இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0721



வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:721)

பொழிப்பு (மு வரதராசன்): சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

மணக்குடவர் உரை: தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர்.
இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.

பரிமேலழகர் உரை: வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார்.
(இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.)

வ சுப மாணிக்கம் உரை: சொற்பொழிவை அறிந்தவர் பாகுபாடு தெரிந்து இன்னாதவற்றைத் தவறியும் சொல்லார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.

பதவுரை: வகை-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; வல்லவை-கற்றுவல்ல நூற்பொருள்கள், வலியமன்றம்; வாய்சோரார்-வாய் வழுப்படச் சொல்லார்; சொல்லின்-சொல்லினது; தொகை-குழு; அறிந்த-தெரிந்த; தூய்மையவர்-தூய்மையினையுடையார்.


வகையறிந்து வல்லவை வாய்சோரார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார்;
பரிப்பெருமாள்: தப்பினால் வருங் குற்றத்தை வகை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அச்சத்தினால் சோர்வுபடச் சொல்லார்;
பரிதி: சொல்லின் திடப்பாடு அறிந்து தான் கற்ற கல்விக்குச் சோர்வு வாராமல்; [திடப்பாடு-வன்மை]
காலிங்கர்: இக்குற்றம் தங்குதல் இன்றி அவை முன்னர்ச் சென்ற இடத்துத் தாம் கற்று வல்லவை சொல்லும் கூறுபாடு அறிவது செய்து மற்றும் அவைக்கு உரித்து அல்லதனை மறந்தும் அவர்வயின் சோரவிடுவது இலர்; [சோரவிடுவது - மறந்தும்விடுவது]
பரிமேலழகர்: கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்;
பரிமேலழகர் குறிப்புரை: இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது.

'தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து/சொல்லின் திடப்பாடு அறிந்து/தாம் கற்று வல்லவை சொல்லும் கூறுபாடு அறிவது செய்து/கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் வகையறிந்து என்றதை விளக்கினர். 'வல்லவை' என்பதற்கு 'கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால்/அவைக்கு உரித்து அல்லதனை மறந்தும் அவர்வயின்/வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் என்று பொருள் கூறினர். வாய்சோரார் என்ற தொடர்க்கு சோர்வுபடச் சொல்லார்/வழுப்படச் சொல்லார் எனப் பொருள் தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவையின் வகைகளை அறிந்து, வல்லவர் கூடிய அவையகத்து அச்சத்தால் வாய்தவறிக் குற்றமாகப் பேசமாட்டார்', '(சபை, கற்றார் சபையா கல்லாதவர்கள் சபையா என்ற) வகையை அறிந்து கொண்டு கற்றறிந்த வல்லவர்கள் சபை என்பதை அறிந்தும் அந்தச் சபையில் வாய் தடுமாறாமல் பேசத் தெரிந்தவர்களே', 'அறிஞரவை இது, மூடரவை இது என்று அவையின் வகைகளைத் தெரிந்து அறிஞர் அவையிலே அச்சத்தினாலே வாய்தப்பி வழுப்படும்படி ஒன்றையுஞ் சொல்லார்', 'தாம் சொற்பொழிவாற்றும் அவையின் வகைகளை அறிந்து தாம் கற்றுவல்ல பொருள்களைச் சொல்லுங்கால் தவறிக் கூறார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பேசும்வகை அறிந்து கற்றுவல்ல பொருள்களை வாய்தவறிக் குற்றமாகக் கூறார் என்பது இப்பகுதியின் பொருள்.

சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.
பரிப்பெருமாள்: சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.
பரிதி: சொல்வான் தூயனாம் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் கல்வி மிகுதியால் சொல்லின் தொகை அனைத்தும் துரிசு அற உணர்ந்த தூய்மையினை உடையோர் என்றவாறு. [துரிசுஅற - குற்றம்அற]
பரிமேலழகர்: சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.

'சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொல்லின் தொகையறிந்த தூய்மையினை உடையவர்', 'குற்றமற்ற முறையில் சொற்களைத் தொகுத்துப் பிரசங்கம் செய்யத் தெரிந்தவர்கள்', 'சொல்லைத் தொகுத்துரைக்கு முறையினை அறிந்த தெளிவுடையோர்', 'சொல்லின் தொகைகளை அறிந்த செந்தமிழ் வல்லுநர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சொல்லின் தொகைகளை அறிந்த தெளிவுடையோர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சொல்லின் தொகைகளை அறிந்த தெளிவுடையோர் பேசும்வகை அறிந்து, கற்றுவல்ல பொருள்களை, வாய்தவறிக் குற்றமாகக் கூறார் என்பது பாடலின் பொருள்.
'வகையறிந்து வல்லவை' குறிப்பது என்ன?

மொழி ஆளுமை கொண்டோர் எந்த வலிய அவையிலும் பேச அஞ்சமாட்டார்.

