இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0727



பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:727)

பொழிப்பு (மு வரதராசன்): அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.

மணக்குடவர் உரை: பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.
மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.

பரிமேலழகர் உரை: பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல்.
(பேடி : பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றா யிற்று.)

இரா இளங்குமரன் உரை: கற்றறிந்தோர் அவையில் உரையாற்ற அஞ்சுபவன் கற்ற நூலறிவு, பகைவரோடு போரிடும் களத்தில் கோழையின் கையில் உள்ள சிறந்த படைக்கருவி போல்வதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவையகத்து அஞ்சும் அவன்கற்ற நூல் பகையகத்துப் பேடிகை ஒள்வாள்.

பதவுரை: பகை-எதிரியாந்தன்மை; அகத்து-நடுவே; பேடி-கோழை, பெண்ணியல்பு மிகுந்த ஆடவன், அலி; கை-கை; ஒள்-ஒளிபொருந்திய, கூர் தீட்டியதல் ஒளிவிடும்; வாள்-வாள் என்னும் போர்க்கருவி. அவை-மன்றம்; அகத்து-இடையில்; அஞ்சும்அவன்-நடுங்குபவன்; கற்ற-கற்ற; நூல்-இலக்கியம்.


பகையகத்துப் பேடிகை ஒள்வாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும்;
பரிப்பெருமாள்: பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும்;
பரிதி: உயுத்த களரியிலே பேடி கையில் வாளன்றோ; [உயுத்த களரி - போர்க்களம்]
காலிங்கர்: ஒருவன் தான் பகைநடுவுள் புக்க இடத்தும் உறையகத்து ஒடுங்கிய கூரிய தெளிந்த வாளினை ஒக்கும்;
பரிமேலழகர்: எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: பேடி- பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.

'பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'போரில் பேடி பிடித்த கூரியவாள் போலும்', 'பகை நடுவே சண்டையிட நிற்கும் பேடியின் கையிலுள்ள கூரிய வாள் பயன்படாமல் சிறப்பிழத்தல் போல', 'பகைவர்கள் வந்துவிட்டால் (அஞ்சி நடுங்கிவிடும்) பேடியின் கையிலுள்ள கூரிய வாளுக்குத்தான் ஒப்பாகும்', 'பகை நடுவில் பகைவரைக் கண்டு அஞ்சும் பேடி பிடித்த வாளை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகை நடுவில் பேடி பிடித்த கூரியவாள் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

அவையகத்து அஞ்சும் அவன்கற்ற நூல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.
மணக்குடவர் குறிப்புரை: மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.
பரிப்பெருமாள்: அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் பயனில்லை யென்றார். இது பயனில்லாதவாறு காட்டிற்று.
பரிதி: ஆஸ்தானத்துக்கு அஞ்சுமவன் கற்ற நூல் என்றவாறு.
காலிங்கர்: யாது எனின், ஒருவன் அவையில் சென்று புக்க இடத்துத் தனது கல்வியால் தெளிந்த கூரிய அறிவு புலப்படாமை அஞ்சி இருப்போன் கற்ற நூலானது என்றவாறு.
பரிமேலழகர்: சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல்.
பரிமேலழகர் குறிப்புரை: களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றா யிற்று.

'அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேடையில் அஞ்சுபவன் கற்ற நூற்படிப்பு', 'அவையிடத்தே பேச அஞ்சுபவன் கற்ற சிறந்த நூலும் பயன்படாமல் சிறப்பிழக்கும்', 'கற்றவர்கள் கூடிய சபையில் எதிர்வாதம் பேசுகிறவனுக்கு அஞ்சுகிறவன் கற்ற கல்வி', 'அவையில் சொல்வதற்கு அஞ்சும் ஒருவன் கற்ற நூல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவையில் பேசுவதற்கு அஞ்சுபவன் கற்ற நூல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவையில் பேசுவதற்கு அஞ்சுபவன் கற்ற நூல் பகை நடுவில் பேடிகை ஒள்வாள் போலும் என்பது பாடலின் பொருள்.
'பேடிகை ஒள்வாள்' குறிப்பது என்ன?

