இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0753



பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:753)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

மணக்குடவர் உரை: பொருளென்னும் மெய்யாகிய ஒளி எண்ணப்பட்ட தேசமெல்லாவற்றினுஞ் சென்று பகையென்னும் இருளை அறுக்கும்.
இது, பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொருளுடையனானால் தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது.

பரிமேலழகர் உரை: பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்.
(எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.

சி இலக்குவனார் உரை: பொருள் என்று எல்லோராலும் சிறப்பிக்கப்படும் அணையாத விளக்கு, தன்னைப் பெற்றவருக்கு அவர் நினைத்த தேசத்திற்குச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருளென்னும் பொய்யா விளக்கம் எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும்.

பதவுரை: பொருள்-செல்வம்; என்னும்-என்கின்ற; பொய்யாவிளக்கம்- அணையா விளக்கு, அழியாதவிளக்கு; இருள்-இருட்டு; அறுக்கும்-ஒழிக்கும்; எண்ணிய-நினைத்த; தேயத்து-இடத்தில்; சென்று-போய்.


பொருளென்னும் பொய்யா விளக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளென்னும் மெய்யாகிய ஒளி;
பரிப்பெருமாள்: பொருளாகிய மெய்யான ஒளி;
பரிதி: அகத்திலிட்ட விளக்கு அகத்திருளை ஓட்டும்; தனம் என்கிற விளக்கு;
காலிங்கர்: நெறியினால் ஈட்டிய பொருள் என்று சொல்லப்படுகின்ற கெடாத விளக்கானது;
பரிமேலழகர்: பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு;

பொருளென்னும் மெய்யாகிய/மெய்யான ஒளி என்று பழம் ஆசிரியர்களான மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி தன என்கிற விளக்கு என்றார். காலிங்கர் நெறியினால் ஈட்டிய பொருளான கெடாத விளக்கு என உரை தருகிறார். பரிமேலழகர் பொருள் என்று சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வம் என்னும் அழியா ஒளி', 'பொருளென்னும் அணையாவிளக்கு', 'செல்வம் என்ற தப்பாத ஒளி', 'செல்வமாகிய அணையாத விளக்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செல்வம் என்னும் அணையாத விளக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எண்ணப்பட்ட தேசமெல்லாவற்றினுஞ் சென்று பகையென்னும் இருளை அறுக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது, பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொருளுடையனானால் தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது.
பரிப்பெருமாள்: எண்ணப்பட்ட தேயம் எல்லாவற்றினும் சென்று இருள்அறுக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இருள் ஆவது ஒளி இல்லாத இடம். பொருள் உண்டாகப் புகழ் உண்டாம்; புகழ் உண்டாக ஒளி எங்கும் பரக்கும் என்றது, அரசன் பொருளுடையன் ஆயின் தான் கருதிய தேயம் எல்லாவற்றினும் தன் ஆணை நடக்கும் என்றுமாம்.
பரிதி: தான் இருந்த தேசத்தில் சத்துரு என்னும் இருளை ஓட்டும் என்றவாறு.
காலிங்கர்: பிறவியில் இனிய மறுமை உலகமும் பிறவி நீங்கிய முத்தியும் தாம் கருதிய வண்ணம் பெறலாவதும் செய்து, கொலை, களவு, கள், காமம், பொய், சினம், சூது முதலியவற்றில் செல்லுகின்ற அறியாமையாகிய இருளை நீக்கி நன்மை பயக்கும், எண்ணிய தேயத்து எய்துமாறு என்றவாறு.
பரிமேலழகர்: தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.

எண்ணப்பட்ட தேசமெல்லாவற்றினுஞ் சென்று, பகையென்னும் இருளை அறுக்கும்/ இருள்அறுக்கும் என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'தான் இருந்த தேசத்தில் சத்துரு என்னும் இருளை ஓட்டும்' என்று பரிதி உரைக்கிறார். காலிங்கர் 'அறியாமையாகிய இருளை நீக்கி நன்மை பயக்கும், எண்ணிய தேயத்து எய்துமாறு' என்றார். பரிமேலழகர் 'நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்விடமும் சென்று இருளை ஓட்டும்', 'நினைத்த இடத்திற்குச் சென்று பகை என்னும் இருளைப் போக்கும்', '(அதை உடையவன்) விரும்புகின்ற எந்த தேசத்துக்கு அவன் போனாலும் அங்கே (அவனுக்கு வழிகாட்டவும் அந்த தேசத்தார் அவனை மதிக்கவும்) பிரகாசம் உண்டாக்கும்', 'தன்னை உடையார் நினைத்த இடத்தில் சென்று பகை என்னும் இருளைத் தொலைக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நினைத்த தேயத்திற்குச் சென்று பகை என்னும் இருளை ஓட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செல்வம் என்னும் அணையாத விளக்கு நினைத்த தேயத்திற்குச் சென்று பகை என்னும் இருளை ஓட்டும் என்பது பாடலின் பொருள்.
'எண்ணிய தேயம்' குறிப்பது என்ன?

