இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0763



ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:763)

பொழிப்பு (மு வரதராசன்): எலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும்? பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும்.

மணக்குடவர் உரை: கடல்போல ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்; எலி நாகம் உயிர்த்த அளவிலே கெடும்.
இது படைமிகுத்தது வெல்லுமென்று கருதாது வீரரைத் தெளிந்தாளல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம் - எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும் - அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்.
(உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம் அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: எலிக்கூட்டம் கடல்போல் கத்தினால் என்ன? ஒரு பாம்பு சீறிய அளவில் ஓடிப்போமே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எலிப்பகை உவரி (போல) ஒலித்தக்கால் என்னாம் நாகம் உயிர்ப்பக் கெடும்.

பதவுரை: ஒலித்தக்கால்-ஆரவாரித்தால், கூச்சலிட்டால்; என்னாம்-என்ன ஆகும்?; உவரி-உப்பு நீர் நிறைந்த கடல்; எலிப்பகை-எலிப்பகை நாகம்-நல்ல பாம்பு; உயிர்ப்ப-மூச்சுவிட; கெடும்-இல்லையாகும், அழியும்.


ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடல்போல ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்;
பரிப்பெருமாள்: கடல்போல ஒலித்தக்காலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்;
பரிதி: எலிக்கூட்டம் கடல்போலக் கூடினாலும்;
காலிங்கர்: எலிப்பகை அனைத்தும் கூட்டிக்கொண்டு கடல்போல் ஆர்த்து வரினும் பயன் இல்லை;
பரிமேலழகர்: எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்?

'கடல்போல ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை என் உளதாம்?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி மட்டும் ஒலிபற்றிச் சொல்லாமல் 'எலிக்கூட்டம் கடல்போலக் கூடினாலும்' எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எலியாகிய பகை திரண்டு கடல்போல் ஒலி எழுப்பினால் என்ன தீமை வரும்?', 'கணக்கற்ற எலிகள் சமுத்திரம் போல் கூடி பகைமை பேசி யுத்தக் கூச்சல் போட்டாலும் அதனால் என்ன பயன்?', 'பகைஎலிகள் பல திரண்டு கடல்போல்க் கூச்சல் இட்டும் பயன் யாது?', 'எலிகளாகிய பகைக் கூட்டம் திரண்டு கடல் போல முழக்கம் செய்தால் நாகத்திற்கு என்ன கேடு?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எலியாகிய பகை திரண்டு கடல்போல் ஒலி எழுப்பினாலும் என்ன ஆகப்போகிறது? என்பது இப்பகுதியின் பொருள்.

நாகம் உயிர்ப்பக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எலி நாகம் உயிர்த்த அளவிலே கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது படைமிகுத்தது வெல்லுமென்று கருதாது வீரரைத் தெளிந்தாளல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அவ்வொலி நாகம் உயிர்த்த அளவிலே கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது படைமிக்கது வெல்லுமென்று கருதாது வீரரைத் தெளிந்து ஆள வேண்டுமென்றது.
பரிதி: ஒரு நாகம் புறப்பட்டால் கெட்டற்போலக் கூட்டப்படையெல்லாம் ஓர் பேர்பெற்ற சேவகன் புறப்பட்டால் கெடும் என்றவாறு. [கூட்டப்படையெல்லாம் - (வலியின்றி) மிகுதியாகக் கூடியிருக்கின்ற படை]
காலிங்கர்: என்னை எனின் அவை அத்தனைக்கும் ஒரு நாகமானது வந்து பூத்தென மூச்சு எறியக் கெட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம் அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.

'எலி நாகம் உயிர்த்த அளவிலே எலிப்படை கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எலி பாம்பு பெருமூச்சுவிட்ட அளவிலே கெட்டொழியும்', 'ஒரு நாகப்பாம்பு ஒரு சீற்றம் சீறினாலும் அத்துணை பெரிய எலிக் கூட்டமும் உடனே கலைந்து ஓடிவிடும்', 'அவை யாவும் நல்லபாம்பு மூச்செறிந்தவுடன் அஞ்சி அழிந்துபோம்', 'அந் நாகம் பெரு மூச்சு விட்டவுடனே எலிக்கூட்டம் அழிந்துவிடும் (உண்மை வீரர் சிலராயினும், வீரமில்லாப் பெருங் கூட்டத்தை வென்று விடுவர்) என்பதாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாகப்பாம்பு மூச்சுவிட்ட அளவிலே அது கெட்டொழியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எலியாகிய பகை திரண்டு கடல்போல் ஒலி எழுப்பினாலும் என்ன ஆகப்போகிறது? நாகப்பாம்பு மூச்சுவிட்ட அளவிலே அது கெட்டொழியும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

தேர்ந்து ஆளப்பட்ட வீரர் பகைக்கூட்டப் பெருக்கைக் கண்டு அஞ்சார்.

