இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0755



அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்

(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:755)

பொழிப்பு (மு வரதராசன்): அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

மணக்குடவர் உரை: அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தைப் பொருந்தாது போக விடுக.
இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும் பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும் பொருள்தேடுதலைத் தவிர்கவென்றது.

பரிமேலழகர் உரை: அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை; புல்லார் புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக.
(அவற்றோடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல், அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர்போலத் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.)

தமிழண்ணல் உரை: பொருட் செல்வத்தைத் தேடும் போது அனைத்துயிர்களிடத்தும் அவற்றின் துன்பங்கண்டு வருந்தும் அருளும் அவற்றின்பால் பரிவு காட்டும் அன்பும் அமையுமாறு ஈட்ட வேண்டும். அங்ஙனம் ஈட்டப்படாத, பிறவழியில் வந்த பொருட்செல்வத்தை ஏற்றுக் கொள்ளுதல் கூடாது; தவறி வரினும் அச்செல்வத்தைக் கையைவிட்டுப் போகுமாறு உதறிவிடுதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.

பதவுரை: அருளொடும்-அருளுடனும்; அன்பொடும்-அன்புடனும்; வாரா-வந்தடையாத; பொருள்-செல்வம்; ஆக்கம்-பெருக்கம்; புல்லார்-பொருந்தாதவராய், தக்கவைத்துக் கொள்ளாதவராய்; புரளவிடல்-கழியவிடுக.


அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தை;
பரிப்பெருமாள்: அருளோடும் அன்போடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தை;
பரிதி: அருளும் அன்பும் இல்லாமல் கொடுமையினால் வந்த பொருள்;
காலிங்கர்: இப்படி நெஞ்சத்து அன்போடும் நல்ல அருளோடும் மருவி வாராத பொருளினது ஆக்கத்தை;
பரிமேலழகர்: தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை;
பரிமேலழகர் குறிப்புரை: அவற்றோடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல்,

'அருளோடும் அன்போடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள் பொதுநிலையில் பொருளாக்கம் என்று கூற, பரிமேலழகர் அரசு வருவாய் என்ற பொருளில் உரை கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருளும் அன்பும் பொருந்தாத செல்வத்தை', 'ஒருவர் அருளும் அன்பும் இல்லாமல் தீயவழியில் வந்த பொருட்செல்வத்தை', 'அருள் வழியிலும் அன்பு வழியிலும் வராத செல்வப் பெருக்கத்தை', 'அரசர் குடிகளிடத்துச் செய்யும் அருளும், குடிகள் அரசர்மாட்டுச் செய்யும் அன்புங் கூடிவராத பொருளை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருளும் அன்பும் இல்லாதவழியில் வந்த பொருட்செல்வத்தை என்பது இப்பகுதியின் பொருள்.

புல்லார் புரள விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருந்தாது போக விடுக.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும் பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும் பொருள்தேடுதலைத் தவிர்கவென்றது.
பரிப்பெருமாள்: பொருந்தாது போக விடுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே பொருள் ஈட்டுங்கால் பிறர் வருத்தத்திற்கு பரியாதும் பயின்றார் மாட்டுக் காதலழியவும் பொருள்தேடுதலைத் தவிர்க என்றவாறாயிற்று.
பரிதி: கொடுமையினாலேபோம் என்றாவாறு.
காலிங்கர்: எஞ்ஞான்றும் பொருந்தாராய் நழுவ விடுக என்றவாறு.
பரிமேலழகர்: அரசர் பொருந்தாது கழியவிடுக.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர்போலத் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.

'பொருந்தாது போக விடுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தொடாது போகவிடுக', 'பொருந்தாராய் விலக்க வேண்டும்', '(அறனறிந்த நல்லவர்கள்) ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் (அதனால் அதை யாரும்) விலக்க வேண்டும்', 'அரசன் ஏற்றுக் கொள்ளாது கழியவிடுக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஏற்காது விலக்கி விடுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருளும் அன்பும் இல்லாதவழியில் வந்த பொருட்செல்வத்தை புல்லார் புரளவிடல் என்பது பாடலின் பொருள்.
'புல்லார் புரளவிடல்' என்ற தொடரின் பொருள் என்ன?

