இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0734



உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு

(அதிகாரம்:நாடு குறள் எண்:734)

பொழிப்பு (மு வரதராசன்): மிக்க பசியும், ஓயாத நோயும், (வெளியே இருந்துவந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

மணக்குடவர் உரை: மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு.
இது சேர்தலாகாதன கூறிற்று.

பரிமேலழகர் உரை: உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது.
(உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.)

சி இலக்குவனார் உரை: மிக்க பசியும், நீங்காத நோயும், அழிவு செய்யும் பகையும் அடையாமல் இனிது நடப்பதே நாட்டின் சிறப்பாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு.

பதவுரை: உறுபசியும்-மிக்க பசியும்; ஓவா-நீங்காத; பிணியும்-நோயும்; செறு-அழிக்கின்ற, நெருங்கி நிற்கின்ற; பகையும்-பகையும்; சேராது-சேராமல்; இயல்வது- நடப்பது; நாடு-நாடு.


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும்;
பரிப்பெருமாள்: மிக்க பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும்;
பரிதி: பசிப் பிணியும் பல பிணியும் பகைஞரும்;
காலிங்கர்: மிக்க பசியும், நிலத்தியல்பால் உளதாகிய நீங்காப் பிணியும், தம்மைச் செறுக்கும் பகையும்;
பரிமேலழகர்: மிக்க பசியும், நீங்காத நோயும், புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும்;

'மிக்க பசியும், நீங்காத நோயும், புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீராப்பசியும் தீராநோயும் தீராப்பகையும்', 'மிக்க பசியும் நீங்காத நோயும் அழிக்கும் பகையும்', 'நீடித்த உணவுப் பஞ்சமும் தொத்து வியாதிகளும் பகைவர்களின் படையெடுப்பும்', 'மிக்க பசியும், நீங்காத நோயும், அழிவு செய்யும் பகைவரும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிக்க பசியும், நீங்காத நோயும், நெருங்கி நிற்கும் பகையும் என்பது இப்பகுதியின் பொருள்.

சேராது இயல்வது நாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சேராது இயல்வது நாடு.
மணக்குடவர் குறிப்புரை: இது சேர்தலாகாதன கூறிற்று.
பரிப்பெருமாள்: சேராது இயன்றது நாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சேர்தலாகாதன இவை என்று கூறிற்று.
பரிதி: இல்லாதது நாடு.
காலிங்கர்: சேராது நன்கு நடப்பது நாடு என்றவாறு.
பரிமேலழகர்: இன்றி இனிது நடப்பதே நாடாவது.
பரிமேலழகர் குறிப்புரை: உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.

'சேராது நன்கு நடப்பது நாடு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லாது நடப்பதுவே நாடு', 'தன்னிடம் சேராமல் நல்ல முறையில் நடப்பதே நாடு', 'வராதபடி நடத்தப்படுகிற நாடே நல்ல நாடு', 'இல்லாமல், இனிது விளங்குவதே நல்ல நாடாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இல்லாது விளங்குவதே நாடாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மிக்க பசியும், நீங்காத நோயும், நெருங்கி நிற்கும் பகையும் இல்லாது விளங்குவதே நாடாகும் என்பது பாடலின் பொருள்.
'சேராது' குறிப்பது என்ன?

வறுமை, நோய், போர்த் தொல்லைகள் நாட்டில் இல்லாதிருத்தல் வேண்டும்.

மிக்க பசியும், நீங்காத நோயும், நெருங்கி நிற்கும் பகையும் தன்னிடம் இல்லாது நடப்பதே நாடாகும்.
ஒரு நாட்டில் இவை இவை இருக்கலாகாது எனக் கூறவரும் வள்ளுவர் பசி, நோய், பகை ஆகியன இருந்தால் அது நாடாகாது என எதிர்மறை இயல்புகளைப் பட்டியலிடுகிறார்.

உறுபசி என்பதற்கு மிகு பசி எனப் பொருள் கூறுவர். இப்பசி உணவுப்பொருள் பற்றாக் குறையினால் வரும் பசிக்கொடுமையை - வறுமைப்பட்டினியால் மிகுகின்ற பொல்லாத பசியைச் சொல்கிறது. ஒரு நாட்டில் உணவுப்பொருள் பற்றாக் குறை அதன் நீர் வளம் நிலவளம் குறைவாக உள்ளமையினால் நேர்கிறது. நம் நாட்டில் பசுமைப் புரட்சி, வெள்ளைப் புரட்சி போன்ற திட்டங்களின் மூலம் வேளாண் விளைச்சல், பால் உற்பத்தி இவற்றின் பெருக்கத்தை வெற்றிகரமாகச் செய்து காட்டியிருக்கிறோம். அத்திட்டங்களைச் செயற்படுத்துதற்கு முன்னர் அப்பொருட்களின் பற்றாக் குறை மிகையாக இருந்தது.

