இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0732



பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

(அதிகாரம்:நாடு குறள் எண்:732)

பொழிப்பு (மு வரதராசன்): மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

மணக்குடவர் உரை: பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு.
பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.

பரிமேலழகர் உரை: பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது.
(அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள' என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: பொருட் பெருக்கத்தால் விரும்பத் தக்கதும் கேடின்றி மிக விளைவதும் நாடு,


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.

பதவுரை: பெரும்பொருளால் -- மிக்க செல்வ வளத்தால், நெல்லால்; பெள்-விரும்ப; தக்கதாகி-தகுதி வாய்ந்ததாகி; அரும்கேட்டால்-கேடின்மையோடு; ஆற்ற-மிகவும்; விளைவது-விளைச்சல் தருவது; நாடு-நாடு.


பெரும்பொருளால் பெட்டக்க தாகி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகி;
மணக்குடவர் குறிப்புரை: பெரும்பொருள்- நெல்லு.
பரிப்பெருமாள்: பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகி;
பரிப்பெருமாள் குறிப்புரை: விரும்பத்தக்கது என்றமையால் பெரும் பொருளாவது நெல்லு;
பரிதி: கலக்கத்தில் கெடப்பட்ட நாட்டார் செல்வம் பெறுவதாக;
காலிங்கர்: அவ்விடத்து வாழ்வார் பலரும் பெரும் பொருட் செல்வருமாய்ப் பிறநாட்டுள்ளோரும் நம்மை நாள்தோறும் விரும்பத் தக்கதுமாய்;
காலிங்கர் குறிப்புரை: பெட்டக்க என்பது விரும்பத்தக்க என்றது.
பரிமேலழகர்: அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்;
பரிமேலழகர் குறிப்புரை: அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது.

'பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரும் பரிமேலழகரும் பிறநாட்டுள்ளோரும் விரும்பத்தக்கதாய் எனச் சேர்த்துக் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகுந்த பொருள் வளத்தால் பிற நாட்டாலும் விரும்பத் தக்கதாய்', 'பல பொருட்களும் கிடைக்கக்கூடிய வளமான நாடென்று யாரும் விரும்பி நாடி வரக்கூடியதாகவும்', 'மிகுந்த பொருளுடைமையாற் பிற நாட்டாராலும் விரும்பத் தக்கதாய்', 'மிகுந்த பொருள் உடைமையால் பிற நாட்டாராலும் விரும்பத்தக்கதாய்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிகுந்த பொருள் வளத்தால் விரும்பத் தக்கதாய் என்பது இப்பகுதியின் பொருள்.

அரும்கேட்டால் ஆற்ற விளைவது நாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு.
மணக்குடவர் குறிப்புரை: கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.
பரிப்பெருமாள்: கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: விரும்பத்தக்கது என்றமையால் பெரும் பொருளாவது நெல்லு; கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயல் என்றிவற்றான் வரும் நட்டம். இது, மேல் சொன்னவும் சொல்லாதனவும் தொகுத்துக் கூறிற்று.
பரிதி: முழு விளைச்சல் கொடுப்பது நாடு என்றவாறு.
காலிங்கர்: தம் அரசரானும் பிறவாற்றானும் எஞ்ஞான்றும் கேடறியாதுமாய் அளவிறந்த விளைச்சலை உடையது யாது, அதுவே நாடாவது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அருங்கேட்டால் என்பது கேடரிய என்றது.
பரிமேலழகர்: கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது.
பரிமேலழகர் குறிப்புரை: கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள' என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று. [பெயல்-மழை; விட்டில் - ஒருவகைப் பூச்சி; அரசண்மை- அரசன் அணுகியிருத்தல். வேற்றரசன் நெருங்குதல் என்வும் கூறுவர்; ஈதி-கேடு; ]

பெயல்-மழை

'கேடறியாது அளவிறந்த விளைச்சலை உடையது நாடு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேடில்லாததாய் மிகுதியாக விளைவதே நாடு', 'குறைந்த உழைப்பில் மிகுந்த விளைச்சல் தரக்கூடியதாகவும் உள்ளதே நல்ல நாடு', 'நோய், நீரின்மை முதலிய கெடுதியில்லாமையால் பயிர்கள் மிகுதியாக விளையக்கூடியதாய் உள்ளதே சிறந்த நாடாகும்', 'கேடில்லாமல் மிகுதியாக விளைவதே நாட்டின் சிறப்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கேடின்றி மிக விளைவதே நாடு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மிகுந்த பொருள் வளத்தால் விரும்பத் தக்கதாய் கேடின்றி மிக விளைவதே நாடு என்பது பாடலின் பொருள்.
'பெரும்பொருளால்' குறிப்பது என்ன?