அருளோடும் அன்போடும் கூடிவராத செல்வம் வேண்டவே வேண்டாம்.

அருள் இயல்போடும், அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தை விலக்கி விட்டுவிட வேண்டும்.
மற்றவர் உள்ளம் நோகா வண்ணம் அருள் பொருந்தியதாகவும் அன்பு நீங்காமல் சேர்த்ததாகவும் இருக்கின்றனவா என எண்ணிப் பார்த்து செல்வம் ஈட்டப்பட வேண்டும். அவ்விதம் வாராத பொருள் என்றால் அதனை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும். 'அருளோடும் அன்போடும் வராத பொருள்' என்பது பொதுமையில் கூறப்பட்டதுதான். எனவே இக்குறட்கருத்து பொருளீட்டும் அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் பாடலிலுள்ள அருள், அன்பு என்ற சொற்கள் நோக்கி அது அரசை நோக்கிச் சொல்லப்பட்டதாகவே கருதுவர். குடிமக்களிடத்துத் தனக்குள்ள அருளோடும் அவர்கட்குத் தன்னிடத்துள்ள அன்போடும் பொருந்தி வராத பொருளை அரசு ஏற்றுக் கொள்ளாது விலக்கல் வேண்டும் என இப்பாடலுக்குப் பொருள் கூறுவர்.

வள்ளுவர் அருள் வழியாக மக்களுக்கு அறிவூட்டி அவர்களுடைய உடன்பாட்டோடு நாட்டை ஆள்வதனையே உயர்த்திக் கூறுகின்றவர். அரசு செலுத்துதற்குப் 'பொருளே உயிர்நிலை' என்ற கொள்கையையும் அவர் ஒப்புக்கொள்கிறவர். அப்பொருள் மக்களிடமிருந்தே பெற வேண்டி இருக்கிறது. மக்கள் நலவாழ்வு பெறவேண்டும், அவர்கள் வாழ்வுநிலை உயரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு ஆள்வோர் வரிப்பணம் தேடவேண்டும். அரசுக்குரிய வருவாயை அவர்கள் மக்களிடமிருந்து அருள் உள்ளத்தோடு பொருள் பெற முயலவேண்டும். அதுபோல் மக்களும் ஆட்சி நடைபெறப் பொருள் வேண்டுமென்பதை உணர்ந்து அன்போடு மனமுவந்து கொடுக்கும் சூழல் நிலவ வேண்டும், அப்படி இல்லாத நிலையில் அரசு அப்பணத்தைப் பெறக்கூடாது; அங்ஙனம் பொருளீட்டுதல் நல்லதன்று என்று கூறுகிறார்.