ஓவாப்பிணி என்பது நீங்காப் கொடிய நோய்கள் குறித்தது. இது சுற்றுச்சூழல் கேட்டாலும் இயற்கையின் குளிர், வெப்ப மிகையாலும் துய்ப்புப் பொருள் தீமையாலும் நேர்வது. மக்கள் கூட்டமாக வாழ்ந்து வரும் நெருக்கடி நிலையால் இந்நோய்கள் விரைவாகப் பரவும்; விலங்குகளின் வழியாகவும் உயிர்க்கொல்லி நோய்கள் பரவுகின்றன. கொள்ளை நோய், மாட்டுக்காய்சல், பன்றிக்காய்ச்சல் முதலான நோய்களைத் தடுப்பது அரசியலின் கடமையாகும். நோய்கள் பரவாதபடி உரிய செயற்கைத் திட்டங்கள் அமைத்தல் வேண்டும். முன்னேற்றமடையாத நாடுகளில் ஊட்டச் சத்தின்மையினாலும் மக்கள் நோயுற்று வாடுவர். நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுப்பொருட்களை நுகர்வதும் தூய்மையான சூழலைப் பேணுவதும் நோய் வளர்வதைக் கட்டுப்படுத்தும்.

செறுபகையாவது வேற்று நாட்டிலிருந்து வந்து அழிவு செய்வதாம். அரசின் அங்கங்களின் வலியின்மையால் செறுபகை விளையும். ஆற்றல் இல்லா ஆட்சித்தலைவன், நல்லமைச்சு படைவலி அரண்வலி துணைவலி இல்லாமையும் பகை பெருகுவதற்குக் காரணங்கள். ஒருபுறம் அரண்களை வலுப்படுத்திக் கொண்டு மறுபுறம் அண்டை நாடுகளோடு நல்லுறவை வளர்த்து அதை நிலை நிறுத்த தொடர்ந்து முயல வேண்டும். பகைநாடுகளுடன் உள்ள தொடர்பும், பகைக்கு இடமின்றி விளங்குமாறு அமையவேண்டும். செறுபகை வளர்ந்தால் ஒரு நாட்டின் வளம் அதன் ஆக்கச் செயல்களுக்கன்றி அழிவுக்கே பயன்படும்; பகைமிக்க நாடு, எத்தகைய அரண்களைப் பெற்றதாய் இருந்தாலும் பாதுகாப்பற்றதாய் விரைந்து கெட்டு ஒழியும். நற்பேறாக, சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியையும் அதற்குப் பின்னால் இன்றளவும் உள்ள காலகட்டத்தை உலக அளவில் போர் இல்லாத அமைதிக்காலம் என்றழைக்கின்றனர். போற்றத்தக்க இந்த நிலை தொடர்ந்தால்தான் உலக அமைதி நிலவி எல்லா நாடுகளும் வளம்பெறும்.

பசியும், பிணியும், பகையும், நீங்கி; வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி (சிலப்பதிகாரம், 5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை 72-73 பொருள்: (நாட்டில்)பசி பிணி பகை யென்பன நீங்கி, மழையும் வளமும் சுரக்கவென வாழ்த்தி) என்று அன்று வாழ்த்தினர் என இளங்கோஅடிகள் தெரிவிக்கிறார். இதிலுள்ள பசியும், பிணியும், பகையும் நீங்கி என்றது இக்குறள் வரியை நினைவுபடுத்துகிறது.

'சேராது' குறிப்பது என்ன?

சேராது என்ற சொல்லுக்கு இல்லாதது எனப் பொருள் கூறினர். சேர்த்தல் என்பதற்குத் திரளுதல் என்றும் பொருளுள்ளது, நாட்டினுள் பசி, பிணி, பகை என்றிவை வளரவிடாமல் செய்யப்பெறுதல் வேண்டும் என்ற பொருளில் சேராது என்ற சொல் ஆளப்பட்டது. இவற்றை விழிப்புடன் கண்காணிக்காமல் போனால் அவை ஒருசேரத் திரண்டு தீமை விளைவிக்கும். இவற்றை அறவே ஒழிக்க முடியாவிட்டாலும், இவை திரண்டுவிடாதபடி காத்துக்கொள்ளும் அமைப்புடையதே நல்ல நாடு என்கிறது பாடல்.
பசி, பிணி, பகை என்னும் குறைபாடுகளால் நெருக்கடியும் தாக்குதலும் வருவது உலக இயற்கை. அவற்றைச் சேர விட்டுவிட்டால் பசி உறுபசியாகத் தாக்கிவிடும்; பிணி ஓவாப்பிணி ஆகும்; பகையோ செறுபகையாகச் சீறி முற்றுகைடும். இவை சமுதாய வாழ்வினை மங்கச்செய்யும் கெடுதிகளின் முன் குறிகளாம். அவற்றைத் தடுக்க அல்லது அவற்றால் உண்டாகும் விளைவுகளைக் குறைக்க நாட்டு அரசியலார் எல்லாவகை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பசி, பிணி, பகை சேராத நாடே அரண்மிக்க நாடு.

'சேராது' என்ற சொல்லுக்கு இல்லாதது அல்லது திரளாமற் பார்த்துக்கொள்வது என்பது பொருள்.

மிக்க பசியும், நீங்காத நோயும், நெருங்கி நிற்கும் பகையும் இல்லாது விளங்குவதே நாடாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பசி, பிணி, பகை இவற்றை வென்றதே நாடு

பொழிப்பு

மிக்க பசியும் நீங்காத நோயும் தீராப்பகையும் இல்லாது நடப்பதுவே நாடு.