவன்' என்பது. காலிங்கர் உரை 'இறுதிக்காலம் வந்தபொழுதன்றி வெகுண்டு வாராத கூற்று' என்ற பொருளில் அமைந்தது.

உயிர்களின் இறுதிக்காலத்தில்தான் கூற்றுவன் வருவான்; அவன் சினத்தால் வரமாட்டான். அவனே வெகுண்டு வருகின்றான் என்றால் படையிலுள்ள எல்லாருக்கும் உய்யவழியில்லாமல் இறுதி நெருங்கிவிட்டது என்பதாகிறது; அதை உணர்ந்த சமயத்திலும் அவனது தாக்குதலைப் படை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு மிகப்பெரிய ஆற்றல் வேண்டும்; அத்தகைய ஆற்றலைக் கொண்டதாக தானை இருக்க வேண்டும் என்கிறது பாடல்.

கூற்றுவனே சினந்து எதிர்த்து வரினும் சிதறுதல் இன்றி எதிர்த்துத் தாங்கும் வலிமையையுடையதே படை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கூற்றுக்கு கூற்றாக அமைவதான படைமாட்சி கூறுவது.

பொழிப்பு

கூற்றுவனே சினந்து எதிர்த்து வந்தாலும் சிதறுதல் இன்றி எதிர் நிற்கும் வீரமுடையதுவே படை.