பகைப்படை எலிகளைப் போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், ஒரு நாகம் மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம்.
போர்க்களத்தில் ஆற்றல்மிக்க படைத்தலைவன் ஒருவனைக் கண்டாலே மறம்குன்றிய பகைவர் கூட்டம் பின்வாங்கி ஓடிவிடும். இதை விளக்க நல்ல பாம்பு எனும் கொடிய நச்சுக்கொண்ட நாகப் பாம்புக்கு முன் வந்த எலிப்படை கடல் போல் கூடி முழங்கினாலும், அந்நாகம் மூச்சு விட்ட அளவில் அந்த எலிக்கூட்டம் கலைந்து ஓடிவிடும் என்ற உவமை ஆளப்பட்டது. எலிக்கும் நாகத்திற்கும் பிறவிப் பகை. எலிகள் பல கூடியிருக்கும் தோற்றம் கடலுக்கும், அவற்றின் முழக்கம் கடல் ஒலிக்கும் உவமிக்கப்பட்டன. வீரமுள்ள படைத்தலைவன் நாகத்துக்கும், ஆற்றலில்லாத பகை வீரர் எலிப்படைக்கும் ஒப்புமை செய்யப்பட்டனர். பகைவரது படை பெரிதாயிருந்து என்ன பயன்? உண்மை வீரன் அஞ்சாது போர் செய்யத் தொடங்கிய உடனேயே, பகைவர்கள் ஓட்டமெடுப்பர். வலிமையற்றதாய் இருந்தால் எலிப்பெரும்படை அழிந்துதான் போகும்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இப்பாடலில் பாம்பைக் கண்டதும் எலிக்கூட்டம் பயந்து ஓடுகிறது என்ற உவமானம் சொல்லப்பட்டது. ஆனால் உவமேயம் கூறப்படவில்லை, அந்த உவமேயம் என்ன?
எலிக் கூட்டம் கடல்போல் தோற்றம் தந்து அலைஓசை போல ஆர்ப்பரித்தாலும், அது அஞ்சுந் தன்மையது. ஆனால் நாகப்பாம்பு எலிக்கூட்டம் கண்டு அஞ்சாது சீறக் கூடியது. மேலும், நஞ்சையும் கொண்டது. அதுபோல, பெரும் படையாக இருந்தபோதிலும், அது அச்சம் கொண்டதாக இருந்தால், அஞ்சாத வீரனால் தாக்கப்பட்டு அழியும். எலி என்றது மன உறுதி இன்மையைக் காட்டியது. 'நாகம் உயிர்ப்ப எலிப்பகை கெடும்' என்றதால் ஆரவாரம் மட்டும் அல்ல கூச்சலிடும் எலிக்கூட்டமே நாகத்தின் மூச்சு சீறும் ஒலியால் அழியும் என்பது கூறப்பட்டது. 'நாகம்' என்ற ஒருமை படைச்சிறுமையையும், 'உயிர்ப்ப' என்றது முயற்சிக்குறைவையும் குறித்தன.
எலிகளிடம் கட்டுக் கோப்பு இல்லை. நாகத்தைப் பார்த்ததுமே கட்டுக் கோப்பு இல்லாததினாலே சிதறி நாலாபக்கமும் ஓடிப் போகிறது. இது வீரமில்லாது வெறும் ஆர்ப்பாட்டம் செய்யும் படை வீரரும் இருப்பர் என்பதைக் காட்டுகிறது.

அந்தப் பக்கம் பகைவரின் படை பெருமளவில் வந்து ஆர்ப்பரித்து நிற்கின்றது. இந்தப் பக்கம் பெரும் வீரனான படைத்தலைவன் கிளர்ந்தெழுந்து மிடுக்குடன் தோன்றுகிறான். அவனைக் கண்டவுடனேயே, கூட்டமாக இருந்து ஆரவாரம் செய்யும் பகைப்படை, பாம்பென நிற்கும் சிறுபடை முன், அச்சம் கொண்டு பின்வாங்குகிறது.
வலிமை மிக்க வீரன் ஒருவனைக் கண்ட அளவிலேயே வாய் வீரர் கூட்டம் அஞ்சி ஓடும்; உண்மை வீரர் சிலராயிருந்தாலும், தறுகண்மை இல்லாப் பெருங் கூட்டத்தை எளிதில் வென்று விடுவர்; போரில் நிமிர்ந்து நின்று வீரம் காட்ட வேண்டும். படைமாட்சி அதன் பன்மையில் இல்லை; வீரரால் அமையும்; சிறுபடை அஞ்சாது உறுதியுடன் நிற்குமாயின் வெற்றுமுழக்கம் செய்து வரும் பெரும்படையும் அடங்கிவிடும் என்பது செய்தி.

எலியாகிய பகை திரண்டு கடல்போல் ஒலி எழுப்பினாலும் என்ன ஆகப்போகிறது? நாகப்பாம்பு மூச்சுவிட்ட அளவிலே அது கெட்டொழியும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

படைமாட்சி அதன் பன்மையில் இல்லை. அது வீரத்தால் அமையும்.

பொழிப்பு

எலிக்கூட்டம் திரண்டு கடல்போல் கூச்சலிட்டாலும் என்ன ஆகப்போகிறது? நாகப்பாம்பு சீறிய அளவில் எலிப்படை கலைந்து ஓடிவிடும்.