பொருட்பெருக்கம் ஒருநாட்டை வல்லரசு ஆக்கும்.

பொருள் என்று புகழப்படும் அணையாத விளக்கு செல்ல எல்லா இடங்களுக்கும் சென்று ஆங்காங்கே உள்ள பகை என்னும் இருளைப் போக்கிவிடும்.
பொருள் என்பது பொய்யா விளக்காக இங்கு உருவகம் செய்யப்பட்டுள்ளது. விளக்கு என்பதே விளக்கம் என ஆனது. பொய்யா விளக்கம் என்பது அணையாத விளக்கு எனப் பொருள்படும். பொய்யா விளக்கம் எஞ்ஞான்றும் தான் இருக்கும் இடத்தில் இருள் அறுக்கும்; பொருளென்னும் விளக்கம் அது செல்லும் இடம் எல்லாம் பகையென்னும் இருளையகற்றும். விளக்கு போலவே பொருளும் பலரறியத் தெரிவது. ஏனைய விளக்குகள் அணையக்கூடிய தன்மை கொண்டவை. பொருள் என்பது அழியத்தக்கதாக இருப்பினும் தன்னை உடையவரின் எண்ணத்தை - பகை என்னும் இருளை அறுத்தல் என்னும் எண்ணத்தை - எங்கு சென்றும் முடித்துவைக்கும் வல்லமை கொண்டதாக இருப்பதால் அது 'பொய்யா விளக்கு' எனப்பட்டது. 'பொருளென்னும் பொய்யா விளக்கம்' என்று சொல்லப்பட்டது செல்வத்தின் மேன்மையைச் சுட்டுவதற்காம்.
பொருள் உதவி இல்லாமல் பகையை வெல்வது இயலாது. 'இருள் அறுக்கும்' என்று சொல்லப்பட்டது பொருளானது பகையை விரட்டி அடிப்பது மட்டுமல்ல; அதை அறவே ஒழிக்கும் என்பதையும் சொல்கிறது.

இப்பாடல் ஒரு நாட்டின் பொருள் செயல்வகையின் இன்றியமையாமையைக் கூறுவது. செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு; அதுபோலவே பொருள் படைத்த நாட்டையே மற்ற நாடுகள் மதிக்கும். ஓர் அரசு எப்போதும் செல்வ நிலையில் வலிமை பெற்றுத் திகழ வேண்டும். செல்வ நிலையில் வலிமை பெற்ற நாடுகளே உலக நாடுகளிடையே நிலைத்திருக்கும். செல்வ நிலையில் உயர்ந்துள்ள நாடுகளே படை பலத்திலும் வலிமை பெற்று விளங்க முடியும். அப்பொழுது அவை வல்லரசுகளாய் மதிக்கப்படும். முன்னேறிய நாடுதான் வல்லரசாக முடியும். செல்வம் படைக்கும் நாடுதான் முன்னேற்றம் காணும். எனவே ஒரு நாடு வல்லரசு ஆவதற்கு அத அதன் பொருளாதாரத்தை மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அதனால்தான் வள்ளுவமும் ஒரு நாட்டிற்கான செல்வம் பெருகவேண்டும் என்று வலியுறுத்துகிறது,
அறமற்ற முறையில் நடந்துகொள்ளும் பகை நாட்டினர் அடக்கப்பட வேண்டும். அதற்கு வல்லரசாய் இருந்தால்தான் முடியும். வல்லரசாவதற்குப் பொருள்நிலை உயர்ச்சி பெறவேண்டும்.

இருள் அறுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது; என்ன இருளை அது அறுக்கும் என்பது குறிக்கப்படவில்லை, 'பொருள்' என்ற உபமேயத்திற்கு. 'விளக்கம்' உவமானம். 'இருள்' உவமானம், அதற்குரிய உவமேயம் சொல்லப்படவில்லை. இருள் என்பதற்கு பகை, அறியாமை, துன்பம், வறுமை எனப்பலவற்றை உவமேயமாகக் கூறினர். எண்ணிய 'தேயம்' சென்று எனவருவதால் இருள் என்பதற்கு பகை என்பதே பொருத்தம். விளக்கு பொருள் என்பதால், இருள் பகை ஆனது.