செல்வச் செழிப்பான நாடு உலகோரால் விரும்பப்படும்.

மிகுபொருள் வளத்தால் விரும்பப்பட்டதாகிக் கேடேயில்லையென்னுமளவாய் அமைந்து அளவறிந்த விளைப்பொருளைத் தருவதே நாடாகும்.
பெரும் பொருளுடைமை, பெட்டத்தக்கதாதல், கேடில்லாமை, விளைவு என்ற நான்கு சிறப்பினை உடையது நாடு என இக்குறள் கூறுகிறது.

பெட்டக்கது: இத்தொடர் பெள் அல்லது பெட்பு + தக்கது என விரியும். பெட்பு என்ற சொல்லுக்கு விருப்பம் என்பது பொருள். எனவே பெட்டத்தக்கதாகி என்றது விரும்பப்படுவதாகி எனப் பொருள்படும். ஒரு நாடு எப்பொழுது விரும்பப்படுவதாகிறது? பொருள் வளமே முதன்மைக் காரணம். செல்வம் கொழிக்கும் நாடு சோம்பியிராமல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும். அத்தகைய நாட்டில் மக்களுக்குப் பொருள்தேடும் வாய்ப்புகளும் வசதிகளும் மிகுதியாக இருக்கும். எனவே அங்குள்ள மக்கள் அதைவிட்டு நீங்க நினையார். இன்றும் மதுரைக்காரர்கள் 'மதுரையைச் சுற்றிய கழுதைகூட மதுரையைவிட்டு வெளியே வேறெங்கும் போகாது' என்று கூறுவர். இது மதுரையின் ஈர்ப்புத்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. அதுபோல ஹாங்காங், அமெரிக்கா போன்ற வளமிக்க நாடுகளுக்குச் சென்று குடியேறியவர்களும் அந்த நாடுகளின் மேல் விருப்பம் கொண்டு அவற்றை விட்டு வேறெங்கும் செல்ல விருப்பமில்லை என்பர்.
பெருகி இருக்கும் பொருள் வளத்தால் விரும்பத்தக்கதாக ஆவது 'பெட்டக்கது' என்று சொல்லப்பட்டது.

அரும்கேடு: அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் (தீவினையச்சம் 210 பொருள்: ஒருபக்கமாக விலகிச்சென்று தீமைகளைச் செய்யவில்லையானால் கேடு இல்லாதவன் என்று தெளிக) என்ற குறளில் அருங்கேடன் என்பது கேடு இல்லாவன் என்ற பொருளில் ஆளப்பட்டது. அதுபோலவே இங்கு அரும்கேடு என்பது கேடின்மை அதாவது கேடு இல்லாதது என்ற பொருள் தரும். கெடுதியே இல்லை என்னுமளவிற்கு மிகக் குறைவான கேடுகள் உண்டாகக்கூடிய நாடு என்பது கருத்து. என்ன வகையான் கேடுகள் நாட்டிற்கு நேரும்? தேவநேயர் 'கேடுகள் மிகுமழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, பகையரசண்மை என ஆறு என்றும், விட்டில், கிளி, யானை, காட்டுப்பன்றி, தொட்டியர், கள்வர் பெரும்புயல் என ஏழென்றும், விட்டில், கிளி, யானை, வேற்றரசு, தன்னரசு, மழையின்மை, கடுமழை, கடுங்காற்று என எட்டு என்றும் மூவகையான் சொல்லப்படும் என உரைத்தார். அருங்கேட்டால் என்பதற்கு அதிகத்துன்பமில்லாமல் அதாவது சிறு உழைப்பால் பெரும்பயன் அளிப்பதாக' எனவும் பொருள் கூறினர்.
'அரும்கேட்டால்' என்ற தொடர் கடுமழை, மழையின்மை, சூறாவளி, நிலநடுக்கம், கடல்அலைப்பு, விலங்குகள், பறவைகள் போன்றவற்றால் விளையும் இயற்கையான கேடுகள் அல்லது தன்னரசு, வேற்றரசு போன்ற செயற்கையால் தோன்றும் கேடுகளிடையேயும் தனது வளமையிற் குறைவுபடாது என்பது குறித்தது.

ஆற்றவிளைவது: இத்தொடர் மிகுதியாக விளைச்சல் தருவது எனப் பொருள்படும். மிகுதியான விளைபொருள் செய்ய அந்நாட்டில் நிலவளம், நீர்வளம் மிகையாக இருக்க வேண்டும். வேளாண்மையால் கிடைக்கும் விளைச்சலில் சிறந்ததாகவும் இருப்பதை ஆற்றவிளைவது என்ற தொடர் குறிக்கிறது.