கோழையின் கையிலுள்ள வாளும் பயந்தவன் அறிவும் செயலுக்கில்லை.

அவையின்கண் சென்று பேச அஞ்சுபவன் கற்றநூலறிவு, பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற கோழையின் கையில் உள்ள கூர்தீட்டிய வாளை ஒக்கும்.
போர்க்களத்திற்குச் சென்றவனிடம் நன்கு கூர்தீட்டப்பட்டு ஒளிரும் வாள் உள்ளது. அப்படை(கருவி) தன் கையில் இருந்தும் இயல்பான கோழைத்தனத்தால் பகைவர் முன்னே அதை உறையிலிருந்து உருவி அவரை வீழச்செய்யவேண்டுமென்று தோன்றாமல் செயலிழந்து நிற்கின்றான். அதுபோலவே ஒருவன் நல்ல நூலைக் கற்றுள்ளவன்தான் என்றாலும் கூட்டத்தினரிடம் சென்று பேச அஞ்சித் தான் கற்றறிந்தவற்றை உணர்த்த முடியாமல் தன் நூலறிவின் பயன்பெருக்கமுடியாமல் இருக்கிறான். போர்க்களத்தில் பேடி கையில் உள்ள பளபளப்பாகத் தீட்டி மின்னும் வாளும் பயனில்லை. அதுபோலச் அவைக்கு அஞ்சுவோன் கற்ற நூலறிவும் பயன்படவில்லை.

இக்குறளிலுள்ள பகையகம் என்ற சொல் போர்க்களம் என்று பொருள்படும்; பேடி என்றது அச்சமுள்ள கோழையைக் குறிக்கும் சொல்; இங்கு பகைவனை எதிர்த்துப் போர் புரிய அஞ்சுபவனைச் சுட்டுகிறது. ஒள்வாள் என்ற தொடர் ஒளிரும் வாள்(படை) என்ற பொருள் தருவது; கூர் தீட்டிய வாள் ஒளிரும்; அந்தக் கூர்மையின் ஒளி தங்கிய வாள் கருவி ஒள்வாள் எனப்பட்டது.

இதற்கு முந்தைய குறளில் 'வாளொடுஎன்' எனப் பொதுப்படக் கூறப்பட்டது. இங்கு அக்கருத்து ஒரு உவமை வழி விளக்கப்படுகிறது. கோழை ஒருவன் தன்னிடமுள்ள வாளைப் பயன்படுத்தாமையான் தன்னை வெளிக்காட்டிக்கொண்டது போலக் கற்றவனும் அச்சத்தால் நூலறிவு பயன்படாமையைக் காட்டிக்கொள்கிறான் என்பது உவமை.

'பேடிகை ஒள்வாள்' குறிப்பது என்ன?

வீரம் இல்லாத கோழைக்கு பேடி எனப் பெயர். பேடி என்றதற்கு எதற்கும் அஞ்சும் கோழை என்றும் ஆண்மை குறைந்து பெண்மை மிகுந்திருப்பவள் என்றும் பொருள் கூறுவர். பேடி என்பதற்கு பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள் என்பதினும் கோழை என்று இங்கு பொருள் கொள்வது பொருத்தம். பெண் இயல்பு மிக்கவளை ஏன் போfர் செய்ய நிறுத்தப் போகிறார்கள்?
பேடி கை என்பது பேடியின் கையிலுள்ள என்ற பொருள் தரும்.
பேடிகை ஒள்வாள் என்ற தொடர்க்கு கோழையின் கையிலுள்ள கூர்தீட்டிய வாள் என்பது பொருள். ஒளிமிக்கது அவ்வாள் என்பது பயன்படுத்தப்படாததென்பதைக் காட்டுகிறது எனவும் கூறுவர். .....பேடிகை வாளாண்மை போலக் கெடும் (ஆள்வினையுடைமை 614 பொருள்: எதற்கும் அஞ்சும்பேடியின் கையிலுள்ள வாளாட்சி போலக் கெடும்) என்று குறளில் வேறோரிடத்திலும் பேடிகை வாள் பற்றிச் சொல்லப்பட்டது. இக்குறளில் அவையில் பயன்படாக் கல்வி போரிட அஞ்சுபவன் கை வாளுக்கு ஒப்புமை கூறப்பட்டது. இரண்டினாலும் உறுபயன் ஒன்றுமில்லை. பகைவர் நடுவே புகுந்த கோழையின் கையிலேயுள்ள ஒளிரும் வாள் பயன்படாததைப் போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது என்பது செய்தி.

