இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0737



இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

(அதிகாரம்:நாடு குறள் எண்:737)

பொழிப்பு (மு வரதராசன்): ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.

மணக்குடவர் உரை: மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால்.
இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம்.
(ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: ஊற்றுநீர், மழைநீர் என்னும் இரு நீரும் வாய்ப்புடைத்தாக அமைந்த மலையும் ஆறும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்பாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

பதவுரை: இரு-இரண்டு; புனலும்-நீரும்; வாய்ந்த-வாய்ப்ப; மலையும்-மலையும்; வரு-வருவதாகிய; புனலும்-நீரும்; வல்ல-வலிமையான, அழியாத; அரணும்-நகரியும்; நாட்டிற்கு-நாட்டிற்கு; உறுப்பு-அங்கம்.


இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக; [கிணறு கல்லி-கிணறு தோண்டி]
பரிப்பெருமாள்: ஆற்று நீரும். வாய்ந்த மலையும், நிலைநீரும், ஊற்று நீரும், வலிய அரணும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: நாடு ஆக்கும் இடத்து யாறு ஒழுகும் இடத்தினையும், பயன்படும் மலையினையும், ஏரி ஆக்கும் நீர் நிறுத்தலாம் இடத்தினையும், குன்று, கல்லி நீர் உண்டாக்கலாம் இடத்தினையும், அரண் ஆக்கும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடு ஆக்குக;
பரிதி: கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் இந்த மூன்று வகை நீரும் காடும் மலையும் அரணும் நாட்டிற்கு அரணும்;
காலிங்கர்: வருபுனல் என்றது கூடிக் கூடிப் பல இடத்தும் மலை முதலாகக் கடல் ஈறாக வழி தொடர்பறாது வருபுனலுடைய ஆறுகளும்; வாய்ந்த மலை என்றது, வாய்ப்புடை மலைகளும்; இரு புனலும் என்றது, சிறிய கல்லிய இடத்துக் கீழ்நீரும் மேல் தெரியும் குளநீரும்; வல் அரணும் என்றது, பல இடத்தும் தனக்கும் தன் படைத்தலைவர்க்கும் தனது நாட்டுக் குடிகளுக்கும் சென்ற இடத்துப் பிறர் நலியாது சேர்ந்து நீங்குதற்குரிய அரண்களும்; இனி நாட்டு எல்லைக்கண் மாற்றார் வருதற்கரிய புலியும் எண்கும் மாவும் பயிலும் அடர் பெருங்காடும், மிடைதரும் கான்யாறும்; [எண்கும்-கரடியும்; மாவும் - விலங்கும்; பயிலும் -பழகுகின்ற; மிடைதரும் -நெருங்கிய ]
பரிமேலழகர்: 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும் வாய்ப்புடையதாய மலையும் அதனினின்றும் வருவதாய நீரும் அழியாத நகரியும்; [துரவும் (கிணறும்) கேணியும் (சிறுகுளமும்) கீழ் நீரையுடையன: ஏரியும் ஆறும் மேல் நீரை உடையன; அழியாத நகரி- அழியாத நகரம்]
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர்.

இருபுனல் என்றதற்குப் பழம் ஆசிரியர்கள் மேல்நீர்-கீழ்நீர், நிலைநீர்-ஊற்றுநீர், கிணற்றுநீர்-குளத்துநீர் என்றும் வாய்ந்த மலை என்றதற்கு பயன்படுமலை/வாய்ப்புடை மலை என்றும் வருபுனல் என்றதற்கு ஆற்றுநீர் என்றும் உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அகழியும் வாய்ப்பான மலையும் அருவியும் வன்மதிலும்', 'மழை நீர், கிணற்று நீர் என்ற இருவகை நீர் வளமும் அதற்கு வாய்ப்பு தரும் மலைவளமும் மலையிலிருந்து ஓடிவரும் நதிவளமும் வல்லமையுள்ள பாதுகாப்புகளும்', 'நிலத்தின்மேல் உள்ள ஆறு, குளம் முதலியனவும் நிலத்தின்கீழ் நீருள்ள கிணறு முதலியனவும் ஆகிய இருவகை நீர் நிலைகளும், நாட்டை பிளவுபடுத்தாது ஒரு புறமாய் அமைந்து வளந்தரும் வாய்ப்புடைய மலையும், மலையின்வீழ் அருவிகளும், வலிய கோட்டையும்', 'பெரிய நீர் நிலையாகிய கடலும், இயற்கையாய்ப் பொருந்தியுள்ள மலையும், அம்மலையில் தோன்றி வருகின்ற ஆறும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊற்றுநீர், மழைநீர் என்னும் இருவகை நீர்வளமும் வாய்ப்புடைத்தாக அமைந்த மலையும் ஆறும் வலிமையான அரணும் என்பது இப்பகுதியின் பொருள்.

