இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0736



கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை

(அதிகாரம்:நாடு குறள் எண்:736)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார்.
இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும் பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.

பரிமேலழகர் உரை: கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர்.
('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: இயற்கைச் சீற்றத்தாலோ, செயற்கைச் சூழலாலோ கேடு நேராததாய், எதிர்பாராத கேடு நேர்ந்தாலும் அழியா வளமுடையதாய் விளங்கும் நாடே தலைசிறந்த நாடாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடு நாட்டின் தலை என்ப.

பதவுரை: கேடு-அழிவு; அறியா-அறியாத; கெட்டஇடத்தும்-கெட்டதாயினும்; வளம்-செழுமை; குன்றா-குறையாத; நாடு-நாடு; என்ப-என்று சொல்லுவர்; நாட்டின்-நாடுகளுள்ளுள்; தலை-சிறப்பு, முதன்மை.


கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை;
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும் பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.
பரிப்பெருமாள்: கெடுதல் அறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினையே;
பரிதி: பிறர் நாட்டிற்போய் ஏதொன்றும் தேடாமலும், பகைவரால் கெடுதல் வராததாயும், வாழ்ந்தார் கெட்டால் நாட்டாண்மைக்காரனைச் செல்வனாக்குவதும்;
காலிங்கர்: வேற்று அரசரால் கேடு அறியாது யாதானும் ஒருவாற்றால் கெட்ட இடத்தும் பின்னும் விளைவளம் குறைவுபடாதாகிய நாடு யாது;
பரிமேலழகர்: பகைவரால் கெடுதலறியாததாய், அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். [ஆகரங்கள் -சுரங்கங்கள்; படுவன-பொன், வெள்ளி முதலியன; தண்டலை - சோலை]

'கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரும் பரிமேலழகரும் 'வேற்று அரசரால் கேடு அறியாது' என்று கேடு உண்டாவதற்கான காரணமாக பகைஅரசரைச் சொல்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேடறியாது கெட்டாலும் வளங்குறையாது என்ற நாடே', 'பகைவரால் கேடு அறியாததாய் ஒருகால் கேடு வரினும் வளங் குன்றாததாய் உள்ள நாட்டினை', '(தன்னைப் பொறுத்த வரையிலும்) ஒரு கெடுதி வர இடமில்லாதிருப்பதோடு (பிறரால் கெடுதி செய்யப்பட்டு) அழிவுகள் வந்துவிட்ட காலத்திலும் (அவற்றை சமாளித்துக் கொள்ளும்படி) இயற்கை வளங்களில் குறைவில்லாமல் இருக்கிற நாடே', 'கேட்டினை அறியாததாய் கேடு வந்த பொழுதும் வளங்களில் குறையாததாய் உள்ள நாடே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கெடுதலை யறியாது, கேடு வரினும் வளங் குறையாத நாட்டினை என்பது இப்பகுதியின் பொருள்.

என்ப நாட்டின் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார்.
பரிப்பெருமாள்: எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் கெட்டதாயினும் பின்பும் ஒருவாற்றால் பயன்படுதல் ஆவது தலையான நாடென்றது.
பரிதி: நாட்டுக்குச் சிகாமணி என்றவாறு. [சிகாமணி-முடிமணி]
காலிங்கர்: மற்று அது நாடுகளில் பெரிதும் தலைமைப்பாடு உடையது என்றவாறு.
பரிமேலழகர்: எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.

'எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தலையான நாடு', 'நாடுகட்கு எல்லாம் மேலானது என்பர் நல்லோர்', 'எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்ல வேண்டும்', 'நாடுகளில் முதன்மையான நாடாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கெடுதலை யறியாது, கேடு வரினும் வளங் குறையாத நாட்டினை எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்வர் என்பது பாடலின் பொருள்.
'கேடறியா' என்றால் என்ன?

கேடுண்டானாலும் விரைந்து மீண்டும் எழத்தக்க வளமிக்கதாய் உள்ளது சிறந்த நாடு.