பெரும் பொருள் பெருக்கத்தால் உலகோரால் விரும்பத் தகுந்ததாகி, கேடுகள் அரிதாகி மிகுதியான விளைச்சலை உண்டாக்கித் தருவதே நல்ல நாடு

'பெரும்பொருளால்' குறிப்பது என்ன?

'பெரும்பொருளால்' என்றதற்கு அவ்விடத்து வாழ்வார் பலரும் பெரும் பொருட் செல்வருமாய், அளவிறந்த பொருளுடைமையால், மிக்க பொருள்வளம் உடையதாய், அளவு கடந்த இயற்கைப் பெருஞ்செல்வங்களை உடைமையினாலே, அளவிறந்த பொருள்கள் விளைவதாகவும், பொருட் பெருக்கத்தால், மிகுந்த பொருள் வளத்தால், பல பொருட்களும் கிடைக்கக்கூடிய வளமான நாடென்பதால், மிகுந்த பொருள்களால், மிகுந்த பொருளுடைமையால், பெரும்பொருள் வளத்தால், எல்லா வகைப் பொருள் வளமும் பெருகி இருப்பதால், நெல் விளைவால், பல்வகைப் பொருள் வளமிகுதியால், ஏராளமான உற்பத்திப் பொருளோடும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தொல்லாசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் தமது உரையில் பெரும்பொருள் என்பதற்கு 'நெல்லு' என்று பொருள் கொள்கின்றார்கள். 'விரும்பத்தக்கது என்றமையால் பெரும் பொருளாவது நெல்' என்பது பரிப்பெருமாள் தரும் விளக்கம். இன்றைய ஆசிரியர்களில் குழந்தை மட்டுமே 'பெரும்பொருள் -நெல், கம்பு, சோளம் முதலிய தவசங்களைச் சிறு தவசம் என்னும் வழக்கால் நெல் பெரும்பொருள் எனப்பட்டது' என்று கூறி 'வயல் சூழ்ந்த இடங்களில் வாழவே மக்கள் விரும்புதல் இயல்பு' எனவும் எழுதுகின்றார்.

தண்டபாணி தேசிகர் நெல் என்ற பொருளை ஒப்பாமல் 'ஆற்ற விளைவது நாடு' என்றதால் விளைவின் மிகுதியை ஆசிரியர் குறித்ததால் பெரும்பொருள் என்பது நெல் ஒழிந்த மணியும் பொன்னும் முதலான விலையுயர்ந்த பொருள்களேயாம்' எனக் காரணமும் காட்டுகிறார்.
தெ பொ மீனாட்சிசுந்தரம் இங்கு சொல்லப்பட்ட பொருள் என்பதற்கு இயற்கை வளம் எனப் பொருள் கொள்கிறார். அவர் 'விளைநிலமும், கட்டட மனையும், எண்ணெய், உலோகம் முதலியன தருகிற சுரங்கமும், பிற மூலப் பொருள்களும் என்ற இவை எல்லாம் அடங்கியதே இயற்கை ஆம். இவையே மனிதனது முயற்சியின்றி இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களாகும். இயற்கை வளமே முதலில் நம்மைக் கவர்வது. நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் இயற்கை வளந்தேடியே மக்கள் அலைந்தனர்; மக்கள் இயற்கை வளங்கொழிக்கும் இடத்தில் தங்கிக் காடு கெடுத்து நாடாக்கினர். இந்த இயற்கை வளம் மாறாமலும் இருத்தல்வேண்டும். 'அளவிறந்த பொருள் உடைமையாலே பிறதேயத்தாரானும் விரும்பத் தக்கதாகவும், கேடின்மையோடும் கூடி மிக விளைவதே நாடு' என்று இதற்குப் பொருள் எழுதுகின்றார் பரிமேலழகர். 'அளவிறப்பு, பொருள்களது பன்மை மேலும் (அதாவது பலவகை மூலப் பொருள்கள் உண்டு என்றபடி) தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் (ஒவ்வொரு மூலப்பொருளும் மிகுதியாய்க் கிடைக்கும் என்றபடி) நின்றது' என்று அவர் மேலும் விளக்குகிறார்' என்று பொருள் என்பது ஏன் இயற்கை வளம் என்பதை விரிவுபடச் சொல்கிறார்.

'பெரும்பொருளால்' என்ற தொடர் பொருட்பெருக்கத்தால் என்ற பொருள் தரும்.

மிகுந்த பொருள் வளத்தால் விரும்பத் தக்கதாய் கேடின்றி மிக விளைவதே நாடு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வளமான நாடு ஈர்ப்பாற்றல் மிக்கது.

பொழிப்பு

மிகுந்த பொருள் வளத்தால் விரும்பத் தக்கதாய் கேடின்றி மிக விளைவது நாடு