நாட்டிற்கு உறுப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவை நாட்டிற்கு உறுப்பாதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: நாட்டிற்கு அங்கம் என்றவாறு.
பரிதி: நாட்டிற்கு உறுப்பு என்றவாறு.
காலிங்கர்: இங்குச் சொன்ன இவை அனைத்தும் மாசு அறச் சிறப்பது நாடு என்றவாறு.
பரிமேலழகர்: நாட்டிற்கு அவயமாம்.
பரிமேலழகர் குறிப்புரை: இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.

'நாட்டிற்கு அங்கம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாட்டின் உறுப்புக்கள்', 'ஒரு நாட்டிற்குச் சிறப்பு தரக்கூடிய அங்கங்கள்', 'நாட்டிற்குச் சிறந்த உறுப்புக்களாம்', 'நாட்டிற்கு வேண்டிய உறுப்புகள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாட்டிற்கு உறுப்புக்களாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊற்றுநீர், மழைநீர் என்னும் இருவகை நீர்வளமும் வாய்ப்புடைத்தாக அமைந்த மலையும் ஆறும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம் என்பது பாடலின் பொருள்.
'இருபுனல்-வருபுனல்' குறிப்பன எவை?

நீர்வளம் தரும் ஆதாரங்கள் நாட்டின் செழிப்புக்கு நல்ல உறுதி.

நிலத்தின்மேல் உள்ள நீர் ((மழைநீர் தேங்கும்)ஏரி, கண்மாய், குளம், ஊருணி), நிலத்தின் கீழ் உள்ள ஊற்று நீர் (கிணறு, ஊற்றூறுங்கேணி) ஆகிய இருவகை நீர்நிலைகளும், வாய்ப்பு உடைத்தாக விளங்கும் மலையும், ஆற்றுநீரும், வலிய கோட்டையும் நாட்டுக்குச் சிறந்த உறுப்புக்களாகும்.
நாட்டிற்கு இவ்வைந்தும் இன்றியமையா உறுப்பாகலின் அவையுள்ள இடங்கண்டு நாடாக்குக என்கிறது பாடல்.
வாய்ந்த மலை:
வாய்ப்பான மலை 'வாய்ந்த மலை' எனச் சொல்லப்பட்டது. இது மழை வளம் தரும் வாய்ப்பான மலைகளைக் குறிக்கும். மழை தடுக்கப்பட்டு வேறு திசைக்குச் செல்லாமல் இருக்கும் பக்கத்தில் மலை வாய்ப்பாக அமையுமாறு நாடு ஆக்கப்பட வேண்டும். அப்படியில்லையானால் மழை தடுக்கப்பட்டு நாட்டிற்குப் பயனில்லாமல் போய்விடும். மலையானது நாட்டிற்கு எல்லையாகவும் அரணாகவும் அமையவேண்டும் எனவும் கூறுவர்.
வல்லரண்:
நாட்டைப் பகைவரிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் காக்கும் வலிமையான அரண் வேண்டும். 'அரணும் என்றது பல இடத்தும் தனக்கும் தன் படைத்தலைவர்க்கும் தனது நாட்டுக் குடிகளுக்கும் சென்ற இடத்துப் பிறர் நலியாது சேர்ந்து நீங்குதற்கு உரிய அரண்களும்; இனி நாட்டு எல்லைக்கண் மாற்றார் வருதற்கு அரிய புலியும் கரடியும் விலங்கும் பழகுகின்ற அடர்பெருங்காடும் நெருங்கிய கான்யாறும் வேண்டும்' என வல்லரணை விளக்குவார் காலிங்கர். மலை, காடு, ஆறு இவற்றுடன் கடலும் இயற்கையாய் அமைந்த வல்லரண்களில் ஒன்றாகும்.
உறுப்பு:
அரசுக்கு அங்கங்கள் முன்பு (குறள் 381) கூறப்பட்டது. இங்கு நாட்டுஅங்கங்கள் கூறப்படுகின்றன. மழை நீர், நிலத்தடி நீர் ஆகிய இருபுனலும், மலைகளும், மலைகளில் இருந்து பெருகி ஓடும் வருபுனலான ஆற்று நீரும், இயற்கை அரணாக வனகோட்டை ஆகிய ஐந்து உறுப்புக்களைக் கொண்ட அமைப்பே சிறந்த நாடாகத் திகழ முடியும் எனச் சொல்லப்படுகிறது. புதிதாக நாடு அமைக்கும்போது இவ்வைந்துறுப்புக்களும் ஒருசேர அமைந்த இடத்தைத் தேர்ந்து எடுக்க என்கிறது பாடல். அத்தகையதொரு நாட்டின் அழகிய சூழ்நிலையில் மாந்தர் மட்டுமல்ல நீர்வாழ்வன நிலவாழ்வன ஊர்வன மற்றும் பறப்பன என எல்லாவிதமான உயிரினங்களும் வாழ்வதற்குரிய ஏற்றமான உயிர்ச்சூழல் அமையும்.

