இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0719



புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்

(அதிகாரம்:அவையறிதல் குறள் எண்:719)

பொழிப்பு (மு வரதராசன்): நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது.

மணக்குடவர் உரை: புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.

பரிமேலழகர் உரை: நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக.
(சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)

சி இலக்குவனார் உரை: நல்லார் இருந்த அவையில் அவர்கள் அறியுமாறு நன்கு சொல்லுதல் வல்லவர், சிறியார் அவையில் மறந்தும் எதனையும் சொல்லாது நீங்குக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க.

பதவுரை: புல்-கீழ்மையாகிய; அவையுள்-மன்றத்தில்; பொச்சாந்தும்-மறந்தும்; சொல்லற்க-பேசவேண்டாம்; நல் அவையுள்--நல்ல மன்றத்தில்; நன்கு-தெளிய; செல-மனங்கொள்ள; சொல்லுவார்-சொல்லக்கூடியவர்.


புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக;
பரிப்பெருமாள்: புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வெளியார்முன் வெள்ளையாயிருத்தலால் அவர் முன்பு சொல்லாது இருத்தல் என்றது.
பரிதி: புல்லறிவாளர் கூட்டத்தில் வார்த்தை சொல்லவல்லான் இட்டுக் கட்டிச் சொல்வான் அல்லன்;
காலிங்கர்: தாம் புல்லறிவாளர் குழாத்துப் புக்கால் தமது சிறந்த சொல்லினை மறந்தும் சொல்லற்க; [குழாத்துப்புக்கால்-கூட்டத்தில் புகுந்தால்]
காலிங்கர் குறிப்புரை: பொச்சாந்து-மறந்து.
பரிமேலழகர்: அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக.

'புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இழிகூட்டத்தில் மறந்தும் போய்ப் பேசற்க', 'கீழ்மக்கள் கூடிய இழிந்த கூட்டத்தில் மறந்தும் பேசாதொழிக', '(கல்வியாளர்களும் உணர்ச்சியுடையவர்களும் அடங்கிய) நல்ல சபைகளில் கேட்பவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி, கல்வியறிவோடு பேசத் தெரிந்தவர்கள்', 'அறிவிற் சிறியார் அவைக்களத்தே மறந்தும் யாதுஞ் சொல்லக் கூடாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இழிந்தோர் கூடியுள்ள இடத்தில் மறந்தும் போய்ப் பேச வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.
பரிப்பெருமாள்: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.
பரிதி: பெரியோர் முன்னே நல்லது செலச் சொல்லுமவன் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின், நல்லன அறியும் நல்லறிவாளர் அவையின்கண் தமது நன்கு அமைந்த சொல் அவர் செவிக்குச் செல்லுமாறு சொல்லவல்ல தூய அமைச்சர் என்றவாறு.
பரிமேலழகர்: நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்;
பரிமேலழகர் குறிப்புரை: சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.

'நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை மனங்கொள்ளச் சொல்லவல்லார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்கூட்டத்தில் நன்கு பேச வல்லவர்', 'கற்றவர் கூடிய நல்ல கூட்டத்தில் நல்ல செய்திகளை மனத்தில் பதியுமாறு திறம்படச் சொல்லுபவர்', '(கல்வியும் உணர்ச்சியும் இல்லாத) மட்டமான கூட்டங்களிலும் (அதே கல்வித் திறமுள்ள பேச்சை) மறந்தாற் போற்கூட பேசிவிடக் கூடாது', 'நல்லறிவாளர் கழகத்தின்கண்ணே அவர் மனத்திற் பதியும்படி எதனையுஞ் சொல்ல வல்லவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்ல அவையில் நன்கு மனங்கொள்ளச் சொல்ல வல்லார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல அவையில் நன்கு மனங்கொள்ளச் சொல்ல வல்லார் புல்லவையுள் மறந்தும் போய்ப் பேசவேண்டாம் என்பது பாடலின் பொருள்.
'புல்லவை' என்பது என்ன?

