இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0724



கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:724)

பொழிப்பு (மு வரதராசன்): கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லித் தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது.

பரிமேலழகர் உரை: கற்றார்முன் கற்ற செலச்சொல்லி - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க.
(எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அதனது ஒருசார்பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கற்றவர்முன் கற்றதை எடுத்துச் சொல்லுக; மிகக் கற்றவரிடம் மிகுதியைத் தெரிந்துகொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பதவுரை: கற்றார்-கற்றவர்; முன்-எதிரில்; கற்ற-கற்றவற்றை; செலச்சொல்லி-மனங்கொள்ள உரைத்து; தாம்-தாம்; கற்ற-கற்றதினும்; மிக்காருள்-மிகக்கற்றவரிடத்தில்; மிக்க-மிக்கவை; கொளல்-அறிக.


கற்றார்முன் கற்ற செலச்சொல்லி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லி;
பரிப்பெருமாள்: தாம் கற்றதனைக் கற்றவர்முன்பே இசையச் சொல்லி;
பரிதி: கற்றார் மனம் மகிழும்படி தாம் கற்ற கல்வியைச் செலுத்தி;
காலிங்கர்: இவ்வாறு அறிவு பெரிதுடைய அமைச்சரானோர் யாது செயற்பாலது எனின், பலவற்றையும் கற்று வல்ல சான்றோர் கூட்டத்து அவைமுன்னர்த் தாம் கற்றனவற்றை அவர் செவிக்குச் செல்லுமாறு சொல்லுதலும் செய்து;
பரிமேலழகர்: பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி;

'தாம் கற்றவற்றைக் கற்றவர்முன்பு அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் கற்றவற்றைப் பல நூல்களையும் கற்றார் அவையில் உளங்கொள்ளச் சொல்லி', 'கற்றவர்கள் சபையில் தாம் கற்றதைச் சபை ஏற்றுக் கொள்ளும்படி அஞ்சாமல் பேசுவதும்', 'கல்வியிற் சிறந்தாரிடத்தே தாங் கற்றனவற்றை அவர் மனங்கொள்ளும்படி சொல்லி', 'பலநூல்களையும் கற்றார் கூட்டத்தில் தாம் கற்றவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தாம் கற்றவற்றைக் கற்றார் அவையில் அவர் ஏற்கும்படி சொல்லி என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது.
பரிப்பெருமாள்: தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கற்ற பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: கேட்டல் நாணாமையால் வருதலின் அஞ்சாமை ஆயிற்று. 1மேல் அரிது என்று கூறிய அவை அஞ்சாமை எத்தன்மைத்து என்றாற்கு இத்தன்மைத்து என்று கூறப்பட்டது.
பரிதி: தம்மின் மிக்காருள் மிகுந்த கல்வியைக் கண்டால் அவரிடத்திலே கற்பது கல்வி என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுவேயும் அன்றி அவ்விடத்துத்தாம் கற்றனவற்றின் மிக்கார் உளர் எனின் மிக்கனவற்றை இகழாது பெரிதும் குறிக்கொள்க என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அதனது ஒருசார்பயன் கூறப்பட்டது.

'தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்க/ கொள்ளுதல் அவையஞ்சாமையாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மினும் மிகக்கற்ற பேரறிஞரிடத்து மிக்க பொருள்களை அறிந்து கொள்க', 'தம்மைவிட அதிகமாகக் கற்றவரிடத்தில் (விவாதிக்க நேரின்) அவர்கள் அதிகமாகக் கற்றுள்ளதை ஏற்றுக் கொள்வதும்தான் (அவையஞ்சாமை)', 'தம்மினும் மிகுதியாகப் படித்தவரிடமிருந்து மிகுதியாகத் தெரிய வேண்டியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்', 'தம்மைவிடக் கற்றாரிடமிருந்து இன்னும் மிகுதியானவற்றை அறிந்துகொள்ளுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்மினும் மிகக் கற்றவரிடத்து மிகுதியை அறிந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாம் கற்றவற்றைக் கற்றார் அவையில் அவர் ஏற்கும்படி சொல்லி தம்மினும் மிகக் கற்றவரிடத்து மிகுதியை அறிந்து கொள்க என்பது பாடலின் பொருள்.
'மிக்காருள் மிக்க கொளல்' குறிப்பது என்ன?