நீர் வளங்களையும் இயற்கை அரணையும் நாட்டிற்குரிய உறுப்புகளாக வள்ளுவர் பெரிதும் வலியுறுத்துகிறார் என்பதை அறியலாம். பழைய நாகரிகங்கள் ஆற்றங்கரையிலே எழுந்தன என்பர் வரலாற்று ஆசிரியர்கள்.

கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் சென்னை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) என்பவர் தமிழ்மீது காதல் கொண்டிருந்தவர். தன்பெயரை தமிழ் ஒலிமரபிற்கேற்ப எல்லீசன் என மாற்றியமைத்துக்கொண்டவர். திருக்குறள் மீது மிகுந்த பற்றுடையவர். அவர் இரண்டு வராகன் மதிப்பிலான தங்க நாணயத்தில் திருவள்ளுவர் உருவம் பொறித்து வெளியிட்டார். 1818-இல் சென்னையில் கடும் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டபோது 27 கிணறுகளைத் தோண்டிக் கல்வெட்டும் பதித்தார். அந்தக் கிணறுகளில் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் வெட்டப்பட்டது. அக்கல்வெட்டில் இக்குறள் பற்றிய பகுதி ஒன்று உள்ளது. அது
..........................................................சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி
'புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து................

என்பது. இக்கல்வெட்டு இப்பொழுது மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகால் வரலாற்று அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

'இருபுனல்-வருபுனல்' குறிப்பன எவை?

புனல் என்பது நீரைக் குறிக்கும் சொல். இக்குறளில் கூறப்பட்டுள்ள இருபுனல் என்பது கீழ்நீர், மேல்நீர் அதாவது நிலத்துக்குக் கீழுள்ள நீரையும், நிலத்துக்கு மேலுள்ள நீர்நிலைகளையும் வருபுனல் என்ற சொல் மலையிலிருந்து வருவதாய ஆற்றுநீரையும் அருவியையும் சுட்டும்.
இருபுனல்:
இருபுனல் என்பதை ஊற்றுநீர், மழைநீர் என்றும் விளக்குவர். ஊற்றுநீர் கிணறு, கேணி இவற்றிலிருந்து பெறப்படுவது. மழைநீர் என்பது மழைநீர் தேங்கும் நீர்நிலைகளான ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றைச் சொல்வது.
சி இலக்குவனார் இருபுனல் என்பதற்குப் பெரிய நீர் நிலையாகிய கடல் எனப் பொருள் கூறுவார். கடல் என்னும் பொருளுக்கு இரும்புனல் எனப் பாடமிருப்பின் பொருந்தும் என்பர்.
வருபுனல்:
மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமாம். காலிங்கர் 'வருபுனல் என்றது கூடிக் கூடிப் பல இடத்தும் மலை முதலாகக் கடல் ஈறாக வழித்தொடர்பு அறாது வருபுனலுடைய ஆறுகள்' என்று ஆறொழுகுமிடத்திற்கு அழகான ஓர் விளக்கம் தருகிறார்.

இருபுனலும் வருபுனலும் உண்ணும் நீர் பாசன நீர் என்னும் உயிர்வாழ்வுக்கும் நாட்டின் செழிப்புக்கும் இன்றியமையாது வேண்டும் நீர் ஆதாரங்களாகும். இவையின்றி இவ்வுலகம் அமையாது.

ஊற்றுநீர், மழைநீர் என்னும் இருவகை நீர்வளமும் வாய்ப்புடைத்தாக அமைந்த மலையும் ஆறும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நீர் ஆதாரங்களும் இயற்கை அரண்களும் குறைவின்றி இருப்பதே நாடு.

பொழிப்பு

ஊற்றுநீர், மழைநீர் என்னும் இருவகை நீர்வளமும் வாய்ப்பாக அமைந்த மலையும் ஆற்றுநீரும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாகும்.