இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0723



பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:723)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவர் உள்ள போரக்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே.



மணக்குடவர் உரை: பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர்.
இஃது அவையஞ்சாமை அரிதென்றது.

பரிமேலழகர் உரை: பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர்.
('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: போரில் சாக அஞ்சாதவர் மிகப்பலர்; அவையில் பேச அஞ்சாதவரோ மிகச் சிலர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பகையகத்துச் சாவார் எளியர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர்.

பதவுரை: பகை-எதிரி; அகத்து-இடையில்; சாவார்-இறப்பார். (இங்கு இறக்க அஞ்சாதவர்); எளியர்-முயற்சியின்றி கிடைத்தற்குரியர்; அரியர்-அரிய செயலைச் செய்பவர்; அவை-மன்றம், அரங்கம்; அகத்து-இடையில்; அஞ்சாதவர்-பயமற்றவர். .


பகையகத்துச் சாவார் எளியர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்;
பரிப்பெருமாள்: பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்;
பரிதியார்: பகையகத்துச் சாதல் எளிது;
காலிங்கர்: பகை நடுவுள் சென்றுபுக்க இடத்துத் தமது உயிர் ஓம்பாது மானம் ஓம்பிச் சாகத் துணிவார் உலகத்துள் எளியர் ஆகவும் கூடும்;
பரிமேலழகர்: பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்;

'பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்/ சாதல் எளிது/ சாகத் துணிவார் எளியர் ஆகவும் கூடும்/ சாவவல்லார் பலர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரை நோக்கும்போது, போர்க்களத்துப் பகைவரிடை அஞ்சாமற் சென்று பொருது மாய்ந்தவர் எளியவரே', 'போர்க்களத்தில் பகைவர்களுக்கு அஞ்சாமல் உயிரைவிடக் கூடியவர்கள் அபூர்வமல்ல', 'பகைவர் நடுவே அஞ்சாது புகுந்து உயிர்விடுவோர் பலர்', 'பகையின் கண் (போரில்) சாவவல்லார் பலர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவை எதிர்கொள்வோர் பெறுதற்கு எளியர் என்பது இப்பகுதியின் பொருள்.

அரியர் அவையகத்து அஞ்சா தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவையஞ்சாமை அரிதென்றது.
பரிப்பெருமாள்: அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் பெறுதற்கு அரியர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவையஞ்சாமை அரிதென்றது.
பரிதியார்: ஆஸ்தானத்திலே அஞ்சாமல் கல்வி செலச் சொல்வது அரிது.
காலிங்கர்: அவையின் நடுவுள் சென்றுபுக்க இடத்துச் சிறுதும் அஞ்சாது தெளிந்து அறிவுறுத்தும் அமைவுடையோர் பெரிதும் அரியர்.
காலிங்கர் குறிப்புரை: எனவே ஆண்மைக்கு அவரும் அறிவுக்கு இவரும் சாலச் சிறந்தார் என்றவாறு.
பரிமேலழகர்: அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.

'அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் பெறுதற்கு அரியர்/ செலச் சொல்வது அரிது/ தெளிந்து அறிவுறுத்தும் அமையுடையோர் பெரிதும் அரியர்/ சொல்ல வல்லார் சிலர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றார் நிறைந்த அவையில் பேசுதற்கு அஞ்சாதவரை நோக்கும்போது அவரே அருஞ்செயலாற்றிய ஆற்றல் மிக்கவர்', 'ஆனால் சபையில் அச்சமில்லாமல் பேசக்கூடியவர்கள் அபூர்வம்', 'அவைக்கண்ணே அஞ்சாது பேசவல்லவர் சிலரே', 'அவையின் கண் அஞ்சாது சொல்லவல்லார் சிலரே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவையின்கண் அஞ்சாது சொல்லும் துணிவு கொள்வோர் பெரிதும் அரியர் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவை எதிர்கொள்வோர் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லும் துணிவு கொள்வோர் பெரிதும் அரியர் என்பது பாடலின் பொருள்.
எளியர் - அரியர் இவை குறிப்பது என்ன?

போர்க்களத்தில் சண்டையிடுவதைவிட அவையில் பேசுவதற்கு அஞ்சாமை மிகத்தேவை.