கொடுத்துப் பெற்றுக் கல்வி கேள்வியைப் பெருக்கிக் கொள்க.

கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர் ஏற்கும்படி எடுத்துச் சொல்லித் தம்மினும் மிக்காராகிய கற்றாரிடமிருந்து மிகுதியை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
தம்மைப் போல் கற்றவர் முன்னர் தாம் கற்றவற்றை அவர் உள்ளம் ஏற்குமாறு சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது தாம் சொன்னவற்றில் ஏதேனும் குற்றம் இருந்தால் கேட்பவர் திருத்திக் கூறுவார். அது தம் கல்வியை மேம்பாடடையச் செய்யும்.
தம்மிலும் தம் துறையில் மேலானவர்கள் யாரெனக் கண்டு, அவர்களிடமிருந்து தாம் கற்றவற்றிற்கு மேற்பட்டவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
இங்ஙனம் கலந்துரையாடல் வழி தாம் அறிந்தவற்றைக் கற்றார் கேட்குமாறு எடுத்துக்கூறுவதாலும், தம்மினும் அறிவில் மிக்காரது கருத்துக்களைத் தாம் உள்வாங்கிக் கொள்வதாலும் ஒருவர் தம்மைச் செம்மைப்படுத்திக் கொள்ளமுடியும். தமக்குத் தெரிந்ததை அஞ்சாமல் பேசுதல், தெரியாததை தம்மிலும் மிக்கார் பேசும்போது அறிந்துகொள்ளல் என இவ்விரண்டு பண்புகளையும் வளர்த்துக் கொள்பவர் அவையில் எடுத்துரைப்பதற்கோ அல்லது கற்றார் தம்முள் உரையாடுவதற்கோ அஞ்ச வேண்டியிராது.

கற்றவர்க்குகூட ஓர் அவையில் பேசுவதற்கு, துணிவு தேவை. கற்றார் கூட்டத்தில் எடுத்துச் சொல்வது மட்டுமன்றி, அவர்களில் தம்மிலும் மிகுதியாகக் கற்றவர்களிடமிருந்து, நாண் கொள்ளாமல், கேட்டறிந்து கொள்வதற்கும் அவையஞ்சாமை வேண்டும். இதனாலேயே இக்குறள் அவையஞ்சாமையில் வைக்கப்பெற்றது.

'மிக்காருள் மிக்க கொளல்' குறிப்பது என்ன?

'மிக்காருள் மிக்க கொளல்' என்ற தொடர் 'நம்மை விடக் கற்றவர்களிடம் கூடுதலாக அவர்கள் படித்துள்ளவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்' என்ற பொருள் தரும்.
பரிமேலழகர் தனது சிறப்புரையில் 'எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும் அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று' என விளக்கினார். இதைத் தழுவி மு கோவிந்தசாமி 'தாம் கற்ற துறை யறிவை அவர்க்கூட்டி அவர் துறை யறிவைத் தாங்கொள்க என்றது. பலதுறையறிவும் வளரும் வழி உரைத்தது. இது பல்துறை பற்றிய கேள்விப் பயனாகும்' என இக்குறளுக்குப் பொருள் கூறுவார். 'தாம் கற்ற துறையறிவைப் பிறர்க்குரைத்துப் பிறர் துறையறிவைத் தாம் கொள்க' என்பது கருத்து.
இவ்விதம் கேட்டுத் தெரிந்து தன் அறிவை மேம்படுத்திக் கொள்வதும் ஒருவர் அவையஞ்சாதிருப்பதற்கு ஒரு வழியாயிற்று.

தாம் கற்றவற்றைக் கற்றார் அவையில் அவர் ஏற்கும்படி சொல்லி தம்மினும் மிகக் கற்றவரிடத்து மிகுதியை அறிந்து கொள்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவையஞ்சாமல் எடுத்துரைத்து பயமின்றிக் கேட்டுத் தெளிவு பெறுக.

பொழிப்பு

கற்றவர்முன் தாம் கற்றதை எடுத்துச் சொல்லித் தம்மினும் மிகக் கற்றவரிடம் மிகுதியைத் தெரிந்துகொள்க.