இழிந்தார் அவையில் பேசுபவது விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

நல்ல மன்றத்தின்கண், நல்ல பொருளை உள்ளத்தில் பதியுமாறு பேசவல்லவர், கீழோர் குழுமியுள்ள இடத்தில் மறந்தும் பேசக்கூடாது.
அவர் நன்கு பேசக்கூடியவர். கேட்போர் மனங்கொள்ளும்படி கருத்துக்களை உரைக்க வல்லவர். அவர் சொல்வதைக் கூடியுள்ள அவையிலுள்ளோர் எளிதில் புரிந்துகொள்வர். இவையெல்லாம் அவர் நல்லவையுள் பேசுபவர் என அறியச் செய்கிறது. நல்அவை என்பது நல்லறிவாளர், நல்ல குணமுடையவர் போன்றோர் கூடியுள்ள அவையைக் குறிக்கும், அத்தகைய சிறந்த பேச்சாளர் கீழ்மைக் குணம் கொண்டவர்கள் இடத்தில் சென்று பேசவேண்டாம்-பொச்சாந்தும் பேசவேண்டாம் என்கிறார் வள்ளுவர். சொற்றிறம் கொண்டோர் புல்லவையில் பேசவேண்டாம் என்றில்லாமல் 'மறந்தும் பேசவேண்டாம்' என அழுந்தச் சொல்வது ஏன்?
பரிதி 'பெரியோர் முன்னே நல்லது செலச் சொல்லுமவன், புல்லறிவாளர் கூட்டத்தில் வார்த்தை சொல்லவல்லான் இட்டுக் கட்டிச் சொல்வான் அல்லன்' எனப் பொருள் கூறியுள்ளார். புல்லரவையில் பேச வேண்டுமெனில், இல்லாதன எல்லாம் புனைந்து கூறவேண்டும். அது நல்லவையில் மனம் ஏற்கப் பேசுபவனால் முடியாது என்கிறார் இவர். பரிமேலழகர் 'தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்' எனத் தன் விரிவுரையில் சொல்கிறார்.
கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. இழிவான கூட்டத்திலுள்ளோர் நல்ல பொருள்களின் அருமையை அறியமாட்டார்கள். அவற்றில் ஈடுபாடு இல்லாததால் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வமும் கிடையாது. நற்செய்தி சொல்பவர்களை எள்ளவும் செய்வர். இழித்தும் உரைப்பர். அற்பர் அவையிற் பேசுவதால் நல்லோரும் இவரை ஏற்காத நிலை உண்டாகலாம்.
......வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் (714) என்று முன் குறள் ஒன்றில் கூறினர். இதன் பொருள் வெள்ளறிவாளரிடம் இன்னும் வெண்மை காட்டி நீங்குக என்பது. அது போன்று சிறியவர் அவையில் பேச நினைக்கவும் வேண்டாம் என்கிறார் வள்ளுவர். 'மறந்தும்கூட' என்று சொல்லியது புல்லவையை முற்றிலும் விலக்கவேண்டிய உறுதியை வலியுறுத்துவதற்காகவே.

'புல்லவை' என்பது என்ன?

'புல்லவை' என்ற சொல்லுக்கு புல்லியவரிருந்த அவை, புல்லறிவாளர் கூட்டம், புல்லறிவாளர் குழாம், புல்லர் இருந்த அவை, அறிவில்லாதவரின் கூட்டம், அறிவற்ற கீழான புல்லர்கள் கூடிய அவை, ஒற்றறியாப் புல்லர்கள் அவை, இழிகூட்டம், கீழ்மக்கள் கூடிய இழிந்த கூட்டம், மட்டமான கூட்டம், அறிவிலாக் கீழோர் அவை, அறிவிற் சிறியார் அவை, சிறியார் அவை, அறிவில்லாதவர் கூட்டம், அறிஞரில்லாச் சிறியோர் அவை, அற்பர்கள் கூடியிருக்கும் சபை என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

புல்லர் கூடியுள்ள அவை புல்லவையாகும். புல்லர் என்பது இழிந்தோரைக் குறிக்கும் சொல். நல்லார் அல்லாதார், அறிவற்றவர், குற்றமே தொழிலாகக் கொண்ட கீழோர் இவர்களைக் குறிக்கும். இந்தப் பொல்லாதார் உள்ள அவைக்கு மறந்தும் போய்ப் பேச வேண்டாம் எனச் சொல்கிறது பாடல்.

'புல்லவை' என்பது இழிந்தவர் கூடும் இடம் என்ற பொருள் தரும்.

நல்ல அவையில் நன்கு மனங்கொள்ளச் சொல்ல வல்லார் இழிந்தோர் கூடியுள்ள இடத்தில் மறந்தும் போய்ப் பேச வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவையறிதல் கயவர் கூட்டத்தில் சொல்வதைத் தடுத்து நிறுத்தும்.

பொழிப்பு

நல்லோர் கூடிய அவையில் நன்கு மனங்கொள்ளச் சொல்ல வல்லார் இழிந்தோர் கூடியுள்ள இடத்தில் மறந்தும் போய்ப் பேசற்க.