'எண்ணிய தேயம்' குறிப்பது என்ன?

தேயம் என்ற சொல்லுக்குத் தேசம், இடம், தேகம் எனப் பல பொருள் இருப்பினும் இங்கு தேசம் அதாவது நாடு என்பதே ஏற்புடைய பொருள். எண்ணிய தேயம் என்பது நினைத்த நாடு அல்லது எண்ணப்பட்ட தேசம் எனப் பொருள்படும்.
பொருளானது வெளிநாட்டிலும் எல்லாவற்றையும் செய்து முடிக்கவல்லது. ஒரு நாடு பொருளுடையது ஆயின் தான் கருதிய தேயம் எல்லாவற்றினும் அதன் ஆணை நடக்கும்படி செய்யும் என்கிறது இப்பாடல். பொருளிருந்தால் எந்த நாடும் நட்பு நாடாகும். பகைநாடும் நட்புக்கரம் நீட்டும். இது செல்வத்தின் தனி ஆற்றலைச் சொல்கிறது. வல்லரசு நாடானது தான் இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே தனது பணபலத்தைக் கொண்டு, மற்ற பகைநாடுகளை அடக்கி வைக்கும் தகைமை கொண்டது. எந்த இடத்துக்கும் சென்று அதன் செல்வம் போராடும். அந்த அளவு செல்வத்தை ஒரு நாடு ஈட்டி வைத்திருக்க வேண்டும் என்று இக்குறள் கூறுகிறது. பொருள் வாணிகம் செய்யச் சென்ற ஆங்கிலேயர் இந்தியா உட்படப் பலநாடுகளை தம் வசம் ஆட்படுத்திக்கொண்டது அண்மைய வரலாறு.
இன்றைய பொருளியல் கோட்பாட்டின்படி ஒரு நாடு கைப்பொருளாகக் கொண்டுள்ள தங்கம், வெளிநாட்டுச் செலவாணி (Gold, Foreign Exchange Reserves) ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு அதன் வெளிப்பொருளாதார வலிமை மதிப்பிடப்பெறுகிறது.

ஜி வரதராஜன் 'பொருளுடையான் போரிடும்போது தன் நாட்டின் சிறப்பையும், பொருளுடையானையும் விளங்கச் செய்யும்' எனச் சொல்லி 'ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருளினால்தான், அந்த நாட்டின் மதிப்பு எண்ணப்படும். மேலும் அது நல்ல பொருளாக இருக்குமானால், அது எந்த நாட்டில் உண்டானது என்று அது போகும் இடந்தோறும், அந்த நாட்டு மக்கள் சிந்திப்பார்கள். அதன் காரணமாக, அந்தப் பொருள் உண்டான நாடு சிறப்பைப் பெறுகிறது. விளக்கு பொருளை விளக்குவது போல, பொருள் அப்பொருள் உண்டான தேசத்தையும், அப்பொருளை உடையானையும் விளங்கச் செய்கிறது. ஆகையால், பொருளை விளக்கம் என்றார். விளக்கானது இல்லாதபோது பொருள் மறைந்துவிடும். பொருளானது சென்ற இடத்தில் அழியாத புகழை உண்டாக்கிவிடுதலால் பொய்யா விளக்கம் என்றார்' என விளக்கமும் தருகிறார்.
நாமக்கல் இராமலிங்கம் 'பொருளுடையவன் நினைத்த தேயத்திற்குப் போனாலும் அவனுக்கு அவன் சேர்த்த பொருள் வழிகாட்டும்; அவனை மதிக்கச் செய்யும்' என உரைக்கிறர்.
சுத்தானந்த பாரதியார் 'பொருள் ஒரு பொய்யா விளக்கு. தான் எண்ணிய தேசத்துக்கு சென்று அங்குள்ள மக்களின் மடமையிருளையோட்டவல்லது. பாதிரிமார்கள் பொருட் செழிப்பால், உலகெங்குஞ் சென்று தங்கள் சமயத்தையும் கல்வி, கலை, தொழில்களையும் பரப்பி வருதல் காண்க' என இக்குறட்பொருளை விளக்குகிறார்.

செல்வம் என்னும் அணையாத விளக்கு நினைத்த தேயத்திற்குச் சென்று பகை என்னும் இருளை ஓட்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொருள்செயல்வகை அறிந்த நாடே பகையை வெல்ல முடியும்.

பொழிப்பு

செல்வம் என்னும் அணையாவிளக்கு நினைத்த இடத்திற்குச் சென்று பகை என்னும் இருளைப் போக்கும்.