பொருளினையும் அருள் வழியும் அன்பு வழியும் நின்றுதான் ஈட்டல் வேண்டும் என இக்குறள் வற்புறுத்துகின்றது. ஆட்சியிலிருப்போர் கொடுமையான வரியை வன்முறையால் வாங்குதலுமாகவும், மக்கள் வெறுப்புணர்ச்சியோடு வரியைச் செலுத்துவதுவுமாகவும் இருத்தல் கூடாது; அரசானது வரி கொடுக்க வல்லமையுள்ளவர்களிடமிருந்து தான் வரி வாங்கவேண்டும். வரி கொடுக்க இயலாதவர்களிடம் அவர்களைக் கசக்கிப் பிழிந்து பொருள் பறிக்கக்கூடாது. கொடுங்கோலால் வந்த பொருள் பழியையும் பாவத்தையுமுண்டாக்கும். மக்கள் வேண்டா வெறுப்பாக வரி செலுத்துமாறு இருக்கக் கூடாது; வறட்சியையும் வறுமையையும் உணர்ந்து அதற்குத்தக அருள் செலுத்திப் பெறவேண்டும் அல்லது நீக்க வேண்டும். எந்த நிலையிலும் தனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடு என ஓர் அரசு மக்களை அலைக்கழிக்கக் கூடாது. அது அவர்கள் அழக்கொண்டு பொருளைக் கொடுப்பதாக இருக்கும்; அது அருளோடு பெற்ற பொருள் ஆகாது.
'ஆட்சிக்கென அரசு எவ்வழியிலும் பொருள் ஈட்டலாம்' என்ற சிந்தனை சமுதாயக் கேடானது. எந்த வழியில் சேர்ந்த செல்வமாயிருந்தால் என்ன? அச்செல்வம் பயன்படாதா என்று கேள்வி அறிவுகொண்டு எழுப்பப்படுவதல்ல. அரசே கள் உற்பத்தி பண்ணுவது, அதை நேரடியாகக் குடிமக்களுக்கு விற்பனை செய்வது போன்றவை தீதால் வந்த பொருள்களாம். சூதாட்ட விடுதிகள் வழி வரும் பொருள், பரிசு சீட்டு விற்பனை போன்றவற்றின் மூலம் கிடைக்கும் பொருள் இழிந்தனவாகவே கருதப்படும். இத்தகைய செல்வத்தால் பெறும் ஆக்கத்தினைப் பெற்று மகிழ்தல் கூடாது. அவை தீமையானதாதலால் முற்றிலுமாகத் தூக்கி எறியப்படவேண்டும். தூய்மையற்ற செயல்களால் அரசு பெறுவது சலத்தால் பெறும் பொருளாகிறது.

அரசு அல்லாத நிறுவனங்கள் மற்றும் தனியார் ஈடுபடும் நடுநிலை இல்லாத வணிகம், கலப்படம் போன்ற குற்றத் தொழில்கள் புரிந்து பொருள் ஈட்டுதல், நலிந்தவர் துயருறக் கடும் வட்டி வாங்குதல் (usury) போன்றவையும் அருளின்றி வரும் பொருள்களே. விலங்குகளைக் கொன்றோ வதைத்தோ பொருள் ஈட்டுவதும் அருளற்ற முறையில் சேர்த்த பொருளாகும். அவையும் விலக்கப்பட வேண்டியன.

'புல்லார் புரளவிடல்' என்ற தொடரின் பொருள் என்ன?

'புல்லார் புரளவிடல்' என்றதற்குப் பொருந்தாது போக விடுக, கொடுமையினாலேபோம், பொருந்தாராய் நழுவ விடுக, பொருந்தாது கழியவிடுக, பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும், கையைவிட்டுப் போகுமாறு உதறிவிடுதல் வேண்டும், ஏற்க மாட்டார்கள் கைவிட்டு விடுவார்கள், தொடாது போகவிடுக, பொருந்தாராய் விலக்க வேண்டும், (அறனறிந்த நல்லவர்கள்) ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் (அதனால் அதை யாரும்) விலக்க வேண்டும், கொள்ளாமல் அப்பால் போக விட்டுவிட வேண்டும், ஏற்றுக் கொள்ளாது கழியவிடுக, அடையாது போகவிடுக, ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும், மனத்தாலும் பொருந்தாமல் தானே நீங்க விடுக, பெற விரும்பாது தள்ளிவிடுவார்களாக என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அருளோடும் அன்போடும் வரும் பொருள்கள் தீண்டத்தகாதன. அவற்றைத் தொடக்கூடாது; கழிந்து போகட்டும்; அதை விட்டுவிடு என வற்புறுத்துவது போன்று 'புல்லார், புரளவிடல்' என்று இருமுறை கூறப்பட்டது..

'புல்லார் புரளவிடல்' என்றதற்குப் பொருந்தாராய் நழுவ விடுக என்பது பொருள்.

அருளும் அன்பும் இல்லாதவழியில் வந்த பொருட்செல்வத்தை ஏற்காது விலக்கி விடுக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொருள்செயல்வகையில் தூய்மைநெறி கடைப்பிடிக்க வேண்டும்.

பொழிப்பு

அருளோடும் அன்போடும் பொருந்தாத செல்வத்தை நழுவ விடுக.