காலிங்கர் உரை 'ஒருவன் தான் பகைநடுவுள் புக்க இடத்தும் உறையகத்து ஒடுங்கிய கூரிய தெளிந்த வாளினை ஒக்கும்; யாது எனின், ஒருவன் அவையில் சென்று புக்க இடத்துத் தனது கல்வியால் தெளிந்த கூரிய அறிவு புலப்படாமை அஞ்சி இருப்போன் கற்ற நூலானது' எனச் சொல்கிறது. தண்டபாணி தேசிகர் காலிங்கரது உரையை. 'அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூலறிவு வாய் வழி வந்து கேட்போருள்ளத்துத்தைத்து உணர்வை எழுப்புதலாகிய பயனைத் தராததால் பேடி கை வாளும் அத்தகையது என்பார்; உறையகத்து ஒடுங்கிய வாள் என்று உவமையினும் பொருளினும் பொதுத்தன்மை விரித்து விளக்கிய நயம் மிகச் சிறந்தது' என்றும் 'அவைக்கோழை கற்றநூல் வாய்வழிப் பேச்சாக வெளிப்பட்டுக் கேட்டாரைப் பிணிக்காது. பேடிகைவாள் அச்சத்தால் உறையைவிட்டே வெளிவராது என்ற உவமத்திற்கும் பொருளுக்கும் உள்ள பொதுத்தன்மையையும் காட்டிக் கருத்தை மிகுவிக்கிறது' என்றும் பாராட்டி உரைத்து மகிழ்வார்.
ஜி வரதராஜன் 'பேடி கையிலே உள்ள வாளானது போர்க்களத்திலே பகைவர்க்கு அவனையே கொல்லத்தான் உதவும். பேடியானவன் மன ஊறுதியில்லாதவனாதலால் அவன் கையிலுள்ள வாளே அவனுக்கு எமனாயிற்று. அது போலச் சபைநடுவே சென்று, கற்றவரைக் கண்டு பேச அஞ்சுபவனுக்கு, அவன் கற்ற நூலறிவு அவனுக்கே அவமானத்தைக் கொடுத்து இழிவு தருகிறது. மனத்தைரியமில்லாதபடியால் அவன் கற்ற அறிவே அவனுக்கு இழிவைக் கொடுத்தது. பேடிக்குக் கையிலே வாள் இல்லையென்றால், இறவாமலாவது திரும்பி வந்துவிடலாம். அது போல, நூலறிவு இல்லாதவன் சபைக்குச் சென்றால், பிறர் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பேசாது திரும்பி வந்து விடலாம். ஆகையால் கல்விமான் கல்வியை வாளாகக் கொண்டும், பேச்சுத்திறமையால் அஞ்சாமையை வீரமாகக் கொண்டும், அவையாகிய போர்க்களத்தில் வெற்றி காணவேண்டும் என்றார்' என நல்லதோர் விளக்கவுரை தருகிறார்.

அவையில் பேசுவதற்கு அஞ்சுபவன் கற்ற நூல் பகை நடுவில் பேடி பிடித்த கூரியவாள் போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கற்றார் இழிவு எய்தாவண்ணம் அவையஞ்சாமை காத்துதவும்.

பொழிப்பு

அவையில் பேசுவதற்கு அஞ்சுபவன் பகை நடுவே அஞ்சிநிற்கும் பேடியின் கையிலுள்ள கூரிய வாள் போலும்.