கெடுதி அடையாது, கேடுற்றாலும், வளம் குன்றாத நாடே எல்லா நாட்டிலும் சிறந்த நாடு என்பர்.
கேடறியா நாடு வேண்டும். கெட்டாலும் வளங்குன்றா வாழ்வைக் குடிமக்கள் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நாடு சிறந்த நாடாகக் கருதப்படும். நீர்வளம், நிலவளம், கனிமவளம் போன்ற இயற்கையின் கொடைகளும் இவற்றிலிருந்து கிடைக்கும் விளைவளங்களும் வளம் எனப்படும்.
சில நாடுகள் இயற்கையாகவே எல்லாவகையிலும் பாதுகாப்பாக அமைந்திருக்கும். இயற்கைச் சீற்றங்களால் பேரிடர் உண்டாகா வண்ணம் அமையப் பெற்றுள்ள சூழல் கொண்டதாக இருக்கும். பகைவராலும் எளிதில் தாக்கப்படாதவாறு காடு, மலை, கடல் போன்ற இயற்கை அரண்களை உடையதாகவும் இருக்கும். இதைக் கேடறியா நாடு எனலாம்.
கேடு உண்டானாலும் வளங்குன்றாத என்பது செயற்கை ஏற்பாடுகளை அதாவது கேடுநீக்கிச் சீர் செய்யும் ஆற்றலைச் சொல்வது. வளம் நிறைந்த வாழ்வுபெற நாட்டில் சீரான அமைப்புகள் இயற்றப்பட வேண்டும். கேடுகள் நேராவண்ணம் தடுப்பு முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவேண்டும். அவற்றையும் மீறி அழிவு உண்டானால் அதிலிருந்து மீள்வதற்கான முன்னேற்பாடுகளையும் செய்துகொள்ளவேண்டும்.
புலவர் குழந்தை 'மழையின்மை, மிகுமழை, பயிர்நோய் முதலியவற்றால் ஒன்றல்லது இரண்டு போகம் விளைவுகெட நேரினும் அதனால் உணவுத் தட்டுதல் உண்டாகதபடி மிகுதியாக விளையும் நாடு' என்பார்.

இரண்டாவது உலகப்போரில் பகைவரால் பெரும் அழிவைச் சந்தித்த ஜெர்மனியும் ஜப்பானும் தாம் இழந்தவற்றை மீட்டு, வளமான நாடுகள் என்று மீண்டும் பெயர் பெற்றன என்பது அண்மைக்கால வரலாற்றுச் செய்திதான். எந்த நேரமும் வெடித்துச் சிதறலாம் என்றிருக்கும் எரிமலைகளுக்கிடையில் அமைந்துள்ள நாடுகளும் நிலநடுக்கம் வழக்கமாக வந்துஅழிவை உண்டாக்கிப் போவதுமாக உள்ள தைவான் போன்ற நாடுகளும் உண்டு. இத்தகைய நாடுகள் வளமாகவும் உள்ளன. அரசின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளும் குடிமக்களின் தன்னம்பிக்கையும் அவர்களது அயராத உழைப்புமே இயற்கை அழிவை ஈடுகட்டி நாட்டின் வளத்தை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள்.

'கேடறியா' என்றால் என்ன?

கேடறியா என்ற சொல்லுக்கு கெடுதி அறியாது என்பது பொருள்.
என்ன கேடு இங்கு சொல்லப்படுகிறது? இயற்கை அளிக்கும் அழிவுகளுடன் பகையால் உண்டாகும் கேடும் சொல்லப்பட்டன. புயல், வெள்ளம், ஆழிப்பேரலை, நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் உண்டாகும் கேடுகளும், விளைச்சலுக்கு இடையூறு உண்டாக்கும் கெடுதிகளான, முற்குறள் ஒன்றில் சொல்லப்பட்ட, .விட்டில், கிளி, யானை, வேற்றரசு, தன்னரசு, மழையின்மை, கடுமழை, கடுங்காற்று போன்ற கேடுகளும், அதிகாரத்து மற்றப் பாடல்களில் கூறப்பட்ட உறுபசி, ஓவாப்பிணி, செறுபகை ஆகிய புறக்கேடுகளும் பல்குழு, உட்பகை, கொல்குறும்பு போன்ற உள்நாட்டுக் கேடுகளும் இங்கு குறிக்கப்பெற்றுள்ளன எனலாம்.

கெடுதி அறியாது உள்ள நாடு என்கிறது பாடல். கேட்டை எதிர்கொள்ளாத நாடு இருக்க முடியுமா? முடியாது. அதனால்தான் ஒருகால் இயல்பாயும் ஒருகால் மிகுந்தும் உறழ்ச்சி முடிபோடு கூடிய பாடலாக உள்ளது இது.

கெடுதலை யறியாது, கேடு வரினும் வளங் குறையாத நாட்டினை எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எவ்வகைக் கேட்டையும் எதிர்கொண்டு வளம் சிறக்கச் செய்யும் குடிமக்களைக் கொண்டதே நாடு

பொழிப்பு

கெடுதலையறியாது கெட்டாலும் வளங்குறையாது என்னும்படியான நாடு நாடுகளுள் தலையான நாடு என்பர்.