மொழிவதைத் தொகுத்துரைக்கும் முறையினை அறிந்த தெளிவானவர்கள், அவையில் பேசும்போது அச்சப்பட்டு, வாய்தவறி, பிழைபடப் பேசமாட்டார்.
மொழிப்புலமை கொண்டோரே பேச்சுக் கலையில் வல்லவராயிருக்கமுடியும். அவையில் பேசுவதற்குச் சொற்களைப் பற்றிய அறிவு மிகத் தேவை. ஒருவரது மொழிப் புலமையை அறிவதற்கு அவர் இத்தனை சொற்களை அறிந்தவர் என ஓர் கணக்கு உண்டு என்பர். சொற்களின் வகை அறிந்து அதைத் தொகுத்து வழங்கக்கூடிய திறன் பெற்றோர் சிறந்த பேச்சாளராக இருப்பர். எந்த ஒரு அவையிலும் பேசுதற்குச் சொற்களஞ்சியப் புலமை வேண்டும் என்கிறார் வள்ளுவர். சொற்களின் தொகுதியை நன்கு அறிந்தவர்; சொற்களைத் தேர்ந்தெடுத்து ஆளுதலால் அவரைப் பண்போடு பேசும் தெளிவானவர் என்ற பொருளில் 'தூயவர்' என்று அழைக்கிறார் அவர். சொற்றொகுதியை நன்குணர்ந்த, தெளிந்த கருத்தமைந்தவர்கள், தமக்கு எதில் மிக்கவன்மையுண்டோ அப்பொருளை அவையச்சமின்றி பிழையில்லாமல் பேசுவார்கள். பயந்து பயந்து உரைக்கும்போது சொற்களில் குற்றமும், கருத்துக்களில் குழப்பமும் உண்டாகும். தெளிவானவர்களுக்குத் தாம் சொல்ல வருவதில் அச்சமும் இல்லையாதலால் வாய்தவறமாட்டார்.
'சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்' என்றது குறள் 711-இன் இறுதிப்பகுதியிலும் மாற்றமின்றி அப்படியே வந்துள்ளதால் சொற்களின் தொகை அறிவையும் தெளிவான கருத்துடைமையையும் அவையில் அஞ்சாமல் பேசுவதற்கு உரிய இன்றியமையாப் பண்புகள் என வள்ளுவர் கருதுகிறார் எனத் தெளியலாம்.

'வகையறிந்து வல்லவை' குறிப்பது என்ன?

'வகையறிந்து வல்லவை' என்றதற்கு தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண், தப்பினால் வருங் குற்றத்தை வகை யறிந்து கற்றுவல்ல அவையின்கண், சொல்லின் திடப்பாடு அறிந்து தான் கற்ற கல்விக்கு, இக்குற்றம் தங்குதல் இன்றி அவை முன்னர்ச் சென்ற இடத்துத் தாம் கற்று வல்லவை சொல்லும் கூறுபாடு அறிவது செய்து, கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில், கற்றுவல்லார் அவையின்கண்ணே, அவைகளின் வகைகளை அறிவாராதலின், அவையின் வகைகளை அறிந்து, வல்லவர் கூடிய அவையகத்து, கற்றார் சபையா கல்லாதவர்கள் சபையா என்ற) வகையை அறிந்து கொண்டு கற்றறிந்த வல்லவர்கள் சபை என்பதை அறிந்தும், அவையின் வகையினை அறிந்து புலமை மிக்கோர் அவையில், மூடரவை இது என்று அவையின் வகைகளைத் தெரிந்து அறிஞர் அவையிலே, தாம் சொற்பொழிவாற்றும் அவையின் வகைகளை அறிந்து தாம் கற்றுவல்ல பொருள்களைச் சொல்லுங்கால், கற்றுவல்லோர் அவை, கல்லாதவர் அவை, என்னும் அவையின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் பேசும்போது, கற்றுவல்லார் கூடிய அவையிலே, அவையின் வகையறிந்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வகையறிந்து என்பதற்குத் தப்பினால் வரும் குற்றவகையை அறிந்து என ஒரு சாராரும் அவைகளின் வகைகளை அறிந்து இன்னொரு சாராரும் உரைக்கின்றனர். குறளகத்து வல்லவை, புல்லவை, நல்லவை, நுண்ணவை என்பன கூறப்பட்டுள்ளமையால் அவைகளின் வகைகளை யறிந்து என்று கொள்ளுதல் தகும் என்றாலும் அவைகளின் வகைகளை அறிதல் அவையறிதல் அதிகாரத்திற்கு உரியதாகவே தோன்றுகிறது. அவையச்சத்தால் தவறு உண்டாக நிறைய வாய்ப்பு உள்ளது. எனவே 'தப்பினால் குற்றவகையை யறிந்து' அதாவது குற்றமில்லாமல் பேசும் வகை அறிந்து என்பது இவ்விடத்துப் பொருத்தமாகப்படுகிறது.
வல்லவை என்பதற்கு வல்லஅவை என்றும் தாம் கற்று வல்லவை என்றும் வேறுவேறு வகையாக உள்ள உரைகளில் 'தாம் கற்று வல்லவைகள்' என்பது பேசும் வகை அறிந்து என்பதற்கு இயைபாக உள்ளதால் அதுவே ஏற்ற பொருளாகிறது.

'வகையறிந்து வல்லவை' என்ற தொடர் சொல்லும் வகை யறிந்து தாம் கற்று வல்லவைகள் என்பது பொருள்.

சொல்லின் தொகைகளை அறிந்த தெளிவுடையோர் பேசும்வகை அறிந்து, கற்றுவல்ல பொருள்களை, வாய்தவறிக் குற்றமாகக் கூறார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவையஞ்சாமை மொழித் தேர்ச்சி உடையவர்க்குக் கைவரப்பெறும்.

பொழிப்பு

சொற்கூட்டம் அறிந்த தெளிவுடையோர் பேசும்வகை அறிந்து கற்றுவல்ல பொருள்களைக் குற்றமாக வாய்தவறியும் கூறார்.