பகைவர் உள்ள போர்க்களத்திற்குச் சென்று உயிர்விட ஆயத்தமாய் இருப்பவர் எளியராகலாம். ஆனால் ஓர் அவைக்கண்ணே சென்று அஞ்சாது பேச வல்லவர் அரிதாக உளர்.
போருக்குச் செல்வதற்குத் துணிவு வேண்டும். அத்துணிவைவிட பலர் கூடியுள்ள அவையில் பேசுவதற்கு அஞ்சாமைக் குணம் பெரிதும் வேண்டும். போர்க்களமும் பேசும் இடமும் ஒருவன் சிறப்போ இழிவோ பெறுவதற்கு உரிய இடங்களாகும். போர்க்களத்தில் சாவையெதிர்த்து அஞ்சாமல் போரிடுவதைவிட அவைக்களத்தில் அஞ்சாது பேசுவது அரிய செயல் ஆகும் என்கிறது இப்பாடல்.
அவைக்குப் பேசச் செல்பவனுக்குப் பல தகுதிகளும் திறன்களும் தேவை. வல்லவர்கள் வீற்றிருக்கும் அவைக்களத்தின் வகையினை அறிந்து அவர்களுடைய மனத்தில் பதியுமாறு கருத்துச் சொல்லி அவற்றை அவையோர் ஏற்றுக்கொள்ளும்படி செய்யும் வல்லமை கொண்டவனாக இருக்கவேண்டும். அவையில் வினா எழுப்புவோர்க்கு வாய் சோராது விடை கூற நூல் பல கற்றவனாக இருக்க வேண்டும். இத்திறன்களுடன் அவையில் பேசப்போகிறவன் மிகவும் அஞ்சாத நெஞ்சங்கொண்டவனாக இருத்தல் வேண்டும். அவன் சொல் ஏற்கப்படவில்லையென்றால் அவன் பழிப்புக்கு உள்ளாவான். எனவே நன்கு கற்றவனாக இருந்தாலும் அவனுக்கு அவையிலே அச்சம் உண்டாகமலிருப்பதில்லை. அவைக்குச் சென்று துணிச்சலுடன் பேச வல்லவரைப் பெறுதல் அரிதாம். ஆகையால் அவையில் அஞ்சாதவரை அரியர் எனச் சொல்லப்பட்டது. எளிமையும் அருமையும் பெரும்பான்மையையும் சிறுபான்மையையும் உணர்த்தி நின்றன.

இக்குறளில் சொல்லப்படுவது கருத்துப் போர் நடக்கும் அவையைக் குறிப்பதாகவும் போர்க்களத்தில் எதிரிகளை முறியடிப்பது போலவே அவைக்களத்தில் எதிர்ப் பக்கத்தார் கருத்துகளை முறியடித்துத் தன் கருத்துகளை நிலைநாட்டுவதைச் சொல்வதாகவும் கொள்ள முடியும்.

எளியர் - அரியர் இவை குறிப்பது என்ன?

எளியர் - அரியர் என்றதற்கு நேர்பொருள் 'கிடைத்தற்கு எளியர்'- 'பெறுதற்கு அரியர்' என்பன.
சாவார் எளியர்; அஞ்சாதவர் அரியர் என்று குணநலன் மேல் ஏற்றி எளியர் - அரியர் என்பதை விளக்கினர் ஒரு சாரார்.
வேறு சில உரையாசிரியர்கள் எளியர் என்னும் சொல் மிகப் பலராய் உள்ளமையைக் குறிக்க வந்துள்ளது என்றும் அரியர்-அருமையாகக் காணக்கூடியவர், சிலர் என்ற பொருள் தருவது என்றும் கூறினர். எளிய செயலைப் பலர் செய்யலாம்; அரிய செயலைச் சிலரே செய்யக்கூடும் என்ற பொருளில் இவர்கள் உரைகண்டனர். 'சாவப் பிறந்தாயோ பேசப் பிறந்தாயோ' என்னும் பழமொழியையும் எடுத்துக்காட்டுவர். இது போர்க்களத்துக்குள் புகுவது எளியசெயல் என்ற கருத்தைத் தருகிறது. ஆனால் போருக்குச் செல்வதற்கும் மிகவும் துணிச்சல் வேண்டும்; அது எளிய செயல் அல்ல. எனவே காலிங்கர் 'பகை நடுவுள் சென்றுபுக்க இடத்துத் தமது உயிர் ஓம்பாது மானம் ஓம்பிச் சாகத் துணிவார் உலகத்துள் எளியர் ஆகவும் கூடும். அவையின் நடுவுள் சென்றுபுக்க இடத்துச் சிறுதும் அஞ்சாது தெளிந்து அறிவுறுத்தும் அமைவுடையோர் பெரிதும் அரியர்' என்று ஏற்றத்தாழ்வு தோன்ற உரை வரைந்தார். மேலும் கருத்துரையில் 'ஆண்மைக்கு அவரும், அறிவுக்கு இவரும் சாலச் சிறந்தவர்' என ஒப்புத் தோன்ற உரைத்தார். இது ஓர் சிறந்த விளக்கம். ஆனால் தண்டபாணி தேசிகர், இரா சாரங்கபாணி ஆகியோர் 'வள்ளுவனார் போரில் உயிர் துறப்பார் எளியர், மேடையிற் பேசி வெல்வார் அரியர் எனக் கூறியதிலிருந்தே ஏற்றத்தாழ்வு தோன்றுதலின் ஒப்பாக்கல் ஒவ்வாது என்பதாம்' எனக் கூறினர்.

பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவை எதிர்கொள்வது எளிது; அவையின்கண் அஞ்சாது சொல்லும் துணிவு கொள்வது அரிய செயலாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவைஅஞ்சாமையும் வீரத்தின் அடையாளமே.

பொழிப்பு

பகையஞ்சாமல் சாவதற்கு முன்வருதல் எளிது. ஆனால் அவையஞ்சாமல் தெளிந்து அறிவுறுத்தும் அமையுடைமை அரிதானது.